Saturday, November 13, 2010

கோவை குழந்தைகள் கொலையும் முந்தைய கொலை நிகழ்வொன்றும்

கோவையில் இரண்டு பள்ளிகுழந்தைகள்  கடத்தி கொலை செய்யப்பட்டநிகழ்வு நாம் வாழ்நாளில் சந்தித்த மறக்க முடியாத கொடூரங்களில் ஒன்றாக உள்ளது. .இந்த குழந்தைகள் கொலைக்காக வருந்தாதவர்கள் எவரும் இருக்க முடியாது.  இந்த கொலைகள் கோவை பகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

70 களின் இறுதியில் நான் பள்ளிச்சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த இது போன்ற ஒரு நிகழ்வை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் நாற்பது வயதை கடந்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளவும் இங்கு பதிவு செய்கிறேன்.


அப்போது தில்லியில் இரண்டு பள்ளி மாணவிகளை பணம் பறிக்கும் நோக்கில் கடத்தி கொலை செய்து விட்டனர் பில்லா, ரங்கா என்ற இரு கயவர்கள்.கொலை நடந்து ஒரு சில மாதங்களில் கொலையாளிகளை காவல் துறையினர்  கைது செய்து விட்டனர்.அது பற்றிய வழக்கு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 


எங்கள் வீட்டில் நாள்தோறும் தினமணி நாளிதழ்தான் வாங்குவார்கள்.அதுதான் ''தரமான''நாளிதழ் என்பதில் எங்கள் தந்தைக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. நாங்கள் 'கன்னித்தீவிற்காகவும்' எந்த எந்த திரையரங்குகளில் வசந்த மாளிகையும் நாளை நமதேவும் எத்தனாவது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் செய்திகளுக்காகவும் தினத்தந்தி வாங்க வேண்டும் என எவ்வளவுதான் போராடினாலும் எங்கள் தந்தையின் தரத்தின் மீதான பற்றுக்கு முன் நாங்கள் தோற்று போனோம்.எனவே நாள்தோறும் சற்று தொலைவில் இருந்த முடி திருத்தும் கடைக்கு சென்று தினத்தந்தி படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
அந்த பழக்கம் சற்று பெரியவன் ஆனபோது அந்த கடைக்கு அருகில் இருந்த ''அறிஞர் அண்ணா படிப்பகத்துக்கு''சென்று முரசொலி படிப்பதும் அங்கு இருக்கும் பெரியவர்கள் பேசுவதை கேட்பதும் எதிர் வரிசையில் இருந்த ''சிவாசி ரசிகர் மன்றத்துக்கு''(அங்கும் செய்தியேடுகள் இருக்கும்.பெயர் நினைவில்லை) போய் அங்கு நடக்கும் உரையாடல்களை கேட்பதுமாக நீண்டது.


பில்லா,ரங்கா செய்த கொடூர கொலைகள் பற்றி இப்போது கோவை கொலைகளை தொடர்ந்து மக்களிடம் எழுந்துள்ள சினத்திற்கு எள்ளளவும் குறையாத அதிர்ச்சியும் ,சினமும் இந்தியா முழுவதும் ஏற்பட்டது. பலியான அந்த இளம் குருத்துகளுக்காக நாடே வருந்தி கண்ணீர் வடித்தது என்று கூட சொல்லலாம். மிகையாகாது. படிப்பகத்திலும்.மன்றத்திலும் இருக்கும் அண்ணன்கள் கண்ணில்  பில்லாவும் ரங்காவும் தென்பட்டார்கள் என்றால் அவர்களை அடித்தே கொன்று விடுவார்கள் என்று எனக்கு தோன்றும்.அந்த அளவுக்கு அந்த வழக்கு பற்றிய செய்திகளை படிக்கும் போதும்,படித்து முடித்த பின்னரும் கடும் சினம் தெறிக்க பேசுவார்கள்.


வழக்கு தொடர்ந்து நடைபெற்று அந்த கயவர்கள் இருவருக்கும் சாவு தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.


அதன் பின் தமிழகத்தில் நடந்ததுதான் குரூரமான நகைச்சுவை. பில்லா,ரங்கா என்ற அந்த இரு கயவர்களுக்கும் கிடைத்திருந்த எதிர் மறை புகழையும் காசாக்கி கொள்ளும் கயமையில் இறங்கினர் ஆபாசத்தையே வணிக பொருளாக கொண்ட திரைத்துறை கழிசடைகள்.ரசினிகாந்த் கதாநாயகனாக நடிக்க ''பில்லா''என்றும் ''ரங்கா''என்றும் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து கயவர்கள் மீது மக்களுக்கு இயல்பாக ஏற்படும் ஆத்திர உணர்வை மழுங்கடித்தன.இன்றோ                        ''பில்லா ரங்கா பாசாதான்''பிஸ்டல் பேசும் பேசாதான்''
என்று ஏதோ விடுதலை போராட்ட வீரர்களின் பெயர் போல் பில்லா,ரங்கா என்ற அயோக்கியர்களின் பெயர் பாடப்படுகிறது.


ஊடகங்கள் எந்த அளவுக்கு மக்களின் இயல்பான உணர்வுகளை கட்டுபடுத்தவும்.தாங்கள் விரும்பும் திசையில் மக்களின் உணர்வலைகளை செலுத்தவும் வல்லமை பெற்றுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
யார் கண்டது.ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னால் கோவை கொலையாளி மோகன்ராசு பெயரிலும் திரைப்படம் வரக்கூடும்.
      ''மோகன ராசா,நீயே உலகின் ராசா''என்பது போன்று எவனாவது ஒரு காரியகிறுக்கன் அதற்கும் பாட்டெழுதி தரலாம்.


தமிழ்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது.மோகன்ராசு போன்ற கயவர்கள் மக்களுக்கு எந்த விதமான ஊறும் விளைவித்து விடாமலும் அத்தகைய குற்றவாளிகளை போற்றுகின்ற பண்பாட்டு சீரழிவை தமிழ் சமூகத்தில் நுழைய விடாமலும் காக்கின்ற பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.       

1 comment: