Saturday, November 27, 2010

எது நாட்டுப்பற்று?

''நாட்டுப்பற்று''என்பதற்கான வரையறை இந்தியாவில் மட்டும் மற்ற உலக நாடுகளை போல் அல்லாமல் சற்று வேறுபட்ட முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.இந்திய நாட்டின் புவியியல் வரைபடத்தை ஒரு பெண்ணுருவில் வடித்து அதனை இந்தியத்தாய் (பாரத் மாதா) என்று கொண்டாடுவதும்,அந்த தாயை ஒரு தெய்வமாக கருதி வழிபடுவதும்,தாயகமே உன்னை வணங்குகிறோம் (வந்தே மாதரம் )என்று பாட்டு பாடுவதும் நாட்டுப்பற்றின் அடையாளமாக கருதப்படுகின்றன.

விடுதலை போராட்ட காலத்திலிருந்தே நாட்டுப்பற்று என்பது இப்படித்தான் வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும் நாட்டுப்பண்,நாட்டுக்கொடி முதலான நாட்டு அடையாளங்களை போற்றி வணங்குவதும் நாட்டுப்பற்றாக கருதப்படுகிறது. 

(இதில் என்ன வெட்ககேடு என்றால் நாட்டுப்பண்ணாக இந்திய ஆளும் கும்பல் தேர்ந்துடுத்துள்ள ''சன கன மன அதி''பாடல் 1910-ல் அடிமை இந்தியாவை பார்வையிட வந்த ஆக்கிரமிப்பாளன் இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் சார்ச்சை வரவேற்று
ரவீந்திரநாத் தாகூர் எழுதியது.இதை இன்றளவும் பாடிக்கொண்டிருப்பது அடிமைத்தனத்தை நேசிப்பதாகாதா.விடுதலைக்காக பாடுபட்டு தியாகங்கள் பல புரிந்த,வெள்ளையனின் துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் மாலையாக ஏந்திய,அவனது குண்டாந்தடிகளை வெறும் தலைகளால் சந்தித்த,விடுதலை போராட்டவீரர்களை இதை விட கேவலமாக அவமதிக்க முடியுமா.அந்த வகையில் இந்திய ராணுவம் அல்லாமா இக்பாலின் ''சாரே சகான்சே அச்சா இந்துசுதான் அமாரா''பாடலை அதன் நிகழ்ச்சிகளில் பாடி இசைப்பது பாராட்டுக்குரியது.)

நாட்டுப்பற்று மேற்கூறிய அம்சங்களில் இருந்து மேலும் முன்னேறி இந்திய அணி  பங்கேற்கும் பன்னாட்டு மட்டைபந்து (cricket) போட்டிகளின்போது விளையாட்டு அரங்குகளில் கூச்சலிடுவதும்,நாட்டுக்கொடியை அசைப்பதும்,இந்திய வீரர்களை பற்றி ஏதாவது ஒரு உளறலை அட்டையில் எழுதி தொலைகாட்சி படப்பிடிப்பு கருவியின் ஆட்டுவதுமாக முன்னேறியுள்ளது.

மேற்கூறிய நடவடிக்கைகளை செய்பவர்கள் அனைவரும் நாட்டுபற்றாளர்கள் என்ற மூடத்தனமான நம்பிக்கையில் மக்களை ஆழ்த்துவதில் ஆளும் வர்க்கங்கள் மிகுதியாக வெற்றியும் பெற்றுள்ளார்கள்.ஊரை அடித்து உலையில் போடும் ஊழல் புரியும் ஆட்சியாளர்கள்,வாங்குகின்ற சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற கடமை உணர்வின்றி கையூட்டு கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலையை கண்ணும் கருத்துமாக பேணி வரும் அரசு ஊழியர்கள்,கோடிகணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் பெருமுதலாளிகள்,மக்களின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பம் விடும் ஒப்பந்ததாரர்கள்,(இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) என்று எப்படிப்பட்ட அயோக்கியர்கள் ஆனாலும் சரி மேற்சொன்ன ''நாட்டுப்பற்று நடவடிக்கைகளை''மேற்கொண்டால் போதும்,அவர்கள் நாட்டு பற்றாளர்கள்.என்ன ஒரு கேலிக்கூத்து,பாரீர்.உண்மையில் இவர்களை நாட்டுதுரோகிகள் என்றல்லவா வரையறுக்கவேண்டும்.

