Saturday, November 27, 2010

எது நாட்டுப்பற்று?

''நாட்டுப்பற்று''என்பதற்கான வரையறை இந்தியாவில் மட்டும் மற்ற உலக நாடுகளை போல் அல்லாமல் சற்று வேறுபட்ட முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.இந்திய நாட்டின் புவியியல் வரைபடத்தை ஒரு பெண்ணுருவில் வடித்து அதனை இந்தியத்தாய் (பாரத் மாதா) என்று கொண்டாடுவதும்,அந்த தாயை ஒரு தெய்வமாக கருதி வழிபடுவதும்,தாயகமே உன்னை வணங்குகிறோம் (வந்தே மாதரம் )என்று பாட்டு பாடுவதும் நாட்டுப்பற்றின் அடையாளமாக கருதப்படுகின்றன.

விடுதலை போராட்ட காலத்திலிருந்தே நாட்டுப்பற்று என்பது இப்படித்தான் வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும் நாட்டுப்பண்,நாட்டுக்கொடி முதலான நாட்டு அடையாளங்களை போற்றி வணங்குவதும் நாட்டுப்பற்றாக கருதப்படுகிறது. 

(இதில் என்ன வெட்ககேடு என்றால் நாட்டுப்பண்ணாக இந்திய ஆளும் கும்பல் தேர்ந்துடுத்துள்ள ''சன கன மன அதி''பாடல் 1910-ல் அடிமை இந்தியாவை பார்வையிட வந்த ஆக்கிரமிப்பாளன் இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் சார்ச்சை வரவேற்று
ரவீந்திரநாத் தாகூர் எழுதியது.இதை இன்றளவும் பாடிக்கொண்டிருப்பது அடிமைத்தனத்தை நேசிப்பதாகாதா.விடுதலைக்காக பாடுபட்டு தியாகங்கள் பல புரிந்த,வெள்ளையனின் துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் மாலையாக ஏந்திய,அவனது குண்டாந்தடிகளை வெறும் தலைகளால் சந்தித்த,விடுதலை போராட்டவீரர்களை இதை விட கேவலமாக அவமதிக்க முடியுமா.அந்த வகையில் இந்திய ராணுவம் அல்லாமா இக்பாலின் ''சாரே சகான்சே அச்சா இந்துசுதான் அமாரா''பாடலை அதன் நிகழ்ச்சிகளில் பாடி இசைப்பது பாராட்டுக்குரியது.)

நாட்டுப்பற்று மேற்கூறிய அம்சங்களில் இருந்து மேலும் முன்னேறி இந்திய அணி  பங்கேற்கும் பன்னாட்டு மட்டைபந்து (cricket) போட்டிகளின்போது விளையாட்டு அரங்குகளில் கூச்சலிடுவதும்,நாட்டுக்கொடியை அசைப்பதும்,இந்திய வீரர்களை பற்றி ஏதாவது ஒரு உளறலை அட்டையில் எழுதி தொலைகாட்சி படப்பிடிப்பு கருவியின் ஆட்டுவதுமாக முன்னேறியுள்ளது.

மேற்கூறிய நடவடிக்கைகளை செய்பவர்கள் அனைவரும் நாட்டுபற்றாளர்கள் என்ற மூடத்தனமான நம்பிக்கையில் மக்களை ஆழ்த்துவதில் ஆளும் வர்க்கங்கள் மிகுதியாக வெற்றியும் பெற்றுள்ளார்கள்.ஊரை அடித்து உலையில் போடும் ஊழல் புரியும் ஆட்சியாளர்கள்,வாங்குகின்ற சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற கடமை உணர்வின்றி கையூட்டு கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலையை கண்ணும் கருத்துமாக பேணி வரும் அரசு ஊழியர்கள்,கோடிகணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் பெருமுதலாளிகள்,மக்களின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பம் விடும் ஒப்பந்ததாரர்கள்,(இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) என்று எப்படிப்பட்ட அயோக்கியர்கள் ஆனாலும் சரி மேற்சொன்ன ''நாட்டுப்பற்று நடவடிக்கைகளை''மேற்கொண்டால் போதும்,அவர்கள் நாட்டு பற்றாளர்கள்.என்ன ஒரு கேலிக்கூத்து,பாரீர்.உண்மையில் இவர்களை நாட்டுதுரோகிகள் என்றல்லவா வரையறுக்கவேண்டும்.

இப்படியான மூடத்தனமான நாட்டு பற்றை போதிப்பதன் மூலமாகத்தான் ஆளும் வர்க்கங்கள் தாங்கள் செய்யும் கசுமீர் மக்கள் மீது ஏவும் பாலியல் வல்லுறவு,அன்றாடம் துப்பாக்கி சூடு ,ஒடுக்குமுறை,வடகிழக்கு மாநிலங்களில் நடத்தும் தேசிய இன ஒடுக்குமுறை,ஈழப்போரில் தலையிட்டு தமிழ்மக்களை கொன்றுகுவித்தது.மைய இந்தியபகுதிகளில் வாழும் பழங்குடியினரை அவர்களது வாழ்விடங்களான காடுகளிலிருந்து துரத்துயடித்துவிட்டு கனிமவளம் மிகுந்த அப்பகுதிகளை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக காட்டுவேட்டை போர்,என எண்ணிறந்த அட்டூழியங்களை நாட்டுநலனுக்கானது என நியாயப்படுத்தி மக்களின் ஆதரவை திரட்டிக்கொள்கிறது.  

அப்படியானால் நாட்டுப்பற்று என்பது என்ன.நாடு என்பது வெறுமனே ஒரு நிலப்பரப்பை குறிப்பதல்ல,குருதியும் சதையுமாக அந்நிலப்பரப்பில் வாழும் மக்களையும் சேர்த்துத்தான் அது குறிக்கிறது.அந்த மக்களின் நலன் கருதிசெய்யப்படும் செயல்கள்தான் நாட்டுபற்றை குறிப்பதாக கொள்ளமுடியும்.

