Friday, May 13, 2011

தமிழக தேர்தல் முடிவுகள்.இனப்பகைவர்கள் வென்றனர்.வீழ்ந்தனர் விபீடணர்கள்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையிலிருந்து தப்பித்து எரியும் அடுப்பில் விழுந்ததை போன்ற நிலையில் தமிழகம் இன்று இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்து அ.தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றி கிட்டியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக பார்ப்பன ஊடகங்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்த ''அம்மாதான் அடுத்த முதலவர்'' ''மாற்றம் தேவை'' போன்ற மிகப்பெரும் ''அறிவார்ந்த'' பரப்புரையில் மயங்கிப் போன தமிழக மக்கள் செயாவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர்.ஏற்கனவே இரண்டு முறை அம்மையாரின் ''பொற்கால''ஆட்சியை தமிழக மக்கள் அனுபவித்திருந்தாலும் அவர்களின் மறதியும் வேறு உருப்படியான மாற்று அணி இல்லாத நிலையும் செயாவின் வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன.

நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கும் பாய்ந்த கதையாக தமிழ்நாடு இதுவரை கண்டிராத அற்புதமான ''குடிமகன்''விசயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்துள்ளார். அவர் ஆக்கபூர்வமான முறையில் மக்கள்நாயக பணியாற்றும் அழகை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் சகித்து கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த வெற்றி யாருக்கு உரியது.

இந்த வெற்றிக்கான பெருமை முழுவதும் கருணாநிதியையே சாரும். ஒப்பீட்டளவில் கடந்த ஐந்தாண்டுகளில் செயாவின் ஆட்சியை காட்டிலும் மேம்பட்ட ஆட்சியை கருணா வழங்கியிருந்தாலும் மக்களை நேரடியாக பாதிக்கும் மின்வெட்டும் விலைவாசி உயர்வும் கருணாவின் காலை வாரிவிட்டுள்ளன.இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல்,குடும்ப ஆட்சி போன்ற மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுத்தாத குற்றச்சாட்டுகளும் சேர்ந்த நிலையில் கருணாவின் தோல்வி தவிர்க்க முடியாததாகிப் போயிருக்கிறது.கருணாவின் தோல்வியே செயாவின் வெற்றியாக மொழிமாற்றம் அடைந்துள்ளது.

இந்த வெற்றியைத்தான் செயா ''திறமையான ஆட்சியை'' இரண்டு முறை வழங்கிய காரணத்தால் மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளனர் என திரிக்கிறார் செயாவின் குருநாதர் குள்ளநரி ''சோ''ராமசாமி.அந்த திறமையான ஆட்சிக்காலங்களின் முடிவில்தான் மக்கள் செயாவை விரட்டியடித்தனர்.அதில் ஒரு தேர்தலில் செயாவே பர்கூர் தொகுதியில் இழிவு தரும் தோல்வியை சந்தித்தார்.செயாவின் ''திறமை''மிகுந்த ஆட்சிக்கு சான்று எம்மிடமும் உள்ளது.2001 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த செயா ''கசானா காலி'' என்று காட்டுக்கூச்சல் போட்டவாறு ஒரேசமயத்தில் பால்விலை,மின்கட்டணம்,பொது விநியோக அரிசி.பேருந்து கட்டணம் என அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பொருட்களுக்கும் விலையேற்றம் செய்தார்.ஒரேநாளில் 4500 கோடிக்கு விலையேற்றம் செய்து தமிழக மக்களை வாட்டி வதைத்தார். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்றான் ஒரு புலவன்.செயாவின் ஆட்சியிலோ கட்டண உயர்வின்றி எந்த ஆண்டும் கடந்து சென்றதில்லை.இதுதான் செயாவின் திறமையான ஆட்சி என்று மக்களை ஏய்ப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் சோ வின்      தலைமையிலான பார்ப்பன ஊடகங்கள்.