இப்படியான மூடத்தனமான நாட்டு பற்றை போதிப்பதன் மூலமாகத்தான் ஆளும் வர்க்கங்கள் தாங்கள் செய்யும் கசுமீர் மக்கள் மீது ஏவும் பாலியல் வல்லுறவு,அன்றாடம் துப்பாக்கி சூடு ,ஒடுக்குமுறை,வடகிழக்கு மாநிலங்களில் நடத்தும் தேசிய இன ஒடுக்குமுறை,ஈழப்போரில் தலையிட்டு தமிழ்மக்களை கொன்றுகுவித்தது.மைய இந்தியபகுதிகளில் வாழும் பழங்குடியினரை அவர்களது வாழ்விடங்களான காடுகளிலிருந்து துரத்துயடித்துவிட்டு கனிமவளம் மிகுந்த அப்பகுதிகளை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக காட்டுவேட்டை போர்,என எண்ணிறந்த அட்டூழியங்களை நாட்டுநலனுக்கானது என நியாயப்படுத்தி மக்களின் ஆதரவை திரட்டிக்கொள்கிறது.  

அப்படியானால் நாட்டுப்பற்று என்பது என்ன.நாடு என்பது வெறுமனே ஒரு நிலப்பரப்பை குறிப்பதல்ல,குருதியும் சதையுமாக அந்நிலப்பரப்பில் வாழும் மக்களையும் சேர்த்துத்தான் அது குறிக்கிறது.அந்த மக்களின் நலன் கருதிசெய்யப்படும் செயல்கள்தான் நாட்டுபற்றை குறிப்பதாக கொள்ளமுடியும்.

அரசு ஊழியர் தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவது நாட்டுப்பற்று. மக்களின் ஊழியர்கள் நாம் என்ற உணர்வோடு பணியாற்றி அம்மக்கள் பயனுற செய்வது நாட்டுப்பற்று.கையூட்டு பெறாமல் வாங்கும் ஊதியத்திற்கு வேலை செய்வது நாட்டுப்பற்று.
வணிகர்கள் ஆயின் முறையாக வரி செலுத்தி நாட்டின் வருவாய் உயர பங்களிப்பு செய்வது நாட்டுப்பற்று.
பெரு முதலாளிகள் முறையாக அனைத்து வரிகளையும் செலுத்தி நாட்டின் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து அதன்படி நடந்து கொள்வது நாட்டுப்பற்று.(இவர்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்தாலே நாட்டின் வருவாய் பன்மடங்கு உயர்ந்துவிடும்).
பொதுமக்கள் ஆயின் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல் இருப்பது நாட்டுப்பற்று.சேதப்படுத்துவோரை தடுப்பது நாட்டுப்பற்று.விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவது நாட்டுப்பற்று.விபத்தில் அடிபட்டு கிடப்போரின் உடமைகளை திருட முயல்வோரிடமிருந்து அப்பொருட்களை காப்பாற்றி உரியவர்களிடம் சேர்ப்பது நாட்டுப்பற்று. 
ஆட்சியாளர்கள் வல்லரசு கனவில் ஆயுதங்கள் வாங்கி குவிப்பதையும்.ஊழல் செய்து பொறுக்கி தின்பதையும் விடுத்து வரிப்பணம் முழுவதையும் மக்கள் நலனுக்காக செலவிடுவது நாட்டுப்பற்று.தனி வானூர்தி பயணம்,மக்கள் வரிப்பணத்தில் ஐந்து விண்மீன் தரத்தில் சொகுசு வாழ்க்கை என வீண் ஆடம்பரங்களை தவிர்ப்பது நாட்டுப்பற்று.
ஆட்சியாளர்கள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது அரைமணி நேரம் தங்கும் இடத்தில் கூட பல இலக்கம் உருவாக்கள் செலவில் கழிப்பறை கட்டாமல் இருப்பது நாட்டுப்பற்று.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக மொத்தத்தில் மக்கள் நலனுக்காக செய்யப்படும் அனைத்து செயல்களுமே நாட்டுபற்றை குறிக்கும்.மக்கள் நலனுக்கு எதிரானவை எல்லாம் நாட்டுக்கு செய்யும் துரோகங்களே ஆகும்.வீண் ஆரவாரங்களும்,போலியான பக்தி பரவசங்களும் நாட்டுப்பற்று ஆக முடியாது.

  

1 comment:

  1. "அப்படியானால் நாட்டுப்பற்று என்பது என்ன.நாடு என்பது வெறுமனே ஒரு நிலப்பரப்பை குறிப்பதல்ல,குருதியும் சதையுமாக அந்நிலப்பரப்பில் வாழும் மக்களையும் சேர்த்துத்தான் அது குறிக்கிறது.அந்த மக்களின் நலன் கருதிசெய்யப்படும் செயல்கள்தான் நாட்டுபற்றை குறிப்பதாக கொள்ளமுடியும்".

    மக்களின் நலனுக்காக பாடுபடுவோர் மிக சொர்ப்பமே. மக்களின் நலனுக்காகப் போராடுவோரைத்தான் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறதே தேச விரோதக் கூட்டம்.

    ஊரான்.
    www.hooraan.blogspot.com

    ReplyDelete