Sunday, October 24, 2010

இல.கணேசனுக்கு மறுப்பு.கடந்த 23 -09 -10 .அன்று தினமணி நாளிதழில் தமிழக பா.ச.க.வின் முதன்மை தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன் அயோத்தி பாபர் மசூதி பிரச்னை குறித்து எழுதியுள்ள பொய்யும் புனை சுருட்டும் நிரம்பிய கட்டுரைக்கு நமது மறுப்பு.

தினமணியில் வெளியான கட்டுரையை முதலில் பார்க்கலாம்.

பாபர் மசூதி இடிப்பதற்கு முன்னால் - உள்புறத் தூண்கள்
நான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே.
குறிப்பாக பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன  கருதுகிறது? இஸ்லாம் என்ற மதம் வெளிநாட்டில் தோன்றிய மதம் என்பது உண்மை. இஸ்லாம் வெளிநாட்டில் தோன்றி நம் நாட்டுக்கு வந்தது.
ஆனால், இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.
ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர். இந்த ஒற்றுமை ஆபத்து என ஆங்கிலேயன் கருதினான்.
அயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர். இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள்.
  டிசம்பர் 6, 1992-க்கு முன்பு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன். வெளியில் இருந்து பார்த்தால் மசூதிபோன்ற தோற்றம். உள்ளே போனால் கோயில். தரையிலிருந்து சுற்றிலும் ஐந்தடி உயரத்தில் உள்ள சுவர்களில் எல்லாம் நமது கோயில்களில் காணப்படும் சிற்பங்கள். யாழி, பாவை விளக்கு, தசாவதாரச் சிற்பங்கள் போன்றவைகளோடு பூவேலைப்பாடுகள். அண்ணாந்து மேலே பார்த்தால் தஞ்சாவூர் தொளைகால் மண்டபம் (சரியான பெயர் என்ன என்று தெரியாது. இப்படித்தான் அழைத்து வருகிறோம்) உள்ளே இருப்பதுபோல் அமைப்பு. இதுதான் இடிபட்டது.
அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்ம ஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்ம ஸ்தான் தபால் ஆபீஸ். முஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும்.
சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.
பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.
அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.
பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது.
நாளையே பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதிபரும், மக்களும் எங்கள் மதத்தைத் சார்ந்தவர்கள். அதனால், அவர்களை வரவேற்போம் என்று எந்த இந்திய இஸ்லாமியரும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால், அது நியாயமானது என எந்த மதச்சார்பற்றவாதிகளும் கருதமாட்டார்கள். அதுபோலத்தானே இதுவும்.
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை.
சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.
மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி.
நீண்ட காலமாகவே நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகள் இவை. அயோத்தி பிரச்னை தொடர்பாக உள்ள ஒரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவர இருக்கும் இந்த நேரத்தில், எனக்குள் எழுந்த உரத்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நமது மறுப்பு.

இல கணேசன்
 ஆர்.எசு.எசு.க்கும் பா.ச.க வுக்கும் ஏதோ மாபெரும் வேறுபாடு உள்ளது போல் காட்ட முயல்கிறீர்கள். காமராசரின் ( நினைவு வருகிறதா? உங்கள் சன சங்கத்தின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான அதே காமராசர்தான் ) சொற்களில் சொல்வதானால் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
     பார்ப்பணிய ஆதிக்கத்தை  பாதுகாக்கவும் பனியாக்களின் சுரண்டல் நலன்களுக்காகவும் மராட்டிய சித் பவன பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆர்.எசு.எசு. எனும் மதவெறி அமைப்பின் பல்வேறு கிளைகளில் ஒன்றுதான்     பா.ச. க.  ஒரு தொலைகாட்சி விவாதத்தின் போது பா.ச.க -ஆர் எசு. எசு. உறவை காந்தியார் -காங்கிரசு உறவுடன் ஒப்பிட்டு நீங்களே ஒரு முறை கருத்து தெரிவித்தீர்கள். அவ்வளவு ஏன் ஆர் எசு. எசு. விருப்பம் இல்லாமல் பா.ச.க வில் யாரும் பதவிக்கு வரமுடியாது. பதவியில் நீடிக்கவும் முடியாது. எடுத்துக்காட்டு :- சின்னாவை மதச்சார்பற்றவர் என்று கூறியதற்காக அத்வானி ஆர் எசு.எசு.வின் சினத்திற்கு ஆளாகி பா.ச.க தலைவர் பதவியை இழக்க வேண்டியிருந்தது. ஆகவே இரண்டும் வேறு வேறானவை என்று காதில் பூச்சுற்ற வேண்டாம்.
     அடுத்து முசுலிம்களும், நீங்களும் ஒரே " பண்பாடு" கொண்டவர்கள் என கதைக்கிறீர்கள். எப்படி! பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்து மதத்திலிருந்து வெளியேறி பிறப்பால் சகோதரர்கள் என கூறும் இசுலாமிய மதத்தை பின்பற்றுபவர்களும், நீங்களும் எப்படி ஒரே பண்பாடு உடையவர்கள் என்கிறீர்கள்.
     முசுலிம்களின் உணவு பழக்க வழக்கங்கள் வேறு உங்களின் உணவு பழக்க வழக்கங்கள் வேறு. அவர்களது பெருநாட்கள் வேறு. உங்களது பண்டிகைகள் வேறு. இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். உண்மை இப்படியிருக்க ஒரே பண்பாடு என்ற பசப்பல் ஏன். அவ்வளவு ஏன், இந்து மத சகோதரர்களிலேயே வேறுபட்ட கலாசாரங்கள் பின்பற்றபடுகின்றன. இந்து மக்களில் சில சாதியினர் கைம்பெண் மறுமணத்தை அனுமதிக்கிறார்கள். உங்களை போன்ற மேல் சாதியினர் கைம்பெண் திருமணத்தை  ஏற்பதில்லை. பிறகு ஒரே பண்பாடு என்ற பசப்பல்கள் ஏன்.
     அடுத்து பாபர் அந்நிய நாட்டிலிருந்து வந்த படைஎடுப்பாளன் என்று சொல்லியிருக்கிறீர்கள். யார் இல்லை என்று சொன்னது. அந்த காலகட்டத்தில் மன்னர்களுக்கு பிற நாடுகளை கைப்பற்றி தனது ஆட்சி பகுதிகளை விரிவுபடுத்துவது என்பது வழக்கமாக இருந்து வந்தது.அந்த வகையில் பாபர் படையெடுத்து வந்து இந்தியாவின் வட பகுதியை கைப்பற்றி ஆட்சி நடத்தினார். ஆனால் முகலாயர்களும், பிற முஸ்லிம் மன்னர்களும் இந்த நாட்டையே சொந்த நாடாக வரித்துக் கொண்டு இங்கேயே தங்கிவிட்டவர்கள். ஆங்கிலேயன் நாம் நாட்டை ஆண்டபோது நம்மை சுரண்டி கொள்ளையிட்டு அவன் நாட்டை வளப்படுத்தியது போன்ற அயோக்கியத்தனத்தை அவர்கள் செய்யவில்லை. காரணம் இந்த நாட்டை அவர்கள் தாய்நாடாக வரித்துக் கொண்டதுதான். சொந்த வீட்டில் கொள்ளையிட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

