Friday, September 17, 2010

பழம்பெருமைக்கு பகுத்தறிவு கிடையாது.

பழம்பெருமை பேசியே பாழாய்ப்போன இனம் ஒன்றை அடையாளம் காட்ட வேண்டுமென்றால் தமிழினத்தை தாரளமாக கை காட்டலாம்.


அதிகாலை நேரம். தொடர்வண்டியில் சென்னை வநது எழும்பூரில் இறங்கி பாரி முனை நோக்கி போய் கொண்டிருந்தேன்.ஓவிய கல்லூரிக்கு எதிர்புற சுவரில் வரிசையாக வரையப்பட்டிருந்த ஓவியங்கள்  கண்ணையும் கருத்தையும் கவர தானி ஓட்டுனரை சற்று நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.மிகுதியான போக்குவரத்து இல்லாததால் வண்டியை ஓரம் கட்டிய ஓட்டுனர்,ஓவியங்களையும் அவற்றை உற்று கவனிக்கும் என்னையும்  சற்று ஆச்சரியத்துடன மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்.


சென்னை நகர சுவர்களை அழகு படுத்துவதாக கூறிக் கொண்டு சென்னை மாநகராட்சி பல ஆயிரம் உருவாக்களை செலவிட்டு அந்த ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறது.ஒரு வகையில் இதிலும் கூட அரசியல் உண்டு.சிறு அரசியல்,சமூக அமைப்புகளின் பரப்புரையை முடக்குவதும் இதன் நோக்கங்களில் ஒன்று.பெரும் பண வலுவோ  ஊடக வலுவோ இல்லாத அமைப்புகள் சுவரெழுத்து மூலமாக பொது மக்களிடம் தமது கருத்துகளையும் போராட்டங்கள் பற்றிய செய்திகளையும் எடுத்து சொல்லி வந்தன.கேடு கேட்ட திரைப்பட ஆபாச சுவரொட்டிகள் சென்னை நகரெங்கும் ஒட்டப் படுகின்றன.அவை கெடுக்காத அழகை அரசியல் சமூக அமைப்புகளின் சுவரெழுத்து பரப்புரை கெடுத்து விடுமாம்.நடிகர் நடிகைகள் தமது உடல் உறுப்புகளை ஆபாசமாக வெளிக்காட்டும் திரைப்பட சுவரொட்டிகள் மொத்த சமூகத்தின் பண்பாட்டு, தார்மீக அழகை கெடுக்கின்றனவே அவையெல்லாம் மாநகராட்சியின் கண்களை உறுத்தவில்லையா.


சரி, எடுத்துக்கொண்ட பொருளுக்கு வருவோம்..அந்த சுவர் ஓவியங்களில் ஒன்றில் அறுவடை செய்த நெற்கதிர்களை விவசாய தொழிலாளர்கள் யானைகளை வைத்து போரடித்துக் கொண்டிருந்தார்கள்.


''மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று''                                                                      ''யானை கட்டி போரடிக்கும் மாமதுரை''


என்ற தமிழ் பாடலை கருவாக கொண்டு இந்த ஓவியம் வரையப் பட்டிருக்க வேண்டும். யாரோ ஒரு புலவன் பாண்டிய மன்னனையும் அவன் நாட்டையும் பொய்யாக புகழ்ந்து பாடி பரிசில் பெறுவதற்காக எடுத்து விட்ட 'புருடா'வை உண்மை என நம்பி இந்த ஓவியம் படைக்கப் பட்டுள்ளது.


நகரத்தில் வாழ்ந்தாலும் இன்றளவும் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருபவன் என்ற முறையில் விவசாயத்தை பற்றி எமக்கு ஓரளவு அறிவு உண்டு.பேச்சு வழக்கில், சிற்றூர்புற மக்கள் நெல்மணிகளை கதிரிலிருந்து பிரிப்பதற்காக ஒரு கல்லில் தட்டி உதிர்த்துவதை ''போரடித்தல்'' என்று சொல்வர்.அதில் உதிராத நெற்களை சேகரிக்க அக்கதிர்களை வட்டமாக பரப்பி வைத்து அதன் மீது மாடுகளை நடக்க வைக்கிறார்கள். இதனை 'சூடடித்தல்'என அழைக்கிறார்கள்.இந்த சூடடித்தலைத்தான் போரடித்தல் என பாடல் குறிப்பிடுகிறது.


எண்ணிப்பாருங்கள்.யானையின் நிறைமிகு உடலை தாங்கி அதன் வலுமிகு கால்கள் நெல்மணிகள் மீது ஏறி மிதித்தால் என்ன ஆகும்.நெற்கதிர்கள் நெல்லோடு சேர்ந்து தவிடு பொடிஆகிவிடாதா.மேலும் யானையின் கால்கள்,மாடுகளின் கால்களை போன்று பிளவு பட்ட குளம்புகளை கொண்டவை அல்ல.அவை பிளவுபடாமல் மொத்தமாக ஐந்து விரல்களும் ஒன்றாக இணைந்து உருவாகியிருக்கும்.அதனால்தான் யானையின் கால்கள் ஐந்து நகக் கண்களை கொண்டிருக்கும்.இத்தகைய கால்கள் நெல்மணிகளை சேதப் படுத்துமேயன்றி கதிரிலிருந்து அவற்றை பிரிக்காது.குதிரைகளின் கால்களும் பிளவு படாத குளம்புகளை கொண்டவை.அதனால்தான் ஒப்பீட்டளவில் மாடுகளை போன்ற எடை கொண்டிருந்தாலும் உழவர்கள் சூடடிக்க குதிரைகளை பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தினாலும் பலன் கிட்டாது.யானையின் கால்களில் மிதி பட்டால் சிங்கம்,புலி கூட குடல் பிதுங்கி செத்துவிடும்போது சிறு சிறு நெல்மணிகள் எம்மாத்திரம்.யாராவது எதையாவது சொன்னால் அப்படியே ஆராய்ந்து பார்க்காமல் நம்பி விடுவதா.


