Saturday, May 21, 2011

கலைஞரே நீங்களுமா மூட நம்பிக்கையை வளர்ப்பது.

தமிழ் தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகள் ஏராளம்.அதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என காட்டிக்கொள்ளும்  கலைஞர் தொலைக்காட்சியில் இன்று missed call என்ற பேய்ப்படம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.ஈரோட்டுப் பாசறையில் பயின்ற பெரியாரின் மாணவன் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதியின் பெயரில் நடைபெறும் தொலைக்காட்சியில் மக்களிடம் மூடநம்பிக்கையை விதைக்கும் பேய்ப்படங்கள் ஒளிபரப்பாவது என்ன ஒரு நகைமுரண்.

இந்த படம் முன்பொரு முறை ஒளிபரப்பப்பட்ட போது நமது வலைப்பூவில் வெளியான அது குறித்த கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.புத்தம் புதிய பேய்கள்

அண்மையில் ஒரு நாள் இரவு கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க நேரிட்டது. திகில் படம் என்ற பெயரில் பேய் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.கல்வி நிறுவனம் ஒன்றில் பயிலும் ஒரு நண்பர் குழாமை சேர்ந்தவர்களை ஒரு பேய் ஒவ்வொருத்தராக கொலை செய்கிறது.கொல்லப்பட இருக்கிறவருக்கு அவரது அலைபேசியில் தவறிய அழைப்பு /missed call / ஒன்று வருகிறது.அதற்கான  குரல் செய்தியில் அவர் சாகப்போகும் நேரமும் அப்போது நடைபெற உள்ள உரையாடலும் இடம் பெற்றுள்ளன.அவ்வாறே அவர் பேயால் கொல்லப்படுகிறார். 

முற்காலத்தில் மனிதன் கால்நடையாகவும் மாட்டுவண்டியிலும் பயணித்து கொண்டிருந்தபோது சாலை ஓர புளியமரத்தில் குடியிருந்து கொண்டு அவனை மிரட்டி கொண்டிருந்த பேய்கள் இப்போது நகரங்களுக்கு இடம் பெயர்ந்து அலைபேசி முதலான நவீன கருவிகளையும் கையாள துவங்கியுள்ளன.நல்ல முன்னேற்றம்தான்.                                                                              

பேய் என்று ஒன்று உண்மையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காணும் முன் கலைஞரிடம் 
சில 
கேள்விகள் .

ஒரு மாநில முதல்வரான நீங்கள் மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பதை விடுத்து இப்படி மூட நம்பிக்கைகளை வளர்க்க துணை போகலாமா.

பகுத்தறிவு பரப்புரையால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வுக்கு வந்த பெரியாரின் மாணவரான உங்கள் பெயரில் நடைபெறும் தொலைக்காட்சியில் பேய்படம் போடுவது உங்கள் 'நெஞ்சுக்கு நீதி'யாக இருக்கிறதா. 

சரி பேய் இருக்கிறதா என்ற கேள்விக்கு வருவோம்.அகால இறப்பு எய்தியவர்கள்,தற்கொலை செய்து கொண்டவர்கள்,விபத்தில் இறந்தவர்கள் போன்றோர்   பேயாக மாறி உலவுகின்றனர் என்பது மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை.அவை தனியாக மாட்டும் மனிதர்களை ஒரே அறையில் கொன்று விடுமாம்.நாம் கேட்கிறோம்.உயிரோடு இருக்கும் மனிதனே உணவு உட்கொள்வதால் மட்டுமே இயங்கும் ஆற்றலை பெறுகிறான்.செத்து போன பின் எதை தின்று பேயாக உயிர் வாழ்கிறான்.ஒரே அறையில் கொன்று விடும் வலு பேய்க்கு எங்கிருந்து வருகிறது,அவ்வளவு வலுமிக்க பேய் தனியாக இருக்கும் மனிதனிடம் மட்டும் வீரத்தை காட்டுவது ஏன்.இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து இருக்கும் இடத்துக்கு அந்த வீரப்பேய்கள் ஏன் வருவதில்லை.

