Monday, September 27, 2010

அயோத்தியா தீர்ப்பு : கடமை உணர்வா வீசை என்ன விலை

அயோத்தியா தீர்ப்பை பொறுத்தவரை மைய,மாநில,அரசுகளின் செயல்பாடுகள் இப்படி கேட்பது போலவே உள்ளன.
  24-09-10 அன்று அயோத்தி பிரச்னையில் பாபர் மசூதி இருந்த இடம், உத்திர பிரதேச முசுலிம் வக்பு வாரியத்துக்கு சொந்தமா, விசுவ இந்து பரிசத் நடத்தும் அறக்கட்டளைக்கு சொந்தமா என தீர்ப்பு அளிக்கப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ கிளை அறிவித்திருந்தது. தற்போது உச்சநீதி மன்றம் ரமேசு சந்திர திரிபாதி என்பவரின் முறையீட்டின் பேரில் தீர்ப்பை ஒரு வாரம் ஒத்தி வைத்துள்ளது.


   தீர்ப்பு அளிக்கபோவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்த நாள்முதல் மைய அரசும் உள்துறை அமைச்சரும் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். ஏதோ தீர்ப்பு வந்தவுடன் ஏமாற்றமடையும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது போர் தொடுக்க போவது போல் பீதியூட்டி வருகின்றனர்.


  ஆப்பிரிக்க நாடுகளை விட கொடிய வறுமையில் சிக்கியுள்ள இந்தியாவில் கொடிய வறுமையில் வாடும்  மக்கள் 42 கோடிபேர் என்று அண்மையில் வெளியான ஐக்கிய பன்னாட்டு கழக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்ற கவலையில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு, மைய மாநில அரசுகளின் மக்கள் முரண் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் லட்ச்சக்கணக்கான விவசாயிகளின் குடும்பத்தாருக்கு,விவசாயம் நசிந்துபோய் நாடோடிகளாக  நகரங்களில் வேலை  தேடி அலையும் சிற்றூர் புற மக்களுக்கு,விலைவாசி உயர்வால்,எரிபொருள் விலை உயர்வால், மின் கட்டண உயர்வால்,வரவையும் செலவையும் இணக்கப்படுத்த முடியாமல்  திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அயோத்தி தீர்ப்பு எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்பது நன்றாகவே தெரியும். அவர்கள் யாரும் கலவரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்களிடம் போய் வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்று சொல்வதில் எதாவது பொருள் இருக்கிறதா.
    கலவரம் செய்ய வேண்டும் கலவரத் தீ மூட்டி குளிர் காய வேண்டும் என துடித்துக் கொண்டிருப்போர் பொது மக்களல்ல. மாறாக வகுப்புவாதிகள்தான் அவ்வாறு துடித்துகொண்டிருக்கிறார்கள். அப்படியானால் மைய மாநில அரசுகள் என்ன செய்திருக்கவேண்டும். அமைதிகாக்க வேண்டுகோள் விடுப்பதோடு நில்லாமல், கலவரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். அந்த எச்சரிக்கையை செயல்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதை பாதுகாப்பு ஏற்பாடுகளை  வலுப்படுத்துவதன் மூலமும், மாநில காவல்துறை உயர் அலுவலர்கள் தொட்டு மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலர்கள்வரை இது குறித்த ஏற்பாடுகளை தெளிவாக அறிவிப்பதன் மூலமும் வகுப்புவாதிகளுக்கு தெளிவுபட உணர்த்தியிருக்கவேண்டும்.வெறும் வேண்டுகோள்களுக்கு மசிபவர்கள் அல்லர் வகுப்புவாதிகள்.


மைய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்.

   இந்த நாட்டின் குடிமக்கள் எனப்படுவோர் யார்  இந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தையும் அதன்படி வகுக்கப்படும் சட்ட திட்டங்களையும் மதித்து அதற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள்தான் இந்நாட்டின் குடிமக்கள்.
   அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்காத பொதுவுடைமை புரட்சியாளர்கள், தேசிய இன விடுதலை போராளிகள் பலரும் அவர்களது அமைப்புகளும் இந்தியாவில் உள்ளனர். அது தனியான ஒரு விவாதப் பொருள். அதுபற்றி நாம் இங்கு பேசவில்லை. ஏற்றுக்கொண்டவர்கள் பற்றியே பேசுகிறோம்.
     அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பை அது எப்படி இருந்ததாலும் மைய மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்த வேண்டும். இதை எதிர்த்து கலவரம் செய்பவர்கள் அரசமைப்பு சட்டத்த்தின் எதிரிகள் இந்நாட்டு சட்டத்திற்கு எதிராக செயல்படும் சமூக எதிரிகள் என்பதை கருத்தில் கொண்டு அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    சாலை வசதி, குடிநீர் வசதி.நூறுநாள் வேலை திட்டத்தில் முறையான கூலி பங்கீடு,மின் கட்டண உயர்வு ரத்து போன்ற கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் மீதே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி காவல்துறையை ஏவிவிட்டு மண்டையை பிளக்கும் அரசுகள் வகுப்பு வாத வெறியர்களிடம் வேண்டுகோள் விடுப்பதன் மர்மம் என்ன!
   சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுகிறோம் என அரசுகள் சொல்வது உண்மையென்றால் கலவரம் செய்ய முனைவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இதுவே அமைதியை விரும்பும் அனைவரின் விருப்பமாக இருக்கும்.
    அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து கலவரம் செய்பவர்கள் இந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்கள்.கலவரம் செய்வோர் அனைத்து தரப்பு மக்களின் எதிரிகள்.அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய கயவர்கள் என்பதை அரசுகள் உணரட்டும்.

