Thursday, February 24, 2011

விசயகாந்துடன் கூட்டணி.செயாவின் வரலாற்றுத் தவறு.

தே.மு.தி.கவுடன் அ.தி.மு.க.கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.இரு கட்சியினரும் நடத்திவரும் பேச்சில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் கூட்டணி முடிவு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

பெரும் எண்ணிக்கையிலான தொகுதிகளையும்,அமைச்சரவையில் பங்கும்,துணை முதல்வர் பதவியும் விசயகாந்த் கேட்பதாக செய்திகள் கசிந்துள்ளன.இவற்றை செயா ஏற்றுகொள்வார் என்று நிச்சயமாக சொல்லமுடியாது.பேரத்தில் விசயகாந்த் இறங்கி வருவாரா என்பதும் உறுதியாக சொல்லமுடியாத ஒன்றாக உள்ளது.ஆகவே,கூட்டணி கிட்டத்தட்ட இழுபறி நிலையில்தான் உள்ளது.மதில் மேல் அமர்ந்துள்ள பூனை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் குதிக்கலாம்.


சரி,இருக்கட்டும்.அது நமது கவலையல்ல.நாம் பேச விரும்புவது செயா விசயகாந்த்துடன் கூட்டணி அமைத்தால் அது எத்தகைய வரலாற்று தவறாக அமையும் என்பது குறித்தே.

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அரசியலில் ''குதித்து'' தனிக்கட்சி தொடங்கினார் விசயகாந்த்.அந்த தேர்தலிலேயே ஆட்சியை கைப்பற்றும் கனவோடு 234 தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். 

சொந்தமாக யோசித்து சேர்ந்தாற்போல் நான்கு சொற்கள் பேச தெரியாத இவரை,

சொந்தமாக ஒரு அறிக்கை கூட எழுதியிராத இவரை,

விலைவாசி உயர்வு,வேலையில்லா திண்டாட்டம்,மாணவர் பிரச்னைகள்,இடஒதுக்கீடு, வகுப்புவாத இயக்கங்களின் மதவெறி செயல்பாடு என்று எந்த ஒரு மக்கள் பிரச்னைக்காகவும் வாயை திறந்து எதுவும் பேசியிராத இவரை,[வாயை திறந்தாலும் ஏதாவது சொல்லத்தெரியுமா என்பது ஒரு புறம் இருக்கட்டும்]

முதல்வராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று விழிகளை திறந்து வைத்துக் கொண்டே கனவு கண்டார்.என்ன ஒரு கொடுமை இது.தமிழக மக்களை பற்றி இவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் மக்கள் இவருக்கு சரியான பாடம் கற்று கொடுத்தார்கள்.233 தொகுதிகளில் இவரது கட்சியை தோற்கடித்தார்கள்.100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வைப்பு தொகை கூட பறிபோனது.ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது.அடுத்த முதல்வர் என்று இவரது அல்லக்கைகள் போட்ட கூச்சல் ஏற்படுத்திய மாயையில் மயங்கி போய் விருத்தாசலம் தொகுதி மக்கள் மட்டும் விசயகாந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.

ஆக மொத்தத்தில் தட்டி தடுமாறி ஒருவழியாக பதிவானவற்றில் ஒரு 8 விழுக்காடு வாக்குகளை பெற்று அந்த தேர்தலில் கரை ஒதுங்கினார் விசயகாந்த்.இந்த வாக்குகளை காட்டித்தான் அது ஏதோ அவரது பரம்பரை சொத்து போல் பாவித்துக்கொண்டு கூட்டணி பேரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த எட்டு விழுக்காடு வாக்குகள் அவருடைய சொந்த செல்வாக்கில் கிடைத்ததா. அவருக்கு என ஒரு வாக்கு வங்கி உள்ளதா என பார்க்க வேண்டியிருக்கிறது.அப்போதுதான் செயா விசயகாந்த்துடன் கூட்டணி அமைக்கும் முடிவு சரியா தவறா என்று புரிந்து கொள்ள முடியும்.


