Sunday, October 24, 2010

இல.கணேசனுக்கு மறுப்பு.கடந்த 23 -09 -10 .அன்று தினமணி நாளிதழில் தமிழக பா.ச.க.வின் முதன்மை தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன் அயோத்தி பாபர் மசூதி பிரச்னை குறித்து எழுதியுள்ள பொய்யும் புனை சுருட்டும் நிரம்பிய கட்டுரைக்கு நமது மறுப்பு.

தினமணியில் வெளியான கட்டுரையை முதலில் பார்க்கலாம்.

பாபர் மசூதி இடிப்பதற்கு முன்னால் - உள்புறத் தூண்கள்
நான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே.
குறிப்பாக பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன  கருதுகிறது? இஸ்லாம் என்ற மதம் வெளிநாட்டில் தோன்றிய மதம் என்பது உண்மை. இஸ்லாம் வெளிநாட்டில் தோன்றி நம் நாட்டுக்கு வந்தது.
ஆனால், இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.
ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர். இந்த ஒற்றுமை ஆபத்து என ஆங்கிலேயன் கருதினான்.
அயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர். இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள்.
  டிசம்பர் 6, 1992-க்கு முன்பு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன். வெளியில் இருந்து பார்த்தால் மசூதிபோன்ற தோற்றம். உள்ளே போனால் கோயில். தரையிலிருந்து சுற்றிலும் ஐந்தடி உயரத்தில் உள்ள சுவர்களில் எல்லாம் நமது கோயில்களில் காணப்படும் சிற்பங்கள். யாழி, பாவை விளக்கு, தசாவதாரச் சிற்பங்கள் போன்றவைகளோடு பூவேலைப்பாடுகள். அண்ணாந்து மேலே பார்த்தால் தஞ்சாவூர் தொளைகால் மண்டபம் (சரியான பெயர் என்ன என்று தெரியாது. இப்படித்தான் அழைத்து வருகிறோம்) உள்ளே இருப்பதுபோல் அமைப்பு. இதுதான் இடிபட்டது.
அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்ம ஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்ம ஸ்தான் தபால் ஆபீஸ். முஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும்.
சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.
பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.
அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.
பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது.
நாளையே பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதிபரும், மக்களும் எங்கள் மதத்தைத் சார்ந்தவர்கள். அதனால், அவர்களை வரவேற்போம் என்று எந்த இந்திய இஸ்லாமியரும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால், அது நியாயமானது என எந்த மதச்சார்பற்றவாதிகளும் கருதமாட்டார்கள். அதுபோலத்தானே இதுவும்.
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை.
சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.
மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி.
நீண்ட காலமாகவே நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகள் இவை. அயோத்தி பிரச்னை தொடர்பாக உள்ள ஒரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவர இருக்கும் இந்த நேரத்தில், எனக்குள் எழுந்த உரத்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நமது மறுப்பு.

