Friday, November 5, 2010

கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல. சரியாக சொன்னாய் தாயே,அருந்ததி ராயே.ந்தியாவும் வேண்டாம்,பாகிசுத்தானும் வேண்டாம்.விடுதலை பெற்ற கசுமீரே எங்களுக்கு வேண்டும் என போராடும் கசுமீரிகள்.


அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை என கூறியதையடுத்து அவர் மீது பாய்ந்து குதற தாவிக் குதிக்கிறார்கள் நாட்டுபற்றாளர்கள் என்று நாட்டை ஏமாற்றிகொண்டிருக்கும் சங் பரிவார பாசிச கும்பலும்,ஆளும் காங்கிரசு கும்பலும்.

அருந்ததி ராய் மீது நாட்டு துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம் என முதலில் செய்திகளை கசியவிட்ட காங்கிரசு கும்பல் இப்போது பதுங்கி பின்வாங்குகிறது.(இந்திய குற்றவியல் சட்டம் 124 -அ ,பிரிவின் கீழ் வரும் நாட்டு துரோக குற்றத்திற்கு உச்சபட்சமாக வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கலாம்).விடுதலை கோரி போராடும் கசுமீர் மக்களோடு அமைதிப் பேச்சு நடத்த தூதுக்குழுவை அனுப்பிவிட்டு இந்தப்பக்கம் கசுமீர் பற்றிய ஒரு உண்மையை சொன்னதற்காக அருந்ததி ராய் மீது வழக்கு போட்டால் தனது அமைதிப்பேச்சு நாடகம் அம்பலமாகிவிடும் என்பதால் அடக்கி வாசிக்கிறது காங்கிரசு.

பாசிச சங் பரிவாரோ தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் அண்ணன் சண்டப்பிரசண்டன்தான் என்ற பழமொழிகேற்ப தொடை தட்டி தாவிக் குதிக்கிறது. அருந்ததி ராய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைய அரசை நெருக்குகிறது.ஓவியர் உசேனை நாட்டை விட்டு விரட்டியடித்தது போல் அருந்ததி ராயையும் விரட்டியடிப்போம் என வெறியுடன் உறுமுகிறது பச்ரங் தள்.ப.ச.க.வின் மகளிர் அணியினர் முன்னறிவிப்போ,காவல் துறையின் அனுமதியோ இன்றி அருந்ததி ராயின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூடி அவர் மீது வசைமாரி பொழிந்ததோடு அவரது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான அருந்ததி ராயின் வீடு.

வாழ்நாள் தண்டனை விதிக்கும் அளவுக்கு,நாட்டை விட்டே விரட்டியடிக்கும் அளவுக்கு, கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல என்று சொல்வது நாட்டுக்கு துரோகம் செய்வதாகுமா.
இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு நாம் காசுமீரின் வரலாற்றை சற்றே புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

காசுமீரின் அண்மைய வரலாற்றை அறிய,
பார்க்க;
http://www.indiatogether.org/peace/kashmir/intro.htm
http://www.telegraph.co.uk/news/1399992/A-brief-history-of-the-Kashmir-conflict.htm

1846 -ம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கும் சம்மு பகுதியின் மன்னர் ராசா குலாப் சிங்குக்கும் ஏற்பட்ட அமிர்தசரசு ஒப்பந்தப்படி கசுமீரை அதன் மக்களோடு சேர்த்து ஆங்கிலேயர்கள் அந்த மன்னருக்கு விற்றனர்.(கசுமீர் என்ன கடைச்சரக்கா அல்லது ஆங்கிலேயனின் அப்பன் வீட்டு சொத்தா விற்பதற்கும் வாங்குவதற்கும்.கசுமீர் மக்கள் என்ன ஆடு மாடுகளா அடைத்து வைத்த பட்டியோடு சேர்த்து விற்பதற்கு)ஆகவே டோங்கிரியா பரம்பரை காசுமீரின் ஆட்சி உரிமையை பெற்றதே மோசடியானது.

டோங்கிரியா மன்னர்கள் கசுமீரில் கொடுங்கோல் ஆட்சியே நடத்தி வந்தனர்.மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்த கசுமீர் முசுலிம்கள் அரசுப்பணி,காவல்துறை,ராணுவம் என்று எதிலுமே இடம் பெற விடாமல் வகுப்புவாத வெறி கொண்டு ஆட்சி நடத்தினர்.அவர்களது ஆட்சியின் கீழ் பசு மாட்டை தோலுக்காகவோ,இறைச்சிக்காகவோ அறுப்பது சாவுத்தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது.ஒரு மனித உயிரும் ஒரு மாட்டின் உயிரும் ஒன்றா என யாரும் கேள்வி கேட்க முடியாது.(2002 -ல் அரியானா மாநிலம் லச்சார் நகரத்தில் ஒரு பசு மாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித் இளைஞர்கள் (காந்தியாரின் கடவுளின் குழந்தைகள் தத்துவப்படி அவர்களும் இந்துக்கள்தான்) சங் பரிவார் காலிகளால் காவல்நிலையம் எதிரிலேயே அடித்தே கொல்லப்பட்ட நிகழ்வு உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.அந்த காலிகளுக்கும் டோங்கிரியா மன்னர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்க முடியுமா.
டோங்கிரியா மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக கசுமீர் மக்கள் போராடி வந்த நிலையில் 1947 ஆட்சி மாற்றம் நிகழ்கிறது.

