Sunday, April 24, 2011

சாய்பாபா சாவு.''கடவுள்''தோற்றார்.இயற்கை வென்றது.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி எனபது போல தன் சாவிலும் தான் கடவுள் அல்ல என அம்பலப் படுத்திக் கொண்டு 96 ஆண்டுகள் உயிர் வாழ்வேன் என்று சொன்னதற்கு மாற்றமாக, உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் ஒரு நாள் இறந்து போவர் என்ற இயற்கை நியதிப்படி இன்று காலை இறந்து போனார் புட்டபர்த்தி சாய்பாபா. 

தான் வாழ்ந்த காலமெல்லாம் தன்னை கடவுளின் அவதாரம்,சீரடி சாய்பாபாவின் மறுபிறவி,வாழும் கடவுள் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி நம்ப வைத்து அவர்களை மடமையில் ஆழ்த்தி சாமியார் வேடத்தில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து ஆடம்பர சுகபோக வாழ்க்கை நடத்தி வந்த சாய்பாபா இப்போது செத்து போய்விட்டார்.

அவருக்கு பதிவுலகில், அச்சு,தொலைகாட்சி ஊடகங்களில் இரங்கல் செய்திகள் குவிகின்றன.அரசியல் கட்சி தலைவர்கள்,அரசு,மற்றும் ஆட்சித்தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்ததோடு இறுதி மரியாதை செலுத்த புட்டபர்த்திக்கு ''புனிதப் பயணமும்'' கிளம்பி விட்டனர்.

அவரை கடவுளின் அவதாரம் என ஏற்காதவர்கள்,அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்ற புரிதல் உள்ளவர்கள் கூட,ஓரிருவர் தவிர்த்து,அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டே அவர் மீதான திறனாய்வை சொல்கின்றனர்.நாம் சொல்கிறோம். இல்லை,சாய்பாபாவின் சாவுக்கு நாம் இரங்க வேண்டியதில்லை.இது நாகரிகமற்ற,இரக்கமற்ற அணுகுமுறையாக ஒருசிலர் கருதக்கூடும். அவர்களுக்கு ஒரு கேள்வி. நாளை ஒருநாள் பல்லாயிரம் உயிர்களை இரக்கமின்றி கொன்று குவித்த ராசபக்செவும் நரேந்திர மோடியும் கூட இறந்து போவார்கள்.அவர்களுக்காகவும்  நாம் வருந்த வேண்டுமா.[இந்த இடத்தில் சாய்பாபா ஆசிரமத்தில் நிகழ்ந்த கொலைகள் நினைவு படுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்கும்]. இறந்தவர்களை குறை கூற கூடாது என்ற நாகரிகத்தை பாபாவை பொறுத்தவரை கடைபிடிக்க முடியாது.மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் இருந்தாலும் இறந்தாலும் அம்பலப்படுத்தப் பட வேண்டியவர்களே.செத்து பொய் விட்டனர் என்பதற்காக எட்டப்பனையும் இட்லரையும் கொண்டாட முடியுமா. 

அவர் மீதான கடுந்திறனாய்வுகளுக்கு விடையளிக்கும் அவரது ஆதரவாளர்கள் அவர் ஆற்றிய சமுதாயப்பணிகளை, இலவச மருத்துவமனை, அனந்தபூர் மாவட்ட குடிநீர் திட்ட உதவி,சென்னை குடிநீர் திட்டத்திற்கு 200 கோடி அளித்தது,இலவச கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவது, போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.அவர்களுக்கு சொல்வோம். ஐயா,அறிவாளிகளே,இப்படி சில நூறு கோடிகளை செலவிடுவதன் மூலமாகத்தான்,அதைக்காட்டித்தான், பல்லாயிரம் கோடிகளை நிதியாக திரட்டி 40000 கோடிக்கு சொத்து சேர்த்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் பாபாவும் அவரது அல்லக்கை கும்பலும்.அவரது பிணத்தை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த சொத்துகளை யார் ''நிர்வகிப்பது'' என்று பாபாவின் எடுபிடிகளுக்குள் குடுமிபிடி சண்டை சந்தி சிரிக்கிறது.

கல்விப்பணியாம்.அவரது கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறார்களை பாபா தனது முறைகேடான பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியது ஆதாரங்களுடன் அம்பலமானதே.அதை வைத்து அவரது ''கல்விப்பணியை'' எடை போட்டு பார்க்கலாமே.இந்த அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியதற்கு பாபா பள்ளிக்கூடங்கள் எதையும் நடத்தாமலே இருந்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது.