      மற்றபடி இங்கு வாழும் முசுலிம்கள்  வேற்று நாட்டிலிருந்து வந்தவர்களல்லர்.சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்புவது போன்ற சமூக காரணங்களுக்காகவும்  ஆன்மீக காரணங்களுக்காகவும்  இந்து மதத்திலிருந்து    இசுலாத்திற்கு மதம் மாறியவர்கள்.
   அடுத்து  பாபர் இந்த நாட்டை கைப்பற்றியதற்காக, தனது வெற்றியை கொண்டாட அயோத்தியில் பாபர் மசூதியை கட்டியதாக எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு வரலாற்று புரட்டை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். அதற்காக ராமர் கோவிலை இடித்தார் என்றும் குற்றம் சாட்டுகிறீர்கள். எனவே பாபர் மசூதி அவமான சின்னம், அகற்றப்பட வேண்டியது என்றும் கூறியிருக்கிறீர்கள்.
     போர் வெற்றியை கொண்டாட மசூதி கட்டுவது முகலாயர் வழக்கம் என சொல்ல முடியாது. அக்பர் ராசஸ்தான் பகுதியை வென்றதை கொண்டாட பதேபூர் சிக்ரி கோட்டையைத்தான் கட்டினார். மசூதி கட்டவில்லை. மேலும் பாபர் கோவிலை இடித்து மசூதி கட்டியிருப்பாரா என்று அவர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயிலை படித்துவிட்டு முடிவு செய்யலாம்.

பாபரி நாமா எனும் நூலில்  கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
 பாபரின் இந்த உயில் மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  ஒரு வேளை பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எசு .எசு. எனும் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.
இப்போது சொல்லுங்கள்.பாபர் ராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியிருப்பாரா.

மேலும் பாபர் மசூதி கட்டப்பட்ட அதே காலத்தில் அயோத்தியில் வாழ்ந்து வந்த புகழ் பெற்ற ''ராம சரிதா மனஸ்''இயற்றிய ராம பக்தர் துளசி தாசர் அந்நூலில் பாபர் கோவிலை இடித்ததாக எதுவும் எழுதவில்லை.கோவில் இடிக்கப்பட்டிருந்தால் துளசி தாசரும் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே.  
    பாபர் மசூதி ஒரு அவமானச் சின்னம் என்பது உங்கள் சங் பரிவாரத்தின் நச்சுப் பரப்புரையை அன்றி வேறல்ல.
    அடுத்து பாபர் நம் மதத்தவன் என்பதால் முசுலிம்கள் பாபர் மசூதி மீது உரிமை கொண்டாடுவதாக கூறியிருக்கிறீர்கள். அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தால் நம் மதத்தவர்கள் என்பதால் முசுலிம்கள்     ஆதரிக்கமாட்டார்கள்தானே என நச்சுப்பரப்புரை வேறு. பாகிஸ்தானுடனான அத்தனை போரிலும் முசுலிம்கள் செய்த அளப்பரிய தியாகங்களை இழிவுபடுத்துவதாக உங்கள் கூற்று உள்ளது. அண்மைய கார்கில் போரில் கூட போர்த்தந்திர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த " புலிக்குன்றை" இந்தியாவுக்கு முசுலிம் வீரர்கள் தான்  பெரும் உயிரிழப்பை சந்தித்து கைப்பற்றி தந்தார்கள் என்பதை நினைவில் கொண்டு பேசுங்கள். 
     பாபர் கட்டினார் என்பதற்காக முசுலிம்கள் பாபர் மசூதி மீது உரிமை பாராட்டவில்லை. 450 ஆண்டு காலம் தொழுகை நடத்திய தங்கள் வழிபாட்டுத்தலம் என்ற அடிப்படையில்தான் உரிமை கோருகிறார்கள். இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமை இந்தியாவில் நடைமுறை படுத்தப்படுகிறது என்பது உண்மையானால் பாபர் மசூதி முசுலிம்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். 

 \\பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள்// 

     இப்படி ஒரு புளுகு மூட்டையை அவிழ்க்கிறீர்கள்.மசூதி கட்டப்பட்ட காலம் முதல் உங்கள் சங்க பரிவார் கூட்டம் 1949 -டிசம்பர் மாதம் 22-ஆம் நாள் பாபர் மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து ராமர் சிலையை வைத்த நாள் வரை அங்கு தொழுகை  நடைபெற்று வந்தது.முசுலிம்கள் இப்படி எழுதி தந்தார்கள் என்பதும் ஆதாரமற்ற கற்பனை.

\\
அயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர்.//


சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ஆங்கிலேயனை எதிர்த்து இந்து முசுலிம் மக்களின் ஆதரவுடன் வீரப்போர் புரிந்த அயோத்தியின் அரசி பேகம் கசரத் மகல்-ஐ.காட்டி கொடுத்தவர்களை பற்றியும் சொன்னீர்கள் என்றால் தமிழ் மக்களும் தெரிந்து கொள்வார்களே.