Friday, September 17, 2010

பழம்பெருமைக்கு பகுத்தறிவு கிடையாது.

பழம்பெருமை பேசியே பாழாய்ப்போன இனம் ஒன்றை அடையாளம் காட்ட வேண்டுமென்றால் தமிழினத்தை தாரளமாக கை காட்டலாம்.


அதிகாலை நேரம். தொடர்வண்டியில் சென்னை வநது எழும்பூரில் இறங்கி பாரி முனை நோக்கி போய் கொண்டிருந்தேன்.ஓவிய கல்லூரிக்கு எதிர்புற சுவரில் வரிசையாக வரையப்பட்டிருந்த ஓவியங்கள்  கண்ணையும் கருத்தையும் கவர தானி ஓட்டுனரை சற்று நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.மிகுதியான போக்குவரத்து இல்லாததால் வண்டியை ஓரம் கட்டிய ஓட்டுனர்,ஓவியங்களையும் அவற்றை உற்று கவனிக்கும் என்னையும்  சற்று ஆச்சரியத்துடன மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்.


சென்னை நகர சுவர்களை அழகு படுத்துவதாக கூறிக் கொண்டு சென்னை மாநகராட்சி பல ஆயிரம் உருவாக்களை செலவிட்டு அந்த ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறது.ஒரு வகையில் இதிலும் கூட அரசியல் உண்டு.சிறு அரசியல்,சமூக அமைப்புகளின் பரப்புரையை முடக்குவதும் இதன் நோக்கங்களில் ஒன்று.பெரும் பண வலுவோ  ஊடக வலுவோ இல்லாத அமைப்புகள் சுவரெழுத்து மூலமாக பொது மக்களிடம் தமது கருத்துகளையும் போராட்டங்கள் பற்றிய செய்திகளையும் எடுத்து சொல்லி வந்தன.கேடு கேட்ட திரைப்பட ஆபாச சுவரொட்டிகள் சென்னை நகரெங்கும் ஒட்டப் படுகின்றன.அவை கெடுக்காத அழகை அரசியல் சமூக அமைப்புகளின் சுவரெழுத்து பரப்புரை கெடுத்து விடுமாம்.நடிகர் நடிகைகள் தமது உடல் உறுப்புகளை ஆபாசமாக வெளிக்காட்டும் திரைப்பட சுவரொட்டிகள் மொத்த சமூகத்தின் பண்பாட்டு, தார்மீக அழகை கெடுக்கின்றனவே அவையெல்லாம் மாநகராட்சியின் கண்களை உறுத்தவில்லையா.


சரி, எடுத்துக்கொண்ட பொருளுக்கு வருவோம்..அந்த சுவர் ஓவியங்களில் ஒன்றில் அறுவடை செய்த நெற்கதிர்களை விவசாய தொழிலாளர்கள் யானைகளை வைத்து போரடித்துக் கொண்டிருந்தார்கள்.


''மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று''                                                                      ''யானை கட்டி போரடிக்கும் மாமதுரை''


என்ற தமிழ் பாடலை கருவாக கொண்டு இந்த ஓவியம் வரையப் பட்டிருக்க வேண்டும். யாரோ ஒரு புலவன் பாண்டிய மன்னனையும் அவன் நாட்டையும் பொய்யாக புகழ்ந்து பாடி பரிசில் பெறுவதற்காக எடுத்து விட்ட 'புருடா'வை உண்மை என நம்பி இந்த ஓவியம் படைக்கப் பட்டுள்ளது.


நகரத்தில் வாழ்ந்தாலும் இன்றளவும் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருபவன் என்ற முறையில் விவசாயத்தை பற்றி எமக்கு ஓரளவு அறிவு உண்டு.பேச்சு வழக்கில், சிற்றூர்புற மக்கள் நெல்மணிகளை கதிரிலிருந்து பிரிப்பதற்காக ஒரு கல்லில் தட்டி உதிர்த்துவதை ''போரடித்தல்'' என்று சொல்வர்.அதில் உதிராத நெற்களை சேகரிக்க அக்கதிர்களை வட்டமாக பரப்பி வைத்து அதன் மீது மாடுகளை நடக்க வைக்கிறார்கள். இதனை 'சூடடித்தல்'என அழைக்கிறார்கள்.இந்த சூடடித்தலைத்தான் போரடித்தல் என பாடல் குறிப்பிடுகிறது.