இறுதியாக மீண்டும் சொல்கிறோம்.

''கடவுள் என்று தன்னை அறிவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வந்த ஒரு தில்லுமுல்லு பேர்வழிக்கு,பச்சிளம் குழந்தைகளை சீரழித்த பாலியல் வக்கிரம் பிடித்த ஒரு மனநோயாளிக்கு,அவரது சாவுக்கு அறிவுடையோர் இரங்க வேண்டியதில்லை''

இந்த இடத்தில் சாய்பாபா குறித்த எமது பழைய பதிவொன்றை மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனை மீண்டும் இங்கு பதிவு செய்கிறோம்.

புட்டபர்த்தி சாய்பாபா; கடவுளின் அவதாரமா.கபட வேடமிடும் செப்படி வித்தைக்காரனா.

புட்டபர்த்தி.கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆந்திராவை சேர்ந்த சிற்றூர். சீரடிசாய்பாபாவின் மறுபிறவி என்றும் கடவுளின் அவதாரம் என்றும் தன்னை கூறிக்கொள்ளும் புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ள ஊர்.அதுதான் அவரது சொந்த ஊரும்கூட.அந்த ஊருக்கும் அதன் சுற்றுப்புறத்துக்கும் கொஞ்சமும் தொடர்பின்றி பிரமாண்டமாக அமைந்துள்ளன ஆசிரமும் அது நடத்தும் நிறுவனங்களும்.


அந்நிறுவனங்களில் ஒன்றான ''சத்ய சாய்உயர் கல்வி கழகம்''கடந்த 22 -11 -10 அன்று நடத்திய பட்டமளிப்பு விழாவில் சாய்பாபா முன்னிலையில் முதன்மர்.மன்மோகன் கைகட்டி பவ்யமாக அமர்ந்திருக்க கர்னாடக முதல்வர் எதியூரப்பா சாமியாரை மண்டியிட்டு பணிந்து வணங்குவதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இவ்விழா பற்றிய செய்திக்கு; http://www.hindu.com/2010/11/23/stories/2010112361511300.htm
 சாமி,பக்கத்தில் இருக்காரே பெரியமனிதர் மன்மோகன் அவர்கிட்ட நம்ம ஊழலைப் பத்தி ரொம்ப தோண்ட வேணாம்னு கொஞ்சம் சொல்லுங்க,உங்களுக்கு புண்ணியமா போகும்.
அப்டியே குமாரசாமி வந்தா கொஞ்சம் கண்டிச்சு வைங்க.அந்தாளு சூன்யம் வைச்சதுதா இந்த பாடு படுத்துது


இப்படி நாட்டின் முதன்மரும் மாநில முதல்வர்களும் தொழுது வணங்கி செய்யும் மரியாதைக்கு தகுதியானவர்தானா சாய்பாபா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்ற பதிலே கிடைக்கும்.
புட்டபர்த்தி சாய்பாபா கடவுளின் அவதாரம் என்று நீண்ட நெடுங்காலமாக செய்யப்பட்டு வரும் கள்ள பரப்புரைக்கு கணிசமானோர் பலியாகி உள்ளனர்.அதன் வெளிப்பாடாக பாபா எங்கு சென்றாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அவரது அருள் கிட்டிவிட்டால் மற்ற அனைத்தும் கிடைத்து விடும் என்ற அப்பாவித்தனமான நம்பிக்கையில் அம்மக்கள் மூழ்கி உள்ளனர்.


சாய்பாபா கடவுளின் அவதாரமாக சொல்லிக்கொண்டு செய்யும் அற்புதங்கள் அனைத்தும் தந்திர வேலைகளே என்று பகுத்திறவு இயக்கத்தினர் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளனர்.மேலும் சாய்பாபா ஒரு கீழ்த்தரமான பாலியல் குற்றவாளி என்பதும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.தனது பாலியல் இச்சைகளுக்கு அவர் ஆசிரமம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுவர்களை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.சாய்பாபாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களே கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் உண்டு.


