Sunday, October 3, 2010

காவிகளின் கட்டை பஞ்சாயத்து.தொடர்ச்சி

உத்திர பிரதேச சன்னி முசுலிம் வக்பு வாரியத்தின் மனுவை காலம் கடந்தது என தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது கட்டை பஞ்சாயத்து.ஆனால் அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் உரிமையானது எனவும் தீர்ப்பு சொல்கிறார்கள்.ஏன் இந்த முரண்பாடு.வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்வது என்றால் அவர்களுக்கு பாபர் மசூதி இடத்தில் எந்த உரிமையும் இல்லை என்பதுதானே அதன் பொருள்.பிறகு எப்படி அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு கிடைக்கிறது.தாங்கள் நியாயமான தீர்ப்பு வழங்குவது போல் ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்கவே இப்படி ஒரு ஏற்பாடு.


1961-ல் தொடரப்பட்ட வக்பு வாரியத்தின் வழக்கை காலம் கடந்தது என தள்ளுபடி செய்யும் நீதிமன்றம்,1989-ல் ராமர் சிலை சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்டு ராமர் சிலைக்கு பாபர் மசூதியின் மையப் பகுதியை ஒதுக்கியுள்ளது.1961 காலம் கடந்தது.  28 ஆண்டுகளுக்கு பின் வந்தாலும் 1989 காலம் கடக்காதது. இப்படியும் ஒரு கேலிக்கூத்து தீர்ப்பு என்ற பெயரில் அரங்கேறியுள்ளது.இப்படித்தான் அரசியல் சட்டம் சொல்கிறது என்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபது பொய்யா.ஆண்டிக்கு ஒரு நீதி அரசனுக்கு ஒரு நீதி என்பதற்கு இது ஒரு முன்மாதிரி ஆகி விடாதா.

வக்பு வாரியத்தின் வழக்கு காலம் கடந்தது என்றால் அதை விசாரணைக்கு ஏற்று 28 ஆண்டுகள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் வழக்கு நடத்த அனுமதித்தது எப்படி..1989  முதல் 21 ஆண்டுகள் அந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது எப்படி.காலம் கடந்த வழக்கு என்பதை 'கண்டுபிடிக்க' 49 ஆண்டுகள் விசாரிக்க வேண்டுமா. .உண்மையில் வக்பு வாரியத்தின் வழக்கில் பாபர் மசூதி இடம் தங்களுக்கு உரிமையானது என்று தெளிவாக வாரியம் நிரூபித்திருக்க வேண்டும்.அதனால்தான் அந்த வழக்கில் தீர்ப்பு சொல்லும் திராணி இன்றி தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.
    
தீர்ப்பில் பின்னிப் புதைந்துள்ள இன்னொரு சூழ்ச்சி முசுலிம்களுக்கு கொடுத்த இடத்தையும் பிடுங்கி கொள்ள சதிவலை விரிக்கிறது.பாபர் மசூதியின் மையப் பகுதியை ராமர் சிலைக்கும் நிர்மோகி அகாரா என்ற இந்து பிரிவினருக்கு 'ராம் சபுத்ரா'மற்றும் 'சீதா ரசோய்' பகுதிகளையும் பெயர் குறிப்பிட்டு ஒதுக்கியுள்ள கட்டை பஞ்சாயத்து மீதியுள்ள இடத்தில் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு இருக்குமாறு முசுலிம்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது.அப்படி பிரிக்கும்போது சில சரிக்கட்டுதல்களுக்காக (adjustment ) ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய பாபர் மசூதி இடத்துக்கு வெளியில் மைய அரசு கையகப் படுத்தி வைத்திருக்கும் இடத்திலிருந்து இடம் வழங்க வேண்டுமாம். மையப் பகுதிகளை இந்து தரப்புக்கு ஒதுக்கிய நிலையில் யாருக்கு சரிக்கட்டுதல் மூலம் இழப்பு ஏற்படும்.முசுலிம் தரப்புக்குதானே.ஆக கடைசியில் பாபர் மசூதி வளாக இடத்திலிருந்து முடிந்த அளவுக்கு முசுலிம் தரப்பை வெளித்தள்ளுவதற்கான ஏற்பாட்டையும் சதித்தனமாக தீர்ப்புக்குள் வைத்துள்ளது கட்டை பஞ்சாயத்து.