எண்ணிப்பாருங்கள்.யானையின் நிறைமிகு உடலை தாங்கி அதன் வலுமிகு கால்கள் நெல்மணிகள் மீது ஏறி மிதித்தால் என்ன ஆகும்.நெற்கதிர்கள் நெல்லோடு சேர்ந்து தவிடு பொடிஆகிவிடாதா.மேலும் யானையின் கால்கள்,மாடுகளின் கால்களை போன்று பிளவு பட்ட குளம்புகளை கொண்டவை அல்ல.அவை பிளவுபடாமல் மொத்தமாக ஐந்து விரல்களும் ஒன்றாக இணைந்து உருவாகியிருக்கும்.அதனால்தான் யானையின் கால்கள் ஐந்து நகக் கண்களை கொண்டிருக்கும்.இத்தகைய கால்கள் நெல்மணிகளை சேதப் படுத்துமேயன்றி கதிரிலிருந்து அவற்றை பிரிக்காது.குதிரைகளின் கால்களும் பிளவு படாத குளம்புகளை கொண்டவை.அதனால்தான் ஒப்பீட்டளவில் மாடுகளை போன்ற எடை கொண்டிருந்தாலும் உழவர்கள் சூடடிக்க குதிரைகளை பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தினாலும் பலன் கிட்டாது.யானையின் கால்களில் மிதி பட்டால் சிங்கம்,புலி கூட குடல் பிதுங்கி செத்துவிடும்போது சிறு சிறு நெல்மணிகள் எம்மாத்திரம்.யாராவது எதையாவது சொன்னால் அப்படியே ஆராய்ந்து பார்க்காமல் நம்பி விடுவதா.


தமிழகத்தில் விவசாயத்தின் இன்றைய நிலைமை என்ன.காவிரி ஆற்று நீரில், முல்லை-பெரியாறு அணை நீரில் தமிழகம் தனது உரிமைகளை நிலை நாட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.முப்போகம் விளைந்த தஞ்சை பகுதி இன்று ஒரு போகம் விளைவிக்கவே படாத பாடு படுகிறது.நாட்டுக்கே சோறு போட்ட தஞ்சை விவசாயிகள் இன்று 'அத்த' கூலிக்கு வேலை செய்ய கேரளாவுக்கும், தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.இடுபொருட்களின் விலையேற்றத்தால்,மைய,மாநில அரசுகளின் மக்கள் முரண் கொள்கைகளால்,பாதிக்கப்படும் விவசாயம் நிச்சயமற்ற பருவ மழையால் இயற்கையோடு நடத்தும் சூதாட்டமாக மாறிப்போய் நசிந்து கிடக்கிறது.அப்படியே ஏதாவது விளைந்து வந்தாலும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பையே சந்திக்க வேண்டியுள்ளது.


வீட்டு மனை தொழிலால் விளைநிலங்கள் வளைத்து போடப்பட்டு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.பெரு நகரங்களை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் என்பதே இல்லாமல் போய்விட்டது.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த அரசே விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு விளைநிலங்களை வாங்கி தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது.


இப்படியான அவல நிலையிலிருந்து விவசாயத்தை எப்படி மீட்பது என எண்ணாமல் அதற்காக போராடாமல் பழம் பெருமை அதுவும் பொய்ப்பெருமை பேசிக்கொண்டிருந்தால் தமிழ் சமூகம் எப்படி முன்னேறும்.எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.


இறுதியாக எனது வருத்தம் ஒன்றையும் இங்கு பதிவு செய்கிறேன்.
எனக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு எச்சில் துப்பும் பழக்கம் இல்லாததால் எங்கள் ஊர் 'நாட்டாமை' யாகும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.நாட்டாமையாக இல்லாததால் பதினெட்டு பட்டிகளையும் வளைத்து போட்டு பெரும் சொத்து சேர்க்க முடியவில்லை.பெரும் சொத்துக்கள் இல்லாததால் யானைகளை வைத்து போரடிக்கும் அளவுக்கு பெரும் விளைச்சல் எனக்கு வருவதில்லை.பெரிய அளவு விளைச்சல்  இல்லாததால் களத்துமேட்டுக்கு வநது இறைஞ்சும் புலவர்களுக்கும் ஏழைகளுக்கும் 50 மூடை 100 மூடை என இனாமாக வாரி வழங்க முடியவில்லை.அப்படி கொடுக்காத காரணத்தால் நான் சாலை வழியாக வாகனத்தில் போகும்போது வரிசையாக பொதுமக்களும் கே.எசு.ரவிகுமாரும் நின்று கொண்டு எனக்கு மரியாதை செலுத்துவதில்லை.அப்படி ஒரு மரியாதை இல்லாமல் வாகனத்தில் போவது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.