இவையெல்லாம் காழ்ப்புணர்ச்சியால் உந்தப்பட்டு யாரும் இட்டுக்கட்டியவை அல்ல.இக்குற்றச்சாட்டுகள்  பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தால்  (BBC) ஆதாரங்களுடன் ஒளிபரப்பப்பட்டு கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளன.அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள ஒளிப்பட தொகுப்பை கீழ்காணும் சுட்டிகளில் காணலாம்.


http://www.youtube.com/watch?v=jjRaReI5b2Q&feature=related
http://www.youtube.com/watch?v=vdsYsRaNA4k&NR=1
http://www.youtube.com/watch?v=QmUn7lkGevE&NR=1
http://www.youtube.com/watch?v=iK3QlPGYiJA&feature=related
http://www.youtube.com/watch?v=RskbqOOh6Ig&NR=1
http://www.youtube.com/watch?v=M3oWmzZI_hs&NR=1

பார்த்துவிட்டீர்களா நண்பர்களே.இப்போது சொல்லுங்கள்.சாய்பாபா கடவுளின் அவதாரமா இல்லை செப்படி வித்தையால் ஊரை,அல்ல,உலகை ஏய்க்கும் கயவனா.


இது தவிர சாய்பாபா பணத்தின் மீது பேராசை கொண்டவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.தனது பக்தர்களை தாராளமாக ஆசிரமத்துக்கு நிதி உதவி செய்ய தூண்டும் பாபா பக்தர்கள் தங்களது சொத்துக்களை ஆசிரமத்துக்கு தானமாக அளிப்பதையும் ஊக்குவிக்கிறார்.அவ்வாறு விசயவாடாவை சேர்ந்த ஒரு மூதாட்டி அவர் இறந்தபின் அவரது வீடு பாபாவின் ஆசிரமத்துக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது 55 -வது வயதில் உயில் எழுதி வைத்த பாவத்திற்காக உயிருடன் இருக்குபோதே வீட்டை பாபாவின் ஆசிரமத்திடம்  பறி கொடுத்த பரிதாபத்தை கீழே உள்ள சுட்டியில் காணலாம். 
http://exposedsaibaba.blogspot.com/

ஆக கொலைக்கஞ்சா கொடியவர்களின் ஆசிரமத்தின் தலைவர்,தெருவோரத்தில் வித்தை காட்டி பிழைக்கும் செப்படி வித்தைக்காரனின் தந்திர வேலைகளை அற்புதங்கள் போன்று செய்துகாட்டி ஏய்க்கும் ஒரு மோசடி பேர்வழி, பேராசை கொண்ட ஒரு பணப்பேய் கடவுளின் அவதாரமாக இருக்க முடியுமா.


சாய்பாபாவை கடவுளின் அவதாரமாக நம்புவோரிடம் நாம் கேட்க விரும்பும் சில கேள்விகள்.


சாய்பாபா தங்கத்தாலான கடவுள் சிலையை (லிங்கம்) வாயிலிருந்து அல்லது வயிற்றிலிருந்து எடுக்கிறார்.அவரே படைத்த ஒரு பொருள் போல் அதை பக்தர்கள் என்ற பேரில் கூடியிருக்கும் ஆட்டு மந்தையிடம் காட்டி கை தட்டல் பெறுகிறார். காற்றில் கையை சுழற்றி தங்க சங்கிலி வரவழைக்கிறார்.வெறும் கையால் தங்க மோதிரத்தை தருவிக்கிறார்.இவையெல்லாம் உண்மையென்றால்,வெறும் காற்றிலிருந்தும் தனது வயிற்றிலிருந்தும் இவ்வளவு செல்வங்களை படைக்க வல்ல சாய்பாபா இப்படி தங்க கட்டிகளை படைத்து இந்தியாவின் உள்நாட்டு,வெளிநாட்டு கடன் அத்தனையும் அடைத்துவிடலாமே.ஏன் செய்யவில்லை.


தங்கத்தையே வரவழைக்க வல்லவர் பக்தர்களிடம்  பிச்சை எடுப்பது  ஏன். 


கொல்லர் பட்டறையில் தங்க நகை உருவாகும்.மனிதனின் வயிற்றில் என்ன உருவாகும்.சாய்பாபா வயிற்றில் தங்கம் உருவாகிறதென்றால் பெரும்  பொருட்செலவில் கோலார் தங்க வயலில் தேடுவதற்கு பதிலாக சாய்பாபாவை வைத்து வேண்டிய அளவுக்கு தங்கத்தை தேடிகொள்ளலாமே. இந்திய அரசுக்கு இந்த யோசனையை நீங்கள் ஏன் தெரிவிக்கவில்லை.