அரசு ஊழியர் தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவது நாட்டுப்பற்று. மக்களின் ஊழியர்கள் நாம் என்ற உணர்வோடு பணியாற்றி அம்மக்கள் பயனுற செய்வது நாட்டுப்பற்று.கையூட்டு பெறாமல் வாங்கும் ஊதியத்திற்கு வேலை செய்வது நாட்டுப்பற்று.
வணிகர்கள் ஆயின் முறையாக வரி செலுத்தி நாட்டின் வருவாய் உயர பங்களிப்பு செய்வது நாட்டுப்பற்று.
பெரு முதலாளிகள் முறையாக அனைத்து வரிகளையும் செலுத்தி நாட்டின் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து அதன்படி நடந்து கொள்வது நாட்டுப்பற்று.(இவர்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்தாலே நாட்டின் வருவாய் பன்மடங்கு உயர்ந்துவிடும்).
பொதுமக்கள் ஆயின் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல் இருப்பது நாட்டுப்பற்று.சேதப்படுத்துவோரை தடுப்பது நாட்டுப்பற்று.விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவது நாட்டுப்பற்று.விபத்தில் அடிபட்டு கிடப்போரின் உடமைகளை திருட முயல்வோரிடமிருந்து அப்பொருட்களை காப்பாற்றி உரியவர்களிடம் சேர்ப்பது நாட்டுப்பற்று. 
ஆட்சியாளர்கள் வல்லரசு கனவில் ஆயுதங்கள் வாங்கி குவிப்பதையும்.ஊழல் செய்து பொறுக்கி தின்பதையும் விடுத்து வரிப்பணம் முழுவதையும் மக்கள் நலனுக்காக செலவிடுவது நாட்டுப்பற்று.தனி வானூர்தி பயணம்,மக்கள் வரிப்பணத்தில் ஐந்து விண்மீன் தரத்தில் சொகுசு வாழ்க்கை என வீண் ஆடம்பரங்களை தவிர்ப்பது நாட்டுப்பற்று.
ஆட்சியாளர்கள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது அரைமணி நேரம் தங்கும் இடத்தில் கூட பல இலக்கம் உருவாக்கள் செலவில் கழிப்பறை கட்டாமல் இருப்பது நாட்டுப்பற்று.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக மொத்தத்தில் மக்கள் நலனுக்காக செய்யப்படும் அனைத்து செயல்களுமே நாட்டுபற்றை குறிக்கும்.மக்கள் நலனுக்கு எதிரானவை எல்லாம் நாட்டுக்கு செய்யும் துரோகங்களே ஆகும்.வீண் ஆரவாரங்களும்,போலியான பக்தி பரவசங்களும் நாட்டுப்பற்று ஆக முடியாது.

  

Wednesday, November 24, 2010

புட்டபர்த்தி சாய்பாபா; கடவுளின் அவதாரமா.கபட வேடமிடும் செப்படி வித்தைக்காரனா.

புட்டபர்த்தி.கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆந்திராவை சேர்ந்த சிற்றூர். சீரடிசாய்பாபாவின் மறுபிறவி என்றும் கடவுளின் அவதாரம் என்றும் தன்னை கூறிக்கொள்ளும் புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ள ஊர்.அதுதான் அவரது சொந்த ஊரும்கூட.அந்த ஊருக்கும் அதன் சுற்றுப்புறத்துக்கும் கொஞ்சமும் தொடர்பின்றி பிரமாண்டமாக அமைந்துள்ளன ஆசிரமும் அது நடத்தும் நிறுவனங்களும்.


அந்நிறுவனங்களில் ஒன்றான ''சத்ய சாய்உயர் கல்வி கழகம்''கடந்த 22 -11 -10 அன்று நடத்திய பட்டமளிப்பு விழாவில் சாய்பாபா முன்னிலையில் முதன்மர்.மன்மோகன் கைகட்டி பவ்யமாக அமர்ந்திருக்க கர்னாடக முதல்வர் எதியூரப்பா சாமியாரை மண்டியிட்டு பணிந்து வணங்குவதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இவ்விழா பற்றிய செய்திக்கு; http://www.hindu.com/2010/11/23/stories/2010112361511300.htm
 சாமி,பக்கத்தில் இருக்காரே பெரியமனிதர் மன்மோகன் அவர்கிட்ட நம்ம ஊழலைப் பத்தி ரொம்ப தோண்ட வேணாம்னு கொஞ்சம் சொல்லுங்க,உங்களுக்கு புண்ணியமா போகும்.
அப்டியே குமாரசாமி வந்தா கொஞ்சம் கண்டிச்சு வைங்க.அந்தாளு சூன்யம் வைச்சதுதா இந்த பாடு படுத்துது


இப்படி நாட்டின் முதன்மரும் மாநில முதல்வர்களும் தொழுது வணங்கி செய்யும் மரியாதைக்கு தகுதியானவர்தானா சாய்பாபா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்ற பதிலே கிடைக்கும்.
புட்டபர்த்தி சாய்பாபா கடவுளின் அவதாரம் என்று நீண்ட நெடுங்காலமாக செய்யப்பட்டு வரும் கள்ள பரப்புரைக்கு கணிசமானோர் பலியாகி உள்ளனர்.அதன் வெளிப்பாடாக பாபா எங்கு சென்றாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அவரது அருள் கிட்டிவிட்டால் மற்ற அனைத்தும் கிடைத்து விடும் என்ற அப்பாவித்தனமான நம்பிக்கையில் அம்மக்கள் மூழ்கி உள்ளனர்.


சாய்பாபா கடவுளின் அவதாரமாக சொல்லிக்கொண்டு செய்யும் அற்புதங்கள் அனைத்தும் தந்திர வேலைகளே என்று பகுத்திறவு இயக்கத்தினர் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளனர்.மேலும் சாய்பாபா ஒரு கீழ்த்தரமான பாலியல் குற்றவாளி என்பதும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.தனது பாலியல் இச்சைகளுக்கு அவர் ஆசிரமம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுவர்களை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.சாய்பாபாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களே கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் உண்டு.


இவையெல்லாம் காழ்ப்புணர்ச்சியால் உந்தப்பட்டு யாரும் இட்டுக்கட்டியவை அல்ல.இக்குற்றச்சாட்டுகள்  பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தால்  (BBC) ஆதாரங்களுடன் ஒளிபரப்பப்பட்டு கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளன.அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள ஒளிப்பட தொகுப்பை கீழ்காணும் சுட்டிகளில் காணலாம்.


http://www.youtube.com/watch?v=jjRaReI5b2Q&feature=related
http://www.youtube.com/watch?v=vdsYsRaNA4k&NR=1
http://www.youtube.com/watch?v=QmUn7lkGevE&NR=1
http://www.youtube.com/watch?v=iK3QlPGYiJA&feature=related
http://www.youtube.com/watch?v=RskbqOOh6Ig&NR=1
http://www.youtube.com/watch?v=M3oWmzZI_hs&NR=1

பார்த்துவிட்டீர்களா நண்பர்களே.இப்போது சொல்லுங்கள்.சாய்பாபா கடவுளின் அவதாரமா இல்லை செப்படி வித்தையால் ஊரை,அல்ல,உலகை ஏய்க்கும் கயவனா.