Wednesday, September 15, 2010

தமிழ் வழிக் கல்வியை தடுப்பது ஆங்கில மாயையா அடிமை மோகமா

தமிழகத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகிறது.ஆங்கிலத்தில் பேசுபவன் யாராக இருந்தாலும் அவன் அறிவாளி என்ற மதிப்பீடு தமிழக மக்களிடம் உள்ளது.ஆங்கில வழியில் கல்வி கற்றால் மட்டுமே தமது குழந்தைகள் ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றலை பெறுவர் என்ற மூட நம்பிக்கை மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.ஆங்கிலத்தில் கற்றால் உலகெங்கும் வேலைவாய்ப்பு.தமிழில் கற்றால் எதிர் காலமே கிடையாது எனபது போன்ற மாயத்தோற்றத்தில் மக்கள் மதி மயங்கி கிடக்கின்றனர்.எனவே கடன்பட்டாவது தமது குழந்தைகளை ஆங்கில வழியில் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் கூட்டம் அலை மோதுகிறது.கல்வி வியாபாரிகளின் கல்லாப்பெட்டி நிரம்பி வழிகிறது.

ஆங்கில வழிக் கல்வி அறிவுடமையாகுமா.
    
ஒரு குழந்தையை பள்ளிகூடத்தில் சேர்க்கும்போது அது ஓரளவுக்கு தாய்மொழியை இயல்பாக கற்று அதில் பேசும் ஆற்றலை கொண்டிருக்கிறது. அந்த குழந்தைக்கு பாடங்களை அதற்க்கு தெரிந்த மொழியில் கற்பித்தால் எளிதாக புரிந்து கொள்ளும்.அந்த குழந்தையின் புரிதல் தாய் மொழியின் உதவியால் முழுமையாக இருக்கும். "இளமையில் கல்" என்ற முதுமொழிக்கேற்ப தாய்மொழி வழியாக கல்வி கற்கும் குழந்தையின் கல்வி அடித்தளம் நன்றாக அமைகிறது. எனவே மேற்கொண்டு உயர்கல்வி கற்கும்போது அந்த குழந்தைக்கு எந்த இடர்பாடும் ஏற்படாது. எனவே உயர்கல்வி கற்று அதில் ஆய்வுகள் மேற்கொண்டு தத்தமது துறையில் சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்த்த முடியும். அதற்கு தாய்மொழி கல்வியே உறுதுணையாக இருக்கும்.      ஆகவே தாய்மொழியில் கல்வி கற்பிப்பதே அறிவியல் பூர்வமானது.


 இதற்கு சான்று தேடி எங்கும்  அலையவேண்டியதில்லை. புதிய புதிய அறிவியல் கண்டுபிப்புகளை பொறுத்தவரை இந்தியர்களைவிட மேலை நாட்டினர் முன்னணியில் உள்ளனர். காரணம் அவர்கள் யாரும் அந்நிய மொழியில் கல்வி கற்பதில்லை. தத்தமது தாய்மொழியில்தான் கல்வி கற்கிறார்கள். எனவே அவர்களது அறிவாற்றல் இரவல்மொழியில் கல்விகற்ற நம்மைவிட கூடுதலாக உள்ளது. நாமோ அவர்களது அடியொற்றி பின்பற்றி நடந்துகொண்டிருக்கிறோம். அதில் பீத்த பெருமை வேறு நம்மவர்கட்கு. 
     
ஒரு தமிழ்குழந்தை ஆங்கில வழிக்கல்வி பயிலும்போது இரண்டு சுமைகளை சுமக்க நேரிடுகிறது. ஒன்று கடினமான பாடங்களை புரிந்து கொள்ளவேண்டும். இரண்டாவது அதற்கு முன்பு அந்த பாடங்களை கற்பிக்கும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளவேண்டும். இந்த இரண்டு சுமைகளை சுமக்கமாட்டாமல் மாணவர்கள் வெறுமனே பாடங்களை மனனம் செய்து மதிப்பெண் பெற முயற்ச்சிக்கின்றனர். இறுதியில் அவர்கள் மனனம் செய்யும் இயந்திரங்களாக மாறி பாடங்களை புரிந்து கொள்ளாமலேயே "கல்வி" கற்று பள்ளி , கல்லூரிகளை விட்டு வெளியே வருகின்றனர்.இத்தகைய மாணவர்கள் தமது துறை சார்ந்த சாதனைகள் ஏதேனும் நிகழ்த்தமுடியுமா? எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.
     இந்த மனனம் செய்யும் கொடுமைக்கு நமது கல்வி முறையும் ஒரு காரணம். ஒரு மாணவன் கற்ப்பிக்கப்பட்ட பாடத்தை புரிந்த்கொண்டானா என்பதை ஆய்ந்தறியாமல், அவனது மனப்பாட திறனுக்கு மதிப்பெண் அளிப்பதே நடைமுறையாக உள்ளது. அறிவியல்பூர்வமான முறையில் தாய்மொழி வழியே கற்பிக்கும்போது மட்டுமே இந்த கொடுமையும் ஒழியும்.

தொழில் வளர்ச்சிக்கு ஆங்கில வழிக் கல்வி அவசியமா.