தமிழகத்தில் விவசாயத்தின் இன்றைய நிலைமை என்ன.காவிரி ஆற்று நீரில், முல்லை-பெரியாறு அணை நீரில் தமிழகம் தனது உரிமைகளை நிலை நாட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.முப்போகம் விளைந்த தஞ்சை பகுதி இன்று ஒரு போகம் விளைவிக்கவே படாத பாடு படுகிறது.நாட்டுக்கே சோறு போட்ட தஞ்சை விவசாயிகள் இன்று 'அத்த' கூலிக்கு வேலை செய்ய கேரளாவுக்கும், தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.இடுபொருட்களின் விலையேற்றத்தால்,மைய,மாநில அரசுகளின் மக்கள் முரண் கொள்கைகளால்,பாதிக்கப்படும் விவசாயம் நிச்சயமற்ற பருவ மழையால் இயற்கையோடு நடத்தும் சூதாட்டமாக மாறிப்போய் நசிந்து கிடக்கிறது.அப்படியே ஏதாவது விளைந்து வந்தாலும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பையே சந்திக்க வேண்டியுள்ளது.


வீட்டு மனை தொழிலால் விளைநிலங்கள் வளைத்து போடப்பட்டு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.பெரு நகரங்களை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் என்பதே இல்லாமல் போய்விட்டது.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த அரசே விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு விளைநிலங்களை வாங்கி தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது.


இப்படியான அவல நிலையிலிருந்து விவசாயத்தை எப்படி மீட்பது என எண்ணாமல் அதற்காக போராடாமல் பழம் பெருமை அதுவும் பொய்ப்பெருமை பேசிக்கொண்டிருந்தால் தமிழ் சமூகம் எப்படி முன்னேறும்.எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.


இறுதியாக எனது வருத்தம் ஒன்றையும் இங்கு பதிவு செய்கிறேன்.
எனக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு எச்சில் துப்பும் பழக்கம் இல்லாததால் எங்கள் ஊர் 'நாட்டாமை' யாகும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.நாட்டாமையாக இல்லாததால் பதினெட்டு பட்டிகளையும் வளைத்து போட்டு பெரும் சொத்து சேர்க்க முடியவில்லை.பெரும் சொத்துக்கள் இல்லாததால் யானைகளை வைத்து போரடிக்கும் அளவுக்கு பெரும் விளைச்சல் எனக்கு வருவதில்லை.பெரிய அளவு விளைச்சல்  இல்லாததால் களத்துமேட்டுக்கு வநது இறைஞ்சும் புலவர்களுக்கும் ஏழைகளுக்கும் 50 மூடை 100 மூடை என இனாமாக வாரி வழங்க முடியவில்லை.அப்படி கொடுக்காத காரணத்தால் நான் சாலை வழியாக வாகனத்தில் போகும்போது வரிசையாக பொதுமக்களும் கே.எசு.ரவிகுமாரும் நின்று கொண்டு எனக்கு மரியாதை செலுத்துவதில்லை.அப்படி ஒரு மரியாதை இல்லாமல் வாகனத்தில் போவது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.

2 comments:

  1. ஏதோ எண்ணக்குமுறலாக நீங்கள் சொன்ன கருத்துகள் சில பல உண்மைகளை உரைத்தாலும் பழம் பெருமை பேசி ஒழிந்த கூட்டம் அல்ல. பேராசையினால் தமிழை தவிர்த்ததனால் அழிந்து கொண்டுடிருக்கும் இனம். உலகமயமாதலின் உன்னத கேடுகள். இனி ஒரு அரசியல் விதி இன்றி யாராலும் காப்பற்ற முடியாத நிலையில் இன்று தமிழ். மொழியை வாழவைக்காத இனம் இருந்தென்ன செத்தென்ன

    ReplyDelete
  2. ஏதோ எண்ணக்குமுறலாக நீங்கள் சொன்ன கருத்துகள் சில பல உண்மைகளை உரைத்தாலும் பழம் பெருமை பேசி ஒழிந்த கூட்டம் அல்ல. பேராசையினால் தமிழை தவிர்த்ததனால் அழிந்து கொண்டுடிருக்கும் இனம். உலகமயமாதலின் உன்னத கேடுகள். இனி ஒரு அரசியல் விதி இன்றி யாராலும் காப்பற்ற முடியாத நிலையில் இன்று தமிழ். மொழியை வாழவைக்காத இனம் இருந்தென்ன செத்தென்ன

    ReplyDelete