Wednesday, October 20, 2010

எண்களே யாதுமாகி நிற்குமா?

                எண்ணும்  எழுத்தும் கண்ணென தகும்.

                 அதற்காக எண்களும் எழுத்துக்களும்  எல்லாம் தர வல்ல சூத்திரம் ஆகுமா?
   
இந்திய தகவல் தொடர்பு நிறுவனத்தின் சென்னை தொலைபேசிகள்  கவர்ச்சிகரமான எண்களை மின் ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளது. 94456 மற்றும் 94459 வரிசை எண்களை சென்னை தொலைபேசிகள் அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து இந்த ஏல அறிவிப்பு வந்துள்ளது.கவர்ச்சி எண்கள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு குறைந்த பட்ச ஏலத்தொகை  முறையே 7000 ,5000 ,மற்றும் 3000 ,என அறிவிக்கப் பட்டுள்ளது,
  
கடந்த முறை 2009 டிசம்பர் மாதத்தில் இது போன்ற கவர்ச்சி எண்கள் ஏலம் விடப்பட்டதில் பி.எசு.என்.எல். ரூ 8 லட்சம் உருவாக்களை மக்களிடமிருந்து கொள்ளை அடித்துள்ளது. அதில் உச்சபட்ச கவர்ச்சிகரமான எண் ரூ.1.8 லக்கத்திற்கு விலைபோனதாம்.
    என்ன ஒரு முட்டாள்தனம் பாரீர். மீள் விற்பனை மதிப்பு இல்லாத ஒரு பொருளுக்கு இலக்கக் கணக்கான உருவாக்களை அள்ளி இறைக்க மனிதரில் இத்தனை மூடர்களா.அலைபேசியில் நம்மை தொடர்புகொள்ள உதவும் ஒரு எண்ணுக்காக பல லக்க உருவாக்களை வாரி இறைக்க மக்கள் அணியப் படுத்தப்பட்டுள்ளனர். எந்த எண்ணைகொண்டு அழைத்தால் என்ன. நாம் எப்படி பிறரிடம் பேசி அணுக்கமாக நடந்து கொள்கிறோமோ அதற்கு தகுந்தவாறு நம் பேச்சின் விளைவு இருக்கும். முன்சினம் கொண்ட முட்டாள் ஒருவன் எத்தகைய கவர்ச்சிகரமான  எண்ணை கொண்டிருந்தாலும் தனது முரட்டு பேச்சினால் மொத்த வேலையையும் கெடுத்துவிடுவான்.சாதுரியமும் சாமர்த்தியமும் உள்ள ஒருவன் வாயில் நுழையாத எண்ணை கொண்டிருந்தாலும் கனிவான பேச்சின் மூலம் வெற்றியடைவான்.
   
"பெயரியல் பேராசான்களும்" "எண்ணியல் வல்லுனர்களும் " நம் மக்களிடையே மூட நம்பிக்கை தீயை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருப்பதன் மூலம் இத்தகைய கொள்ளைகளுக்கு வழியை திறந்துவிட்டுள்ளனர். அதுவும் அரசுத்துறை நிறுவனமான சென்னை தொலைபேசிகள்  இந்த வேலையை வெட்கமின்றி செய்து வருகிறது.
   
நினைவில் இருத்துவதற்கு எளிதானவை என்று கவர்ச்சிகரமான எண்களை விலை கொடுத்து வாங்குவது நியாயப்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் அனைத்து தொலைபேசி எண்களும் அலைபேசியிலோ  நிலை தொலைபேசியிலோ பதிவு செய்யப்பட்டு அதன் வழிதான் அழைக்கப்படுகின்றன. இதில் நினைவு வைத்துகொள்வது என்பதெல்லாம் கேலிக்கூத்து. சப்பைக்கட்டு.

ஒரு வினாடியின் நூற்றில் ஒரு பங்கு பின்தங்கியதால் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளின் ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்த வீரர்கள் ஏராளம். (நமது பி.டி.உசா அப்படி தவறவிட்டது இன்றளவும் நமக்கு வருத்தத்தை தருகிறது) அவர்களது பெயரோ, தொலைபேசி எண்ணோ இந்த பேராசான்களின் அறிவுரை பெற்று மாற்றப்பட்டால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகிட்டி விடுமா? கடும் உழைப்பும் பயிற்சியுமே வெற்றியை பெற்றுத்தரும்.
      பெயரும் எண்களும் ஒரு மனிதனின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தமுடியாது. அவற்றை நம்பி மோசடி பேர்வழிகளின் பின்னால் போவது முட்டாள்தனம் என்பதை நம் இன சகோதரர்களுக்கு எடுத்து சொல்வோம்.வாரீர்!

Monday, October 18, 2010

101 பதக்கங்கள்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை.

  Prime Minister Manmohan Singh is seen with wrestler Sushil Kumar and other medal winners during an interaction at his residence in New Delhi on Friday. Photo: Rajeev Bhatt
  பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டும் தலைமை அமைச்சர்.                                              
                                                           
                           ஒரு வழியாக, 42 கோடிப்பேர் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கும் நாட்டில் பல்லாயிரம் கோடி உருவாக்களை விழுங்கிவிட்டு,இரண்டு இலக்கம் பேரை வீடுகளை விட்டு விரட்டியடித்து வீதிகளில் அலைய விட்டுவிட்டு  பொதுச்செல்வ நாடுகள் விளையாட்டு போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன.

101 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.ஆளும் கும்பல் மற்றும் விளையாட்டு சங்கங்களின் ஊழல்,முறைகேடுகள்,மற்றும் அலட்சியப்படுத்துதல் போன்ற தடைக்கற்களை மீறி சாதனை படைத்த இந்திய வீரர்களை பாராட்டுகிறோம்.
                            