உலகில் தொழில்மயமான,தொழில்வளர்ச்சியில் சாதனை படைத்த அமெரிக்கா,பிரான்சு, இங்கிலாந்து,செர்மனி,சப்பான்,சீனா என எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் யாரும் அந்நிய மொழிவழியாக கற்பதில்லை.தத்தமது தாய்மொழி வழியாகவே கற்கிறார்கள்.மேலை நாடுகளை விடுங்கள்.ஆசிய நாடுகளான சீனாவும் சப்பானும் ஆங்கிலம் வழியாக படிக்காத காரணத்தினால் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி விடவில்லை.அவை உலகில் முறையே இரண்டாவது மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கின்றன.இது என்ன எளிதான சாதனையா.இதை சாதிக்க எந்த அந்நிய மொழிவழிக் கல்வியும் அவர்களுக்கு தேவைப்படவில்லை.ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்று கொள்வதே அவர்களுக்கு போதுமானதாக  இருந்திருக்கிறது. அதுவும் கூட வெளிநாடுகளுடன் வணிக நிமித்தம் தொடர்பு கொள்ள மட்டுமே.நம்மை போன்று உள்ளுரில் பெருமைக்கு ஆங்கிலம் பேசி திரிவதற்கு அல்ல.
.
பொருளாதார வளத்திற்கு ஆங்கில வழிக் கல்வி அவசியமா

இரண்டாம் உலகப் போரில் தோற்று அணு ஆயுத தாக்குதலுக்கு இரையாகி சிதைந்து போயிருந்த சப்பான் அத்தனை இடர்பாடுகளையும் கடந்து மிகப்பெரும் பொருளாதார முன்னேற்றத்தை எட்டியதில் தாய் மொழிக் கல்வி முதன்மையான பங்கு வகிக்கிறது.


தொழில் வளர்ச்சியும் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை  எட்டுவதுமே பொருளாதார வளத்தை தருமே அன்றி ஆங்கிலத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.ஆங்கில அறிவைக் கொண்டுதான் தகவல் தொழில் நுட்ப துறையில் இந்தியா நம் இப்போது காணும் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளதாக சில  'மேதைகள்' கதைக்கலாம்.சீனர்களும்தான் இப்போது நமக்கு இணையாக வளர்ந்து வந்துள்ளனர்.அவர்கள் என்ன நம்மைப் போல ஆங்கில பித்து தலைக்கேறி  போய் ஆங்கிலத்தில் கற்பவர்களா.தாய் மொழியில் கற்பவர் அன்றோ அவர்கள்.ஆங்கிலத்தை மொழியாக கற்றே அவர்களால் இந்த உயரத்தை எட்ட முடிந்துள்ளது.


ஆங்கிலத்தில் உரையாட எவ்வழி கல்வி வேண்டும்.


தமிழக மக்களிடம் நிலவும் மற்றொரு மூட நம்பிக்கை ஆங்கில வழியில் பயின்றால் மட்டுமே அம்மொழியில் சரளமாக உரையாட முடியுமாம்.பள்ளிகல்வியை தமிழில் பயின்று இருந்தாலும் கூட ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வல்லவர்களை நாம் அறிவோம்.எடுத்துக் காட்டாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,தமிழ் தேச பொதுஉடமை கட்சியின் தோழர் தியாகு போன்றோரை குறிப்பிடலாம்.அவ்வளவு ஏன். மற்றொரு அந்நிய மொழியான பிரஞ்சு மொழியை சரளமாக பேச வல்லவர்கள் இன்றும் நம் நாட்டில் உள்ளனரே.எ.கா.மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பிரஞ்சு மொழி ஆசிரியர்கள்.இந்திய வெளியுறவு துறையில் பணியாற்றும்,பணியாற்றிய சசிதரூர் போன்ற அலுவலர்கள்.அவர்கள் யாரும் அம்மொழி வழியாக கல்வி பயின்றவர்கள் அல்லர்.ஒரு மொழியாக கற்றுத்தான் அதில் உரையாடும் திறனை பெற்றுள்ளனர்.


இனி செய்ய வேண்டியது 

பல்லாண்டு காலமாக தமிழ் சான்றோர் வலியுறுத்தி வருவது போல் ஆரம்ப பள்ளி முதல் கல்லூரிகள் வரை தமிழை பயிற்று மொழியாக ஆக்க வேண்டும்.ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்க வேண்டும்.ஆங்கிலத்தில் தேர்வு பெறுவது கட்டாயமாக இருக்க கூடாது.ஆங்கிலத்தை கடக்க முடியாமல் பள்ளிப் படிப்போடு கல்வியை துறந்தவர்கள் பலருண்டு.அந்த கொடுமைக்கும் முடிவு கட்ட வேண்டும்.ஆங்கிலத்தை மொழிப் பாடமாக கற்றாலும் கூட அம்மொழியில் சரளமாக உரையாடும்,எழுதும் திறனை மாணவர்கள் பெரும் வகையில் கற்பிக்கும் முறை அறிவியல்பூர்வமானதாக இருக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசுத்துறைகள் அனைத்திலும் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்கவேண்டும்.மைய மற்றும் பிற மாநில அரசுகளோடு தொடர்பு கொள்ள மட்டுமே ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும்.கல்லூரி.பல்கலை கழக அளவிலான அனைத்து நூல்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் மொழி வழிக் கல்வி சாத்தியமாக்கப் படவேண்டும்.தமிழ் வழியாக கற்றவர்கள் மட்டுமே தமிழக அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப் படவேண்டும்.நீதி மன்ற மொழியாக உயர் நீதி மன்றம் வரை தமிழை கொண்டு வர வேண்டும்.
இவையெல்லாம் எமது சிற்றறிவுக்கு எட்டிய யோசனைகள்.மேலும் பயன் தரத் தக்க கருத்துருக்களை தர வல்ல சான்றோர்களின் வழிகாட்டுதல்களை கேட்டு செயல்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் நாம் அடிமை மோகத்தால் ஆங்கில மாயையில் சிக்கியுள்ளோம் என்பதை உணர்ந்து ஆங்கில வழிக் கல்வியை அறவே தவிர்க்க வேண்டும்.