இது தவிர சாய்பாபா பணத்தின் மீது பேராசை கொண்டவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.தனது பக்தர்களை தாராளமாக ஆசிரமத்துக்கு நிதி உதவி செய்ய தூண்டும் பாபா பக்தர்கள் தங்களது சொத்துக்களை ஆசிரமத்துக்கு தானமாக அளிப்பதையும் ஊக்குவிக்கிறார்.அவ்வாறு விசயவாடாவை சேர்ந்த ஒரு மூதாட்டி அவர் இறந்தபின் அவரது வீடு பாபாவின் ஆசிரமத்துக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது 55 -வது வயதில் உயில் எழுதி வைத்த பாவத்திற்காக உயிருடன் இருக்குபோதே வீட்டை பாபாவின் ஆசிரமத்திடம்  பறி கொடுத்த பரிதாபத்தை கீழே உள்ள சுட்டியில் காணலாம். 
http://exposedsaibaba.blogspot.com/

ஆக கொலைக்கஞ்சா கொடியவர்களின் ஆசிரமத்தின் தலைவர்,தெருவோரத்தில் வித்தை காட்டி பிழைக்கும் செப்படி வித்தைக்காரனின் தந்திர வேலைகளை அற்புதங்கள் போன்று செய்துகாட்டி ஏய்க்கும் ஒரு மோசடி பேர்வழி, பேராசை கொண்ட ஒரு பணப்பேய் கடவுளின் அவதாரமாக இருக்க முடியுமா.


சாய்பாபாவை கடவுளின் அவதாரமாக நம்புவோரிடம் நாம் கேட்க விரும்பும் சில கேள்விகள்.


சாய்பாபா தங்கத்தாலான கடவுள் சிலையை (லிங்கம்) வாயிலிருந்து அல்லது வயிற்றிலிருந்து எடுக்கிறார்.அவரே படைத்த ஒரு பொருள் போல் அதை பக்தர்கள் என்ற பேரில் கூடியிருக்கும் ஆட்டு மந்தையிடம் காட்டி கை தட்டல் பெறுகிறார். காற்றில் கையை சுழற்றி தங்க சங்கிலி வரவழைக்கிறார்.வெறும் கையால் தங்க மோதிரத்தை தருவிக்கிறார்.இவையெல்லாம் உண்மையென்றால்,வெறும் காற்றிலிருந்தும் தனது வயிற்றிலிருந்தும் இவ்வளவு செல்வங்களை படைக்க வல்ல சாய்பாபா இப்படி தங்க கட்டிகளை படைத்து இந்தியாவின் உள்நாட்டு,வெளிநாட்டு கடன் அத்தனையும் அடைத்துவிடலாமே.ஏன் செய்யவில்லை.


தங்கத்தையே வரவழைக்க வல்லவர் பக்தர்களிடம்  பிச்சை எடுப்பது  ஏன். 


கொல்லர் பட்டறையில் தங்க நகை உருவாகும்.மனிதனின் வயிற்றில் என்ன உருவாகும்.சாய்பாபா வயிற்றில் தங்கம் உருவாகிறதென்றால் பெரும்  பொருட்செலவில் கோலார் தங்க வயலில் தேடுவதற்கு பதிலாக சாய்பாபாவை வைத்து வேண்டிய அளவுக்கு தங்கத்தை தேடிகொள்ளலாமே. இந்திய அரசுக்கு இந்த யோசனையை நீங்கள் ஏன் தெரிவிக்கவில்லை.


சாய்பாபா கடவுளின் அவதாரம் என்றால் 50 களில் துள்ளி திரிந்த அவர் கடந்த சிலபல ஆண்டுகளாக தள்ளாமையால் தடுமாறுவது ஏன்.


தனது தள்ளாமையையும் மூப்பையும் சமாளிக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து வரும் ,சமயங்களில் சக்கர நாற்காலியில் வரும் , பாபா பக்தர்களின் குறைகளை தீர்த்து விடுவார் என்பதை நம்ப முடியுமா.
எண்ணிப்பாரீர்.


நமக்கு தெரிந்த இந்த உண்மைகள் நாட்டின் முதன்மருக்கும் மாநில முதல்வர்களுக்கும் தெரியும்தானே. அப்படியிருந்தும் அவர்கள் பாபாவை பணிந்து நிற்பதேன்.இந்த கேள்விக்கு விடை தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.மேற்கண்ட இந்து நாளிதழின் செய்தியிலேயே இதற்கு விடை இருக்கிறது.


அந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெரும்புள்ளிகளின் பட்டியல்.
1.நாட்டின் முதன்மர்.மன்மோகன்.
2.ஆந்திர முதல்வர்.
3.கர்நாடக முதல்வர்.
4.தமிழக துணை முதல்வர்.(பெரியார் இல்லாதது வசதியாக போய்விட்டது .)
5.அண்மையில் மகராட்டிர முதல்வர் பதவியை இழந்த அசோக் சவான்.
6.ஆந்திர ஆளுநர்.
7.பஞ்சாப் ஆளுநர்.
8.திரிபுரா ஆளுநர்.
9.டாட்டா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாட்டா.
10.டி.வி.எசு.நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன்.


இப்படி பெரும்புள்ளிகள் ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏன் ஒன்று கூடவேண்டும். ஓரிரு பிரபலங்கள் போதாதா.உண்மையில் ஆட்சியில் இருப்போருக்கும்,உயர் அதிகாரிகளுக்கும்,பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான வேலைகளை செவ்வனே முடித்து தரும் தரகு வேலையைத்தான் பெரும்பாலான சாமியார்கள் செய்து வருகிறார்கள்.அந்தவகையில் தாங்கள் வேலைகளை சாதித்து கொள்வதற்காகவே பெரும்புள்ளிகள் மடங்களையும் ஆசிரமங்களையும் தேடி வருகின்றனர்.அப்படிப்பட்ட தரகர்களின் முன்னணி வரிசையில் உள்ளவர்கள்தான் சாய்பாபாவும் அவரது அல்லக்கைகளும்.இத்தகைய விழாக்கள் அவர்கள் கூடுவதற்கான ஒரு வாய்ப்பு,ஒரு சாக்கு.


அதனால்தான் பாபா போன்றோரின் குற்றவியல்,பொருளாதார,பாலியல் குற்றங்கள் மூடி மறைக்கப்பட அரசுகள் உடந்தையாக உள்ளன.ஆசிரமத்தில் கொலையே நடந்தாலும் முதல்வர்கள் தொழுது வணங்கும் பாபா மீதோ அவரது அடிவருடிகள் மீதோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறையினருக்கு துணிவு வருமா என்று எண்ணிப்பாருங்கள்.


இப்படியான பின்னணியில்தான் சாய்பாபா அப்பழுக்கற்றவர் போல் நடித்து கடவுளின் அவதாரம் என்று நாடகமாட முடிகிறது.பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெறாதவரை பாபாக்களுக்கு கொண்டாட்டம்தான்.