காரணம் உண்மையில் பேய் என்று உலகில் எதுவும் கிடையாது.மனிதனின் அடிமனதில் தங்கியுள்ள  பேய் குறித்து கேள்விப்பட்ட  கட்டுகதைகள் ஊட்டும் பீதியே சில அசாதாரணமான சூழல்களில் அவனது இதய துடிப்பை இயல்பை விட பன்மடங்கு   கூட வைக்கிறது.அந்த வேகத்தை தாங்க முடியாமல் குருதி குழாய்கள் வெடித்து இறப்பு நிகழ்கிறது.இதுதான் 'பேய் அறைந்து' வந்த சாவு. 

இறுதியாக தமிழக சிற்றூர் ஒன்றில் ஒரு மூதாட்டி பேயை நேரில் பார்த்த உண்மை நிகழ்வை கூறி கட்டுரையை நிறைவு செய்கிறோம்.அதிகாலை நேரம்.இருள் பிரியும் முன்பாகவே தமது புஞ்சை காட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.அக்கம் பக்கம் ஆள் அரவம் ஏதுமில்லை.ஊர் கோடியை தாண்டியவுடன் ஒரு ஒலி.இரும்பு உலக்கையை தரையில் போட்டு உருட்டினாற்போல் பயங்கர ஓசை.ஓசை வந்த திசையில் ஏறிட்டு பார்த்தால் ஒரு ஒற்றை பனை மரத்தின் உச்சியில்  ஒரு மனித உருவம் தொங்கியபடி பாட்டியை நோக்கி கால்களை ஆவேசமாக அசைத்து கொண்டிருந்தது.அலறி அடித்துக்கொண்டு பாட்டி வீட்டுக்கு திரும்பி ஓடினார்.ஓட்டமும் நடையுமாக வீடு வநது சேர்ந்த பாட்டி அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டார்.பாட்டிக்கு பயத்தில் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.இதயம் தொண்டை குழி வரை வநது துடித்தது.அப்படியே கதவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்.அரை மயக்க நிலையில் எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தோம் என பாட்டிக்கே தெரியவில்லை.பாட்டிக்கு மூச்சு சீராகி முழுமையாக தன்னினைவு திரும்பிய போது நன்றாக விடிந்து விட்டிருந்தது.வெளியே ஆள் நடமாட்டமும் பேச்சு குரலும் கேட்க ஆரம்பித்திருந்தது.சற்றே பயம் விலகி பாட்டி வெளியே வந்தார்.ஆள் நடமாட்டம் தந்த துணிச்சலில்   மீண்டும் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அந்த பனை மரத்தை பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்தார்.பனையின் மேல்பகுதியில் இரண்டு பழுத்த மட்டைகள் பிய்ந்து தொங்கிகொண்டிருந்தன.காற்றில் ஆடிய அம்மட்டைகளின்  நுனிப்பகுதியில்  இருந்த ஓலைகள் இரும்பு உலக்கையை தரையில் போட்டு உருட்டினாற்போல் ஓசை எழுப்பி கொண்டிருந்தன.

Friday, May 20, 2011

சாதி,மத வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு.வரவேற்கத்தக்கது.

2011 ஆம் ஆண்டில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி,மத வாரியாக நடத்தப்படும் என தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை நடுவண் அமைச்சர் அம்பிகா சோனி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக நடுவண் அமைச்சரவை எடுத்துள்ள முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்த அமைச்சர் மக்கள் தொகை கணக்கெடுக்கப் படும்போது வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை,குடிமகன்களின் பொருளாதார,கல்வி,சாதி,மதம் முதலான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சமூக நீதி ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதி,மத வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போது நிறைவேறுகிறது.இதன்மூலம் சாதி சங்கங்கள் மனம் போன போக்கில் சொல்லிவந்த அவர்கள் சாதியினர் குறித்த எண்ணிக்கையின் உண்மை நிலவரம் இப்போது தெரிந்து விடும். [சாதி சங்கங்கள் சொல்லிவரும் கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15 கோடியைத் தாண்டும்] இக்கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் வளர்ந்த நிலையோ,பின்தங்கிய நிலையோ துல்லியமாக தெரிய வாய்ப்பிருப்பதால் பின்தங்கியோரை கைதூக்கி விடுவதற்கான திட்டங்கள் வகுத்து செயல்பட ஏதுவாக இருக்கும். 

