Sunday, November 14, 2010

காங்கிரசுடன் கூட்டணி;செயலலிதாவின் கனவு பலிக்குமா.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அ.தி.மு.க.தலைவி செயலலிதா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் தனது ஆவலை மறைமுகமாக வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் தலைமுறை அலைபேசி பணிக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1 .76 இலட்சம் கோடி உருவாக்கள் அரசுக்கு இழப்பு ஏற்பட மைய அமைச்சர் அ.ராசா காரணமாக இருந்திருக்கிறார் என்று தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.இந்த நிலையில் டைம்சு நவ் என்ற ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மைய அமைச்சர் அ.ராசாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதன்மர்.மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அப்படி ராசாவை நீக்கும்பட்சத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தி.மு.க.மைய அரசுக்குஅளித்து வரும் ஆதரவை விலக்கி கொண்டால் அந்த 18 உறுப்பினர் இழப்பை தான் ஈடு கட்டுவதாகவும் உறுதி அளித்துள்ளார் செயா.தனது ஆதரவுக்கு நிபந்தனை எதுவும் விதிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.


அ.தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர் வலு ஒன்பதுதான்.மீதி ஒன்பது பேரின் ஆதரவை எப்படி திரட்டுவார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.குதிரை பேரம்தான் அதற்கான வழியென்றால் அந்த வணிகத்தில் காங்கிரசு கும்பலும் கில்லாடிகள் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்,அல்லது கருணாதியின் தூக்கத்தை கெடுப்பதற்காக ,யாரந்த ஒன்பது கருப்பு ஆடுகள்.என்று தலையை பிய்த்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் இப்படி கூறியிருக்கலாம்.


இத்தகைய பெரும் ஊழலை செய்த மைய அமைச்சர் அ.ராசாவை பதவி நீக்கம் செய்வதன் மூலம் அரசியல் நேர்மை நிலை நாட்டப்பட வேண்டும் என்கிறார் செயா.ஊழல் குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட தகுதியற்ற நிலையில் இருந்தபோதும் 2001 -ல் முதல்வர் பதவி ஏற்க தயங்காத செயா.அரசியல் தூய்மை பற்றி பேசுகிறார்.அ.ராசா தார்மீக பொறுப்பேற்று தானாக பதவி விலகுவார் என எதிர்பார்க்க வேண்டாம்,அவரை பதவி நீக்கம் செய்யுங்கள் என மன்மோகனுக்கு ஆலோசனை சொல்லும் செயலலிதாதான் உச்ச நீதிமன்றம் பதவியை விட்டு போ என விரட்டியடிக்கும் வரை முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார்.எனவே அரசியல் தூய்மை, ஊழல் பற்றி பேசுவதெல்லாம் மேம்போக்கானது.அவரது உண்மையான நோக்கம் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதுதான்.காங்கிரசு கூட்டணிதான் அவரது நோக்கம் என்பதை தமிழக சட்டமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற விவாதம் ஒன்று தெளிவாக்கியுள்ளது.காங்கிரசு அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு கதவை சாத்திவிட்டதாக கருணா தெரிவித்தபோது அ.தி மு.க சட்டமன்ற துணைத்தலைவர் ஒ.பன்னீர்செல்வம் கதவு எப்போது திறக்கும் என்று தங்களுக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.


செயலலிதா எப்படியாவது தமிழக முதல்வர் பதவியை பிடிக்கவேண்டும் என்ற வெறி கொண்ட நிலையில் இருப்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. இல்லையென்றால் சோனியா அந்நிய நாட்டவர்,இந்தியாவின் முதன்மராக தகுதியற்றவர் என்றெல்லாம் ஆறு ஆண்டுகளுக்கு முன் தூற்றியவர் இப்போது அதே சோனியாவின் கண்ணசைவுக்கு காத்திருக்கும் மைய அரசுக்கு ஆதரவு தந்து காங்கிரசுடன் கூட்டணி கட்ட துடிப்பாரா.