Sunday, November 14, 2010

காங்கிரசுடன் கூட்டணி;செயலலிதாவின் கனவு பலிக்குமா.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அ.தி.மு.க.தலைவி செயலலிதா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் தனது ஆவலை மறைமுகமாக வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் தலைமுறை அலைபேசி பணிக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1 .76 இலட்சம் கோடி உருவாக்கள் அரசுக்கு இழப்பு ஏற்பட மைய அமைச்சர் அ.ராசா காரணமாக இருந்திருக்கிறார் என்று தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.இந்த நிலையில் டைம்சு நவ் என்ற ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மைய அமைச்சர் அ.ராசாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதன்மர்.மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அப்படி ராசாவை நீக்கும்பட்சத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தி.மு.க.மைய அரசுக்குஅளித்து வரும் ஆதரவை விலக்கி கொண்டால் அந்த 18 உறுப்பினர் இழப்பை தான் ஈடு கட்டுவதாகவும் உறுதி அளித்துள்ளார் செயா.தனது ஆதரவுக்கு நிபந்தனை எதுவும் விதிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.


அ.தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர் வலு ஒன்பதுதான்.மீதி ஒன்பது பேரின் ஆதரவை எப்படி திரட்டுவார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.குதிரை பேரம்தான் அதற்கான வழியென்றால் அந்த வணிகத்தில் காங்கிரசு கும்பலும் கில்லாடிகள் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்,அல்லது கருணாதியின் தூக்கத்தை கெடுப்பதற்காக ,யாரந்த ஒன்பது கருப்பு ஆடுகள்.என்று தலையை பிய்த்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் இப்படி கூறியிருக்கலாம்.


இத்தகைய பெரும் ஊழலை செய்த மைய அமைச்சர் அ.ராசாவை பதவி நீக்கம் செய்வதன் மூலம் அரசியல் நேர்மை நிலை நாட்டப்பட வேண்டும் என்கிறார் செயா.ஊழல் குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட தகுதியற்ற நிலையில் இருந்தபோதும் 2001 -ல் முதல்வர் பதவி ஏற்க தயங்காத செயா.அரசியல் தூய்மை பற்றி பேசுகிறார்.அ.ராசா தார்மீக பொறுப்பேற்று தானாக பதவி விலகுவார் என எதிர்பார்க்க வேண்டாம்,அவரை பதவி நீக்கம் செய்யுங்கள் என மன்மோகனுக்கு ஆலோசனை சொல்லும் செயலலிதாதான் உச்ச நீதிமன்றம் பதவியை விட்டு போ என விரட்டியடிக்கும் வரை முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார்.எனவே அரசியல் தூய்மை, ஊழல் பற்றி பேசுவதெல்லாம் மேம்போக்கானது.அவரது உண்மையான நோக்கம் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதுதான்.காங்கிரசு கூட்டணிதான் அவரது நோக்கம் என்பதை தமிழக சட்டமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற விவாதம் ஒன்று தெளிவாக்கியுள்ளது.காங்கிரசு அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு கதவை சாத்திவிட்டதாக கருணா தெரிவித்தபோது அ.தி மு.க சட்டமன்ற துணைத்தலைவர் ஒ.பன்னீர்செல்வம் கதவு எப்போது திறக்கும் என்று தங்களுக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.


செயலலிதா எப்படியாவது தமிழக முதல்வர் பதவியை பிடிக்கவேண்டும் என்ற வெறி கொண்ட நிலையில் இருப்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. இல்லையென்றால் சோனியா அந்நிய நாட்டவர்,இந்தியாவின் முதன்மராக தகுதியற்றவர் என்றெல்லாம் ஆறு ஆண்டுகளுக்கு முன் தூற்றியவர் இப்போது அதே சோனியாவின் கண்ணசைவுக்கு காத்திருக்கும் மைய அரசுக்கு ஆதரவு தந்து காங்கிரசுடன் கூட்டணி கட்ட துடிப்பாரா.


செயாவின் இன்றைய நிலையை பார்க்கும்போது நமக்கு நாவலர் நெடுஞ்செழியனின் ''அரும் பெரும் பொன்மொழி''ஒன்று நினைவுக்கு வருகிறது.தி.மு.க.வை விட்டு எம்.சி.ஆர்.ஐ இடைநீக்கம் செய்து கட்சியை விட்டு வெளியேற்றியதில் முதன்மையான பங்கு வகித்த நாவலர் பின்னாளில், பெரும்பாலான தி.மு.க.தலைவர்கள் செய்தது போன்று, தி.மு.க.வை விட்டு விலகி எம்.சி ஆரிடம் போய் சேர்ந்தார்.மற்றவர்கள் விலகியதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட கருணா நாவலர் விலகிய போது கடும் எதிர் வினையாற்றினார். மற்றவர்களுடன் சேர்ந்து புரூட்டசும் தன்னை கத்தியால் குத்தியபோது சீசர் ''நீயுமா புரூட்டசு''என்று கேட்டதை எடுத்துகாட்டி ''நீங்களுமா நாவலரே''என்று கேட்டு,கேட்டு அவரை தொடர்ந்து வறுத்தெடுத்து கொண்டிருந்தார்.சிறிது காலம் போன பின்னால் ஒரு செய்தியாளர் சந்திப்பில் மனம் திறநது பேசிய நாவலர் பல ஆண்டுகள் அமைச்சராக,ஆள் அம்பு.பதவி என செல்வாக்குடன் இருந்துவிட்டு பதவி இல்லாமல் தம்மை போன்றவர்களால் இருக்க முடியாது என்று சொல்லி அதற்கு ஒரு எடுத்துக்காட்டும் சொன்னார்.''சிரங்கு வந்தவன் சொரியாமல் இருக்க முடியாது''என்றார்.அப்படித்தான் முதல்வர் பதவியில் இல்லாத ஒவ்வொரு நாளும் ,ஏன்,ஒவ்வொரு வினாடியும் செயலலிதாவுக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது.அதனால்தான் எப்பாடு பட்டாவது முதல்வர் பதவியை பிடிக்க முனைகிறார்.


ஆனால் தற்போதைய காங்கிரசு செயாவிடம் அவ்வளவு எளிதில் ஏமாந்துவிடும் என்று சொல்வதற்கில்லை.ஒரு 13 மாத காலம் செயாவின் ஆதரவில் நடுவணில் ஆட்சி நடத்திய வாச்பாயி பட்ட சிரமங்களை நாடே பார்த்தது.இதையே பின்னாளில் வாச்பாயி மிகவும் உருக்கமாக  ''எனது வாழ்நாளில் மிகவும் துயரமான காலம் செயாவின் ஆதரவில் ஆட்சி நடத்திய காலம்தான்'' என்று மனம் நொந்து சொன்னார்.இது காங்கிரசுக்கும் தெரியும்தானே.


