Sunday, January 9, 2011

தேசிய பிற்போக்கு மூடர் கழகம்.கூலம் மாநாடு.ஒரு நேரடி அறிக்கை.

இன்று கூலம் மாநகரில் தேசிய பிற்போக்கு மூடர் கழகம் நடத்திய மாபெரும் ''மக்கள் அறிவு பறிப்பு''மாநாட்டுக்கு நேரில் சென்று அதன் தலைவர் நடிகர் ''ராப்டன்''பசயகாந்தின் வரலாற்று சிறப்புமிக்க உரையை நேரில் கேட்கும் பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களுக்காக இந்த அறிக்கையை மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையே ''பாணியர் புகடன்''மற்றும் ''அக்கீரன்''செய்தியாளர்களின் குறிப்பேடுகளை கழுத்து வலியை பொருட்படுத்தாமல் எட்டி எட்டி பார்த்து எழுதி வெளிடுகிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.


70 ஏக்கர் பரப்பிலான  மாநாட்டு திடல்.50  க்கு 120 அடியளவில் பிரமாண்டமான மேடை,பாதுகாப்புக்கு 2000 காவல்துறையினர் என்று தடபுடலாக நடந்த மாநாட்டில் உரையாற்றிய ராப்டனின் துணைவியார் ''தலைவருக்கு -அதாங்க அவங்க வீட்டுகாரருக்கு-டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.எனவே தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் அவர்தான் இனிமேல் டாக்டர்'' என்று ஒரே போடாக போட்டார். மாநாட்டுக்கு முன்னரே 2005 குதுரை மாநாட்டை போன்று தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் மாநாடு என அறிவித்தவர் ஆயிற்றே கிடைத்த வாய்ப்பை விடுவாரா.நல்வாய்ப்பாக டாக்டருக்கு நான்தான் ''நர்சு''என சொல்லாமல் விட்டாரே.அதுவரை நமக்கு மகிழ்ச்சிதான்.


குதுரை மாநாட்டில் பசயகாந்த் ''திருப்பிய திருப்பு'' போதாதென்று 2010 -ல் மீண்டும் ''விட்டு திருப்ப''வந்திருக்கிறார்.என்ன திருப்ப போகிறார் என்று அறிந்துகொள்ள கூட்டமே ஆவலோடு காத்திருந்தது.


சிறப்புரை ஆற்ற எழுந்தார் ''ராப்டன்''.கூட்டத்தில் ஒரே பரபரப்பு.கூட்டணி கூட்டணி என்று கிளிப்பிள்ளை போல் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கத்திகொண்டிருக்கும் ராப்டன் அதுபற்றி என்ன அறிவிக்க போகிறார் என்று ஆவலானார்கள் மாக்கள்,மன்னிக்கவும்,மக்கள்.வரலாற்றின் ஏடுகளில் நீங்கா இடம் பெற போகும் அந்த உரையை அப்படியே தருகிறோம்.


''இந்த மாநாட்டுக்காக 1500 கிலோ மீட்டருக்கு பேனர் வச்சிருக்காங்க என்னோட தொண்டர்கள்.இதுக்கு நான் காசு கொடுக்கல.அன்பா வச்சிருக்காங்க.''---அப்போ அச்சடித்து தந்தவர் ஏமாளியா அல்லது ஊரை அடித்து உலையில் போடும் கலையில்  தொண்டர்கள் இப்போதே தேறிவிட்டார்களா---''இந்த மாதிரி நீண்ட தொலைவுக்கு வேறு கட்சி மாநாட்டுக்கு பேனர் வைத்ததுண்டா.எனவே தமிழக மக்கள் தே.பி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவேண்டும்.கருணாநிதியின் குடும்ப அரசியல் ஒழியனும்.அந்த இடத்தில் எனது குடும்பம் அரசியல் நடத்த வேண்டும். அதற்காகத்தான் என் மனைவி குழந்தைகள் மற்றும் மச்சான்கள் புடை சூழ நான் அரசியலில் குதித்திருக்கிறேன்.நான் ஆட்சியை பிடிக்காமல் ஓயமாட்டேன். அதற்காக நான் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்வேன்.மக்களோடு கூட்டு சேர்வேன்.தெய்வத்தோட கூட்டு சேர்வேன்..அவுங்க கேட்கிற தொகுதிகளை கொடுப்பேன்.யாரோடு வேண்டுமானாலும் கூட்டு வைப்பேன்.எனக்கு நீங்க ஒட்டு போடுங்க.அப்போதான் நாடு நல்லா இருக்கும்.குறிப்பா நாங்க நல்லா இருப்போம். ஒரே குடும்பம் மீண்டும் மீண்டும் ஆள நினைப்பது என்ன நியாயம்.இதுக்கு பேரு சனநாயகமா.எங்க குடும்பமும் ஒருமுறை ஆளட்டுமே. என்ன கொரஞ்சிற போகுது.