சமூக ரீதியாக பின்தங்கியோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு எதிராக நஞ்சு கக்கும் பார்ப்பனிய கள்ளப்பரப்புரையை எதிர்கொள்ள சமூக நீதி ஆதரவாளர்களுக்கு இக்கணக்கெடுப்பு பல ஆயுதங்களை வழங்கும். இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பன,மேல்சாதியினருடன் ஒப்பிடுகையில் எந்த அளவுக்கு பின்தங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் கணிசமான பகுதியினரை வருமின் கோரப்பிடியில் சிக்க வைத்துவிட்டு நாடு முன்னேறும் என எதிர்பார்ப்பது வண்டிக்கு பின்னல் குதிரையை கட்டுவதற்கு ஒப்பானது.அந்த வண்டி ஓடவே ஓடாது.அந்த நாடு முன்னேறவே முடியாது.ஆகவே இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் சலுகையல்ல அது அவர்களின் உரிமை என்பதை உரத்து சொல்ல வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்.

மேலும் இந்தியாவில் இசுலாமிய மக்கள் தொகை வெகுவேகமாக பெருகி வருகிறது என்ற சங் பரிவார் கும்பலின் கள்ளப்பரப்புரையையும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முறியடிக்கும் என எதிர் பார்க்கலாம். 

வகுப்புவாத வெறியர்களின் கள்ளப்பரப்புரை எப்படி உள்ளது பாருங்கள்.
முசுலிம்கள் நான்கு மனைவி வரை மணம் முடித்து ஏராளமாக குழந்தை பெற்று கொள்கிறார்கள்.ஒரு மனைவி என்றாலும் நிறைய குழந்தைகள் பெறுகிறார்கள்.

எதார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் இசுலாமியர்கள் இப்படியா இருக்கிறார்கள் என உண்மை நிலவரத்தை அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து பார்க்காமல் இந்த கள்ளப்பரப்புரையை அப்படியே நம்பும் மடமையும் ஒழியலாம்.

ஆக மொத்தத்தில் சாதி,மத வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு.வரவேற்கத்தக்கது.வரவேற்போம். கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.


Wednesday, May 18, 2011

பூனையின் தோழன் பாலுக்கு காவலா. மோடியை கொண்டாடும் செயா மதசார்பற்ற முதல்வரா.

Gujarat Chief Minister Narendra Modi greets Tamil Nadu Chief Minister Jayalalithaa after the swearing-in ceremony in Chennai on Monday.— PHOTO: PTI/ R. Senthil Kumar
உங்க அளவுக்கு முடியாது மோடி.
ஏதோ தமிழ் நாட்டுக்கு ஏற்றமுறையில் 
முசுலிம்களை ஒரு வழி பண்ணிடுறேன்.

செயலலிதா தான் ஒரு அப்பட்டமான பார்ப்பன பாசிச வெறி கொண்ட இந்துத்வா அரசியல்வாதி என அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை.தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு திராவிட அரசியல் பாரம்பரியம் காரணமாக தமது இந்துத்வ கொள்கைகளை வெளிப்படையாக செயல்படுத்த முடியாமல் செயா சற்றே அடக்கி வாசிக்கிறார்.இல்லையேல் அ.தி.மு.க.வை எப்போதோ தமிழகத்தின் சிவசேனாவாக மாற்றி இருப்பார். அப்படி இருந்தும் கூட இந்துத்வா அரசியலை இலை மறைவு காய் மறைவாக கடைபிடிக்க அவர் தயங்குவதில்லை.

அதற்கான சான்றுகள் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.கடந்த இரு பத்தாண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வுகளை சற்றே நினைவு படுத்திப் பார்த்தாலே போதும்.

