Sunday, December 5, 2010

இந்திய ஆளும் வர்க்கம் அமெரிக்க அடிமைகளே.மேலும் ஒரு சான்று.


நவம்பர் மாதம் அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா மும்பை வந்த போது அவரது பாதுகாப்பிற்கென மூவாயிரம் அமெரிக்கர்களை கொண்டுவந்து இறக்கியது அமெரிக்கா.மும்பையிலும்,தில்லியிலும் ஒபாமா வருகை தரும் பல பகுதிகளை, இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையில்,அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.இந்திய பாதுகாப்பு படையினரால் ஒபாமாவை பாதுகாக்க முடியாது என்றால் அவர் இங்கு வரவேண்டியதில்லையே.இந்த அவமதிப்பு போதாதென்று இந்திய மக்கள் பிரநிதிகளையும் அவமானப்படுத்தியுள்ளனர் அமெரிக்க ஆணவக்காரர்கள்.


மும்பையில் வந்திறங்கும் ஒபாமாவை மகராட்டிர முதல்வரும்,துணை முதல்வரும் வரவேற்பதென ஏற்பாடாகியிருந்தது.அமெரிக்க பாதுகாப்பு அலுவலர்கள் அவர்கள் இருவரும் ஒபாமாவை வரவேற்க வேண்டுமென்றால் அவர்களது ''வாக்காளர் அடையாள அட்டை''நிரந்தர வருமான கணக்கு எண் அட்டை''முதலான ஆதாரங்களை காட்டி அடையாளத்தை மெய்ப்பித்தால் மட்டுமே வரவேற்க அனுமதிக்க முடியும் என்று அடாவடியாக கூறியதாக இப்போது செய்திகள் வந்துள்ளன.அதிர்ச்சி அடைந்த இருவரும் இதுகுறித்து தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு முறையீடு அனுப்பியுள்ளனர். அதற்கு அமைச்சகம் சொன்ன விடையை பாருங்கள்.
''இது அமெரிக்க பாதுகாப்பு அலுவலர்களின் நடைமுறை.அதில் நாங்கள் தலையிட முடியாது.''
என்ன ஒரு முதுகெலும்பற்ற போக்கு.எத்தகைய அடிமை புத்தி இது.மகராட்டிர முதல்வரும்,துணை முதல்வரும் கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக தங்கள் நாட்டுக்கு வரும் ஒரு வெளிநாட்டு தலைவரை வரவேற்க வருகிறார்கள். அந்த விருந்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையிலும் பொறுப்பிலும் உள்ள அம்மாநிலத்தின் ஆட்சியாளர்கள்.அவர்கள் மூலமாகவோ அவர்களின் அடையாளத்தை பயன்படுத்தியோ அந்த விருந்தினருக்கு யாதொரு தீங்கும் நேர்ந்துவிடாது.அப்படியிருந்தும் அவர்களிடம் அமெரிக்கர்கள் இப்படி நடந்து கொண்டது  நாட்டு மக்கள் அனைவரையும் அவமதிக்கும் செயலல்லவா.


அது மட்டுமல்ல இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒபாமா இந்தியாவின் பர்மா தொடர்பான வெளிநாட்டு கொள்கையை குறை கூறினார்.(இந்தியாவின் அந்த வெளியுறவு கொள்கை சரியா தவறா என்பது தனியானதொரு விவாதப்பொருள்.) இது போல் இந்திய தலைவர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தை விடுங்கள் இந்தியாவில் இருந்துகொண்டே அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஏதேனும் ஒரு அம்சத்தை குறை சொல்லிவிட முடியுமா.


இப்படி அடிமைகளாக இந்திய ஆட்சியாளர்கள் இருப்பதால்தான் அமெரிக்கர்கள் நம்மை ஆட்டிப்படைக்கிறார்கள்.அணு ஆற்றல் இயக்குனர்கள் முகாமையில் அமரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து இந்தியா இரானுக்கு எதிராக      வாக்களித்ததன்மூலம்  இரான்-பாகிசுதான்-இந்தியா எரிவளி குழாய் திட்டத்தில் மண்ணள்ளி போட்டது.அதன்மூலம் தெற்காசிய பகுதியில் அமைதி நிலவுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை கெடுத்தது.இப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்தையும் முடிந்த அளவுக்கு கெடுத்தது.


இந்த இடத்தில் வள்ளுவன் வாக்கு ஒன்றை சொல்லி நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
''வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் 
  உள்ளத்தனையது உயர்வு''

2 comments:

  1. தன்மானமும் ,நாட்டு பற்றும் இல்லாதவர்கள்தான் இன்று அரசியலில் அதிகம்.
    அதுவும் காங்கிரஸ் மற்றும் பி.ஜே. பி. இவர்களின் தோழமைகளிடம் கூட இந்த பொது புத்தி உண்டுதானே !

    ReplyDelete