சாய்பாபா கடவுளின் அவதாரம் என்றால் 50 களில் துள்ளி திரிந்த அவர் கடந்த சிலபல ஆண்டுகளாக தள்ளாமையால் தடுமாறுவது ஏன்.


தனது தள்ளாமையையும் மூப்பையும் சமாளிக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து வரும் ,சமயங்களில் சக்கர நாற்காலியில் வரும் , பாபா பக்தர்களின் குறைகளை தீர்த்து விடுவார் என்பதை நம்ப முடியுமா.
எண்ணிப்பாரீர்.


நமக்கு தெரிந்த இந்த உண்மைகள் நாட்டின் முதன்மருக்கும் மாநில முதல்வர்களுக்கும் தெரியும்தானே. அப்படியிருந்தும் அவர்கள் பாபாவை பணிந்து நிற்பதேன்.இந்த கேள்விக்கு விடை தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.மேற்கண்ட இந்து நாளிதழின் செய்தியிலேயே இதற்கு விடை இருக்கிறது.


அந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெரும்புள்ளிகளின் பட்டியல்.
1.நாட்டின் முதன்மர்.மன்மோகன்.
2.ஆந்திர முதல்வர்.
3.கர்நாடக முதல்வர்.
4.தமிழக துணை முதல்வர்.(பெரியார் இல்லாதது வசதியாக போய்விட்டது .)
5.அண்மையில் மகராட்டிர முதல்வர் பதவியை இழந்த அசோக் சவான்.
6.ஆந்திர ஆளுநர்.
7.பஞ்சாப் ஆளுநர்.
8.திரிபுரா ஆளுநர்.
9.டாட்டா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாட்டா.
10.டி.வி.எசு.நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன்.


இப்படி பெரும்புள்ளிகள் ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏன் ஒன்று கூடவேண்டும். ஓரிரு பிரபலங்கள் போதாதா.உண்மையில் ஆட்சியில் இருப்போருக்கும்,உயர் அதிகாரிகளுக்கும்,பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான வேலைகளை செவ்வனே முடித்து தரும் தரகு வேலையைத்தான் பெரும்பாலான சாமியார்கள் செய்து வருகிறார்கள்.அந்தவகையில் தாங்கள் வேலைகளை சாதித்து கொள்வதற்காகவே பெரும்புள்ளிகள் மடங்களையும் ஆசிரமங்களையும் தேடி வருகின்றனர்.அப்படிப்பட்ட தரகர்களின் முன்னணி வரிசையில் உள்ளவர்கள்தான் சாய்பாபாவும் அவரது அல்லக்கைகளும்.இத்தகைய விழாக்கள் அவர்கள் கூடுவதற்கான ஒரு வாய்ப்பு,ஒரு சாக்கு.


அதனால்தான் பாபா போன்றோரின் குற்றவியல்,பொருளாதார,பாலியல் குற்றங்கள் மூடி மறைக்கப்பட அரசுகள் உடந்தையாக உள்ளன.ஆசிரமத்தில் கொலையே நடந்தாலும் முதல்வர்கள் தொழுது வணங்கும் பாபா மீதோ அவரது அடிவருடிகள் மீதோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறையினருக்கு துணிவு வருமா என்று எண்ணிப்பாருங்கள்.


இப்படியான பின்னணியில்தான் சாய்பாபா அப்பழுக்கற்றவர் போல் நடித்து கடவுளின் அவதாரம் என்று நாடகமாட முடிகிறது.பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெறாதவரை பாபாக்களுக்கு கொண்டாட்டம்தான்.Saturday, April 23, 2011

நடிகை சொர்ணமால்யா என்ற நாகரீகமற்ற மனிதப்பதர்.

இன்று விசய் தொலைக்காட்சியில் ''அது இது எது''என்ற நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.மூன்று நடிகர்கள் பங்கு பெற்று தங்கள் ''அறிவாற்றலை'' வெளிப்படுத்தும் நிகழ்ச்சி அது.நடிகை சொர்ணமால்யா,நடிகர் விசய் ஆதிராச்,மற்றும் ஒரு நடிகை [பெயர் தெரியவில்லை]கலந்து கொண்டனர். நகைச்சுவை என்ற பெயரில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தனர். அதுவல்ல பிரச்னை.

