Wednesday, July 27, 2011

சமச்சீர் கல்வி.வெல்லட்டும் மாணவர் போராட்டம்.வீழட்டும் செயாவின் ஆணவம்.ஒழியட்டும் கல்விக் கொள்ளை.

உலகம் இதுவரை கண்டிராத அதிசயமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் புத்தகம் எதுவுமின்றி பள்ளிகள் நடந்து வருகின்றன.புர்ர்ரட்சி தலைவி ஆட்சியல்லவா.இது போன்ற புரட்சிகள் இல்லாமல் போனால்தான் ஆச்சரியம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே மாநில அரசின் கட்டுப்பாட்டில் நான்கு வகையான பாடத்திட்டங்கள் பின்பற்றப் படுகின்றன.இதனை மாற்றி ஒரே வகையான பொது பாடத்திட்டத்தினை அறிமுகப் படுத்தும் முகமாக ''சமச்சீர் கல்வி சட்டம்''தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்டு கடந்த ஆண்டு முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பொது பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.அப்போதே தனியார் பள்ளிகள் என்ற பெயரில் தமிழக மக்களை ஒட்ட சுரண்டி வரும் கொள்ளைக்கும்பல் உச்ச நீதிமன்றம் வரை சென்று சமச்சீர் கல்வியை தடை செய்ய முயன்றதும் நீதிமன்றங்கள் அவர்களை விரட்டி அடித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும்.அதனை தொடர்ந்து இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பொது பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புத்தகங்கள் அனைத்தும் 200 கோடி உருவாக்கள் செலவில் அச்சிடப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளன.

இந்த நிலையில்தான் பார்ப்பன,பாசிச செயா ஆட்சிக்கு வருகிறார். கருணாநிதி எழுதிய பாடப்பகுதிகள் நீக்கப்படும் என செய்திகள் கசிகின்றன.ஆனால் சமச்சீர் கல்வியையே ரத்து செய்து சட்டத்திருத்தம் கொண்டுவந்தார் செயா.மனித உரிமை பாதுகாப்பு மையம்,சமூக ஆர்வலர்கள் அ.மார்க்சு போன்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் செயா மேலும் மேலும் மூக்கறு பட்டதும் அண்மைய வரலாறு.

தனியார் பள்ளி முதலாளிகள் தங்கள் கொள்ளை தடைபடுகிறது என்று சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றார்கள் என்றால் ஆளும் பார்ப்பன கும்பல் பார்ப்பனிய ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய பெரியாரும் திராவிட இயக்க வரலாறும் அந்த பாடத்திட்டத்தில் இடம் பெறுவதால் தடை செய்ய துடிக்கிறார்கள்.

பொது பாடத்திட்டத்தின் கீழ் அரசு வெளியிடும் புத்தகங்களை வாங்குவதற்கு ஒரு மாணவனுக்கு ஓரிரு நூறு உருவாக்கள் போதும். ஆனால் பதின்ம [matriculation] மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தின்படி ஒரு மாணவனுக்கான புத்தகங்கள் வாங்க சில ஆயிரங்கள் வேண்டும்.தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் பேர் இந்த பாடத்திட்டங்களில் படிக்கிறார்கள் என்ற பின்னணியில் எண்ணிப்பார்த்தால் புத்தக விற்பனையில் மட்டும் கல்விக் கொள்ளையர்கள் எத்தனை கோடிகளை கொள்ளையிடுகிறார்கள் என்பது தெளிவாகும்.

ஆளும் பார்ப்பன கும்பல் கருணாநிதியை எளிதாக பாடத்திட்டத்திலிருந்து தூக்கியடிக்க முடியும் என்றாலும் பெரியாரையும் அப்படி தூக்கி எறிந்தால் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டு போவோம்,நமது உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டினாற போல் ஆகி விடும் என்பதால் மொத்தமாக சமச்சீர் கல்வியையே ஊத்தி மூட எத்தணிக்கிறார்கள்.

செயா அரசின் இந்த எதேச்சதிகார போக்கை எதிர்த்து நீதிமன்ற ஆணையிட்டதற்கிணங்க சமச்சீர் புத்தகங்களை வழங்க கோரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர்.மாணவர்களை திரட்டி போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,இந்திய மாணவர் சங்கம் முதலான அமைப்புகளை வாழ்த்தி அவர்கள் போராட்டத்தை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டிய கடமை தமிழ் மக்களின் முன் உள்ளது.ஆகவே மாணவர் போராட்டங்களை ஆதரிப்போம்.

வெல்லட்டும் மாணவர் போராட்டம்.
வீழட்டும் செயாவின் ஆணவம்.
ஒழியட்டும் கல்விக் கொள்ளை.
மலரட்டும் கல்வியில் சமத்துவம்.



Tuesday, July 12, 2011

புர்ர்ரட்சித்தலைவியின் பொற்கால தாக்குதல்.3900 கோடிக்கு வரி உயர்வு.


