Wednesday, October 20, 2010

எண்களே யாதுமாகி நிற்குமா?

                எண்ணும்  எழுத்தும் கண்ணென தகும்.

                 அதற்காக எண்களும் எழுத்துக்களும்  எல்லாம் தர வல்ல சூத்திரம் ஆகுமா?
   
இந்திய தகவல் தொடர்பு நிறுவனத்தின் சென்னை தொலைபேசிகள்  கவர்ச்சிகரமான எண்களை மின் ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளது. 94456 மற்றும் 94459 வரிசை எண்களை சென்னை தொலைபேசிகள் அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து இந்த ஏல அறிவிப்பு வந்துள்ளது.கவர்ச்சி எண்கள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு குறைந்த பட்ச ஏலத்தொகை  முறையே 7000 ,5000 ,மற்றும் 3000 ,என அறிவிக்கப் பட்டுள்ளது,
  
கடந்த முறை 2009 டிசம்பர் மாதத்தில் இது போன்ற கவர்ச்சி எண்கள் ஏலம் விடப்பட்டதில் பி.எசு.என்.எல். ரூ 8 லட்சம் உருவாக்களை மக்களிடமிருந்து கொள்ளை அடித்துள்ளது. அதில் உச்சபட்ச கவர்ச்சிகரமான எண் ரூ.1.8 லக்கத்திற்கு விலைபோனதாம்.
    என்ன ஒரு முட்டாள்தனம் பாரீர். மீள் விற்பனை மதிப்பு இல்லாத ஒரு பொருளுக்கு இலக்கக் கணக்கான உருவாக்களை அள்ளி இறைக்க மனிதரில் இத்தனை மூடர்களா.அலைபேசியில் நம்மை தொடர்புகொள்ள உதவும் ஒரு எண்ணுக்காக பல லக்க உருவாக்களை வாரி இறைக்க மக்கள் அணியப் படுத்தப்பட்டுள்ளனர். எந்த எண்ணைகொண்டு அழைத்தால் என்ன. நாம் எப்படி பிறரிடம் பேசி அணுக்கமாக நடந்து கொள்கிறோமோ அதற்கு தகுந்தவாறு நம் பேச்சின் விளைவு இருக்கும். முன்சினம் கொண்ட முட்டாள் ஒருவன் எத்தகைய கவர்ச்சிகரமான  எண்ணை கொண்டிருந்தாலும் தனது முரட்டு பேச்சினால் மொத்த வேலையையும் கெடுத்துவிடுவான்.சாதுரியமும் சாமர்த்தியமும் உள்ள ஒருவன் வாயில் நுழையாத எண்ணை கொண்டிருந்தாலும் கனிவான பேச்சின் மூலம் வெற்றியடைவான்.
   
"பெயரியல் பேராசான்களும்" "எண்ணியல் வல்லுனர்களும் " நம் மக்களிடையே மூட நம்பிக்கை தீயை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருப்பதன் மூலம் இத்தகைய கொள்ளைகளுக்கு வழியை திறந்துவிட்டுள்ளனர். அதுவும் அரசுத்துறை நிறுவனமான சென்னை தொலைபேசிகள்  இந்த வேலையை வெட்கமின்றி செய்து வருகிறது.
   
நினைவில் இருத்துவதற்கு எளிதானவை என்று கவர்ச்சிகரமான எண்களை விலை கொடுத்து வாங்குவது நியாயப்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் அனைத்து தொலைபேசி எண்களும் அலைபேசியிலோ  நிலை தொலைபேசியிலோ பதிவு செய்யப்பட்டு அதன் வழிதான் அழைக்கப்படுகின்றன. இதில் நினைவு வைத்துகொள்வது என்பதெல்லாம் கேலிக்கூத்து. சப்பைக்கட்டு.

ஒரு வினாடியின் நூற்றில் ஒரு பங்கு பின்தங்கியதால் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளின் ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்த வீரர்கள் ஏராளம். (நமது பி.டி.உசா அப்படி தவறவிட்டது இன்றளவும் நமக்கு வருத்தத்தை தருகிறது) அவர்களது பெயரோ, தொலைபேசி எண்ணோ இந்த பேராசான்களின் அறிவுரை பெற்று மாற்றப்பட்டால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகிட்டி விடுமா? கடும் உழைப்பும் பயிற்சியுமே வெற்றியை பெற்றுத்தரும்.
      பெயரும் எண்களும் ஒரு மனிதனின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தமுடியாது. அவற்றை நம்பி மோசடி பேர்வழிகளின் பின்னால் போவது முட்டாள்தனம் என்பதை நம் இன சகோதரர்களுக்கு எடுத்து சொல்வோம்.வாரீர்!

No comments:

Post a Comment