Monday, August 30, 2010

புத்தம் புதிய பேய்கள்

அண்மையில் ஒரு நாள் இரவு கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க நேரிட்டது. திகில் படம் என்ற பெயரில் பேய் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.கல்வி நிறுவனம் ஒன்றில் பயிலும் ஒரு நண்பர் குழாமை சேர்ந்தவர்களை ஒரு பேய் ஒவ்வொருத்தராக கொலை செய்கிறது.கொல்லப்பட இருக்கிறவருக்கு அவரது அலைபேசியில் தவறிய அழைப்பு /missed call / ஒன்று வருகிறது.அதற்கான  குரல் செய்தியில் அவர் சாகப்போகும் நேரமும் அப்போது நடைபெற உள்ள உரையாடலும் இடம் பெற்றுள்ளன.அவ்வாறே அவர் பேயால் கொல்லப்படுகிறார். முற்காலத்தில் மனிதன் கால்நடையாகவும் மாட்டுவண்டியிலும் பயணித்து கொண்டிருந்தபோது சாலை ஓர புளியமரத்தில் குடியிருந்து கொண்டு அவனை மிரட்டி கொண்டிருந்த பேய்கள் இப்போது நகரங்களுக்கு இடம் பெயர்ந்து அலைபேசி முதலான நவீன கருவிகளையும் கையாள துவங்கியுள்ளன.நல்ல முன்னேற்றம்தான்.                                                                              பேய் என்று ஒன்று உண்மையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காணும் முன் கலைஞரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் சில நம் நினைவுக்கு வருகின்றன.ஒரு மாநில முதல்வரான நீங்கள் மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பதை விடுத்து இப்படி மூட நம்பிக்கைகளை வளர்க்க துணை போகலாமா.பகுத்தறிவு பரப்புரையால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வுக்கு வந்த பெரியாரின் மாணவரான உங்கள் பெயரில் நடைபெறும் தொலைக்காட்சியில் பேய்படம் போடுவது உங்கள் 'நெஞ்சுக்கு நீதி'யாக இருக்கிறதா. சரி பேய் இருக்கிறதா என்ற கேள்விக்கு வருவோம்.அகால இறப்பு எய்தியவர்கள்,தற்கொலை செய்து கொண்டவர்கள்,விபத்தில் இறந்தவர்கள் போன்றோர்   பேயாக மாறி உலவுகின்றனர் என்பது மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை.அவை தனியாக மாட்டும் மனிதர்களை ஒரே அறையில் கொன்று விடுமாம்.நாம் கேட்கிறோம்.உயிரோடு இருக்கும் மனிதனே உணவு உட்கொள்வதால் மட்டுமே இயங்கும் ஆற்றலை பெறுகிறான்.செத்து போன பின் எதை தின்று பேயாக உயிர் வாழ்கிறான்.ஒரே அறையில் கொன்று விடும் வலு பேய்க்கு எங்கிருந்து வருகிறது,அவ்வளவு வலுமிக்க பேய் தனியாக இருக்கும் மனிதனிடம் மட்டும் வீரத்தை காட்டுவது ஏன்.இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து இருக்கும் இடத்துக்கு அந்த வீரப்பேய்கள் ஏன் வருவதில்லை.காரணம் உண்மையில் பேய் என்று உலகில் எதுவும் கிடையாது.மனிதனின் அடிமனதில் தங்கியுள்ள  பேய் குறித்து கேள்விப்பட்ட  கட்டுகதைகள் ஊட்டும் பீதியே சில அசாதாரணமான சூழல்களில் அவனது இதய துடிப்பை இயல்பை விட பன்மடங்கு   கூட வைக்கிறது.அந்த வேகத்தை தாங்க முடியாமல் குருதி குழாய்கள் வெடித்து இறப்பு நிகழ்கிறது.இதுதான் 'பேய் அறைந்து' வந்த சாவு. இறுதியாக தமிழக சிற்றூர் ஒன்றில் ஒரு மூதாட்டி பேயை நேரில் பார்த்த உண்மை நிகழ்வை கூறி கட்டுரையை நிறைவு செய்கிறோம்.அதிகாலை நேரம்.இருள் பிரியும் முன்பாகவே தமது புஞ்சை காட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.அக்கம் பக்கம் ஆள் அரவம் ஏதுமில்லை.ஊர் கோடியை தாண்டியவுடன் ஒரு ஒலி.இரும்பு உலக்கையை தரையில் போட்டு உருட்டினாற்போல் பயங்கர ஓசை.ஓசை வந்த திசையில் ஏறிட்டு பார்த்தால் ஒரு ஒற்றை பனை மரத்தின் உச்சியில்  ஒரு மனித உருவம் தொங்கியபடி பாட்டியை நோக்கி கால்களை ஆவேசமாக அசைத்து கொண்டிருந்தது.அலறி அடித்துக்கொண்டு பாட்டி வீட்டுக்கு திரும்பி ஓடினார்.ஓட்டமும் நடையுமாக வீடு வநது சேர்ந்த பாட்டி அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டார்.பாட்டிக்கு பயத்தில் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.இதயம் தொண்டை குழி வரை வநது துடித்தது.அப்படியே கதவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்.அரை மயக்க நிலையில் எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தோம் என பாட்டிக்கே தெரியவில்லை.பாட்டிக்கு மூச்சு சீராகி முழுமையாக தன்னினைவு திரும்பிய போது நன்றாக விடிந்து விட்டிருந்தது.வெளியே ஆள் நடமாட்டமும் பேச்சு குரலும் கேட்க ஆரம்பித்திருந்தது.சற்றே பயம் விலகி பாட்டி வெளியே வந்தார்.ஆள் நடமாட்டம் தந்த துணிச்சலில்   மீண்டும் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அந்த பனை மரத்தை பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்தார்.பனையின் மேல்பகுதியில் இரண்டு பழுத்த மட்டைகள் பிய்ந்து தொங்கிகொண்டிருந்தன.காற்றில் ஆடிய அம்மட்டைகளின்  நுனிப்பகுதியில்  இருந்த ஓலைகள் இரும்பு உலக்கையை தரையில் போட்டு உருட்டினாற்போல் ஓசை எழுப்பி கொண்டிருந்தன.

No comments:

Post a Comment