பொதுவாகவே தேர்தல்களில் வாக்களிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை.விலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டேதான் இருக்கும்.அது குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இருக்காது.மக்களின் நலனை விட பெரு முதலாளிகளின் நலன்களை மனதில் கொண்டே அவர்கள் செயல்படுவார்கள். இப்படித்தான் பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.


இந்நிலையில் இருக்கும் மக்களில் சிலர் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என்று இரண்டு கட்சிகளின் ஆட்சியையும் பார்த்து விட்டோம்.புதிதாக ஒருவர் வந்து நல்லாட்சி தருவேன் என்கிறாரே அவருக்கு வாக்களிப்போமே என்று மேம்போக்காக எண்ணி விசயகாந்துக்கு வாக்களித்தார்கள்.திரைப்பட கவர்ச்சியை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதில் மயங்கி வாக்களிப்பவர்கள் மிக சொற்பமே.இப்படித்தான் எட்டு விழுக்காடுகள் வாக்குகளை பெற்றார் விசயகாந்த்.


விசயகாந்துக்கு வாக்களித்தவர்கள் பலரிடம் பேசிப்பார்த்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். இந்த கட்சி தோற்றுப்போகும் என்று தெரிந்தே அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.கருணா செயா இருவருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்கள் விசயகாந்துக்கு வாக்களித்தார்கள்.இதுதான் உண்மை.


இப்போது விசயகாந்த் ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பிடிப்பாரேயானால் கருணா, செயா,விசயகாந்த் மூவரில் யாரை முதல்வராக்க வாக்களிப்பது என்ற கேள்வி மறைந்து கருணாவா,செயாவா என்ற கேள்வியே வாக்காளர்கள் முன் இருக்கும்.[வேட்பாளர்களை பார்த்து வாக்களிப்பது என்பதெல்லாம் நம் நாட்டில் இல்லாத ஒன்று.இங்கு எப்போதுமே தலைவர்களுக்காகத்தான் வாக்கு.]அந்த நிலையில் இந்த எட்டு விழுக்காடு வாக்குகளும் சட்டிக்குள் கரைந்த கருவாடாக காணாமல் போகும். கருணா செயா இருவருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குசாவடிக்கு வராமலே இருந்துவிடக்கூடும்.ஒரு பகுதியினர் யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்.அதற்கு விசயகாந்தின் கட்டளைக்கு காத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.


ஆகவே,விசயகாந்துக்கு என தனித்த ஒரு வாக்கு வங்கி கிடையாது.அன்றைய அரசியல் சூழலில் அனாமதேயமாக கிடைத்ததே அவருடைய 8 விழுக்காடு வாக்குகள்.ஒருவேளை இந்த தேர்தலிலும் அவர் தனித்து போட்டியிடுவாரேயானால் அந்த அளவுக்காவது வாக்குகள் பெறமுடியுமா எனபது ஐயமே.ஏனென்றால் அவரது வலு என்னவென்று போன தேர்தலே தோலுரித்து காட்டிவிட்டது.அவர் முதல்வராக வரக்கூடும் என்று ஒரு சிலரிடம் இருந்த மாயை விலகிவிட்டது.எனவே தனிப்பட்ட முறையில் அவரது வெற்றியே கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.ஆகவே அவரது வெற்றியும் நிச்சயமில்லை.அந்த எட்டு விழுக்காடும் நிச்சயமில்லை.


இந்த நிலையில்தான் அவர் கூட்டணிக்காக செயாவிடம் வந்து சேர்ந்திருக்கிறார். செயாவின் கவலையெல்லாம் விசயகாந்த் தனித்து போட்டியிட்டால் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரித்து தி.மு.க.வின் வெற்றிக்கு வழி வகுத்து விடுவாரோ என்பதுதான்.இது தவறான கணிப்பு.எதிரியை குறைத்து மதிப்பிடுவது எப்படி தவறோ அதே போன்றதுதான் கூடுதலாக மதிப்பிடுவதும்.அதற்கு நாம் 1996 தேர்தலை சற்றே நினைவுபடுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.