ஒரு கட்டத்தில் ''சேகர் எம்போரியம்'' என்ற துணிக்கடையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்று மூவர் கையில் துணி மூட்டையும் சேலை ஒன்றையும் பிடித்தபடி வந்து நின்றனர்.அதில் இருவர்தான் உண்மையில் அந்த கடையில் பணியாற்றுபவர்களாம்.மூன்றாவது நபர் போலியாம்.அவர் யார் என்று கண்டுபிடித்து சொல்லுமாறு நிகழ்ச்சி நடத்துனர் மூவருக்கும் ''போட்டி''வைத்தார்.மூவரும் ஆளுக்கு ஒருவரை சுட்டிக்காட்டினார்கள். ஏன் அவரை போலி என்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஆளுக்கொரு காரணம் சொன்னார்கள்.சொர்ணமால்யா சொன்ன காரணம். ''அவர் சேலை விற்க வந்தவர் போல் தெரியவில்லை.சேலை திருட வந்தவர் போல் இருக்கிறார்'' என்பதுதான்.


என்ன ஒரு ஆணவமிக்க அகங்காரமான பேச்சு பார்த்தீர்களா.பாவம்,அந்த தொழிலாளி முகம் வாட பரிதாபமாக சிரிக்க முயன்றவாறு நின்று கொண்டிருந்தார்.சக மனிதர் ஒருவரை இவ்வளவு கீழ்த்தரமாக அவமானப்படுத்த அந்த நடிகையால் முடிகிறதென்றால் அவர் மனம் எந்த அளவுக்கு வக்கிரம் பிடித்ததாக இருக்க வேண்டும். காஞ்சி ஆச்சாரியார் கொலை வழக்கில் கைதான போது காவல் நிலைய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி அம்பலப்பட்டு போன இந்த நடிகை உழைத்து பிழைக்கும் ஒரு மனிதனை அவமானப்படுத்த துணிவது குயிலைப் பார்த்து கோட்டான் பழித்த கதையல்லவா.


இறுதியாக அந்த மனிதப்பதருக்கு ஓரிரு சொற்கள்.ஆபாசமாக உடலை காட்டி நடித்து கண்டவரையும் கட்டிப்பிடித்து ஆடி காசு பார்க்கும் உங்களை போன்ற நடிகர் நடிகைகளை விட உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் மடங்கு மேலானவர்கள்.


Thursday, April 14, 2011

வாக்காளர்களை அவமானப்படுத்தும் தேர்தல் ஆணையம்.

பனை ஓலையை வாலில் கட்டி விட்டு வெடி வெடித்து விரட்டிவிடப்பட்ட கழுதையாக புழுதி கிளப்பிய அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை ஓய்ந்து ஒரு வழியாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்துவதாக கூறிக்கொண்டு தமிழ் நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக கிட்டத்தட்ட ஒரு நெருக்கடி நிலை ஆட்சி நடத்திக் கொண்டிருந்த தேர்தல் ஆணையம் ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக இறுதியாக வாக்குப் பதிவு நாளன்று வாக்காளர்களையும் அவமானப் படுத்தியுள்ளது.

பதற்றமான பகுதிகள்,கள்ள வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகள் என பல வாக்குச்சாவடிகளை அடையாளப்படுத்திக் கொண்டு அங்கெல்லாம் வாக்களிக்க வந்தவர்களை வாக்களித்தபின் படப்பிடிப்பு கருவியின் முன் நின்று பெயரை கூற வைத்து படம் பிடித்துள்ளார்கள் தேர்தல் அலுவலர்கள்.காவல் நிலையங்களில் குற்றவாளிகளை படம் பிடித்து கைரேகையை பதிவு செய்வார்கள். வாக்களிக்க வருவது அப்படி ஒரு குற்றவியல் குற்றமா.பெயரோடு உருவத்தையும் பதிவு செய்து வைப்பதற்கு.

வன்முறை நிகழக்கூடும் என்றால் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டியதுதானே.அதை விடுத்து அமைதியாக வாக்களித்து விட்டு திரும்புபவர்களை ''பெயரை சொல்,படப்பிடிப்பு கருவியின் முன் மூஞ்சியை காட்டு ''எனபது எந்த வகையில் பாதுகாப்பை வலுப்படுத்தும்.வாக்களிக்கும் அறைக்குள் கும்பலாக இல்லாமல் தனித்தனியாக வந்த பின் இவர்களது மூன்றடுக்கு முப்பது அடுக்கு பாதுகாப்பை மீறி என்ன வன்முறையை நிகழ்த்திவிட முடியும்.சொல்லும் காரணம் கொஞ்சமாவது அறிவுக்கு பொருத்தமாக இருக்க வேண்டாமா.