இறுதியாக,இவையெல்லாம் ஏதோ கனவில் மட்டுமே நடைபெறும் என சிலர் நம்மை ஏளனமாக பார்க்ககூடும்.ஏனெனில் நம்மை போன்று ஒரு சிலரே தற்போது தமிழுக்காக எழுதியும் பேசியும் வருகின்றனர்.பின்பொரு நாள் வரும்.அப்போது நம்மை போன்றோரே பெரும்பான்மையாக இருப்பர்.அப்போது தமிழின் எதிரிகள்தான் எள்ளி நகையாடப்படுவர்.

'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா'

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளுக்கு ஏற்ப அந்த நாளை விரைந்து கொண்டு வர உழைப்போம்.

Wednesday, September 8, 2010

வேலைவாய்ப்பில் முன்னுரிமை சட்டம் வரவேற்கிறோம் ஆனால்

     07-09-2010 அன்று தமிழக அரசு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் அவசர சட்டமொன்றை பிறப்பித்துள்ளது.


    இந்த சட்டத்தை வரவேற்கிறோம். இச்சட்டத்தின்படி இனி தமிழக அரசு பணியிடங்களை நிரப்பும்போது தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருபது விழுக்காடு இடங்கள் நேரடி தேர்வுக்காக ஒதுக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்வழி பயின்றோர் அமர்த்தப்படுவர்.
     இதன்மூலம் தமிழ்வழியில் பயில்வது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவாது என மாணவர்கள் இடையே ஏற்படுத்தப்படும் மாயத்தோற்றம் ஓரளவு கலையக்கூடும். மேலும் இந்த இருபது விழுக்காடு ஒதுக்கீடு என்பதை ஐம்பது விழுக்காடுகளாக தமிழக அரசு உயர்த்தவேண்டும்.அப்படி உயர்த்துவதன் மூலமே தமிழ்வழியில் பயின்றோரில் கணிசமானோருக்கு வேலை வாய்ப்பு தர முடியும்.
     தமிழ்நாட்டில், தமிழ்பேசும் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் , தமிழ் பேசும் மக்களுக்காக நடத்தப்படும் அரசில் தமிழுக்கு ஒதுக்கீடு என்பதே அவலமாக உள்ளது. இருப்பினும், தற்போது அடிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் தமிழை மீட்பதற்கு இது உதவக்கூடும் என்பதால் இச்சட்டத்தை வரவேற்கிறோம். (தாய்மொழியில்) கல்வி கற்பது எப்படி அறிவியல்பூர்வமானது , அந்நிய மொழி வழியாக கற்பது எப்படி நம்மை பின்தங்க செய்கிறது என்பது குறித்து தனிப்பதிவு ஒன்றை விரைவில் வெளியிடுகிறோம்.

Sunday, September 5, 2010

சோதிடக்கலை அறிவியலா?