அந்த தேர்தலில் நான்கு அணிகள் போட்டியிட்டன.


1.அன்றைய மைய,மாநில ஆளுங்கட்சிகளான் அ.தி.மு.க-காங்கிரசு ஓரணி.


2.தி.மு.க-தா.ம.கா. ஓரணி.


3.பா.ம.க-திவாரி காங்கிரசு ஓரணி.


4.ம.தி.மு.க.மற்றும் ஓரிரு சிறு கட்சிகள் ஓரணி.


அப்போது ஆளும் கட்சியான அ.தி.மு.கவை ஆட்சியை விட்டு இறக்குவது என மக்கள் முடிவு செய்து விட்டிருந்தார்கள்.அதற்கு அவர்கள் முன் மூன்று தெரிவுகள் இருந்தன. பா.ம.க.வன்னிய சமுதாயத்தினர் ஒன்று திரண்டு தம்மை ஆதரிப்பது போலவும்,வலுவான ஒரு மாபெரும் அரசியல் கட்சியாகவும் தன்னை காட்டிக்கொண்டிருந்தது.வை.கோ.வின் ம.தி.மு.க.வோ அதுதான் உண்மையான தி.மு.க.என்றும்,தொண்டர்களில் ஆகப்பெரும்பான்மையினர் தன் பின்னால் அணி திரண்டு நிற்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தது.ஆனால்,மக்கள் தெளிவாக அ.தி.மு.கவை ஆட்சியை விட்டு இறக்க தி.மு.கவை தேர்ந்தெடுத்தார்கள்.ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க அணிக்கே போனது.


ஆகவே,இந்த தேர்தலில் தி.மு.கவை ஆட்சியை விட்டு இறக்குவது என மக்கள் முடிவு செய்வார்களேயானால் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க அணிக்கே போகுமேயல்லாது விசயகாந்துக்கு போகாது.ஏனென்றால் தே.மு.தி.க வை விட     
அ.தி.மு.க வே வலுவானது என்பதை சிறு குழந்தைகளும் அறிவார்கள்.


இப்படித்தான் 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்து சோர்ந்து கிடந்த பா.ம.க ம.தி.மு.க.வை 1998 நாடாளுமன்ற தேர்தலில் செயா தனது கூட்டணியில் சேர்த்து அவர்களுக்கு புது வாழ்வு அளித்தார்.அவரது தயவில் ஆளான இவ்விரு கட்சியினருடனும்  கூட்டணிக்காக இப்போது ஒவ்வொரு தேர்தலிலும் செயா கவலைப் பட வேண்டியிருக்கிறது.அதே போன்றதொரு வரலாற்று தவறைத்தான் தே.மு.தி.க வை பொறுத்தவரை இப்போது செயா செய்ய முனைகிறார்.ஆக மொத்தத்தில் கூட்டணி சித்து விளையாட்டுக்கு தே.மு.தி.க என்ற பெயரில் இன்னொரு கை ஆயத்தமாகியுள்ளது.இதுவே 2011 தேர்தலின் சாதனை.


இறுதியாக ஒன்றை சொல்லி நிறைவு செய்கிறோம்.ராசீவ் காந்தி,நரசிம்ம ராவ் என்று இந்திய முதன்மர்களுடனும் மூப்பனார் போன்ற பழுத்த அரசியல்வாதிகளுடனும் கூட்டணி பேரம் பேசி உடன்பாடு கண்ட செயா இப்போது விசயகாந்த் போன்ற மாபெரும் அறிவாளிகளுடன் பேரம் பேச வேண்டியிருக்கிறது.காலத்தின் கோலம் பாரீர்.5 comments:

 1. //இந்த நிலையில்தான் அவர் கூட்டணிக்காக செயாவிடம் வந்து சேர்ந்திருக்கிறார்//

  தப்பு.