மின்வெட்டை காரணமாக காட்டி வாக்குகளை கோரிய செயா மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தை பற்றி எதுவும் பேசுவதில்லை.மின்சாரம் இன்றி உள்நாட்டு தொழில்களை நலிவடைய விட்டுவிட்டு அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் தி,மு.க.அரசின் துரோகத்தை செயா அம்பலப்படுத்தவில்லை. காரணம் அவர் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கப் போகிறது.நம் தாய்நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் மறுகுடியேற்றமாக்கல் [recolonisation] கொள்கையில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வேறுபாடு ஏதுமில்லை.

அடுத்து விலைவாசி.நாட்டை அடிமையாக்கும் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் முதற்கொண்டே விலைவாசியை கட்டுப்படுத்தும் உரிமை மைய,மாநில அரசுகளிடமிருந்து அடகு போய் விட்ட நிலையில் ஒரு மாநில அரசு விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என சொல்வதை விட மோசடியான ஏமாற்று வேலை வேறொன்று இருக்க முடியுமா.


கருணா தமிழினத்தின் விபீடணனாக  மாறி ஈழத் தமிழினத்துக்கும் தமிழகத்துக்கும்  துரோகம் இழைத்திருந்தாலும் பழைய பெருங்காய குடுவையாக தமிழினத்தின் மீது ஓரளவுக்கு பற்று கொண்டு ஆட்சி நடத்தினார்.சிற்றூர்ப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு,தொழிற்கல்வி நுழைவு தேர்வு ரத்து,பேருந்து கட்டணங்களை உயர்த்தாமலே ஓரளவுக்கு போக்குவரத்து துறையை சிறப்பாக நடத்தியது,விலைவாசி உயர்வின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க பொது வழங்கல் துறை மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள்,அரசுப்பணிக்கு ஆள் எடுப்பதை தடை செய்திருந்த செயாவின் முடிவை ரத்து செய்து அரசுப்பணிக்கு ஆள் எடுப்பதன் மூலம் பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியது என நிச்சயம் கருணாவின் ஆட்சி செயாவின் ஆட்சியை விட சிறந்ததாகத்தான் இருந்தது.

ஆனாலும் ஆரிய சூழ்ச்சி மிகத்திறமையாக காய்களை நகர்த்தி கருணாவை சாய்த்து விட்டது.ஆரியத்தின் கரங்கள் காங்கிரசிலும் நடுவண் அரசிலும் செய்து முடித்த சித்து வேலைகள் அ.ராசாவை சிறையிலும் கனிமொழியை நீதிமன்றத்திலும் கொண்டு போய் நிறுத்தி வைத்துள்ளது.அவற்றை எதிர் கொள்ளும் துணிவின்றி காங்கிரசுக்கு பணிந்து குனிந்து கும்பிடு போட்டு நின்ற கருணா மக்கள் மனதில் வாக்குகள் பெற தகுதி அற்றவராக நிலை பெற்று இந்த அவமானகரமான  தோல்வியை சந்தித்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளில் கீழ்நிலை தி.மு.க.வினர் அடித்த கொள்ளைகளை, புரிந்த அட்டூழியங்களை நேரில் கண்ட மக்களின் வெறுப்பும் இந்த தோல்விக்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக உள்ளது.இதில் என்ன கொடுமை என்றால் இந்த கொள்ளைகளும் அட்டூழியங்களும் தொடரவே செய்யும்.செய்பவர்கள் மட்டும் மாறியிருப்பார்கள்.

என் செய்வது.  தமிழரின் முன் வேறு தெரிவு இல்லை.1 comment:

  1. Boss..Summa Karuna irunthappa thenarum balarum tamilnattula pancha mathri pesureenga... ponga boss.. poi polapa parunga... avanga ennaikume namakku soru podaporathu illa.. namma ulaicha namakku sappadu.. ampttuthen... purinjavan puthichali????????

    ReplyDelete