ஆட்சி மாற்றம் தவிர்க்கவியலாமல் இந்தியா,பாகிசுதான் என்ற இரண்டு தனிநாடுகளை கொண்டுவந்தது.முசுலிம்கள் கூடுதலாக வாழும் பகுதிகள் பாகிசுதான் என்ற நாடாகவும் ஏனைய பகுதிகள் இந்தியா என்ற நாடாகவும் உருப்பெற்றன.அப்போது இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் 500-க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகள் இருந்தன.அவை இந்தியாவுடனோ அல்லது பாகிசுதானுடனோ இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் விருப்பமே முதன்மையான பங்கு வகித்தாலும் புவியியல் காரணங்களும் மக்களின் விருப்பமும் தவிர்க்க முடியாத பங்காற்றின.அவ்வாறே முசுலிம்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் பாகிசுதானோடு இணைந்தன.இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் இந்தியாவோடும் இணைந்தன.மன்னரின் விருப்பமும் மக்களின் விருப்பமும் முரண்படுமாயின் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி எந்த நாட்டுடன் இணைவது என்று முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.அதை இந்தியாவும் பாகிசுத்தானும் ஏற்றுகொண்டன.

அப்போது கசுமீர் டோங்கிரியா பரம்பரையின் கடைசி மன்னர் மகாராசா அரிசிங்கின் ஆட்சியின் கீழ் இருந்தது.கசுமீர் முசுலிம்கள் பெருவாரியாக வாழும் பகுதி என்பதால் தன்னோடு இணைய வேண்டும் என்று பாகிசுதான் வலியுறுத்தி வந்தது. பெரும்பான்மையான கசுமீர் மக்கள் கசுமீர் மன்னராட்சியிலிருந்து விடுபட்டு தனி நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர் .  ஆட்சியிலிருந்த இந்து மன்னரான அரிசிங் எந்த நாட்டுடனும் இணையாமல் காலம் கடத்தி வந்தார். இந்தியா கசுமீர் தன்னோடு இணைய வேண்டுமென உள்ளூர விரும்பியது.அதற்கான திரைமறைவு வேலைகளையும் செய்து வந்தது.இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு அரிசிங் தொடர்ந்து ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்கான எத்தணிப்புகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் பாகிசுதான் தனது வடமேற்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு ஆயுதங்கள் அளித்து கசுமீரை ஆக்ரமிக்க ஏவிவிட்டது.அவர்களோடு பாகிசுதான் ராணுவத்தினரும் ஆக்கிரமிப்பு போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.வலு குறைந்த படையே  கொண்டிருந்த அரிசிங் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவிடம்  ராணுவ உதவி கோரினார்.அரிசிங்கின் இக்கட்டான நிலையை பயன்படுத்திக் கொண்ட இந்தியா அவர் இந்தியாவுடன் கசுமீரை இணைப்பதாக ஒப்பந்தம் போட்டால் மட்டுமே படைகளை அனுப்பமுடியும் என்று அழுத்தம் கொடுத்தது.வேறு வழி ஏதுமின்றி அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் 26 -10-1947-ல் கையெழுத்திட்டார்.இந்தியப்படைகள் கசுமீரில் போய் இறங்கின.முதல் இந்தியா-பாகிசுதான் போர் வெடித்தது.

இப்படித்தான் கசுமீர் இந்தியாவுடன் இணைந்தது.தெற்காசியாவின் புற்று நோயான கசுமீர் பிரச்னை வேர்விட்டது.

போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில் போரை நிறுத்தி கசுமீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு இந்தியா 01 -01 -1948  அன்று ஐக்கிய நாடுகள் அவையில் முறையிட்டது. ஐ.நா.வின் சமாதான முயற்சியின் பலனாக 01 -01 -1949 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.ஐ.நா.வின் சமாதான ஏற்பாடு பின்வரும் அம்சங்களை கொண்டிருந்தது.

1. கசுமீர் மக்களுக்கு தன்னிலை தேர்வுரிமை (Right to self -determination) உண்டு.

2. போரை நிறுத்திக்கொண்டு இந்தியாவும் பாகிசுதானும் கசுமீரிலிருந்து படைகளை   விலக்கிக் கொள்ளவேண்டும்.