சான்று.1.பாபர் மசூதி இடிப்புக்கு முன்பாக நடைபெற்ற ''நாட்டு ஒருமைப்பாட்டு அவை''கூட்டத்தில் பாபர் மசூதி வளாகத்தில் கர சேவை நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிய பா.ச.க.அல்லாத அரசியல் கட்சித்தலைவர் ஒரே ஒருவர்தான்.அவர் வேறு யாருமல்ல.''நான் பாப்பாத்திதான் என்னை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது'' என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த செயாவேதான்.

பாபர் மசூதி விவகாரத்தை காட்டி நாடெங்கும் இந்து மத வெறி நஞ்சை விதைக்கும் நோக்கத்துடன் சங் பரிவார் கும்பல் நடத்திய செங்கல் பூசை ஊர்வலம்,அத்வானியின் ரத யாத்திரை காரணமாக நாடெங்கும் முசுலிம்களுக்கு எதிரான கலவரங்கள் நடத்தப்பட்டு பல ஆயிரம் முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.அது குறித்து எந்த மன உறுத்தலும் இன்றி சங் பரிவார் கும்பல் மேலும் வகுப்பு கலவரங்கள் நடத்த ஏதுவாக பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுக்கும் வகையில் கரசேவை நடத்த அனுமதிக்க கோரிய கல்நெஞ்சக்காரர்தான் செயா. 

2.பாபர் மசூதி இடிப்புக்கு தமிழகத்திலிருந்தும் குண்டர்களை திரட்டி அனுப்பியவர்தான் செயா.

3.2002 ஆம் ஆண்டு இந்திய வரலாறு கண்டிராத வகையில் ஒரு மாநில அரசே திட்டமிட்டு நடத்திய வகுப்பு கலவரம்தான் குசராத் முசுலிம் இனப்படுகொலை.அந்த இனப்படுகொலையை தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் தூண்டிவிட்ட மதவெறி நெருப்பின் துணை கொண்டு வெற்றி பெற்றார் கொலைபாதகன் மோடி.அப்போது மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ஓடோடிச்சென்று கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தவர்தான் அன்றைய தமிழக முதல்வர் செயா.அப்போது அவர் பா.ச.க.வுடன் கூட்டணி ஒன்றும் அமைத்திருக்கவில்லை.மாறாக அவரது பிறவி எதிரி தி.மு.க.தான் பா.ச.க.வுடன் கூட்டணி கட்டிக் கொண்டு தில்லியில் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் அவரை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு உந்தித் தள்ளியது எது.வேறென்னவாக இருக்க முடியும் அவரது பார்ப்பனிய இந்து மத வெறியைத்தவிர.


இதன்மூலமாக அவர் தெரிவித்த,தெரிவிக்கும் செய்தி என்ன.


''சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏதுவாக அமைந்தால் இது போன்ற ஒரு முசுலிம் இனப்படுகொலையை எனது அரசு மூலமாக நானும் நடத்துவேன்'' இதுதான் அவரது செய்தி.


4.தமிழகத்தில் செல்லாக்காசாக கிடந்த பாரதிய சனதா கட்சியை 1998 நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணியில் சேர்த்து அக்கட்சிக்கு தமிழகத்தில் ஒரு முகவரி ஏற்படுத்தி கொடுத்தவர் செயலலிதா.சமய நல்லிணக்கத்துக்கு பெயர் பெற்ற தமிழகத்தின் அமைதியை கெடுக்க பா.ச.க என்ற நச்சு செடிக்கு நீர் ஊற்றினார்.

மேலும் செயா ஒரு கபடவேடதாரி என்பதற்கு பா.ச.கவுடனான அவரது உறவும் ஒரு சான்று.1999 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் பிளவு படாத த.மு.மு.க.நடத்திய முசுலிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு செயா ஆற்றிய உரையில் இருந்து சிறுபகுதி இது.

''கடந்த 1998 நாடாளுமன்ற தேர்தலில் பா.ச.க வுடன் கூட்டணி அமைத்து தவறு செய்து விட்டேன்.கருணாநிதியை போல் அன்றி செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் நேர்மையும் எனக்கு உண்டு.அந்த தவறுக்கு பிராயச்சித்தமாக நானே பா.ச.க ஆட்சியை கவிழ்த்து விட்டேன். இனி ஒரு போதும் அ.தி.மு.கழகம். பா.ச.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது.''