1999 -நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கட்டி போட்டியிட்ட செயலலிதா சோனியாவுடன் ஒரே மேடையில் பேச மறுத்து அவரை அவமானப்படுத்தியதை சோனியா அவ்வளவு எளிதில் மறந்து விடுவாரா.ராசீவ் கொலைக்காக பதினெட்டு ஆண்டுகள் வஞ்சம் வைத்து காத்திருந்து ஒட்டு மொத்த ஈழ தமிழினத்தையே பழி தீர்த்த சோனியா செயாவை மறப்போம் மன்னிப்போம் என ஏற்றுகொள்வார் என சொல்ல முடியாது.


மேலும் தமிழகத்தில் பணவலு,ஆள்வலு,அச்சு ஊடகவலு,தொலைக்காட்சி ஊடக வலு,என அனைத்திலும் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வே முன்னணியில் உள்ளது.எனவே இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயல காங்கிரசு ஒன்றும் ஏமாளிகளின் கூடாரமல்ல.பெரும்பான்மை வலு இல்லாத நிலையில் காங்கிரசு ஆதரவில் ஆட்சி நடத்திக்கொண்டு  ஆட்சியில் பங்கு தராமல் கருணா அவமானப்படுத்தினாலும் மைய ஆட்சியை கருத்தில் கொண்டு சகித்துக்கொண்டு தி.மு.க. கூட்டணியில் தொடருவதையே காங்கிரசு தெரிவு செய்யும்.


பாவம் செயா.சொந்தவலுவில்.தமிழக அரசியலில் அவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லாத பொதுவுடைமை கட்சிகள்,வைகோ,முதலானவர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டியதுதான்.


பி.கு.
இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது அ.ராசா மைய அமைச்சர் பதவியை விட்டு தாமாகவே முன் வந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டி ராசா விலகுவதாக தி.மு.க விளக்கம் அளித்திருந்தாலும் எதிர்கட்சிகள் கொடுத்த அழுத்தமும் கூட்டணி சித்து விளையாட்டும் இதில் முதன்மையான பங்கு வகிக்கின்றன.காங்கிரசு கதவு அ.தி.மு.க.வுக்கு திறக்க எந்த வகையிலும் வாய்ப்பு இருக்க கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக உள்ளார் என்பதையே பதவி விலகல் காட்டுகிறது.  Saturday, November 13, 2010

கோவை குழந்தைகள் கொலையும் முந்தைய கொலை நிகழ்வொன்றும்

கோவையில் இரண்டு பள்ளிகுழந்தைகள்  கடத்தி கொலை செய்யப்பட்டநிகழ்வு நாம் வாழ்நாளில் சந்தித்த மறக்க முடியாத கொடூரங்களில் ஒன்றாக உள்ளது. .இந்த குழந்தைகள் கொலைக்காக வருந்தாதவர்கள் எவரும் இருக்க முடியாது.  இந்த கொலைகள் கோவை பகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

70 களின் இறுதியில் நான் பள்ளிச்சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த இது போன்ற ஒரு நிகழ்வை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் நாற்பது வயதை கடந்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளவும் இங்கு பதிவு செய்கிறேன்.


அப்போது தில்லியில் இரண்டு பள்ளி மாணவிகளை பணம் பறிக்கும் நோக்கில் கடத்தி கொலை செய்து விட்டனர் பில்லா, ரங்கா என்ற இரு கயவர்கள்.கொலை நடந்து ஒரு சில மாதங்களில் கொலையாளிகளை காவல் துறையினர்  கைது செய்து விட்டனர்.அது பற்றிய வழக்கு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 


எங்கள் வீட்டில் நாள்தோறும் தினமணி நாளிதழ்தான் வாங்குவார்கள்.அதுதான் ''தரமான''நாளிதழ் என்பதில் எங்கள் தந்தைக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. நாங்கள் 'கன்னித்தீவிற்காகவும்' எந்த எந்த திரையரங்குகளில் வசந்த மாளிகையும் நாளை நமதேவும் எத்தனாவது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் செய்திகளுக்காகவும் தினத்தந்தி வாங்க வேண்டும் என எவ்வளவுதான் போராடினாலும் எங்கள் தந்தையின் தரத்தின் மீதான பற்றுக்கு முன் நாங்கள் தோற்று போனோம்.எனவே நாள்தோறும் சற்று தொலைவில் இருந்த முடி திருத்தும் கடைக்கு சென்று தினத்தந்தி படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
அந்த பழக்கம் சற்று பெரியவன் ஆனபோது அந்த கடைக்கு அருகில் இருந்த ''அறிஞர் அண்ணா படிப்பகத்துக்கு''சென்று முரசொலி படிப்பதும் அங்கு இருக்கும் பெரியவர்கள் பேசுவதை கேட்பதும் எதிர் வரிசையில் இருந்த ''சிவாசி ரசிகர் மன்றத்துக்கு''(அங்கும் செய்தியேடுகள் இருக்கும்.பெயர் நினைவில்லை) போய் அங்கு நடக்கும் உரையாடல்களை கேட்பதுமாக நீண்டது.


பில்லா,ரங்கா செய்த கொடூர கொலைகள் பற்றி இப்போது கோவை கொலைகளை தொடர்ந்து மக்களிடம் எழுந்துள்ள சினத்திற்கு எள்ளளவும் குறையாத அதிர்ச்சியும் ,சினமும் இந்தியா முழுவதும் ஏற்பட்டது. பலியான அந்த இளம் குருத்துகளுக்காக நாடே வருந்தி கண்ணீர் வடித்தது என்று கூட சொல்லலாம். மிகையாகாது. படிப்பகத்திலும்.மன்றத்திலும் இருக்கும் அண்ணன்கள் கண்ணில்  பில்லாவும் ரங்காவும் தென்பட்டார்கள் என்றால் அவர்களை அடித்தே கொன்று விடுவார்கள் என்று எனக்கு தோன்றும்.அந்த அளவுக்கு அந்த வழக்கு பற்றிய செய்திகளை படிக்கும் போதும்,படித்து முடித்த பின்னரும் கடும் சினம் தெறிக்க பேசுவார்கள்.


வழக்கு தொடர்ந்து நடைபெற்று அந்த கயவர்கள் இருவருக்கும் சாவு தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.