3.போரை நிறுத்தும்போது இந்திய,பாக்.படைகள் நிலைகொண்டிருந்த பகுதிகள் அந்தந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

4.படைகள் விலக்கப்பட்டு அமைதி திரும்பியபின் கசுமீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கசுமீர் இந்தியாவுடன் இணைவதா,பாகிசுதானுடன் இணைவதா,இந்த இரண்டுமின்றி கசுமீர் ஒரு தனிநாடாக இருப்பதா என்பது தீர்மானிக்கப் படவேண்டும்.

இந்த அம்சங்கள் அனைத்தையும் இந்தியாவும் பாகிசுதானும் ஏற்று கொண்டு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.ஆனால் இன்று வரை இந்தியாவும் பாக்-கும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் கசுமீர் மக்களுக்கு துரோகம் செய்து கசுமீரை தங்கள் ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க தகிடுதத்தங்களை செய்து வருகின்றன.

பாக்.தனது கட்டுப்பாட்டில் உள்ள கசுமீர் பகுதியை ''ஆசாத் கசுமீர்''(விடுதலை பெற்ற கசுமீர்)என அறிவித்துள்ளது.பாக்.ன் அரசியல் சட்டப்படி கசுமீர் அதன் மாநிலங்களில் ஒன்றல்ல என்றாலும் தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஆக்கிரமிப்பை தொடர்கிறது.அதன் மூலம் பொது வாக்கெடுப்புக்கு தடையாக இருக்கிறது.

போர் முடிவுற்றபின் சிறிது காலம் வாக்கெடுப்புக்கு அணியமாக இருப்பது போலும் வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யபோவது போலும் பம்மாத்து காட்டிவந்த இந்தியா நாளடைவில் கசுமீரை தன்னுடன் வைத்திருப்பதற்கான மோசடிகளை செய்யத்துவங்கியது.தனது அரசியல் சட்டம் 370-வது பிரிவின் மூலம் காசுமீருக்கு சிறப்பு நிலை வழங்கியுள்ளது.அதன்படி

1.கசுமீர் தனியொரு நாடு போன்று தனித்த அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றை கொண்டு இயங்கும்.

2.அந்த அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்ற அரசியல் அமைப்பு அவை தேர்ந்தெடுக்கப்படும்.

3.காசுமீரின் ஆட்சித் தலைவர் முதன்மர்(premier) என்றே அழைக்கப்படுவார்.

4.கசுமீர் தனித்த அரசியல் சட்டம் கொண்டது என்பதால் அது பிற இந்திய மாநிலங்களை போன்றதல்ல.எனவே கசுமீரில் அந்நாட்டை சேராத இந்தியர்கள் யாரும் சொத்து வாங்க முடியாது.

5.வெளியுறவு,பாதுகாப்பு.நாணயம் ஆகிய துறைகள் இந்திய அரசு வசம் இருக்கும்.நாட்டு நிர்வாகம்,நீதி பரிபாலனம் என அரசு நிர்வாகம் முழுவதும் கசுமீர் அரசு வசம் இருக்கும்.

பொது வாக்கெடுப்பு உள்ளிட்டு அனைத்து வாக்குறுதிகளையும் (பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாது என்பதை தவிர) இந்தியா காற்றில் பறக்க விட்டு விட்டது. இந்தியா கசுமீரில் துப்பாக்கியின் நிழலில் நடத்தும் தேர்தல்களை பொது வாக்கெடுப்புக்கு இணையானது என மாய்மாலம் செய்து வருகிறது. 1953- ல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் ஆளுகை எல்லைக்குள்  (jurisdiction limit)கசுமீரும் அடங்கும் என அறிவித்ததின் மூலம் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றுதான் கசுமீர் என மறைமுகமாக அறிவித்தது.இந்த துரோகங்களின் தொடர்ச்சியாகத்தான் 1957-முதல் கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவும் அடாவடியாகவும் கூறுகின்றனர்.

இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற நியாய உள்ளம் கொண்ட எவரும் அருந்ததி ராயின் கூற்றை ஏற்கவே செய்வர்.அது மட்டுமல்ல கசுமீர் மக்களின் தன்னிலை தேர்வுரிமைக்கு குரல் கொடுக்க வேண்டிய கடமை மக்கள்நாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் உள்ளது என்பதை  உணர்ந்து வினையாற்றிய அருந்ததி ராயை வாழ்த்தவே செய்வர்.அந்த வகையில் அருந்ததி ராயின் கருத்தில் தவறேதுமில்லை என துணிவுடன் கருத்துரைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை பாராட்டுகிறோம்.

''புறநானூற்று தாய்மார்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க வீரத்தாயே,அருந்ததி ராயே உன்னை வாழ்த்துகிறோம்''

1 comment:

  1. unmai kpothumea kasakum india ahimsaiyai verumbum nadu ithai othu kollavital miltray thubakki munail sollapadukirathu

    ReplyDelete