அடுத்து பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது,அங்கு முசுலிம்கள் தொழுகை நடத்தி வந்திருந்தாலும் எந்த காலத்தில் இருந்து முசுலிம்களுக்கு அதன் மீதான பாத்தியதை தொடங்கியது என நிறுவப் படாத காரணத்தாலும் இந்துக்கள் அந்த இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதி வழி பட்டுவந்த காரணத்தாலும் அந்த இடத்திற்கு இரு தரப்பாருமே கூட்டு உடமையாளர்கள் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.ஆனால் உண்மை என்ன.மசூதி இடிக்கப்படும் வரை அதன் சுவர்களில் மசூதி யாரால் எப்போது கட்டப்பட்டது போன்ற விவரங்கள் கல் வெட்டுக்களாக பதிக்கப் பட்டிருந்தன.அடாவடியாக ஆதாரங்களை அழித்து விட்டு இப்போது ஆதாரம் இல்லாததால் உனக்கு சொத்தில் உரிமை இல்லை என சொல்வது இன்னொரு அடாவடி இல்லையா.

இந்த தீர்ப்பை வரவேற்பதாக கூறுவோர் பெரும்பாலும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.தீர்ப்பு இரு சாராருக்கும் சொத்தை பங்கீடு செய்து ஒரு சமரச தீர்வை தந்திருக்கிறது.இல்லையென்றால் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டு பெரும் கலவரங்கள் வெடித்து உயிர்பலியும் சொத்து சேதங்களும் ஏற்பட்டிருக்கும்.எனவே இது வரவேற்க்கத்தக்கது என்கிறார்கள்.பொது மக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டியது அரசின் கடமை.அதை அரசுகள் செவ்வனே செய்யவேண்டும்.அதை கண்காணிப்பது நீதி மன்றங்களின் பணி.அதை விடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தீர்ப்பு அளிப்பதே நீதிமன்றங்களின் பணி என்றானால் பிறகு எதற்கு காவல் துறை,ராணுவம்,மற்றும் துணை ராணுவப்படைகள், அவற்றுக்கு கோடிக்கணக்கான உருவாக்கள் செலவில் ஊதியமும் ஆயுதங்களும்.

ஆக மொத்தத்தில் இந்த தீர்ப்பு ஒரு பக்க சார்பானது.ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.எனவே தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக உத்தர பிரதேச வக்பு வாரியம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.உச்ச நீதி மன்றம் நியாயமான தீர்ப்பை கால விரயமின்றி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

3 comments:

  1. சூப்பரா எழுதி இருக்கீங்க...

    ஆனால், கடைசியிலே //உச்ச நீதி மன்றம் நியாயமான தீர்ப்பை கால விரயமின்றி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.//---என்று சொதப்பீட்டீங்களே பிரதர்.

    ReplyDelete
  2. ஹிந்த்துத்வாவா... இஸ்லாமா... என்று வந்து நிற்கும்போது உச்சநீதி மன்றம் இஸ்லாம் சார்பாக நீதி அளித்த ஒரு வழக்கையாவது சொல்லுங்களேன் பார்ப்போம்... நானும் தெரிந்து கொள்கிறேன்...

    ReplyDelete
  3. அன்புள்ள UFO
    தங்கள் பாராட்டுக்கு நன்றி.
    குசராத் முசுலிம் இனப்படுகொலை வழக்குகளையும் போலி மோதல் கொலை வழக்குகளையும் அம்மாநில நீதிமன்றங்களும் பாசிச மோடியின் தலைமையிலான அரசும் ஆழ குழி தோண்டி புதைத்து விட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவ்வழக்குகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. .உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மையப் புலனாய்வு துறை அவ்வழக்குகளை விசாரித்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது.மை.பு.து.யின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட்டு நடை பெற்று வருகிறது.அதன் விளைவாக குசராத் அமைச்சர் ஒருவரே பதவி இழந்து தற்போது சிறையிடப்பட்டுள்ளார்.
    எனவே அத்தகைய நியாய உணர்வு கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் பாபர் மசூதி மேல்முறையீட்டு மனு விசாரிக்கப் பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என நம்புகிறோம்.
    நம்பிக்கையில்தானே மனித வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது UFO.

    ReplyDelete