இல கணேசன்
 ஆர்.எசு.எசு.க்கும் பா.ச.க வுக்கும் ஏதோ மாபெரும் வேறுபாடு உள்ளது போல் காட்ட முயல்கிறீர்கள். காமராசரின் ( நினைவு வருகிறதா? உங்கள் சன சங்கத்தின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான அதே காமராசர்தான் ) சொற்களில் சொல்வதானால் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
     பார்ப்பணிய ஆதிக்கத்தை  பாதுகாக்கவும் பனியாக்களின் சுரண்டல் நலன்களுக்காகவும் மராட்டிய சித் பவன பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆர்.எசு.எசு. எனும் மதவெறி அமைப்பின் பல்வேறு கிளைகளில் ஒன்றுதான்     பா.ச. க.  ஒரு தொலைகாட்சி விவாதத்தின் போது பா.ச.க -ஆர் எசு. எசு. உறவை காந்தியார் -காங்கிரசு உறவுடன் ஒப்பிட்டு நீங்களே ஒரு முறை கருத்து தெரிவித்தீர்கள். அவ்வளவு ஏன் ஆர் எசு. எசு. விருப்பம் இல்லாமல் பா.ச.க வில் யாரும் பதவிக்கு வரமுடியாது. பதவியில் நீடிக்கவும் முடியாது. எடுத்துக்காட்டு :- சின்னாவை மதச்சார்பற்றவர் என்று கூறியதற்காக அத்வானி ஆர் எசு.எசு.வின் சினத்திற்கு ஆளாகி பா.ச.க தலைவர் பதவியை இழக்க வேண்டியிருந்தது. ஆகவே இரண்டும் வேறு வேறானவை என்று காதில் பூச்சுற்ற வேண்டாம்.
     அடுத்து முசுலிம்களும், நீங்களும் ஒரே " பண்பாடு" கொண்டவர்கள் என கதைக்கிறீர்கள். எப்படி! பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்து மதத்திலிருந்து வெளியேறி பிறப்பால் சகோதரர்கள் என கூறும் இசுலாமிய மதத்தை பின்பற்றுபவர்களும், நீங்களும் எப்படி ஒரே பண்பாடு உடையவர்கள் என்கிறீர்கள்.
     முசுலிம்களின் உணவு பழக்க வழக்கங்கள் வேறு உங்களின் உணவு பழக்க வழக்கங்கள் வேறு. அவர்களது பெருநாட்கள் வேறு. உங்களது பண்டிகைகள் வேறு. இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். உண்மை இப்படியிருக்க ஒரே பண்பாடு என்ற பசப்பல் ஏன். அவ்வளவு ஏன், இந்து மத சகோதரர்களிலேயே வேறுபட்ட கலாசாரங்கள் பின்பற்றபடுகின்றன. இந்து மக்களில் சில சாதியினர் கைம்பெண் மறுமணத்தை அனுமதிக்கிறார்கள். உங்களை போன்ற மேல் சாதியினர் கைம்பெண் திருமணத்தை  ஏற்பதில்லை. பிறகு ஒரே பண்பாடு என்ற பசப்பல்கள் ஏன்.
     அடுத்து பாபர் அந்நிய நாட்டிலிருந்து வந்த படைஎடுப்பாளன் என்று சொல்லியிருக்கிறீர்கள். யார் இல்லை என்று சொன்னது. அந்த காலகட்டத்தில் மன்னர்களுக்கு பிற நாடுகளை கைப்பற்றி தனது ஆட்சி பகுதிகளை விரிவுபடுத்துவது என்பது வழக்கமாக இருந்து வந்தது.அந்த வகையில் பாபர் படையெடுத்து வந்து இந்தியாவின் வட பகுதியை கைப்பற்றி ஆட்சி நடத்தினார். ஆனால் முகலாயர்களும், பிற முஸ்லிம் மன்னர்களும் இந்த நாட்டையே சொந்த நாடாக வரித்துக் கொண்டு இங்கேயே தங்கிவிட்டவர்கள். ஆங்கிலேயன் நாம் நாட்டை ஆண்டபோது நம்மை சுரண்டி கொள்ளையிட்டு அவன் நாட்டை வளப்படுத்தியது போன்ற அயோக்கியத்தனத்தை அவர்கள் செய்யவில்லை. காரணம் இந்த நாட்டை அவர்கள் தாய்நாடாக வரித்துக் கொண்டதுதான். சொந்த வீட்டில் கொள்ளையிட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

      மற்றபடி இங்கு வாழும் முசுலிம்கள்  வேற்று நாட்டிலிருந்து வந்தவர்களல்லர்.சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்புவது போன்ற சமூக காரணங்களுக்காகவும்  ஆன்மீக காரணங்களுக்காகவும்  இந்து மதத்திலிருந்து    இசுலாத்திற்கு மதம் மாறியவர்கள்.
   அடுத்து  பாபர் இந்த நாட்டை கைப்பற்றியதற்காக, தனது வெற்றியை கொண்டாட அயோத்தியில் பாபர் மசூதியை கட்டியதாக எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு வரலாற்று புரட்டை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். அதற்காக ராமர் கோவிலை இடித்தார் என்றும் குற்றம் சாட்டுகிறீர்கள். எனவே பாபர் மசூதி அவமான சின்னம், அகற்றப்பட வேண்டியது என்றும் கூறியிருக்கிறீர்கள்.
     போர் வெற்றியை கொண்டாட மசூதி கட்டுவது முகலாயர் வழக்கம் என சொல்ல முடியாது. அக்பர் ராசஸ்தான் பகுதியை வென்றதை கொண்டாட பதேபூர் சிக்ரி கோட்டையைத்தான் கட்டினார். மசூதி கட்டவில்லை. மேலும் பாபர் கோவிலை இடித்து மசூதி கட்டியிருப்பாரா என்று அவர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயிலை படித்துவிட்டு முடிவு செய்யலாம்.