                            இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றைக்கையால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் இந்த போட்டிகளில் 101 பதக்கங்கள் வென்றதன் மூலம் இது உலகத்தரம் வாய்ந்த போட்டிகள் அல்ல என்பதை நாம் விளங்கிகொள்ளலாம்.தெற்காசிய விளையாட்டு போட்டிகளை விட சற்று மேம்பட்டவை என்று வேண்டுமானால் சொல்லலாம்.இருந்தாலும் நம் வீரர்களின் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுகிறோம்.எனவேதான் இந்த வெற்றியை ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூவே சர்க்கரை என்கிறோம்.

                           இந்த போட்டிகள் தவிர்க்கவியலாமல் இரண்டு நன்மைகளை நமக்கு செய்திருக்கிறது.
                           ஒன்று,பொது செல்வ நாடுகள் என்பதே இங்கிலாந்தின் அடிமைகள் கூடாரம். அதில் நாம் ஏன் இன்னும் உறுப்பு  நாடாக நீடிக்க வேண்டும்.நம் முகத்தில் குத்தப்படும் அடிமை முத்திரையை நீக்க அந்த அமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பது மக்களிடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.இந்த விவாதம் அதன் வளர்ச்சிப்போக்கில் நாட்டின் உண்மையான விடுதலையை நோக்கி நம்மை இட்டுச்செல்லலாம்.

                             இரண்டு,நம் இளைஞ்ரகளை  சீரழிக்கும், துணைக்கண்ட விளையாட்டு துறையை பீடித்த புற்று நோயான மட்டைப் பந்து (கிரிக்கெட்)விளையாட்டு அன்றி வேறு விளையாட்டுகளும் உள்ளன என்று அவற்றின் மீதான ஆர்வத்தை நம் இளைஞர்களிடம ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளன இந்த போட்டிகள்.அந்த வகையில் ஆளும் கும்பல் தாமறியாமலேயே மக்களுக்கு உதவியுள்ளனர்.

                                     

                                         

Tuesday, October 12, 2010

ராசபக்செவுக்கு சிவப்பு கம்பளம்.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசு.


தில்லியில் நடைபெற்று வரும் பொது செல்வ நாடுகள் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக இன வெறியன் ராசபக்சே கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.பல்லாயிரம் ஈழத்தமிழர்களை பன்னாட்டு போர் நெறிகளை மீறி கொன்று குவித்த,இலக்கக் கணக்கான ஈழ மக்களை முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து மகிழும்,ஈழ நாட்டையே திறந்த வெளி சிறையாக்கி எம்மின சகோதரர்களை வதைக்கும்,அம்மிருகம் நம் வரிப்பணத்தில் விருந்துண்டு களிக்க வருகிறது.
                                                             போர் முடிந்தபின் ஈழ நிலைமைகளை நேரில்  கண்டு வர இந்தியாவிலிருந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.அக்குழுவினர் இலங்கையின் அரசுத்தலைவர் என்ற முறையில் ராசபக்செவையும் சந்தித்தனர்.அப்போது அக்குழுவில் இடம் பெற்றிருந்த திருமாவளவனை சுட்டிக்காட்டி ''இவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர்.அந்த சமயத்தில் இவர் அங்கு இருந்திருந்தால் இவரையும் போட்டுதள்ளியிருப்போம்''என்று சொன்னார்,இது ஆதாரபூர்வமாக ஏடுகளில் வெளிவந்த செய்தி.இன்னொரு நாட்டின் பிரதிநிதியாக தம்மை சந்திக்கும் தூதுக் குழுவினரிடம் ஒரு அரசுத்தலைவர் பேசுகிற பேச்சா இது.ஆகவே ராசபக்சே அரசுதந்திர உறவுகளில் கடைபிடிக்க வேண்டிய நாகரீகத்தை காற்றில் பறக்க விடும் நாகரீகமற்ற ஒரு மூளையற்ற முண்டம் இல்லையா.ஒரு அரசுத்தலைவர் இப்படி பேசுகிறார் என்றால் அவரது உள்ளம் எத்தகைய இனவெறி கொண்டதாக இருக்கவேண்டும்.
                                                             இப்படிப்பட்ட ஒருவர் நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள தகுதி உடையவரா.
                                                              இந்த நிறைவு விழாவை புறக்கணிக்க போவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.பன்னாட்டு நீதிபதிகள் தீர்ப்பாய விசாரணையிலிருந்து ராசபக்சேவை பாதுகாக்கவே இப்படி ஒரு கௌரவத்தை அவருக்கு இந்திய அரசு வழங்குவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருசுனசாமியும் ராசபக்சே வருகையை எதிர்த்துள்ளார்.ஆனால் இதற்கெல்லாம் இந்திய ஆளும் கும்பல் மசியப்போவதில்லை.சிங்களவனின் இனவெறிக் குட்டையில் நீந்திக் களிக்கும்  எருமைகள் மழைத்தூரலுக்கா அஞ்சப்போகின்றன.
                                                         
                                                         ஆகவே எமது வலைப்பூ விருந்தினர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்;
                                                  நிறைவு விழா நிகழ்ச்சிகளின் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பை புறக்கணிப்போம்.தமிழர்கள் மட்டுமல்ல பிற மொழி சகோதரர்களையும் நமது வருத்தத்தை எடுத்து சொல்லி புறக்கணிக்க வேண்டுவோம்.நமது இந்த சிறுபொறி காட்டுத்தீயாக பற்றி பெருந்தொகையினர் புறக்கணிப்பார்களேயானால் வருமானம் போய்விடுமே என்ற கவலையில் தொலைக்காட்சி முதலாளிகளே இனி வரும் காலங்களில் ராசபக்சேவை விரட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்.          

Friday, October 8, 2010

ரசினி என்ற நரியின் சாயம் வெளுத்து போச்சு.கபட வேடம் கலைஞ்சு போச்சு

   
                                                       
                    தமிழின பகைவர் இருவரும் கூடி குலாவும் காட்சி.


சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற மராத்தியரான ரசினிகாந்த் கடந்த  05-10-10 . அன்று சிவசேனை தலைவர் பால் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்தார்.இருவரும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடியதாகவும் சிறிதளவு மராத்தி பயன்படுத்தப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.மராத்தி ' பற்றாளர்' தாக்கேரே இன்னொரு மராத்தியருடன் பேசும்போது ஆங்கிலத்துக்கு அங்கு என்ன வேலை.சரி போகட்டும்.


சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரசினி, தாக்கரே தமக்கு கடவுளை போன்றவர் என்று கூறியிருக்கிறார்.யாரை கடவுளாக கொண்டாடுகிறார்.இனவெறியையும் மதவெறியையும் அடிப்படையாக கொண்டு சிவசேனை என்ற குண்டர் படையை கட்டியமைத்து 1970 களின் துவக்கத்தில் மும்பையில் வாழ்ந்த தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி மும்பையிலிருந்து அகதிகளாக விரட்டியடித்த பால்தாக்கரே,பாபர் மசூதி இடிப்புக்கு பின் மகா ஆரத்தி என்ற பெயரில் குண்டர்களை திரட்டி மதவெறி நஞ்சை ஊட்டி அது வரை இந்திய வரலாறு கண்டிராத வகையில் முசுலிம் மக்களை கொன்று குவித்த பால் தாக்கரே,அந்த கலவரத்தை இனிவரும் நாட்கள் நம்முடையவை என்று சாம்னா ஏட்டில் எழுதி துவக்கி வைத்த பால் தாக்கரே,அந்த கலவரத்தில் உருது பேசும்,தமிழ்,மலையாளம் பேசும் முஸ்லிம்கள் மீது மட்டுமல்ல மும்பையில் வாழ்ந்த தமிழ் இந்துக்கள் மீதும் கொடூர தாக்குதல்கள் நடைபெற்று,அவர்தம் அற்ப உடமைகள் கூட சூறையாடப் பட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று அவர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஓடி வர காரணமாக இருந்த பால் தாக்கரே,ரசினிகாந்துக்கு கடவுளாம்.


அப்படியானால் இந்த ரசினி யார்.உழைத்து பிழைக்கும் கௌரவமான பேருந்து நடத்துனர் வேலையை திரைப்பட கிறுக்கு தலைக்கேறிப்போய் உதறி விட்டு ஊரை ஏய்த்து பிழைக்கும் திரைப்பட நடிகர் வேலை தேடி வெறுங்கையுடன் சென்னைக்கு வந்த ரசினி இன்று பல்லாயிரம் கோடிகள் மதிப்பிலான செல்வத்துக்கு உரிமையாளர்.


இதைத்தான் ''என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா என் உடல்,பொருள்,ஆவி தமிழுக்கும் தமிழர்க்கும் தருவது முறையல்லவா''என்று வாயளவில் சொல்லும் ரசினி செயலளவில் ''உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்'' கயமையை தயங்காமல் செய்கிறார்.


ரசினி தனது தமிழின பகையையும் வெறுப்பையும் கக்குவது இது முதல் முறையல்ல.கடந்த அ.தி.மு.க.ஆட்சியின் போது காவேரி பிரச்னை கொழுந்து விட்டு எரிந்தபோது ஒட்டு மொத்த தமிழகமும் கர்நாடகத்தின் அநீதிக்கு எதிராக கொந்தளித்து போராடியது.திரைத்துறையினரும் தமது போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினர்.அதில் கலந்து கொள்ள மறுத்த ரசினி அதற்கு சொன்ன காரணம்,


''கர்னாடகவுலேர்ந்து தண்ணி வரணும்னு கேட்குற கூட்டத்தில நான் இருப்பேன்.அங்கேர்ந்து blood வரணும்னு கேட்கிற கூட்டத்தில் நான் இருக்க மாட்டேன்'' என்பதுதான்.


அநீதி இழைக்கப்படுபவரகளையே அநீதி இழைப்பவர்களாக காட்டும் நயவஞ்சகம் இல்லையா இது.காவேரி தீர்ப்பாயம் 1991 -ல் இடைக்கால தீர்ப்பு வழங்கியபோது அதை எதிர்த்து கர்நாடகத்தில் கலவரம் செய்த கன்னட வெறியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்றொழித்தனர்.பல்லாயிரம் தமிழர்களை தமிழகத்திற்கு அகதிகளாக விரட்டியடித்தனர்.ஆனால் தமிழகத்தில் அப்போதும் சரி அதன்பின் இன்று வரையிலும் சரி கன்னடர்கள் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.ஏனென்றால் தமிழரின் மக்கள்நாயகப் (democratic) பண்பும் நியாய உணர்வும் அத்தகையது.மேலும் தமிழகத்தில் இன,மொழிப் பற்று உண்டேயன்றி இன, மொழிவெறி கிடையாது.அத்தகைய தமிழ் மக்கள் கர்நாடகத்திலிருந்து குருதி கேட்கிறார்கள் என்று பழி சுமத்திய ரசினி தமிழினத்தின் பகைவனா,நண்பனா.


இந்த ரசினிதான்அரசியல் கட்சி துவங்கி தமிழக ஆட்சியை கைப்பற்றும் கனவிலும் மிதக்கிறார்.ஒரு யந்திரன் திரைப்படத்தை வைத்து தமிழக மக்களிடமிருந்து பல நூறு கோடிகளை கொள்ளையடித்த கொள்ளைகும்பலின் தலைவன் ரசினியின் கையில் தமிழக ஆட்சி சிக்குமேயானால் தமிழகத்தையே  மொட்டையடித்து விட மாட்டாரா.


உடன் பிறவா சகோதரிகளும்,அண்ணன்களும் தமிழின தளபதிகளும் இந்த வித்தைகள் நமக்கெல்லாம் தெரியாமல் போய்விட்டதே என வருத்தப்படும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருக்காதா.எண்ணிப் பாருங்கள்.


இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்.அவர்களை புறக்கணிப்போம்.         

Monday, October 4, 2010

பட்டுச்சட்டையும் பகட்டும் பசியை தீர்க்குமா.


வக்கிர கூத்தில் ஒரு காட்சி.