அதன் பின் தமிழகத்தில் நடந்ததுதான் குரூரமான நகைச்சுவை. பில்லா,ரங்கா என்ற அந்த இரு கயவர்களுக்கும் கிடைத்திருந்த எதிர் மறை புகழையும் காசாக்கி கொள்ளும் கயமையில் இறங்கினர் ஆபாசத்தையே வணிக பொருளாக கொண்ட திரைத்துறை கழிசடைகள்.ரசினிகாந்த் கதாநாயகனாக நடிக்க ''பில்லா''என்றும் ''ரங்கா''என்றும் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து கயவர்கள் மீது மக்களுக்கு இயல்பாக ஏற்படும் ஆத்திர உணர்வை மழுங்கடித்தன.இன்றோ                        ''பில்லா ரங்கா பாசாதான்''பிஸ்டல் பேசும் பேசாதான்''
என்று ஏதோ விடுதலை போராட்ட வீரர்களின் பெயர் போல் பில்லா,ரங்கா என்ற அயோக்கியர்களின் பெயர் பாடப்படுகிறது.


ஊடகங்கள் எந்த அளவுக்கு மக்களின் இயல்பான உணர்வுகளை கட்டுபடுத்தவும்.தாங்கள் விரும்பும் திசையில் மக்களின் உணர்வலைகளை செலுத்தவும் வல்லமை பெற்றுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
யார் கண்டது.ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னால் கோவை கொலையாளி மோகன்ராசு பெயரிலும் திரைப்படம் வரக்கூடும்.
      ''மோகன ராசா,நீயே உலகின் ராசா''என்பது போன்று எவனாவது ஒரு காரியகிறுக்கன் அதற்கும் பாட்டெழுதி தரலாம்.


தமிழ்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது.மோகன்ராசு போன்ற கயவர்கள் மக்களுக்கு எந்த விதமான ஊறும் விளைவித்து விடாமலும் அத்தகைய குற்றவாளிகளை போற்றுகின்ற பண்பாட்டு சீரழிவை தமிழ் சமூகத்தில் நுழைய விடாமலும் காக்கின்ற பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.       

Saturday, November 6, 2010

அமெரிக்கா மனித குலத்தின் எதிரி. ஆகவே,ஒபாமாவே திரும்பி போ.

நான்கு நாள் பயணமாக அமெரிக்க குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார்.அவர் இரண்டு நாட்கள் மட்டும் மும்பையில் தங்குவதற்கு 1800 கோடி உருவாக்கள் அமெரிக்க அரசு செலவிடுகிறதாம்.இந்திய அரசு எவ்வளவு செலவிடப் போகிறது என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை.ஒபாமாவின் வருகை  வரலாற்று சிறப்புமிக்கது,இருநாட்டு உறவில் ஒரு மைல்கல் என்று பலவாறு சிறப்பித்து கூறப்படுகிறது.


ஆக்ரமிப்பு போர் வெறியன் சார்ச் புசு தொடங்கிய ஆப்கன்,இராக் போரை தான் வெற்றி பெற்றால் முடித்து வைக்க போவது போல் பம்மாத்து காட்டி அமெரிக்க மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற ஒபாமா பதவிக்கு வந்த பின் போரை வெறியுடன் தொடர்கிறார்.ஆப்கனுக்கு கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ள ஒபாமா இராக்கில் படைக்குறைப்பு செய்வதாக நாடகமாடி விலக்கிக்கொள்ளும் படைகளை குவைத்தில் குவித்து வருகிறார்.அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக இராக் மீது பொய்க்குற்றம் சாட்டி அந்நாட்டை புசு தலைமையில் ஆக்கிரமித்து இலக்கக் கணக்கான இராக்கியர்களை கொன்று குவித்த அமெரிக்கா தற்போது ஒபாமா தலைமையில் இரான் அணு ஆயுதங்கள் அணியமாக்குவதாக குற்றம் சாட்டி போர் தொடுப்பதற்கான எத்தணிப்புகளை செய்து வருகிறது.


இவை மட்டுமல்ல,உலகெங்கும் தனக்கு அடிமைப் பணி புரிய மறுத்த அரசுத்தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் தனது உளவுத்துறை மூலம் படுகொலை செய்த,உலகின் பல பகுதிகளிலும் உள்நாட்டு போரை தூண்டிவிட்டும்,நாடுகளிடையே போர்பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்கியும் ஆயுதங்கள் விற்று கொள்ளையடித்துக் கொண்டிருக்கும்,பல இலக்க மக்களின் உயிரை குடித்து உயிர் வாழும்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தற்போதைய தலைவரான ஒபாமா மனித குலத்தின் எதிரிகளின் தலைவன் என்பதில் ஏதேனும் ஐயம் இருக்கமுடியுமா.


சரி.இந்த கொள்ளை கும்பல் தலைவன் ஒபாமா எதற்காக இந்தியாவுக்கு வருகிறார். இதற்கு பெரிதாக ஒன்றும் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. அக்டோபர் 28 -ஆம் நாளைய தினகரன் நாளிதழை பார்த்தாலே போதும். அவர்களே தம் வாயால் தங்கள் நோக்கத்தை தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

பார்க்க;
http://www.dinakaran.com/Obama-india-visit-details.aspx?id=19034&id1=67

இதில் இந்திய பொருளாதாரத்திற்கு,அதன் வளர்ச்சிக்கு உதவும் அம்சம் ஏதேனும் இருக்கிறதா.ஆக,அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அமைக்கவிருக்கும் அணு உலைகளில் கதிரியக்க பேரழிவு விபத்து நிகழுமேயானால் அந்நிறுவனங்கள் அற்ப சொற்பமான இழப்பீடு கொடுத்தாலே போதும் என இந்திய ஆட்சியாளர்களை ஒப்புக்கொள்ள வைக்க அழுத்தம் கொடுப்பதற்காகவும்,இந்திய சில்லறை வணிக சந்தையில் வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் நுழையவும்.அவர்களை வைத்து ஏற்கனவே இங்கு சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான இந்திய வணிகர்களை வியாபாரத்தை விட்டே விரட்டியடித்து விட்டு நாடு முழுவதும் கொள்ளையிடவும் வர்த்தக ஒப்பந்தங்கள் போட வரும் ஒபாமாவை வரவேற்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.


எனவேதான்  ''ஒபாமாவே திரும்பி போ'' என கோருகிறோம்.Friday, November 5, 2010

கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல. சரியாக சொன்னாய் தாயே,அருந்ததி ராயே.ந்தியாவும் வேண்டாம்,பாகிசுத்தானும் வேண்டாம்.விடுதலை பெற்ற கசுமீரே எங்களுக்கு வேண்டும் என போராடும் கசுமீரிகள்.


அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை என கூறியதையடுத்து அவர் மீது பாய்ந்து குதற தாவிக் குதிக்கிறார்கள் நாட்டுபற்றாளர்கள் என்று நாட்டை ஏமாற்றிகொண்டிருக்கும் சங் பரிவார பாசிச கும்பலும்,ஆளும் காங்கிரசு கும்பலும்.