எனக்கு அரசியல பத்தி என்ன தெரியும்னு சில பேரு கேக்குறாங்க.அரசியல பத்தி எதுவுமே தெரியாமலா இந்த அளவுக்கு உளறியே கட்சி நடத்திக்கொண்டு இருக்கேன்.ஆட்சியை பற்றி எனக்கு என்ன தெரியும் நான் நாடாள முடியுமா என்றெல்லாம் கேட்கிறார்கள்.நான் கேட்கிறேன்.ஒரு அரசாங்கம் படத்தில் நடித்தவனுக்கு அரசாங்கம் நடத்த தெரியாதா.---''என்னங்க தோசை சுட தெரிந்த எனக்கு துப்பாக்கியை எடுத்து சுட தெரியாதா''என்ற வடிவேலுவின் வசனம் உங்களுக்கு நினைவு வந்தால் அதற்கு யாம் பொறுப்பல்ல.-- -எழுதி குடுத்த வசனத்தை அப்படியே பேசி நடித்த எனக்கு நீட்டிய பைலில் கையெழுத்து போட தெரியாதா.


இப்படியே கழுதை விட்டை போடுவதுபோல் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மணி மணியாக கருத்துமழை பொழிந்த ராப்டன் இறுதியாக கூட்டத்தினரை நோக்கி ''கூட்டணி வைக்கனும்னு சொல்றவங்க எல்லாம் கைய தூக்குங்க''என்று மழலையர் பள்ளி ஆசிரியை போன்று உத்தரவு போட்டார்.அத்தனை பெரும் கைதூக்கினர்.''வேண்டாம்னு சொல்றவங்க கைதூக்குங்க''என்று அடுத்து அவர் கேட்க யாரும் கைதூக்கவில்லை.''சரி கூட்டணி வைப்போம்.யாருடன் கூட்டணி என்பதை நா பாத்துக்கிறேன்.நீங்க கவலை படாதீங்க,நா பாத்துக்கிறேன்'' என்று மாடு விற்க வந்த விவசாயிடம் மாட்டு தரகர் சொல்வது போன்று ஐந்தாறு தடவை சொல்லி தனது உரையை முடித்துக்கொண்டார் ராப்டன். 


இதற்கு மேல் இத்தகைய உளறல்களை சகிக்க முடியாது என்பதாலும் இரண்டு மணி நேரம் உரையாற்றாத இரக்க குணத்திற்காகவும் நாமும் அவருக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறோம்.