இப்படி சொல்லி 1999 நாடாளுமன்ற தேர்தலில் முசுலிம்களின் வாக்குகளை பொறுக்கிக் கொண்ட செயா அதற்கு அடுத்து வந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ச.கவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.இதுதான் செயாவின் அரசியல் நேர்மை.

5.ஆந்திராவில் 2004 சட்டமன்றத் தேர்தலில் முசுலிம்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது காங்கிரசு.அதன்படி அம்மாநில அரசு  இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்த போது அதனை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார் செயலிதா.இதிலிருந்தே அவரது உள்ளத்தில் எந்த அளவுக்கு பார்ப்பனிய இந்து மத வெறி முசுலிம்கள் மீதான வெறுப்பை கொழுந்து விட்டு எரிய செய்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

இந்த செயாதான் இப்போது முசுலிம்களுக்கு கருணாநிதி அளித்துள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடை மேலும் கூடுதலாக்க ஆவன செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து முசுலிம் வாக்குகளையும் பெற்று ஆட்சியை பிடித்துள்ளார்.பாவம்,முசுலிம் மக்கள்.நரியின் நாட்டாமையில் ஆடுகளுக்கு நல்வாழ்வு கிட்டும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். 


6.தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை காட்டுமிராண்டித்தனம் என்று சித்தரித்து அவற்றை அழித்து பார்ப்பனிய அடிப்படையிலான வழிபாடுகளை தமிழ் மக்கள் மீது திணிக்கும் நோக்கத்தில் ''கோவில்களில் ஆடு,கோழி பலியிடுதல் தடுப்பு சட்டம்''கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்தவர்தான் செயலிதா. மேலும் தமிழ் மக்களின் மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுக்கும் வகையில் ''மத மாற்ற தடை சட்டம்'' கொண்டு வந்ததும் அவர்தான். பின்னர் 2004 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காரணத்தால் இந்த சட்டங்களை அவர் திரும்ப பெற்றாலும் இப்போது மீண்டும் மிருக பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் துணிவில் மறுபடியும் இத்தகைய உரிமை பறிப்பு சட்டங்களை கொண்டு வர செயா திட்டமிட்டு கொண்டிருக்கலாம்.யாரறிவார்.அவரது குருநாத ''சோ''வுக்கே வெளிச்சம்.


ஆக.தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் செயலலிதா மோடியின் தமிழக வடிவமே. 


Saturday, May 14, 2011

செயலலிதா ஆட்சி வேறு எப்படி இருக்கும்.மூன்றாம் இருண்ட காலம்தான்.

விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது.செயா தமிழ் மக்கள் மீதான முதல் தாக்குதலை தொடுத்து விட்டார்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக புதிய தலைமை செயலக வளாகத்தை புறக்கணித்து விட்டு மீண்டும் புனித சார்ச் கோட்டைக்கே தலைமை செயலகத்தை மாற்ற செயா ஆணையிட்டுள்ளார் .சரியோ தவறோ கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை கொட்டி புதிய தலைமை செயலக வளாகம் கட்டப்பட்டு விட்டது.பல கோடி உருவாக்கள் செலவில் அலுவலகங்களும் மாற்றப்பட்டு விட்டன.குளிர் பதன வசதிகளுடன் சட்டப்பேரவை கூட்டங்கள் நடத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு பேரவை கூட்டங்களும் நடத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில் பல கோடி உருவாக்கள் மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி மீண்டும் தலைமை செயலகத்தையும் சட்டப் பேரவை கூடுமிடத்தையும் இப்போது மாற்ற வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது,

செயாவின் அகந்தை [ego] மனப்பான்மையும் ''வாசுது'' மீது அவர் கொண்டுள்ள மூடநம்பிக்கையும் ஆட்சியை பிடித்த மறுநாளே மக்கள் வரிப்பணம் பல கோடிகளை பாழாக்குகிறது. இது போன்ற வீணடிப்புகளின் சுமை நாளை மக்களின் தலை மீதுதானே சுமத்தப்படும்.

இந்த சமயத்தில் செயலலிதாவுக்கு நாம் கோரிக்கை ஒன்றை விடுப்போம். புதிய தலைமை செயலக வளாகம் உங்களுக்கு தேவையில்லை என்றால் அதனை சென்னையில் மாட்டு தொழுவங்கள் போன்ற நிலையில் இருக்கும் சேரிகளில் வாழ்வோருக்கும் நடைபாதையில் வாழும் வீடற்ற மக்களுக்கும் இலவச வீடுகளாக கொடுத்து விடுங்கள்.சட்டப்பேரவை கூடங்களை மாநகராட்சி பள்ளிகள் நடத்த கொடுத்து விடுங்கள்.

Friday, May 13, 2011

தமிழக தேர்தல் முடிவுகள்.இனப்பகைவர்கள் வென்றனர்.வீழ்ந்தனர் விபீடணர்கள்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையிலிருந்து தப்பித்து எரியும் அடுப்பில் விழுந்ததை போன்ற நிலையில் தமிழகம் இன்று இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்து அ.தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றி கிட்டியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக பார்ப்பன ஊடகங்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்த ''அம்மாதான் அடுத்த முதலவர்'' ''மாற்றம் தேவை'' போன்ற மிகப்பெரும் ''அறிவார்ந்த'' பரப்புரையில் மயங்கிப் போன தமிழக மக்கள் செயாவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர்.ஏற்கனவே இரண்டு முறை அம்மையாரின் ''பொற்கால''ஆட்சியை தமிழக மக்கள் அனுபவித்திருந்தாலும் அவர்களின் மறதியும் வேறு உருப்படியான மாற்று அணி இல்லாத நிலையும் செயாவின் வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன.

நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கும் பாய்ந்த கதையாக தமிழ்நாடு இதுவரை கண்டிராத அற்புதமான ''குடிமகன்''விசயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்துள்ளார். அவர் ஆக்கபூர்வமான முறையில் மக்கள்நாயக பணியாற்றும் அழகை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் சகித்து கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த வெற்றி யாருக்கு உரியது.

இந்த வெற்றிக்கான பெருமை முழுவதும் கருணாநிதியையே சாரும். ஒப்பீட்டளவில் கடந்த ஐந்தாண்டுகளில் செயாவின் ஆட்சியை காட்டிலும் மேம்பட்ட ஆட்சியை கருணா வழங்கியிருந்தாலும் மக்களை நேரடியாக பாதிக்கும் மின்வெட்டும் விலைவாசி உயர்வும் கருணாவின் காலை வாரிவிட்டுள்ளன.இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல்,குடும்ப ஆட்சி போன்ற மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுத்தாத குற்றச்சாட்டுகளும் சேர்ந்த நிலையில் கருணாவின் தோல்வி தவிர்க்க முடியாததாகிப் போயிருக்கிறது.கருணாவின் தோல்வியே செயாவின் வெற்றியாக மொழிமாற்றம் அடைந்துள்ளது.

இந்த வெற்றியைத்தான் செயா ''திறமையான ஆட்சியை'' இரண்டு முறை வழங்கிய காரணத்தால் மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளனர் என திரிக்கிறார் செயாவின் குருநாதர் குள்ளநரி ''சோ''ராமசாமி.அந்த திறமையான ஆட்சிக்காலங்களின் முடிவில்தான் மக்கள் செயாவை விரட்டியடித்தனர்.அதில் ஒரு தேர்தலில் செயாவே பர்கூர் தொகுதியில் இழிவு தரும் தோல்வியை சந்தித்தார்.செயாவின் ''திறமை''மிகுந்த ஆட்சிக்கு சான்று எம்மிடமும் உள்ளது.2001 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த செயா ''கசானா காலி'' என்று காட்டுக்கூச்சல் போட்டவாறு ஒரேசமயத்தில் பால்விலை,மின்கட்டணம்,பொது விநியோக அரிசி.பேருந்து கட்டணம் என அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பொருட்களுக்கும் விலையேற்றம் செய்தார்.ஒரேநாளில் 4500 கோடிக்கு விலையேற்றம் செய்து தமிழக மக்களை வாட்டி வதைத்தார். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்றான் ஒரு புலவன்.செயாவின் ஆட்சியிலோ கட்டண உயர்வின்றி எந்த ஆண்டும் கடந்து சென்றதில்லை.இதுதான் செயாவின் திறமையான ஆட்சி என்று மக்களை ஏய்ப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் சோ வின்      தலைமையிலான பார்ப்பன ஊடகங்கள்.