பொதுச் செல்வ நாடுகள் (common wealth nations ) அமைப்பின் விளையாட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தில்லியில் துவங்கியுள்ளன.அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்ற கவலையில் மூழ்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்தியாவில் 36000 கோடி உருவாக்கள் செலவில் இந்த வக்கிர கூத்து அரங்கேறுகிறது.
இந்தியாவின் பொருளாதார வலிமையை பறைசாற்றவும் விளையாட்டு துறையில் இந்தியா முன்னேறுவதற்கும் இந்த போட்டிகள் வழிவகுக்கும் என்றும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தியதன் மூலம் தென்னாப்பிரிக்க நாடு பெற்ற பலன்களை நாமும் அடையலாம் என்றும் கூறி போட்டியை பெரும் பொருட்செலவில் நடத்துவதை ஆளும் கும்பல் நியாயப் படுத்திவருகிறது.இப்படி சொல்லித்தான் 1980 களின் துவக்கத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளை உலக வங்கியிடம் கடன் வாங்கி நடத்தினார்கள்.என்ன நடந்தது.இந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் கடன்சுமை மேலும் ஏறிப்போனதுதான் கண்ட பலன்.விளையாட்டு துறையிலாவது முன்னேற்றம் வந்ததா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்போதெல்லாம் மொத்த இந்தியாவே வெட்கப்படும் வகையில் பதக்கப் பட்டியலில் இடம் பிடிப்பதே அரிதான ஒன்றாக இருந்து வருகிறது.'விடுதலை'பெற்ற இந்தியா இது வரை பெற்றுள்ள தனிநபர்  தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்றுதான்.வளைகோல் பந்தாட்டத்தில் (Hockey) பெற்ற பதக்கங்களை கழித்துவிட்டு பார்த்தால் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவியது போல் இந்த போட்டிகள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு உதவுமா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.பொ.செ.போட்டிகள் ஒலிம்பிக் போலவோ உலகக்கோப்பை கால்பந்து போலவோ புகழ் பெற்றவை அல்ல.இதை காண்பதற்கு வெளிநாட்டினர்  தில்லியில் வநது குவிவதாக  செய்தி ஏதும் இல்லை.போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் செய்வதற்கு வேலை என்று ஏதுமற்ற தில்லி மேட்டுக்குடியினரும் தவிர்த்து வேறு யாரும் போட்டி நடைபெறும் சிற்றூரை எட்டிப் பார்க்கவில்லை.ஒரு சில குரங்குகள் வந்ததை கௌரவமாக கருதாமல் அவற்றை விரட்டுவதற்கு 'லங்கூர்'இன குரங்குகளை அச்சிற்றூரில் இறக்கியுள்ளது தில்லி மாநகராட்சி.
இந்த போட்டிகளை நடத்துவது இருக்கட்டும்.முதலில் பொதுச்செல்வ நாடுகள் அமைப்பில் இடம் வகிப்பதே நாட்டையும் நாட்டு மக்களையும் அவமதிக்கும் ஒன்றுதானே.இங்கிலாந்து நாட்டின் அடிமைத்தளையில் சிக்குண்டு கிடந்த குடியேற்ற நாடுகளின் கூட்டமைப்புதானே பொ.செ.நா. பரங்கிய ஆண்டைகள் முன்   இன்றும் நாங்கள் தங்களின் அடிமைகளே என பணிந்து நின்று பறைசாற்றுவதற்குதானே அந்த அமைப்பு.
அதனால்தான் பல்லாயிரம் கோடி செலவில் இந்தியா இந்த போட்டியை நடத்தினாலும் போட்டி தொடங்குவதை இங்கிலாந்து இளவரசர் அறிவிக்கிறார். போட்டியை இந்திய குடியரசுத்தலைவர் துவக்கி வைக்க வேண்டும் என்று முதலில் இந்திய ஆளும் கும்பல் முக்கி முனகிப் பார்த்தது.ஆண்டைகள் முறைத்து பார்த்தவுடன் வாயை மூடிக்கொண்டது.நமது நாட்டில்.நமது செலவில்.நமது மக்களின் உழைப்பில் நடைபெறும் போட்டியை துவக்கி வைக்க நமது அரசுத்தலைவருக்கு உரிமையில்லை.இது நாட்டு மக்களை அவமானப்படுத்துவது இல்லையா.நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கில்லையா.எண்ணிப்பாருங்கள்.
தன்மானம் கொண்டோர் பொதுச் செல்வ நாடுகள் அமைப்பிலிருந்து இந்தியா வெளியேறுமாறு வலியுறுத்த வேண்டும்.
இத்தகைய போட்டிகளை நடத்துவதால் ஒப்பந்ததாரர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பலன் கிடைக்குமேயன்றி விளையாட்டு துறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை.வறுமையை ஒழித்து எல்லோருக்கும் கல்வியை உறுதிப்படுத்தாத வரை நாம் விளையாட்டு துறையில் முன்னேற முடியாது.பல திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் வறுமையின் கொடுமையால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கு போய் விடுகிறார்கள். அவர்களது திறமை  குடத்திலிட்ட விளக்காக மடிந்து போகிறது. மேற்படிப்புக்கு வரும் ஒரு சிலரை கொண்டே நாம் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது.இந்த அவலநிலையும் அரசு அலுவலர் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழலும் நமது விளையாட்டு துறையை படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளன.
 எனவே நாம் வறுமையை ஒழித்து வளம் மிக்க நாடாக இந்தியாவை மாற்றி விளையாட்டில் பெரும் சாதனைகள் படைப்போம்.அப்போது இந்த கேடு கெட்ட பொ.செ.போட்டியை அல்ல ஒலிபிக் போட்டிகளையும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளையும் நடத்துவோம்.