Wednesday, January 5, 2011

மருத்துவ கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு.சூது மதியாளர்களின் புதிய சூழ்ச்சி

அனைத்திந்திய அளவில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது.இது இயற்கை நீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது மேல்வகுப்பினருக்கு மிகுந்த ஆத்திரமூட்டுவதாக உள்ளது. அரசியல் அரங்கில் அவர்களது நலனை நோக்கமாக கொண்டு இயங்கும் கட்சிகள் வெளிப்படையாக இடஒதுக்கீடு எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டாலும் அவர்கள் தனிப்பட்ட உரையாடல்களிலும் இணையதள வலைபதிவுகளிலும் இடஒதுக்கீடுக்கு எதிராக ஆத்திரம் பொங்க வெறுப்பை கக்குவதை நீங்கள் காணலாம்.இட ஒதுக்கீடுக்கு எதிரான குழிபறிப்பு வேலைகளை துவக்க காலம் தொட்டே ஆதிக்கசாதியினர் செய்து வருகின்றனர்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ,உச்ச நீதிமன்றத்தின் அடாவடி தீர்ப்பு ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். அரசியல் சட்டம் இடஒதுக்கீடுக்கு உச்ச வரம்பு எதையும் விதிக்காத நிலையிலும் ஐம்பது விழுக்காடுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்க கூடாது என தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம். அதன்மூலம் தமிழகத்தில் வழங்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் தலையில் கல்லை தூக்கிப்போட எத்தணிக்கிறது.நடுநிலைமை பேணவேண்டிய நீதிமன்றங்களே இப்படி செயல்படும்போது அரசின் பிற உறுப்புகளை இயக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க சாதியினரின் செயல்பாடுகளை பற்றி விரிவாக சொல்லவேண்டியதில்லை.

அத்தகைய குள்ளநரி தந்திரங்களில் ஒன்றுதான் நுழைவு தேர்வு அறிவிப்பு.இது சிற்றூர்ப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை மாணவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதற்கான சூழ்ச்சி என நாம் குற்றம் சாற்றுகிறோம்.

திறமை மிகுந்த தகுதியானவர்களை கண்டறிந்து சேர்ப்பதற்காகவே நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது என இந்த சூழ்ச்சி நியாயப்படுத்தப்படுகிறது.ஆனால் உண்மை நிலை என்ன.பல இலட்சங்கள் உருவாக்களை கட்டணமாக வசூலிக்கும் விண்மீன் தரத்திலான நகர்ப்புற தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெற்று தகுதி தேர்வில் அதாவது மேல்நிலை பள்ளி பொது தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேரவரும் மாணவர்களை நுழைவு தேர்வு எழுதி மீண்டும் ஒரு முறை தகுதி பெற்று வா என்கிறார்கள்.வெந்த சோற்றை மீண்டும் ஒரு முறை ஏன் வேக வைக்க வேண்டும்.இங்குதான் சூழ்ச்சி துவங்குகிறது.பல இலட்சம் உருவாக்கள் செலவில் இத்தகைய நுழைவு  தேர்வுகளுக்கு தனிப்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் இயங்குகின்றன.இந்த நிறுவனங்களில் பயிலும் பணம் படைத்தோரின் பிள்ளைகளுடன் போட்டியிட்டு சிற்றூர்ப்புற மற்றும் நகர்புற ஏழை பெற்றோரின் பிள்ளைகள் நுழைவு தேர்வில் வெற்றி பெற வேண்டுமாம்.இது மோசடி இல்லையா.ஏழை மாணவர்களின் இடங்களை பறித்து அவற்றை பணக்காரர்களிடம் ஒப்படைக்கும் அயோக்கியத்தனமில்லையா   இது.அவர்கள்தான் ஏற்கனவே தகுதி தேர்வில் இந்த பணக்கார வீட்டு பிள்ளைகளை வென்றிருக்கிறார்களே அது ஒன்றே போதுமே யார் தகுதியும் திறமையும் படைத்தவர்கள் என காட்டுவதற்கு.நுழைவு தேர்வு என்ற ஈர வெங்காயத்தை உரிக்க வேண்டிய அவசியம் இல்லையே.

இட ஒதுக்கீடு கூடாது என கூச்சல் போட்டுக்கொண்டே காசுக்காரனுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்துகொள்ளும் இந்த அயோக்கியத்தனத்தை தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றுபட்டு விழிப்போடு இருந்து முறியடிக்க வேண்டிய தருணமிது.

.