கள்ள வாக்கு.இது இன்னுமொரு கோமாளித்தனமான காரணம்.வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு கள்ள வாக்குகளை தடுக்க இது போன்ற நடவடிக்கைகள் தேவை என்று சொல்லும் தேர்தல் ஆணையத்துக்கும் கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்க சொல்லும் ''அறிவாளிக்கும்''என்ன வேறுபாடு இருக்க முடியும்.இது போன்ற ஏற்பாடுகள் அடுத்த தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக,மறைமுகமாக ஒன்றை சொல்கிறார்கள்.மானமுள்ளவர்கள் வாக்களிக்க வராதீர்கள் என்பதுதான் அது.தமிழ் மக்கள் இழிவு படுத்தப்படுவதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.அனைவரும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.


Friday, April 1, 2011

தமிழக தேர்தல் பரப்புரை.நகைச்சுவை துணுக்குகள்.

கூட்டத்தில் ஒருவர்;
 யாருங்க அது.பழைய திரைப்படங்கள்ல யுத்தத்துக்கு போற கதாநாயகன் மாதிரி கவச உடையோட ஒருத்தர் தலைவர் கூட நின்னுகிட்டு கும்பிடு போடுறாரு.

அவரது நண்பர்;
நம்ம தொகுதி வேட்பாளர்தாங்க அது.வேற ஒண்ணுமில்ல.தலைவர் திடீர்னு கோபம் வந்து வேட்பாளர்களை போட்டு அடி பின்னி எடுத்துர்றாராம்.அதுக்குதா  முன்னெச்சரிக்கையா இப்படி ஒரு பாதுகாப்பு.

கட்சிகளின் கொடி, தோரணம் விற்கும் கடைக்காரர் தொலைபேசியில் பேசியது.
உடனே சட்டையில் குத்திக்கற அளவுல கட்சி கொடி தயார் பண்ணி அனுப்புங்க.அதைத்தான் இனிமே தொண்டர்கள் கூட்டங்களில் புடிக்கனுன்னு தலைவர் சொல்லிட்டாராம்.பெரிய கொடிஎல்லாம் விக்க மாட்டேங்குது.அதை புடிச்சுகிட்டு நின்னா கூட்டணி கட்சி தலைவர்கிட்ட  அடி வாங்க வேண்டியிருக்குமோன்னு பயப்படுறாங்க.

திரைப்பட படப்பிடிப்பொன்றில்.

இயக்குனர்;ஏம்ப்பா சண்டைக்காட்சி எல்லாம் ரெண்டு வாரத்துக்கு எடுக்க முடியாதுங்கிற. 

துணை நடிகர் முகவர்;
ஆமாங்க,''டூப்''போடுரவங்கல்லாம் இப்போ தேர்தல் வேலை பாக்குறாங்க.தலைவர்கிட்ட அடி வாங்க வேட்பாளர்கள் அவுங்கள நல்ல சம்பளம் குடுத்து கூடவே வச்சுருக்காங்களாம்.

வானூர்தி ஒன்றில் திரைப்பட சண்டைக்காட்சி பயிற்சியாளர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் சொன்னது.
 தலைவர் தேர்தல் முடியிற வரைக்கும் அவர் கூடவே இருக்கணும்னு என்ன வரச்சொல்லி விட்டார்.நா இல்லாம  அவரால் சரிவர வேட்பாளர்களை அடித்து உதைக்க முடியவில்லையாம்.மக்களுக்கு புடிக்கிற மாறி உதைககும் காட்சிகள அமைச்சு தரணுமாம்.அதா அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.

மேடையில் இரண்டு குட்டி தலைவர்கள் தங்களுக்குள் கிசுகிசுப்பாக;
என்னங்க இது,தலைவர் தவறுதலா எதிரணி தேர்தல் அறிக்கைய போய் படிச்சுகிட்டு இருக்காரு.

அட,விடுங்க பாசு,ரெண்டுலயும் ஒரே மாதிரி ஏமாத்து வேலைதானே  இருக்கு.எத படிச்சா என்ன.

.