செயாவின் இன்றைய நிலையை பார்க்கும்போது நமக்கு நாவலர் நெடுஞ்செழியனின் ''அரும் பெரும் பொன்மொழி''ஒன்று நினைவுக்கு வருகிறது.தி.மு.க.வை விட்டு எம்.சி.ஆர்.ஐ இடைநீக்கம் செய்து கட்சியை விட்டு வெளியேற்றியதில் முதன்மையான பங்கு வகித்த நாவலர் பின்னாளில், பெரும்பாலான தி.மு.க.தலைவர்கள் செய்தது போன்று, தி.மு.க.வை விட்டு விலகி எம்.சி ஆரிடம் போய் சேர்ந்தார்.மற்றவர்கள் விலகியதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட கருணா நாவலர் விலகிய போது கடும் எதிர் வினையாற்றினார். மற்றவர்களுடன் சேர்ந்து புரூட்டசும் தன்னை கத்தியால் குத்தியபோது சீசர் ''நீயுமா புரூட்டசு''என்று கேட்டதை எடுத்துகாட்டி ''நீங்களுமா நாவலரே''என்று கேட்டு,கேட்டு அவரை தொடர்ந்து வறுத்தெடுத்து கொண்டிருந்தார்.சிறிது காலம் போன பின்னால் ஒரு செய்தியாளர் சந்திப்பில் மனம் திறநது பேசிய நாவலர் பல ஆண்டுகள் அமைச்சராக,ஆள் அம்பு.பதவி என செல்வாக்குடன் இருந்துவிட்டு பதவி இல்லாமல் தம்மை போன்றவர்களால் இருக்க முடியாது என்று சொல்லி அதற்கு ஒரு எடுத்துக்காட்டும் சொன்னார்.''சிரங்கு வந்தவன் சொரியாமல் இருக்க முடியாது''என்றார்.அப்படித்தான் முதல்வர் பதவியில் இல்லாத ஒவ்வொரு நாளும் ,ஏன்,ஒவ்வொரு வினாடியும் செயலலிதாவுக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது.அதனால்தான் எப்பாடு பட்டாவது முதல்வர் பதவியை பிடிக்க முனைகிறார்.


ஆனால் தற்போதைய காங்கிரசு செயாவிடம் அவ்வளவு எளிதில் ஏமாந்துவிடும் என்று சொல்வதற்கில்லை.ஒரு 13 மாத காலம் செயாவின் ஆதரவில் நடுவணில் ஆட்சி நடத்திய வாச்பாயி பட்ட சிரமங்களை நாடே பார்த்தது.இதையே பின்னாளில் வாச்பாயி மிகவும் உருக்கமாக  ''எனது வாழ்நாளில் மிகவும் துயரமான காலம் செயாவின் ஆதரவில் ஆட்சி நடத்திய காலம்தான்'' என்று மனம் நொந்து சொன்னார்.இது காங்கிரசுக்கும் தெரியும்தானே.


1999 -நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கட்டி போட்டியிட்ட செயலலிதா சோனியாவுடன் ஒரே மேடையில் பேச மறுத்து அவரை அவமானப்படுத்தியதை சோனியா அவ்வளவு எளிதில் மறந்து விடுவாரா.ராசீவ் கொலைக்காக பதினெட்டு ஆண்டுகள் வஞ்சம் வைத்து காத்திருந்து ஒட்டு மொத்த ஈழ தமிழினத்தையே பழி தீர்த்த சோனியா செயாவை மறப்போம் மன்னிப்போம் என ஏற்றுகொள்வார் என சொல்ல முடியாது.


மேலும் தமிழகத்தில் பணவலு,ஆள்வலு,அச்சு ஊடகவலு,தொலைக்காட்சி ஊடக வலு,என அனைத்திலும் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வே முன்னணியில் உள்ளது.எனவே இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயல காங்கிரசு ஒன்றும் ஏமாளிகளின் கூடாரமல்ல.பெரும்பான்மை வலு இல்லாத நிலையில் காங்கிரசு ஆதரவில் ஆட்சி நடத்திக்கொண்டு  ஆட்சியில் பங்கு தராமல் கருணா அவமானப்படுத்தினாலும் மைய ஆட்சியை கருத்தில் கொண்டு சகித்துக்கொண்டு தி.மு.க. கூட்டணியில் தொடருவதையே காங்கிரசு தெரிவு செய்யும்.


பாவம் செயா.சொந்தவலுவில்.தமிழக அரசியலில் அவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லாத பொதுவுடைமை கட்சிகள்,வைகோ,முதலானவர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டியதுதான்.


பி.கு.
இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது அ.ராசா மைய அமைச்சர் பதவியை விட்டு தாமாகவே முன் வந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டி ராசா விலகுவதாக தி.மு.க விளக்கம் அளித்திருந்தாலும் எதிர்கட்சிகள் கொடுத்த அழுத்தமும் கூட்டணி சித்து விளையாட்டும் இதில் முதன்மையான பங்கு வகிக்கின்றன.காங்கிரசு கதவு அ.தி.மு.க.வுக்கு திறக்க எந்த வகையிலும் வாய்ப்பு இருக்க கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக உள்ளார் என்பதையே பதவி விலகல் காட்டுகிறது.  1 comment:

  1. முற்றிலும் உண்மை...

    ReplyDelete