நம் முன்னோர்கள் மிகுந்த அறிவாளிகள்.வானவியலை கரைத்து குடித்தவர்கள். அதனால்தான் அவர்கள் உருவாக்கியுள்ள 'பஞ்சாங்கத்தை'பயன்படுத்தி இன்றளவும் சூரிய கோள்மறைவு (கிரகரணம்),சந்திர கோள்மறைவு முதலானவற்றை துல்லியமாக கணித்து சொல்ல முடிகிறது.எனவே சோதிடக்கலை அறிவியல் அடிப்படையிலானது.சோதிடத்தை நம்புவது அறிவார்ந்த செயல்.இப்படி ஒரு கருத்து பரவலாக மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது.
                                     மனித குலம் தோன்றிய காலம் தொட்டு இயற்கையை புரிந்து கொள்ள இடையறாது முற்சித்து வருகிறது.அந்த ஆய்வின் பலனாக அறிவியல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.பல்வேறு அறிவியல் கோட்பாடுகள் முன்வைக்கப் பட்டு அவற்றில் சரியானவை என மெய்ப்பிக்கப்பட்டவை தொடர்ந்து மேற்கொண்டு ஆய்வு செய்ய பயன்படுகின்றன.மற்றவை புறந்தள்ளப் படுகின்றன.
                                         அந்த வகையில் இந்திய துணைக்கண்டப் பகுதியில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த வானவியல் தொடர்பான அறிவியல் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே சோதிடவியல்.அறிவியல் அதன் குழந்தை பருவத்தில் நடை போட்டு கொண்டிருந்த காலம் அது.எனவே மிகுந்த குறைபாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது ஆருடக்கலை.
                                            சோதிடவியல் நாம் வாழும்  மண்ணுலகம் சூரிய குடும்பத்தின் மையப்புள்ளி என்கிறது.சூரியன் மையப்புள்ளி இல்லையாம்.மண்ணுலகை ஒன்பது கோள்கள் சுற்றி வருகின்றனவாம்.அந்த ஒன்பது கோள்களில் சூரியனும் ஒன்று என்கிறது சோதிடக்கலை.சூரியனை உலகம் சுற்றி வருகிறது என்ற மெய்ப்பிக்கப்பட்ட உண்மையை விடுத்து உலகை சூரியன் சுற்றி வருகிறது என்று நாம் பகிரங்கமாக உலகத்தாருக்கு சொல்வோமேயானால் நமக்கு அவர்கள் என்ன பட்டம் தருவார்கள் என எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.இது மட்டுமல்ல உலகை சுற்றி வரும் ஒன்பது கோள்களில் சந்திரனும் சூரியனும் ராகுவும் கேதுவும் அடக்கம்.இவற்றில் சூரியன் கோள் அல்ல.விண்மீன் .சந்திரன் ஒரு துணைக்கோள்.ராகு கேது என்பன சந்திரனின் சுற்று வட்டப்பாதையும் உலகின் சுற்று வட்டப்பாதையும் சந்தித்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளிகள்.அவை கோள்கள் அல்ல.
                                        ஆக இவ்வளவு குறைபாடுகளை வைத்துக்கொண்டு ஆருடக்கலையை அறிவியல் என்று கூற முடியுமா.இந்த அரைகுறை அறிவியல் ஒரு மனிதனின் எதிர் காலத்தை கணித்து விடுமா.இன்றைய முன்னேறிய அறிவியலின் துணை கொண்டு கூட ஒரு தனி மனிதனின்  எதிர் காலத்தை கணித்து விட முடியாது.அது தேவையுமில்லை.அது அறிவியலின் பணியுமல்ல. .
                                          எங்கோ தொலைதூரத்தில் சுற்றி கொண்டிருக்கும் கோள்களுக்கும் ஒரு தனிமனிதனின் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும்  என்ன தொடர்பு இருக்கமுடியும்.ஒரு தனிமனிதனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவனது குண நலன்களும் அவன் வாழும் சமூகத்தின் புற சூழல்களுமே காரணமாக இருக்க முடியுமே அன்றி விண்ணில் நீந்தும் கோள்கள் ஒருக்காலும் காரணமாக முடியாது.கோள்களின் கதிர் வீச்சு அதனால் வாழ்வில் ஏற்றத்தாழ்வு  போன்றவை எல்லாம் கட்டுக்கதைகளே. முகேஷ்,அனில் அம்பானிகள்.ரத்தன்  டாட்டா.ரெட்டி சகோதரர்கள் பிறந்த விண்மீனில் (நட்சத்திரத்தில்) பிறந்த எல்லோருமே இன்று பெரும்  பணம் படைத்தவர்களாகத்தான் இருக்கிறர்களா.அவர்களில் அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் ஏழைகளும் இருக்க கூடுமே.
                                  எண்ணிப்பாரீர்.
                              

Saturday, September 4, 2010

வட மொழி எழுத்துக்கள் தமிழுக்கு தேவையா.

     ஜ,ஷ், ஸ் போன்ற வட மொழி  எழுத்துக்கள் தமிழில் கலந்து புழக்கத்தில் உள்ளன.பிற மொழிச் சொற்களை சரியாக மொழிய இவை தேவை என்ற கோதாவில் இவை தமிழுக்குள்  இறக்கப்பட்டன. இந்த எழுத்துக்களை பயன்படுத்தியே வட மொழிச்சொற்கள் தமிழில் கலந்தன.ஒரு சிறிய தன்னல கும்பல் வட மொழிக் கலப்பை  திட்டமிட்டு செய்ததற்க்கான அரசியல் சமூக,காரணங்களை தனியொரு பதிவில் ஆராயலாம்.
 பிற மொழிச் சொற்களை அந்த மொழிக்காரர்கள் மொழிவது போலவே நாமும் சொல்வது  அவசியமா.நமது தமிழ் சொற்களை பிற மொழியினர்  அப்படித்தான் மொழிகிறார்களா. இல்லையே.தமிழர்கள் என்ற சொல்லை 'டமில்ஸ்' என்றுதானே ஆங்கிலேயர்கள் சொல்கிறார்கள்.அதில் தவறேதுமில்லை.அவரவர் மொழியின் இயல்புக்கு ஏற்பவே அவரவர் உரையாடும் தன்மை இருக்கும்.அந்த வகையில் பிற மொழிச் சொற்களை தமிழ் எழுத்துக்களை கொண்டே வழங்கலாம்.கஷ்மீர் என்பதை கசுமீர் என்றும் குஜராத் என்பதை குசராத் என்றும் அழைக்கலாம்,எழுதலாம்.ஒன்றும் குடி முழுகி போய் விடாது.
ஒரு சிறப்பான எடுத்துக்காட்டின் மூலம் இதை மேலும் வலியுறுத்தலாம்.அரபு மொழியில் 'ட்' என்ற எழுத்து கிடையாது.அதனால் அந்த எழுத்துக்கான ஒலி அரபு மக்களுக்கு எளிதில் சொல்ல வராது.அதன் காரணமாக உலகம் முழுவதற்கும் அவர்கள் ஏற்றுமதி செய்யும் 'பெட்ரோலியத்தை'  பெத்ரோலியம் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.அதனால் அவர்தம் என்னை வணிகம் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.
எனவே பிற மொழிச்சொற்களை தமிழ் எழுத்துக்கள் கொண்டே அழைப்போம்.அதன் காரணமாக யாருக்கும் எந்த தீங்கும் நேர்ந்து விடாது என்றும் மண்ணுலகம் இரண்டாக பிளந்து விடாது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்.அப்படியே உலகம் இரண்டாக பிளந்து பட்டு விட்டால் வடிவேலுவை கொண்டு சங்கர் சிமிட்டியை பயன்படுத்தி மீண்டும் ஒட்ட வைத்து நல்ல முறையில் பூசித்தருகிறோம்.

Thursday, September 2, 2010

தமிழில் வட மொழி கலப்பு-தடுப்பது ஏன் அவசியம்

தமிழில் ஏராளமான வட  மொழி சொற்கள் கலந்து மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன.பல நூற்றாண்டு காலமாக தமிழ் மீது வட மொழி திணிப்பு நடந்தேறி வருவதால் தமிழ்ச்சொல் எது வடமொழிச்சொல் எது என பிரித்தறிவதே கடினமான ஒன்றாக உள்ளது.இதனால் சமத்கிருத சொற்களின்றி தமிழால் இயங்க முடியாது என்பது போன்று ஒரு பொய்த்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் உண்மை அதுவன்று.சொல்வளமும் இலக்கிய வளமும் மிக்க தமிழால் தனித்து இயங்க முடியும்.'சீரிளமை திறம்'மிகுந்த தமிழுக்கு ஊன்றுகோல் எதுவும் தேவையில்லை. .உண்மையில் தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளின் துணையின்றி சமத்கிருதம்தான் இயங்க முடியாது.ஏனென்றால் அது பேச்சு வழக்கொழிந்து இறந்து பட்ட மொழி.ஆனால் நம் தாய்த்தமிழோ இன்றும் வாழும் மொழி.கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் தமிழ் என்றும் அழியாது.தமிழ்த்தாயின் புதல்வர்கள் அதை அழியவும்  விடமாட்டார்கள்.                                                                                                                                                 வடமொழிச்சொற்கள் தமிழில் இருந்து அப்புறப்படுத்த பட  வேண்டும் என்று நாம் கோருவது மொழி வெறியின்  பாற்பட்டது என குற்றச்சாட்டு எழலாம்.இல்லை,நிச்சயமாக இல்லை.மொழிப்பற்று, இனத்தின் மீது கொண்ட பற்று காரணமாகவே நாம் இவ்வாறு கோருகிறோம்.மொழி என்பது வெறுமனே கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கான கருவி மட்டுமல்ல.அம்மொழி பேசும் மக்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பெட்டகம் அது.ஒரு இனம் எத்தகைய பண்பாடு,கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என்பது அவ்வினம் பேசும் மொழியை பொறுத்தே அமைகிறது.ஒரு மொழியின் மீது பிறிதொரு மொழியின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாத வகையில் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்போது வடமொழியின் தாக்கம் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு இழைத்திருக்கிறது.                                ஜோஷ்யம்,  ஜாதகம்.அதிர்ஷ்டம்,துரதிர்ஷ்டம்,அஷ்டமி, நவமி,வாஸ்து இந்த சொற்களை பாருங்கள் அத்தனையும் வடமொழி.அத்தனையும் மூடநம்பிக்கைகள் எனவே வட மொழி என்பது அழுக்குகளை தமிழ் மீது அள்ளி இறைத்து சென்ற சூறைக்காற்று. இன்று நம் முன் உள்ள பணி அந்த அழுக்குகளை நீக்கி தாய்த்தமிழை தூய்மைப் படுத்துவதே.வட மொழி எதிர்ப்புக்கு தொல்காப்பியர் மறைமலை அடிகள் பேராசிரியர்.ம.நன்னன் என நீண்ட பாரம்பரியம் உண்டு.அந்த வரிசையில் நாமும் இணைவோம்                                                                                                                                  பி.கு.ஜோஷ்யம் வாஸ்து இவையெல்லாம் அறிவியலின் பாற்பட்டது,அவற்றை பின்பற்றலாம் என்றொரு வாதம் எழலாம்.இல்லை,அவை முற்றிலும் அறிவியலுக்கு முரணானது என்று நிறுவும் வகையில் தனிப்பதிவு  ஒன்றை விரைவில் இடவிருக்கிறோம்.நன்றி மீண்டும் சந்திப்போம்.                 .