Saturday, October 2, 2010

அயோத்தியா தீர்ப்பு.காவி மனம் கொண்டோரின் கட்டை பஞ்சாயத்து.

இந்திய நாடு ஆவலுடன் எதிர்பார்த்த பாபர் மசூதி வழக்கில் 'தீர்ப்பு' வழங்கியுள்ளது அலகாபாத் உயர்நீதி மன்றம்.தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  என்று சொல்வதை விட கட்டை பஞ்சாயம் செய்யப்பட்டுள்ளது என சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். இப்படி நாம் மட்டும் சொல்லவில்லை.ராசீவ் தவான்,பி.பி.ராவ் முதலான உச்ச நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்களும் இவ்வாறுதான் கருத்து தெரிவித்துள்ளனர்.அவ்வளவு ஏன், தொடர்ச்சியாக இல.கணேசன் போன்ற இந்து மத வாதிகளின் பாபர் மசூதி குறித்த பொய்,புனைசுருட்டுகளை கட்டுரை என்ற பெயரில் வெளியிட்டு வந்த தினமணி நாளிதழ் கூட இந்த தீர்ப்பை கட்டைபஞ்சாயத்து என்றே தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.ஆக இந்துத்வா ஆதரவாளர்களால் கூட நியாயப்படுத்த முடியாத அளவிற்கு இந்து தரப்பு சார்பானதாக தீர்ப்பு அமைந்துள்ளது.
தீர்ப்பின் விவரங்கள் நீங்கள் அறிந்தவையே.அவற்றை மீண்டும் இங்கு பதிவு செய்வதை விடுத்து தீர்ப்பை திறனாய்வு செய்யவே இந்த பதிவு.


பாபர் மசூதி தகர்க்கப்பட்ட ஒரு சில நாட்களில் மசூதி இடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த துரோகி நரசிம்மராவ் தலைமையிலான மைய அரசு பாபர் மசூதியை சுற்றியுள்ள சுமார் அறுபது ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது.இடிக்கப்பட்ட மசூதி மீண்டும் கட்டித்தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார் அந்த துரோகி.மசூதியோ.கோயிலோ எது கட்டப்பட்டாலும் போகவர வழி தேவை என்பதற்காக அந்த நிலங்கள் கையகப்படுத்தப் படுவதாக ஒரு காரணமும் சொல்லப்பட்டது.உண்மையில் துரோகி ராவின் நோக்கம் அந்த இடத்தில் மிகப் பெரும் ராமர் கோயில் கட்டுவதற்கு பாபர் மசூதி இடம் உட்பட மொத்த இடத்தையும் ஆர்.எசு.எசு.மத வெறியர்களிடம் கொல்லைப்புற வழியாக ஒப்படைப்பதே.அதற்காக பாபர் மசூதி இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என ஆய்ந்து கருத்து சொல்லுமாறு உச்ச நீதி மன்றத்திடம் கோரிக்கை வைத்தது காங்கிரசு கயவாளி கும்பல்.ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்கள் வலையில் சிக்க மறுத்துவிட்டது.இது சட்ட வரையறைக்குள் வராது.இது குறித்து நாங்கள் கருத்துரைக்க முடியாது என மறுத்து விட்டது உச்ச நீதி மன்றம்.ஒரு சாதகமான தீர்ப்பை பெற்று பாபர் மசூதி இடத்தை தாரை வார்க்கும் முயற்சி தோல்வியுற்றது.
உச்ச நீதி மன்றம் எந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என மறுத்ததோ அந்த கேள்வியை தலை மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு இப்போது பதில் அளித்துள்ளது அலகாபாத் உயர் நீதி மன்றம்.பாபர் மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தாராம்.அதனால் அந்த இடம் இந்து தரப்புக்கு உரியதாம்.அங்குதான் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறார்கள் என்று பார்த்தால் 'அப்படி இந்துக்கள் நம்புகிறார்கள்'என்கிறார்கள்.இது ஒரு ஆதாரமா எண்ணிப் பாருங்கள்.ஒரு நம்பிக்கை சொத்துரிமையை தீர்மானிக்கலாம் என்றால் இந்தியாவில் உரிமையியல் நீதி பரிபாலனத்தின் எதிர் காலம் என்னவாகும்.எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
அடுத்து கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக இரண்டு நீதிபதிகளும் ஏற்கனவே சிதைந்து போய் கிடந்த கோயில் ஒன்றின் இடிபாடுகளின் மீது மசூதி கட்டப்பட்டதாக ஒரு நீதிபதியும் கூறியுள்ளனர்.இதற்கு ஆதாரமாக இந்திய தொல்லியல் துறை 2003 ல் இவர்களது உத்தரவின் பேரில் பாபர் மசூதி இடத்தில்  நடத்திய அகழ்வாராய்ச்சி அறிக்கையை காட்டுகிறார்கள்.ஆனால் அந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்காணிப்பாளராக பணியாற்றிய சுப்ரியா வர்மா எனும் தில்லி சவகர்லால் நேரு பல்கலைகழக பேராசிரியர் 'அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியது' என குற்றம் சாட்டுகிறார்.(ஆதாரம்;இந்து நாளிதழ் 1 -10 -10 .பக்கம்.14 .இந்த 'டுபாக்கூர்'அறிக்கையும் சொத்துரிமையை தீர்மானிக்கிறது.என்னே ஒரு அற்புதமான நீதி பரிபாலனம்.
இன்னும் பல குறைபாடுகளும் சூழ்ச்சிகளும் நிறைந்ததுதான் இந்த தீர்ப்பு.அவற்றை அடுத்த பதிவில் விரிவாக காண்போம்.

1 comment:

  1. http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

    ReplyDelete