Sunday, February 27, 2011

தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரசு தீவிரம்.

தி.மு.க.வுக்கும்  காங்கிரசுக்கும் தொகுதி பங்கீடு குறித்து நடைபெற்று வரும் பேச்சை பற்றி இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.90 தொகுதிகளும் அமைச்சரவையில் பங்கும் வேண்டும் என காங்கிரசு கோருகிறது என செய்திகள் வெளிவந்துள்ளன.இப்படி பேரம் பேசுவதற்கு காங்கிரசுக்கு உரிமை இருக்கிறதா.எந்த அடிப்படையில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட இரு மடங்கு கூடுதல் தொகுதிகளை கேட்கிறார்கள் என்று பார்த்தால் கட்டுரையின் தலைப்பு உண்மையாக இருக்குமோ என்று ஐயம் எழுவதை தவிர்க்க முடியாது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க வை வீழ்த்த தி.மு.க.வின் தலைமையில் ஒரு பெரிய கூட்டணியை கருணாநிதி பல விட்டுகொடுத்தல்களை மேற்கொண்டு உருவாக்கினார்.கூட்டணியிலேயே பெரிய கட்சியான தி.மு.க 132 தொகுதிகளை மட்டும் தான் போட்டியிட வைத்துக்கொண்டு மீதி 102 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது.தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளான தி.மு.க,மற்றும் அ.தி.மு.க கட்சிகள் அதுவரை இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்டதில்லை.[1980-தேர்தல் கதை தனித்த ஒன்று.அதை பின்னர் பார்க்கலாம்].அதற்கு முந்தைய 2001 சட்டமன்ற தேர்தலில் 2006 தேர்தலில் தி .மு .க கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க வின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்தனர்.அவர்களுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக 140 இடங்களில் அ.தி.மு.க போட்டியிட்டது.செயா அளவுக்கு கறாராக பேரம் பேச தெரியாத கருணா மேற்கொண்டு எட்டு இடங்களை விட்டு கொடுத்து கூட்டணி அமைத்தார்.

தி.மு.க.கூட்டணி வெற்றிபெற்றது.ஆனால் குறைந்த தொகுதிகளில் போட்டியிட்ட  தி.மு.க.தனிபெரும்பான்மை பெற தவறியது. கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்த கருணா ஒருவழியாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திவிட்டு இப்போது அடுத்த தேர்தலை சந்திக்கிறார்.

2006 தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசு தற்போது .90  தொகுதிகளை  கேட்கிறது.இவ்வளவு இடங்களை கோரும் அளவுக்கு இந்த ஐந்தாண்டுகளில் அக்கட்சி அப்படி  என்ன மாபெரும் வளர்ச்சியை சாதித்திருக்கிறது என்று பார்த்தால் ஒன்றுமில்லை.ஐந்தாண்டுகள் என்ன இருபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார்கள். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தொண்டர்கள் வலு இல்லாமல் ''தலைவர்கள்''மட்டுமே இருக்கும் கட்சி அது.அந்த தலைவர்களும் கூட ஆந்திராவின் ராசசேகர் ரெட்டி போன்று மக்கள் செல்வாக்கு ஏதுமில்லாத காகிதப்புலிகள்.அக்கட்சியில் தலைவர்கள் எண்ணிக்கையை விட ''குழு''எண்ணிக்கை கூடுதலானது.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தில்லிக்கு காவடி எடுப்பது மட்டுமே.காவடி எடுத்து போய்ஒருவரை ஒருவர்''போட்டு''கொடுக்க தெரியும்.இதன்னியில் இந்த ஐந்தாண்டுகளில் ஒரு மூன்று,நான்கு முறை அவர்களது சின்ன எசமான் ராகுல் காந்தியை அழைத்துவந்து ''இளைஞர்கள் ''கள் சந்திப்பு நடத்தியதுதான் அவர்களின் மாபெரும் அரசியல் நடவடிக்கை.அதன் காரணமாக,ராகுலின் ''அறிவார்ந்த'' பேச்சு மற்றும் நடவடிக்கைகள் மூலமாக கட்சி வளர்ந்துள்ளது என்று யாராவது சொன்னால் சோனியாவே நம்ப மாட்டார்.