பாபரி நாமா எனும் நூலில்  கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
 பாபரின் இந்த உயில் மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  ஒரு வேளை பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எசு .எசு. எனும் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.
இப்போது சொல்லுங்கள்.பாபர் ராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியிருப்பாரா.

மேலும் பாபர் மசூதி கட்டப்பட்ட அதே காலத்தில் அயோத்தியில் வாழ்ந்து வந்த புகழ் பெற்ற ''ராம சரிதா மனஸ்''இயற்றிய ராம பக்தர் துளசி தாசர் அந்நூலில் பாபர் கோவிலை இடித்ததாக எதுவும் எழுதவில்லை.கோவில் இடிக்கப்பட்டிருந்தால் துளசி தாசரும் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே.  
    பாபர் மசூதி ஒரு அவமானச் சின்னம் என்பது உங்கள் சங் பரிவாரத்தின் நச்சுப் பரப்புரையை அன்றி வேறல்ல.
    அடுத்து பாபர் நம் மதத்தவன் என்பதால் முசுலிம்கள் பாபர் மசூதி மீது உரிமை கொண்டாடுவதாக கூறியிருக்கிறீர்கள். அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தால் நம் மதத்தவர்கள் என்பதால் முசுலிம்கள்     ஆதரிக்கமாட்டார்கள்தானே என நச்சுப்பரப்புரை வேறு. பாகிஸ்தானுடனான அத்தனை போரிலும் முசுலிம்கள் செய்த அளப்பரிய தியாகங்களை இழிவுபடுத்துவதாக உங்கள் கூற்று உள்ளது. அண்மைய கார்கில் போரில் கூட போர்த்தந்திர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த " புலிக்குன்றை" இந்தியாவுக்கு முசுலிம் வீரர்கள் தான்  பெரும் உயிரிழப்பை சந்தித்து கைப்பற்றி தந்தார்கள் என்பதை நினைவில் கொண்டு பேசுங்கள். 
     பாபர் கட்டினார் என்பதற்காக முசுலிம்கள் பாபர் மசூதி மீது உரிமை பாராட்டவில்லை. 450 ஆண்டு காலம் தொழுகை நடத்திய தங்கள் வழிபாட்டுத்தலம் என்ற அடிப்படையில்தான் உரிமை கோருகிறார்கள். இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமை இந்தியாவில் நடைமுறை படுத்தப்படுகிறது என்பது உண்மையானால் பாபர் மசூதி முசுலிம்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். 

 \\பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள்// 

     இப்படி ஒரு புளுகு மூட்டையை அவிழ்க்கிறீர்கள்.மசூதி கட்டப்பட்ட காலம் முதல் உங்கள் சங்க பரிவார் கூட்டம் 1949 -டிசம்பர் மாதம் 22-ஆம் நாள் பாபர் மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து ராமர் சிலையை வைத்த நாள் வரை அங்கு தொழுகை  நடைபெற்று வந்தது.முசுலிம்கள் இப்படி எழுதி தந்தார்கள் என்பதும் ஆதாரமற்ற கற்பனை.

\\
அயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர்.//


சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ஆங்கிலேயனை எதிர்த்து இந்து முசுலிம் மக்களின் ஆதரவுடன் வீரப்போர் புரிந்த அயோத்தியின் அரசி பேகம் கசரத் மகல்-ஐ.காட்டி கொடுத்தவர்களை பற்றியும் சொன்னீர்கள் என்றால் தமிழ் மக்களும் தெரிந்து கொள்வார்களே.


No comments:

Post a Comment