அருந்ததி ராய் மீது நாட்டு துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம் என முதலில் செய்திகளை கசியவிட்ட காங்கிரசு கும்பல் இப்போது பதுங்கி பின்வாங்குகிறது.(இந்திய குற்றவியல் சட்டம் 124 -அ ,பிரிவின் கீழ் வரும் நாட்டு துரோக குற்றத்திற்கு உச்சபட்சமாக வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கலாம்).விடுதலை கோரி போராடும் கசுமீர் மக்களோடு அமைதிப் பேச்சு நடத்த தூதுக்குழுவை அனுப்பிவிட்டு இந்தப்பக்கம் கசுமீர் பற்றிய ஒரு உண்மையை சொன்னதற்காக அருந்ததி ராய் மீது வழக்கு போட்டால் தனது அமைதிப்பேச்சு நாடகம் அம்பலமாகிவிடும் என்பதால் அடக்கி வாசிக்கிறது காங்கிரசு.

பாசிச சங் பரிவாரோ தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் அண்ணன் சண்டப்பிரசண்டன்தான் என்ற பழமொழிகேற்ப தொடை தட்டி தாவிக் குதிக்கிறது. அருந்ததி ராய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைய அரசை நெருக்குகிறது.ஓவியர் உசேனை நாட்டை விட்டு விரட்டியடித்தது போல் அருந்ததி ராயையும் விரட்டியடிப்போம் என வெறியுடன் உறுமுகிறது பச்ரங் தள்.ப.ச.க.வின் மகளிர் அணியினர் முன்னறிவிப்போ,காவல் துறையின் அனுமதியோ இன்றி அருந்ததி ராயின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூடி அவர் மீது வசைமாரி பொழிந்ததோடு அவரது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான அருந்ததி ராயின் வீடு.

வாழ்நாள் தண்டனை விதிக்கும் அளவுக்கு,நாட்டை விட்டே விரட்டியடிக்கும் அளவுக்கு, கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல என்று சொல்வது நாட்டுக்கு துரோகம் செய்வதாகுமா.
இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு நாம் காசுமீரின் வரலாற்றை சற்றே புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

காசுமீரின் அண்மைய வரலாற்றை அறிய,
பார்க்க;
http://www.indiatogether.org/peace/kashmir/intro.htm
http://www.telegraph.co.uk/news/1399992/A-brief-history-of-the-Kashmir-conflict.htm

1846 -ம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கும் சம்மு பகுதியின் மன்னர் ராசா குலாப் சிங்குக்கும் ஏற்பட்ட அமிர்தசரசு ஒப்பந்தப்படி கசுமீரை அதன் மக்களோடு சேர்த்து ஆங்கிலேயர்கள் அந்த மன்னருக்கு விற்றனர்.(கசுமீர் என்ன கடைச்சரக்கா அல்லது ஆங்கிலேயனின் அப்பன் வீட்டு சொத்தா விற்பதற்கும் வாங்குவதற்கும்.கசுமீர் மக்கள் என்ன ஆடு மாடுகளா அடைத்து வைத்த பட்டியோடு சேர்த்து விற்பதற்கு)ஆகவே டோங்கிரியா பரம்பரை காசுமீரின் ஆட்சி உரிமையை பெற்றதே மோசடியானது.

டோங்கிரியா மன்னர்கள் கசுமீரில் கொடுங்கோல் ஆட்சியே நடத்தி வந்தனர்.மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்த கசுமீர் முசுலிம்கள் அரசுப்பணி,காவல்துறை,ராணுவம் என்று எதிலுமே இடம் பெற விடாமல் வகுப்புவாத வெறி கொண்டு ஆட்சி நடத்தினர்.அவர்களது ஆட்சியின் கீழ் பசு மாட்டை தோலுக்காகவோ,இறைச்சிக்காகவோ அறுப்பது சாவுத்தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது.ஒரு மனித உயிரும் ஒரு மாட்டின் உயிரும் ஒன்றா என யாரும் கேள்வி கேட்க முடியாது.(2002 -ல் அரியானா மாநிலம் லச்சார் நகரத்தில் ஒரு பசு மாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித் இளைஞர்கள் (காந்தியாரின் கடவுளின் குழந்தைகள் தத்துவப்படி அவர்களும் இந்துக்கள்தான்) சங் பரிவார் காலிகளால் காவல்நிலையம் எதிரிலேயே அடித்தே கொல்லப்பட்ட நிகழ்வு உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.அந்த காலிகளுக்கும் டோங்கிரியா மன்னர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்க முடியுமா.
டோங்கிரியா மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக கசுமீர் மக்கள் போராடி வந்த நிலையில் 1947 ஆட்சி மாற்றம் நிகழ்கிறது.

ஆட்சி மாற்றம் தவிர்க்கவியலாமல் இந்தியா,பாகிசுதான் என்ற இரண்டு தனிநாடுகளை கொண்டுவந்தது.முசுலிம்கள் கூடுதலாக வாழும் பகுதிகள் பாகிசுதான் என்ற நாடாகவும் ஏனைய பகுதிகள் இந்தியா என்ற நாடாகவும் உருப்பெற்றன.அப்போது இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் 500-க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகள் இருந்தன.அவை இந்தியாவுடனோ அல்லது பாகிசுதானுடனோ இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் விருப்பமே முதன்மையான பங்கு வகித்தாலும் புவியியல் காரணங்களும் மக்களின் விருப்பமும் தவிர்க்க முடியாத பங்காற்றின.அவ்வாறே முசுலிம்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் பாகிசுதானோடு இணைந்தன.இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் இந்தியாவோடும் இணைந்தன.மன்னரின் விருப்பமும் மக்களின் விருப்பமும் முரண்படுமாயின் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி எந்த நாட்டுடன் இணைவது என்று முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.அதை இந்தியாவும் பாகிசுத்தானும் ஏற்றுகொண்டன.

