Wednesday, February 9, 2011

''அறிவாளி''களின் பொட்டில் அறையும் திவ்யாவின் தற்கொலை.

கடந்த ஒன்றாம் தேதி சென்னை பெசன்ட் நகர்,ஆல்காட் குப்பத்தை சேர்ந்த திவ்யா என்ற கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்து போயுள்ளார். அடையாரில் உள்ள சானகி எம்.சி.ஆர்.கல்லூரியில் இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்துவந்த திவ்யா மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோருக்கு படிக்க வைக்க வசதியில்லாத காரணத்தால் இட்லி சுட்டு விற்கும் பாட்டியின் வருமானத்தில் படித்து வந்தார்.


கடந்த 29 -ஆம் தேதி வகுப்பறையில் தாம் வைத்திருந்த 3000 உருவாக்களை காணவில்லை என திய்வாவின் இருக்கை வரிசையில் இருந்த  ஒரு மாணவி முறையீடு கொடுத்ததை அடுத்து அவ்வரிசையில் இருந்த அனைவரும் சோதனையிடப்பட்டுள்ளனர்.மற்றவர்களை போலல்லாது திவ்யாவை மட்டும் தனியறையில் வைத்து ஆடைகளை களைந்து சோதித்துள்ளனர் நான்கு ஆசிரியைகள்.இந்த கொடுமையை தன் தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார் திவ்யா.கொதித்து போன அந்த தாய் கல்லூரிக்கு வந்து நியாயம் கேட்பதாக கூறியதற்கு அக மதிப்பீட்டு மதிப்பெண்களை குறைத்து விடுவார்கள்.எனவே எதுவும் கேட்க வேண்டாம் என தாயை தடுத்து விட்டாள் அந்த பேதை.


அந்த மன வேதனையுடன் மறுநாள் கல்லூரிக்கு சென்ற திவ்யா சில மாணவிகளின் ஏளன பேச்சால் மனம் உடைந்து போய் வீட்டுக்கு திரும்பி வந்த பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார்.மூன்று நாட்கள் கடும் மன உளைச்சலையும் வேதனையையும் அனுபவித்து அவமானம் தாங்க முடியாமல் தன்னைத்தானே மாய்த்து கொண்ட அந்த இளம் பெண்ணின் சோகம் நெஞ்சை உருக்குகிறது.


நம் நாட்டை பொறுத்தவரை மாணவர் அமைப்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை.செயல்படும் ஒருசில அமைப்புகளையும் ''படிக்கும் வயதில் அரசியல் எதற்கு''என்ற அறிவாளி வேடமிட்டு வரும் காரியவாதிகளின் கூச்சல் மாணவர்களை ஈர்க்க விடாமல் தடுக்கின்றது.திவ்யா படித்த கல்லூரியில் மாணவர் அமைப்புகள் வலுவாக இருந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த பிரச்னையை கையில் எடுத்திருப்பார்கள்.திவ்யாவுக்கு நியாயம் கேட்டு போராடியிருப்பார்கள்.நமக்காக நியாயம் கேட்க இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே திவ்யாவுக்கு பெரும் ஆறுதலாக இருந்து அவர் தற்கொலை முடிவுக்கு போக விடாமல் தடுத்திருக்கும்.இந்த அவமானம் தனக்கு மட்டும் ஏன் நேர்ந்தது என உள்ளம் குமைந்து மன வேதனை ஆற்றாமையாக மாறி தற்கொலைக்கு தூண்டியிருக்காமல் அது தன்னை அவமானப்படுத்தியவர்கள் தனது ஏழ்மையை அவமானப் படுத்தினார்கள் என்பதை உணர்ந்து அதற்கு பழி தீர்க்க போராட சொல்லி  மாணவர் அமைப்புகளுடனான கூட்டிணைவு கற்று தந்திருக்கும்.


அமெரிக்க ஆண்டைகள் இந்திய மாணவர்களின் காலில் ''மின் காந்த அலை பட்டை  களை''-Radio tag-கட்டி அவமானப் படுத்தியதற்கு ஒப்புக்கு எதிர்ப்பு காட்டிவிட்டு இந்திய ஆளும் கும்பல் முடங்கி விட்ட நிலையிலும் அந்த இழி செயலை கண்டித்து ''இந்திய மாணவர் சங்கம்'' அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராடியதையும் தூதரக வாயிலிலேயே அமெரிக்க நாட்டுக்கொடியை தீயிட்டு கொளுத்தி அதற்காக அம்மாணவர்கள் சிறை ஏகியதையும் நினைத்து பார்க்க வேண்டும்.தனியார் தன்நிதி கல்லூரிகளின் கட்டண கொள்ளைக்கு எதிராக ''புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்''தொடர்ச்சியான போராட்டங்களும் இங்கு நினைவு கூரத்தக்கது.மக்கள் நலனை கருத்தில் கொண்ட அரசியல் இல்லையென்றால் இந்த மாணவர் போராட்டங்கள் எதுவும் நடந்திருக்காது.


ஆகவே அரசியலே வேண்டாம் என சொல்லி சொல்லி நம் மாணவர்களை தன்னல பிண்டங்களாக மாற்றும் கயமையை இனியும் நாம் அனுமதிக்க கூடாது. மாணவர்கள் இளைஞர்களின் பங்களிப்பு இன்றி உலக வரலாற்றில் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதில்லை.போராட்டங்கள் இல்லாமல் நியாயங்கள் கிடைத்ததில்லை.இந்த செய்தியைத்தான் திவ்யா வாயால் சொல்லாமல் தன் துயரமான முடிவால் சொல்லியிருக்கிறாள். 

No comments:

Post a Comment