Sunday, October 3, 2010

காவிகளின் கட்டை பஞ்சாயத்து.தொடர்ச்சி

உத்திர பிரதேச சன்னி முசுலிம் வக்பு வாரியத்தின் மனுவை காலம் கடந்தது என தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது கட்டை பஞ்சாயத்து.ஆனால் அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் உரிமையானது எனவும் தீர்ப்பு சொல்கிறார்கள்.ஏன் இந்த முரண்பாடு.வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்வது என்றால் அவர்களுக்கு பாபர் மசூதி இடத்தில் எந்த உரிமையும் இல்லை என்பதுதானே அதன் பொருள்.பிறகு எப்படி அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு கிடைக்கிறது.தாங்கள் நியாயமான தீர்ப்பு வழங்குவது போல் ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்கவே இப்படி ஒரு ஏற்பாடு.


1961-ல் தொடரப்பட்ட வக்பு வாரியத்தின் வழக்கை காலம் கடந்தது என தள்ளுபடி செய்யும் நீதிமன்றம்,1989-ல் ராமர் சிலை சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்டு ராமர் சிலைக்கு பாபர் மசூதியின் மையப் பகுதியை ஒதுக்கியுள்ளது.1961 காலம் கடந்தது.  28 ஆண்டுகளுக்கு பின் வந்தாலும் 1989 காலம் கடக்காதது. இப்படியும் ஒரு கேலிக்கூத்து தீர்ப்பு என்ற பெயரில் அரங்கேறியுள்ளது.இப்படித்தான் அரசியல் சட்டம் சொல்கிறது என்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபது பொய்யா.ஆண்டிக்கு ஒரு நீதி அரசனுக்கு ஒரு நீதி என்பதற்கு இது ஒரு முன்மாதிரி ஆகி விடாதா.

வக்பு வாரியத்தின் வழக்கு காலம் கடந்தது என்றால் அதை விசாரணைக்கு ஏற்று 28 ஆண்டுகள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் வழக்கு நடத்த அனுமதித்தது எப்படி..1989  முதல் 21 ஆண்டுகள் அந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது எப்படி.காலம் கடந்த வழக்கு என்பதை 'கண்டுபிடிக்க' 49 ஆண்டுகள் விசாரிக்க வேண்டுமா. .உண்மையில் வக்பு வாரியத்தின் வழக்கில் பாபர் மசூதி இடம் தங்களுக்கு உரிமையானது என்று தெளிவாக வாரியம் நிரூபித்திருக்க வேண்டும்.அதனால்தான் அந்த வழக்கில் தீர்ப்பு சொல்லும் திராணி இன்றி தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.
    
தீர்ப்பில் பின்னிப் புதைந்துள்ள இன்னொரு சூழ்ச்சி முசுலிம்களுக்கு கொடுத்த இடத்தையும் பிடுங்கி கொள்ள சதிவலை விரிக்கிறது.பாபர் மசூதியின் மையப் பகுதியை ராமர் சிலைக்கும் நிர்மோகி அகாரா என்ற இந்து பிரிவினருக்கு 'ராம் சபுத்ரா'மற்றும் 'சீதா ரசோய்' பகுதிகளையும் பெயர் குறிப்பிட்டு ஒதுக்கியுள்ள கட்டை பஞ்சாயத்து மீதியுள்ள இடத்தில் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு இருக்குமாறு முசுலிம்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது.அப்படி பிரிக்கும்போது சில சரிக்கட்டுதல்களுக்காக (adjustment ) ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய பாபர் மசூதி இடத்துக்கு வெளியில் மைய அரசு கையகப் படுத்தி வைத்திருக்கும் இடத்திலிருந்து இடம் வழங்க வேண்டுமாம். மையப் பகுதிகளை இந்து தரப்புக்கு ஒதுக்கிய நிலையில் யாருக்கு சரிக்கட்டுதல் மூலம் இழப்பு ஏற்படும்.முசுலிம் தரப்புக்குதானே.ஆக கடைசியில் பாபர் மசூதி வளாக இடத்திலிருந்து முடிந்த அளவுக்கு முசுலிம் தரப்பை வெளித்தள்ளுவதற்கான ஏற்பாட்டையும் சதித்தனமாக தீர்ப்புக்குள் வைத்துள்ளது கட்டை பஞ்சாயத்து.

அடுத்து பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது,அங்கு முசுலிம்கள் தொழுகை நடத்தி வந்திருந்தாலும் எந்த காலத்தில் இருந்து முசுலிம்களுக்கு அதன் மீதான பாத்தியதை தொடங்கியது என நிறுவப் படாத காரணத்தாலும் இந்துக்கள் அந்த இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதி வழி பட்டுவந்த காரணத்தாலும் அந்த இடத்திற்கு இரு தரப்பாருமே கூட்டு உடமையாளர்கள் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.ஆனால் உண்மை என்ன.மசூதி இடிக்கப்படும் வரை அதன் சுவர்களில் மசூதி யாரால் எப்போது கட்டப்பட்டது போன்ற விவரங்கள் கல் வெட்டுக்களாக பதிக்கப் பட்டிருந்தன.அடாவடியாக ஆதாரங்களை அழித்து விட்டு இப்போது ஆதாரம் இல்லாததால் உனக்கு சொத்தில் உரிமை இல்லை என சொல்வது இன்னொரு அடாவடி இல்லையா.

இந்த தீர்ப்பை வரவேற்பதாக கூறுவோர் பெரும்பாலும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.தீர்ப்பு இரு சாராருக்கும் சொத்தை பங்கீடு செய்து ஒரு சமரச தீர்வை தந்திருக்கிறது.இல்லையென்றால் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டு பெரும் கலவரங்கள் வெடித்து உயிர்பலியும் சொத்து சேதங்களும் ஏற்பட்டிருக்கும்.எனவே இது வரவேற்க்கத்தக்கது என்கிறார்கள்.பொது மக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டியது அரசின் கடமை.அதை அரசுகள் செவ்வனே செய்யவேண்டும்.அதை கண்காணிப்பது நீதி மன்றங்களின் பணி.அதை விடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தீர்ப்பு அளிப்பதே நீதிமன்றங்களின் பணி என்றானால் பிறகு எதற்கு காவல் துறை,ராணுவம்,மற்றும் துணை ராணுவப்படைகள், அவற்றுக்கு கோடிக்கணக்கான உருவாக்கள் செலவில் ஊதியமும் ஆயுதங்களும்.