அப்போது கசுமீர் டோங்கிரியா பரம்பரையின் கடைசி மன்னர் மகாராசா அரிசிங்கின் ஆட்சியின் கீழ் இருந்தது.கசுமீர் முசுலிம்கள் பெருவாரியாக வாழும் பகுதி என்பதால் தன்னோடு இணைய வேண்டும் என்று பாகிசுதான் வலியுறுத்தி வந்தது. பெரும்பான்மையான கசுமீர் மக்கள் கசுமீர் மன்னராட்சியிலிருந்து விடுபட்டு தனி நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர் .  ஆட்சியிலிருந்த இந்து மன்னரான அரிசிங் எந்த நாட்டுடனும் இணையாமல் காலம் கடத்தி வந்தார். இந்தியா கசுமீர் தன்னோடு இணைய வேண்டுமென உள்ளூர விரும்பியது.அதற்கான திரைமறைவு வேலைகளையும் செய்து வந்தது.இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு அரிசிங் தொடர்ந்து ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்கான எத்தணிப்புகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் பாகிசுதான் தனது வடமேற்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு ஆயுதங்கள் அளித்து கசுமீரை ஆக்ரமிக்க ஏவிவிட்டது.அவர்களோடு பாகிசுதான் ராணுவத்தினரும் ஆக்கிரமிப்பு போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.வலு குறைந்த படையே  கொண்டிருந்த அரிசிங் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவிடம்  ராணுவ உதவி கோரினார்.அரிசிங்கின் இக்கட்டான நிலையை பயன்படுத்திக் கொண்ட இந்தியா அவர் இந்தியாவுடன் கசுமீரை இணைப்பதாக ஒப்பந்தம் போட்டால் மட்டுமே படைகளை அனுப்பமுடியும் என்று அழுத்தம் கொடுத்தது.வேறு வழி ஏதுமின்றி அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் 26 -10-1947-ல் கையெழுத்திட்டார்.இந்தியப்படைகள் கசுமீரில் போய் இறங்கின.முதல் இந்தியா-பாகிசுதான் போர் வெடித்தது.

இப்படித்தான் கசுமீர் இந்தியாவுடன் இணைந்தது.தெற்காசியாவின் புற்று நோயான கசுமீர் பிரச்னை வேர்விட்டது.

போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில் போரை நிறுத்தி கசுமீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு இந்தியா 01 -01 -1948  அன்று ஐக்கிய நாடுகள் அவையில் முறையிட்டது. ஐ.நா.வின் சமாதான முயற்சியின் பலனாக 01 -01 -1949 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.ஐ.நா.வின் சமாதான ஏற்பாடு பின்வரும் அம்சங்களை கொண்டிருந்தது.

1. கசுமீர் மக்களுக்கு தன்னிலை தேர்வுரிமை (Right to self -determination) உண்டு.

2. போரை நிறுத்திக்கொண்டு இந்தியாவும் பாகிசுதானும் கசுமீரிலிருந்து படைகளை   விலக்கிக் கொள்ளவேண்டும்.

3.போரை நிறுத்தும்போது இந்திய,பாக்.படைகள் நிலைகொண்டிருந்த பகுதிகள் அந்தந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

4.படைகள் விலக்கப்பட்டு அமைதி திரும்பியபின் கசுமீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கசுமீர் இந்தியாவுடன் இணைவதா,பாகிசுதானுடன் இணைவதா,இந்த இரண்டுமின்றி கசுமீர் ஒரு தனிநாடாக இருப்பதா என்பது தீர்மானிக்கப் படவேண்டும்.

இந்த அம்சங்கள் அனைத்தையும் இந்தியாவும் பாகிசுதானும் ஏற்று கொண்டு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.ஆனால் இன்று வரை இந்தியாவும் பாக்-கும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் கசுமீர் மக்களுக்கு துரோகம் செய்து கசுமீரை தங்கள் ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க தகிடுதத்தங்களை செய்து வருகின்றன.

பாக்.தனது கட்டுப்பாட்டில் உள்ள கசுமீர் பகுதியை ''ஆசாத் கசுமீர்''(விடுதலை பெற்ற கசுமீர்)என அறிவித்துள்ளது.பாக்.ன் அரசியல் சட்டப்படி கசுமீர் அதன் மாநிலங்களில் ஒன்றல்ல என்றாலும் தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஆக்கிரமிப்பை தொடர்கிறது.அதன் மூலம் பொது வாக்கெடுப்புக்கு தடையாக இருக்கிறது.

போர் முடிவுற்றபின் சிறிது காலம் வாக்கெடுப்புக்கு அணியமாக இருப்பது போலும் வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யபோவது போலும் பம்மாத்து காட்டிவந்த இந்தியா நாளடைவில் கசுமீரை தன்னுடன் வைத்திருப்பதற்கான மோசடிகளை செய்யத்துவங்கியது.தனது அரசியல் சட்டம் 370-வது பிரிவின் மூலம் காசுமீருக்கு சிறப்பு நிலை வழங்கியுள்ளது.அதன்படி

1.கசுமீர் தனியொரு நாடு போன்று தனித்த அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றை கொண்டு இயங்கும்.

2.அந்த அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்ற அரசியல் அமைப்பு அவை தேர்ந்தெடுக்கப்படும்.

3.காசுமீரின் ஆட்சித் தலைவர் முதன்மர்(premier) என்றே அழைக்கப்படுவார்.

4.கசுமீர் தனித்த அரசியல் சட்டம் கொண்டது என்பதால் அது பிற இந்திய மாநிலங்களை போன்றதல்ல.எனவே கசுமீரில் அந்நாட்டை சேராத இந்தியர்கள் யாரும் சொத்து வாங்க முடியாது.

5.வெளியுறவு,பாதுகாப்பு.நாணயம் ஆகிய துறைகள் இந்திய அரசு வசம் இருக்கும்.நாட்டு நிர்வாகம்,நீதி பரிபாலனம் என அரசு நிர்வாகம் முழுவதும் கசுமீர் அரசு வசம் இருக்கும்.

பொது வாக்கெடுப்பு உள்ளிட்டு அனைத்து வாக்குறுதிகளையும் (பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாது என்பதை தவிர) இந்தியா காற்றில் பறக்க விட்டு விட்டது. இந்தியா கசுமீரில் துப்பாக்கியின் நிழலில் நடத்தும் தேர்தல்களை பொது வாக்கெடுப்புக்கு இணையானது என மாய்மாலம் செய்து வருகிறது. 1953- ல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் ஆளுகை எல்லைக்குள்  (jurisdiction limit)கசுமீரும் அடங்கும் என அறிவித்ததின் மூலம் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றுதான் கசுமீர் என மறைமுகமாக அறிவித்தது.இந்த துரோகங்களின் தொடர்ச்சியாகத்தான் 1957-முதல் கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவும் அடாவடியாகவும் கூறுகின்றனர்.

இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற நியாய உள்ளம் கொண்ட எவரும் அருந்ததி ராயின் கூற்றை ஏற்கவே செய்வர்.அது மட்டுமல்ல கசுமீர் மக்களின் தன்னிலை தேர்வுரிமைக்கு குரல் கொடுக்க வேண்டிய கடமை மக்கள்நாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் உள்ளது என்பதை  உணர்ந்து வினையாற்றிய அருந்ததி ராயை வாழ்த்தவே செய்வர்.அந்த வகையில் அருந்ததி ராயின் கருத்தில் தவறேதுமில்லை என துணிவுடன் கருத்துரைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை பாராட்டுகிறோம்.

''புறநானூற்று தாய்மார்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க வீரத்தாயே,அருந்ததி ராயே உன்னை வாழ்த்துகிறோம்''