மின்வெட்டை காரணமாக காட்டி வாக்குகளை கோரிய செயா மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தை பற்றி எதுவும் பேசுவதில்லை.மின்சாரம் இன்றி உள்நாட்டு தொழில்களை நலிவடைய விட்டுவிட்டு அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் தி,மு.க.அரசின் துரோகத்தை செயா அம்பலப்படுத்தவில்லை. காரணம் அவர் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கப் போகிறது.நம் தாய்நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் மறுகுடியேற்றமாக்கல் [recolonisation] கொள்கையில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வேறுபாடு ஏதுமில்லை.

அடுத்து விலைவாசி.நாட்டை அடிமையாக்கும் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் முதற்கொண்டே விலைவாசியை கட்டுப்படுத்தும் உரிமை மைய,மாநில அரசுகளிடமிருந்து அடகு போய் விட்ட நிலையில் ஒரு மாநில அரசு விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என சொல்வதை விட மோசடியான ஏமாற்று வேலை வேறொன்று இருக்க முடியுமா.


கருணா தமிழினத்தின் விபீடணனாக  மாறி ஈழத் தமிழினத்துக்கும் தமிழகத்துக்கும்  துரோகம் இழைத்திருந்தாலும் பழைய பெருங்காய குடுவையாக தமிழினத்தின் மீது ஓரளவுக்கு பற்று கொண்டு ஆட்சி நடத்தினார்.சிற்றூர்ப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு,தொழிற்கல்வி நுழைவு தேர்வு ரத்து,பேருந்து கட்டணங்களை உயர்த்தாமலே ஓரளவுக்கு போக்குவரத்து துறையை சிறப்பாக நடத்தியது,விலைவாசி உயர்வின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க பொது வழங்கல் துறை மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள்,அரசுப்பணிக்கு ஆள் எடுப்பதை தடை செய்திருந்த செயாவின் முடிவை ரத்து செய்து அரசுப்பணிக்கு ஆள் எடுப்பதன் மூலம் பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியது என நிச்சயம் கருணாவின் ஆட்சி செயாவின் ஆட்சியை விட சிறந்ததாகத்தான் இருந்தது.

ஆனாலும் ஆரிய சூழ்ச்சி மிகத்திறமையாக காய்களை நகர்த்தி கருணாவை சாய்த்து விட்டது.ஆரியத்தின் கரங்கள் காங்கிரசிலும் நடுவண் அரசிலும் செய்து முடித்த சித்து வேலைகள் அ.ராசாவை சிறையிலும் கனிமொழியை நீதிமன்றத்திலும் கொண்டு போய் நிறுத்தி வைத்துள்ளது.அவற்றை எதிர் கொள்ளும் துணிவின்றி காங்கிரசுக்கு பணிந்து குனிந்து கும்பிடு போட்டு நின்ற கருணா மக்கள் மனதில் வாக்குகள் பெற தகுதி அற்றவராக நிலை பெற்று இந்த அவமானகரமான  தோல்வியை சந்தித்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளில் கீழ்நிலை தி.மு.க.வினர் அடித்த கொள்ளைகளை, புரிந்த அட்டூழியங்களை நேரில் கண்ட மக்களின் வெறுப்பும் இந்த தோல்விக்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக உள்ளது.இதில் என்ன கொடுமை என்றால் இந்த கொள்ளைகளும் அட்டூழியங்களும் தொடரவே செய்யும்.செய்பவர்கள் மட்டும் மாறியிருப்பார்கள்.

என் செய்வது.  தமிழரின் முன் வேறு தெரிவு இல்லை.