  விஜயகாந்த் இழுக்கப்பட்டார். அவரை இழுக்க பல தந்திரங்களை ஜெயாவின் ராஜ குரு சோ. இராமசாமி செய்தார்.இறுதியாக அதை வி.காந்த் மனைவி மூலம் நடாத்திக்காட்டிவிட்டார் சோ.

  சோவின் கனவுதான் இது. போன தேர்தலில் அந்த 8 விகித வாக்குகள் செயாவுக்கு வந்திருந்தால், தி.மு.கவை வீழ்த்தியிருக்கலாம் என கடந்த 5 வருடங்களாக சொல்லி வந்திருக்கிறார் ராஜகுரு ஜெயாவிடம்.

  நீங்கள் குறிப்பிட்ட 8 விகித வாக்குகள் இப்போது நீர்த்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அவை தி.மு.க-அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகள். இப்போது என்ன அந்த 8 விகத வாக்காளார்கள் எதை வைத்து வி.காவுக்குப் போடுவார்கள்? தி.மு.க எதிர்ப்புக்கா ?

  வி.கா ஒன்று செய்யலாம். இரட்டை இலை சின்னத்திலே போட்டிபோடலாம். இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பை ஏற்படுத்தாமல். நீங்கள் சொன்னபடி ‘சிந்தாமல், சிதறாமல்’ அ.தி.மு.கவுக்கு வரும்.

  செயாவுக்கு எக்கெடுதியும் வரப்போவதில்லை. வி.காவுக்கு மட்டுமே.

  இத்தேர்தலுக்குப்பின் காணாமல் போகலாம் வி.கா.

  ReplyDelete
 2. //ராசீவ் காந்தி,நரசிம்ம ராவ் என்று இந்திய முதன்மர்களுடனும் மூப்பனார் போன்ற பழுத்த அரசியல்வாதிகளுடனும் கூட்டணி பேரம் பேசி உடன்பாடு கண்ட செயா இப்போது விசயகாந்த் போன்ற மாபெரும் அறிவாளிகளுடன் பேரம் பேச வேண்டியிருக்கிறது.காலத்தின் கோலம் பாரீர்.//

  இதுல ராசீவ்காந்தி என்பது யாருங்க எசமான்?

  இத்தாலிகாரியை திருமணம் செய்தால் விஜ்யகாந்தும் அந்த லெவலுக்கு செல்லமுடியுங்களா?

  ReplyDelete
 3. \\தப்பு.
  விஜயகாந்த் இழுக்கப்பட்டார். அவரை இழுக்க பல தந்திரங்களை ஜெயாவின் ராஜ குரு சோ. இராமசாமி செய்தார்.இறுதியாக அதை வி.காந்த் மனைவி மூலம் நடாத்திக்காட்டிவிட்டார் சோ//

  இருக்கலாம்.
  கட்டுரையில் நாம் வலியுறுத்தி சொல்வது தி.மு.க.வை ஆட்சியை விட்டு இறக்கவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்பினால் இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.அணியே வெற்றி பெறும்.தி,மு,க.ஆட்சி தொடரட்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்பினால் இரண்டே அணிகள் போட்டியிட்டாலும் தி.மு.க.அணியே வெற்றி பெறும்.ஆளும் கட்சியை முடிவு செய்யப்போவது மக்களின் விருப்பமே அன்றி கூட்டணிகள் அல்ல என்பதுதான்.

  ReplyDelete
 4. //விலைவாசி உயர்வு,வேலையில்லா திண்டாட்டம்,மாணவர் பிரச்னைகள்,இடஒதுக்கீடு, வகுப்புவாத இயக்கங்களின் மதவெறி செயல்பாடு என்று எந்த ஒரு மக்கள் பிரச்னைக்காகவும் வாயை திறந்து எதுவும் பேசியிராத இவரை,[வாயை திறந்தாலும் ஏதாவது சொல்லத்தெரியுமா என்பது ஒரு புறம் இருக்கட்டும்]

  100% true and agree with you.

  ReplyDelete