இவர்களுக்கு 90 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அந்த தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் மட்டுமே இவர்களிடம் இருப்பார்கள்.தேர்தல் வேலை செய்வதற்கு தொண்டர்கள் இருக்க மாட்டார்கள்.இவர்களிடம் இருக்கும் தொண்டர்கள் தலைவர்கள் காட்டும் ''அன்பு''க்கு கட்டுபட்டு சத்யா மூர்த்தி பவனுக்கு பளபளக்கும் ''டாட்டா சுமோ''ஈப்புகளில் வந்திறங்கி சொல்லிக்கொடுக்கப்பட்ட முழக்கங்களை எழுப்புவார்கள்.அவ்வளவே.அதுவும் சென்னை,மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இந்த ''தொண்டர்''வலு இவர்களுக்கு உண்டு.தமிழகத்தின் ஆக பெரும்பான்மையான சிற்றூர்களில் காங்கிரசுக்கு கிளைகளே இல்லை எனும்போது தொண்டர்களுக்கு எங்கே போவது.மற்ற தேர்தல் பணிகள் இருக்கட்டும்.கூலிக்கு ஆள் பிடித்து செய்து கொள்ளலாம் என்று அவர்கள் இறுமாந்திருக்கலாம்.ஆனால் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி முகவர்களாக பணியாற்ற நம்பிக்கையான தொண்டர்கள் வேண்டுமே.அதற்கு கூலியாட்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள்.கூடுதல் ''கூலி''கொடுக்க எதிர்க்கட்சியினர் முன் வந்தால் அவர்கள் அதை மறுத்துவிடுவார்கள் என்று எப்படி நம்புவது.ஆகவே முகவர் பணிக்கு கூட்டணிக்கு உண்மையாக இருக்க கூடிய தொண்டர்கள் தேவை.அதற்கு தி.மு.க.வின் அமைப்பு வலுவையே நாட வேண்டியிருக்கும்.அப்படியானால் தி,மு,க,வின் வலுவில் வெற்றி பெறுவதற்கு இவர்களுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்குவது எப்படி நியாயமான உடன்பாடாக இருக்க முடியும்.

காங்கிரசு கொண்டு வரும் வாக்குகளை தங்களுக்கு சாதகமான அம்சமாக காங்கிரசு சுட்டிக்காட்டலாம்.அதுவும் உண்மையல்ல.நாடாளுமன்ற தேர்தல்களில் மட்டுமே காங்கிரசுக்காக வாக்குகள் விழலாம்.சட்டமன்ற தேர்தலில் செயாவா,கருணாவா யார் முதல்வர் என்ற கேள்விக்குத்தான் மக்கள் விடையளிக்கிறார்கள்.இதில் காங்கிரசுக்கு என்று தனித்த ஒரு வாக்குவங்கி இருக்க முடியாது.ராமதாசு,திருமா போன்ற தலைவர்களுக்கு வேண்டுமானால் அவர்கள் சார்ந்த சமுதாய மக்களின் ஆதரவில் ஒரு வாக்குவங்கி இருப்பதாக கொள்ளமுடியும்.காங்கிரசு அப்படி சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.காகிதபுலி தலைவர்களுக்கு மக்கள் செல்வாக்கு என்று ஏதுமில்லை.

2006 தேர்தல் முடிவுகளை சற்று சீர்தூக்கி பார்த்தாலும் காங்கிரசின் கோரிக்கை எப்படி நியாயத்திற்கு புறம்பானது என்பதை புரிந்து கொள்ளலாம்.அத்தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட தி,மு,க, 26 இடங்களில் தோற்று 96 இடங்களில் வெற்றிபெற்றது.அதாவது தி.மு.க.வின் தோல்வி விகிதம் 20 விழுக்காடு.48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசு 13  இடங்களில் தோற்று 35  இடங்களில் வெற்றிபெற்றது.அதாவது காங்கிரசின் தோல்வி விகிதம் 28  விழுக்காடு.ஆகவே கூடுதலான தொகுதிகளில் காங்கிரசு போட்டியிட்டால் கூடுதலான தொகுதிகளில் கூட்டணிக்கு தோல்வி என்பதே அதன் பொருள்.

2006 தேர்தலுக்கான தி.மு.க.கூட்டணிக்கும் தற்போதைய தி.மு.க கூட்டணிக்கும் உள்ள வேறுபாடு இரு பொதுவுடைமை கட்சிகளின் வெளியேற்றமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வரவும்தான்.அப்படியானால் பொதுவுடைமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் போக மீதியுள்ளவற்றை தி.மு.க.வும் காங்கிரசும் தமக்குள் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதுதான் சரியானதாக இருக்கும்.அதை விடுத்து காங்கிரசு 90 தொகுதிகளும் அமைச்சரவையில் பங்கும் கேட்பது கூட்டணியின் தோல்விக்கு வழி வகுப்பதாகவே முடியும்.

பாவம் கருணா.இந்த தேர்தலில் செயா,காங்கிரசு என்று இரண்டு எதிரிகளை அவர் வென்றாக வேண்டியிருக்கிறது.
2 comments:

  1. நேர்மையான அரசியல் விமர்சனம் என்பது இதுதான். பெரியவர் தான் அனுபவித்த இன்பங்களுக்கு தன்னுடைய இறுதி அந்திம காலத்தில் அறுவடை செய்கிறார்.
    (உங்கள் கட்டுரையின் எழுத்துக்கள் நிரம்பவும் சிறிதாக உள்ளது. முடிந்தால் மாற்றவும்)

    ReplyDelete
  2. ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

    http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

    ReplyDelete