Monday, October 4, 2010

பட்டுச்சட்டையும் பகட்டும் பசியை தீர்க்குமா.


வக்கிர கூத்தில் ஒரு காட்சி.


பொதுச் செல்வ நாடுகள் (common wealth nations ) அமைப்பின் விளையாட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தில்லியில் துவங்கியுள்ளன.அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்ற கவலையில் மூழ்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்தியாவில் 36000 கோடி உருவாக்கள் செலவில் இந்த வக்கிர கூத்து அரங்கேறுகிறது.
இந்தியாவின் பொருளாதார வலிமையை பறைசாற்றவும் விளையாட்டு துறையில் இந்தியா முன்னேறுவதற்கும் இந்த போட்டிகள் வழிவகுக்கும் என்றும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தியதன் மூலம் தென்னாப்பிரிக்க நாடு பெற்ற பலன்களை நாமும் அடையலாம் என்றும் கூறி போட்டியை பெரும் பொருட்செலவில் நடத்துவதை ஆளும் கும்பல் நியாயப் படுத்திவருகிறது.இப்படி சொல்லித்தான் 1980 களின் துவக்கத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளை உலக வங்கியிடம் கடன் வாங்கி நடத்தினார்கள்.என்ன நடந்தது.இந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் கடன்சுமை மேலும் ஏறிப்போனதுதான் கண்ட பலன்.விளையாட்டு துறையிலாவது முன்னேற்றம் வந்ததா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்போதெல்லாம் மொத்த இந்தியாவே வெட்கப்படும் வகையில் பதக்கப் பட்டியலில் இடம் பிடிப்பதே அரிதான ஒன்றாக இருந்து வருகிறது.'விடுதலை'பெற்ற இந்தியா இது வரை பெற்றுள்ள தனிநபர்  தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்றுதான்.வளைகோல் பந்தாட்டத்தில் (Hockey) பெற்ற பதக்கங்களை கழித்துவிட்டு பார்த்தால் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவியது போல் இந்த போட்டிகள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு உதவுமா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.பொ.செ.போட்டிகள் ஒலிம்பிக் போலவோ உலகக்கோப்பை கால்பந்து போலவோ புகழ் பெற்றவை அல்ல.இதை காண்பதற்கு வெளிநாட்டினர்  தில்லியில் வநது குவிவதாக  செய்தி ஏதும் இல்லை.போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் செய்வதற்கு வேலை என்று ஏதுமற்ற தில்லி மேட்டுக்குடியினரும் தவிர்த்து வேறு யாரும் போட்டி நடைபெறும் சிற்றூரை எட்டிப் பார்க்கவில்லை.ஒரு சில குரங்குகள் வந்ததை கௌரவமாக கருதாமல் அவற்றை விரட்டுவதற்கு 'லங்கூர்'இன குரங்குகளை அச்சிற்றூரில் இறக்கியுள்ளது தில்லி மாநகராட்சி.
இந்த போட்டிகளை நடத்துவது இருக்கட்டும்.முதலில் பொதுச்செல்வ நாடுகள் அமைப்பில் இடம் வகிப்பதே நாட்டையும் நாட்டு மக்களையும் அவமதிக்கும் ஒன்றுதானே.இங்கிலாந்து நாட்டின் அடிமைத்தளையில் சிக்குண்டு கிடந்த குடியேற்ற நாடுகளின் கூட்டமைப்புதானே பொ.செ.நா. பரங்கிய ஆண்டைகள் முன்   இன்றும் நாங்கள் தங்களின் அடிமைகளே என பணிந்து நின்று பறைசாற்றுவதற்குதானே அந்த அமைப்பு.
அதனால்தான் பல்லாயிரம் கோடி செலவில் இந்தியா இந்த போட்டியை நடத்தினாலும் போட்டி தொடங்குவதை இங்கிலாந்து இளவரசர் அறிவிக்கிறார். போட்டியை இந்திய குடியரசுத்தலைவர் துவக்கி வைக்க வேண்டும் என்று முதலில் இந்திய ஆளும் கும்பல் முக்கி முனகிப் பார்த்தது.ஆண்டைகள் முறைத்து பார்த்தவுடன் வாயை மூடிக்கொண்டது.நமது நாட்டில்.நமது செலவில்.நமது மக்களின் உழைப்பில் நடைபெறும் போட்டியை துவக்கி வைக்க நமது அரசுத்தலைவருக்கு உரிமையில்லை.இது நாட்டு மக்களை அவமானப்படுத்துவது இல்லையா.நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கில்லையா.எண்ணிப்பாருங்கள்.
தன்மானம் கொண்டோர் பொதுச் செல்வ நாடுகள் அமைப்பிலிருந்து இந்தியா வெளியேறுமாறு வலியுறுத்த வேண்டும்.
இத்தகைய போட்டிகளை நடத்துவதால் ஒப்பந்ததாரர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பலன் கிடைக்குமேயன்றி விளையாட்டு துறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை.வறுமையை ஒழித்து எல்லோருக்கும் கல்வியை உறுதிப்படுத்தாத வரை நாம் விளையாட்டு துறையில் முன்னேற முடியாது.பல திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் வறுமையின் கொடுமையால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கு போய் விடுகிறார்கள். அவர்களது திறமை  குடத்திலிட்ட விளக்காக மடிந்து போகிறது. மேற்படிப்புக்கு வரும் ஒரு சிலரை கொண்டே நாம் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது.இந்த அவலநிலையும் அரசு அலுவலர் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழலும் நமது விளையாட்டு துறையை படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளன.
 எனவே நாம் வறுமையை ஒழித்து வளம் மிக்க நாடாக இந்தியாவை மாற்றி விளையாட்டில் பெரும் சாதனைகள் படைப்போம்.அப்போது இந்த கேடு கெட்ட பொ.செ.போட்டியை அல்ல ஒலிபிக் போட்டிகளையும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளையும் நடத்துவோம்.

2 comments:

  1. //'விடுதலை'பெற்ற இந்தியா //

    பெற்றது விடுதலை அல்ல ஆட்சி மாற்றமே..

    ReplyDelete
  2. உண்மை.அதனால்தான் விடுதலை என்ற சொல் மேற்கோள்குறி (' ') சேர்த்து எழுதப்பட்டுள்ளது.கவனித்து பார்க்கவும்.

    ReplyDelete