ஆக மொத்தத்தில் இந்த தீர்ப்பு ஒரு பக்க சார்பானது.ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.எனவே தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக உத்தர பிரதேச வக்பு வாரியம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.உச்ச நீதி மன்றம் நியாயமான தீர்ப்பை கால விரயமின்றி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

Saturday, October 2, 2010

அயோத்தியா தீர்ப்பு.காவி மனம் கொண்டோரின் கட்டை பஞ்சாயத்து.

இந்திய நாடு ஆவலுடன் எதிர்பார்த்த பாபர் மசூதி வழக்கில் 'தீர்ப்பு' வழங்கியுள்ளது அலகாபாத் உயர்நீதி மன்றம்.தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  என்று சொல்வதை விட கட்டை பஞ்சாயம் செய்யப்பட்டுள்ளது என சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். இப்படி நாம் மட்டும் சொல்லவில்லை.ராசீவ் தவான்,பி.பி.ராவ் முதலான உச்ச நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்களும் இவ்வாறுதான் கருத்து தெரிவித்துள்ளனர்.அவ்வளவு ஏன், தொடர்ச்சியாக இல.கணேசன் போன்ற இந்து மத வாதிகளின் பாபர் மசூதி குறித்த பொய்,புனைசுருட்டுகளை கட்டுரை என்ற பெயரில் வெளியிட்டு வந்த தினமணி நாளிதழ் கூட இந்த தீர்ப்பை கட்டைபஞ்சாயத்து என்றே தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.ஆக இந்துத்வா ஆதரவாளர்களால் கூட நியாயப்படுத்த முடியாத அளவிற்கு இந்து தரப்பு சார்பானதாக தீர்ப்பு அமைந்துள்ளது.
தீர்ப்பின் விவரங்கள் நீங்கள் அறிந்தவையே.அவற்றை மீண்டும் இங்கு பதிவு செய்வதை விடுத்து தீர்ப்பை திறனாய்வு செய்யவே இந்த பதிவு.


பாபர் மசூதி தகர்க்கப்பட்ட ஒரு சில நாட்களில் மசூதி இடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த துரோகி நரசிம்மராவ் தலைமையிலான மைய அரசு பாபர் மசூதியை சுற்றியுள்ள சுமார் அறுபது ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது.இடிக்கப்பட்ட மசூதி மீண்டும் கட்டித்தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார் அந்த துரோகி.மசூதியோ.கோயிலோ எது கட்டப்பட்டாலும் போகவர வழி தேவை என்பதற்காக அந்த நிலங்கள் கையகப்படுத்தப் படுவதாக ஒரு காரணமும் சொல்லப்பட்டது.உண்மையில் துரோகி ராவின் நோக்கம் அந்த இடத்தில் மிகப் பெரும் ராமர் கோயில் கட்டுவதற்கு பாபர் மசூதி இடம் உட்பட மொத்த இடத்தையும் ஆர்.எசு.எசு.மத வெறியர்களிடம் கொல்லைப்புற வழியாக ஒப்படைப்பதே.அதற்காக பாபர் மசூதி இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என ஆய்ந்து கருத்து சொல்லுமாறு உச்ச நீதி மன்றத்திடம் கோரிக்கை வைத்தது காங்கிரசு கயவாளி கும்பல்.ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்கள் வலையில் சிக்க மறுத்துவிட்டது.இது சட்ட வரையறைக்குள் வராது.இது குறித்து நாங்கள் கருத்துரைக்க முடியாது என மறுத்து விட்டது உச்ச நீதி மன்றம்.ஒரு சாதகமான தீர்ப்பை பெற்று பாபர் மசூதி இடத்தை தாரை வார்க்கும் முயற்சி தோல்வியுற்றது.
உச்ச நீதி மன்றம் எந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என மறுத்ததோ அந்த கேள்வியை தலை மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு இப்போது பதில் அளித்துள்ளது அலகாபாத் உயர் நீதி மன்றம்.பாபர் மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தாராம்.அதனால் அந்த இடம் இந்து தரப்புக்கு உரியதாம்.அங்குதான் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறார்கள் என்று பார்த்தால் 'அப்படி இந்துக்கள் நம்புகிறார்கள்'என்கிறார்கள்.இது ஒரு ஆதாரமா எண்ணிப் பாருங்கள்.ஒரு நம்பிக்கை சொத்துரிமையை தீர்மானிக்கலாம் என்றால் இந்தியாவில் உரிமையியல் நீதி பரிபாலனத்தின் எதிர் காலம் என்னவாகும்.எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
அடுத்து கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக இரண்டு நீதிபதிகளும் ஏற்கனவே சிதைந்து போய் கிடந்த கோயில் ஒன்றின் இடிபாடுகளின் மீது மசூதி கட்டப்பட்டதாக ஒரு நீதிபதியும் கூறியுள்ளனர்.இதற்கு ஆதாரமாக இந்திய தொல்லியல் துறை 2003 ல் இவர்களது உத்தரவின் பேரில் பாபர் மசூதி இடத்தில்  நடத்திய அகழ்வாராய்ச்சி அறிக்கையை காட்டுகிறார்கள்.ஆனால் அந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்காணிப்பாளராக பணியாற்றிய சுப்ரியா வர்மா எனும் தில்லி சவகர்லால் நேரு பல்கலைகழக பேராசிரியர் 'அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியது' என குற்றம் சாட்டுகிறார்.(ஆதாரம்;இந்து நாளிதழ் 1 -10 -10 .பக்கம்.14 .இந்த 'டுபாக்கூர்'அறிக்கையும் சொத்துரிமையை தீர்மானிக்கிறது.என்னே ஒரு அற்புதமான நீதி பரிபாலனம்.
இன்னும் பல குறைபாடுகளும் சூழ்ச்சிகளும் நிறைந்ததுதான் இந்த தீர்ப்பு.அவற்றை அடுத்த பதிவில் விரிவாக காண்போம்.