தமிழக அரசு தமிழகத்தில் விற்பனையாகும் பொருட்களின் மீதான மதிப்பு கூட்டு வரி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.ஏதாவது ஒரு கண்மாயிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக இருந்தால் கூட செயலலிதாவின் பேரில் ஆணை வெளியாவது வழக்கம்.ஆனால் தமிழக மக்களிடமிருந்து 3900 கோடி உருவாக்களை கொள்ளையிடும் இந்த வரி உயர்வை நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

முந்தைய அரசு ஒரு இலட்சம் கோடி கடன் வைத்து விட்டு போயிருப்பதால் அரசு நிதி திரட்டுவதற்கு இந்த வரி உயர்வு ''அவசியம்''என்று இந்த கொள்ளையை நியாயப்படுத்தும் அவர் நான்கு விழுக்காடு வரி விதிக்கப்பட்ட பொருட்கள் மீது இனி ஐந்து விழுக்காடு வரி விதிக்கப்படும்  என்றும் 12 .5 விழுக்காடு விதிக்கப்பட்ட பொருட்கள் மீது 15 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.மேலும் கைப்பேசி முதலான மின்னணு பொருட்கள் மீதான வரி நான்கு விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.இது வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்த துணி விற்பனையின் மீது இனி ஐந்து விழுக்காடு வரி விதிக்கப்படும்.ஆக மொத்தத்தில் 3900 கோடி அளவுக்கு அரசுக்கு கூடுதல் வருமானம் கிட்டப் போகிறது என்று குதூகலிக்கிறது ஆளும் கும்பல்.

ஏற்கனவே கடும் விலை உயர்வினால் வாழ்க்கையை நகர்த்த அல்லாடிக்கொண்டிருக்கும் மக்கள் மீது இந்த வரி உயர்வு மேலும் கடும் சுமையை ஏற்றுகிறது.இந்த வரி உயர்வு மேலும் விலைவாசி உயர்வதற்கே வழி வகுக்கும்.விலைவாசியை குறைப்பேன் என்று சொல்லி வாக்குகள் வாங்கி ஆட்சியை பிடித்த செயா மக்களின் முதுகில் குத்துகிறார்.வரிகள் எதையும் வணிகர்களோ,ஆலை முதலாளிகளோ தங்கள் சொந்த காசை போட்டு கட்டுவதில்லை.மக்களிடமிருந்து வசூலித்துத்தான் கட்டுகிறார்கள்.ஆக இந்த  3900 கோடி பணத்தை மக்களிடமிருந்து வழிப்பறி செய்கிறார் செயா.

ஒரு இலட்சம் கோடி கடன் இருப்பதை காட்டி இந்த பகற்கொள்ளையை நியாயப்படுத்த பல ''பொருளாதாரப் புலிகள்''கிளம்பி இணைய வலைத்தளங்களில் வலம் வருவார்கள்.
பொருளாதார நெறிமுறைகள் [fiscal norms ] பற்றி நமக்கு பாடம் நடத்துவார்கள்.அவர்களுக்கு நமது எளிய விளக்கம்.இப்போது என்ன அரசுக்கு கொஞ்சமாகவா வருவாய் வருகிறது.இருப்பதை கொண்டு சிறப்புற வாழலாம்.செயா புதிய கடன்கள் வாங்காமல் இருந்தாலே போதும்.இருக்கும் வருவாயை கொண்டு எளிதாக இந்த கடன் சுமையை சமாளிக்கலாம்.

தொடர்புடைய பதிவு.
செயலலிதா ஆட்சி வேறு எப்படி இருக்கும்.மூன்றாம் இருண்ட காலம்தான்.
http://thippuindia.blogspot.com/2011/05/blog-post_14.html

Sunday, July 3, 2011

இந்தி படிக்காததால் தமிழினம் இழந்தது என்ன.




எதையும் இழக்கவில்லை.ஆனால் இந்தி படிக்க விடாமல் ஒரு தலைமுறையையே திராவிட இயக்க அரசியல் பாழ்படுத்திவிட்டதாக   ஒரு கள்ளப்பரப்புரை தமிழகத்தில் கமுக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.


பேருந்துக்கு காத்திருக்கும் நேரங்களில்,தொடர் வண்டி பயணங்களில், முதன்மையாக பள்ளிக்கூடங்களில் காத்திருக்கும் பெற்றோர்கள் இடையே இந்த முட்டாள்தனமான வாதத்தை மிகுந்த அறிவாளி போன்ற நினைப்பில் பலரும் உளறிக்கொண்டு இருப்பதை நீங்களும் கேட்டிருக்க கூடும்.


''அரக்கோணம் தாண்டி வட நாட்டு பக்கம் போக முடியல சார்''


''அவன் இங்கிலிசு தெரிஞ்சாலும் இந்திலதாங்க பேசுறான்''


''கருணாநிதி பாருங்க உசாரா பேரப்புள்ளைங்கள இந்தி படிக்க வச்சு சென்ட்ரல் மினிஸ்டர் ஆக்கிட்டாரு''


''நாமதாங்க இந்தி படிக்காம வீணா போயிட்டோம் ''


இது போன்ற பல்வேறு ''அறிவார்ந்த''கருத்துக்களை மழையாக பொழிந்து அவர்கள் சொல்ல வரும் நீதி என்னவென்றால் இந்தி படித்தால் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு உண்டு. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போய் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.வட நாட்டிலிருந்து பொருட்கள் தருவித்து வணிகம் செய்து சம்பாதிக்கலாம்.  


ஆனால் எதார்த்தம் என்னவென்று எண்ணிப்பார்த்தால் இந்த நச்சுப் பரப்புரையை மேற்கொள்ளும் தமிழினப் பகைவர்கள் முகத்தில் வரலாறு கரி பூசிக்கொண்டிருக்கிறது.


வேலை வாய்ப்பை எடுத்துக்கொண்டால் இந்தி படிப்பதன் மூலம் வடஇந்தியாவில் வேலை கிடைக்கும் எனபது ஏமாற்று வேலை.இந்தி பேசும் உ.பி. பிகார் போன்ற மாநிலங்களில் வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும் தலை விரித்து ஆடுகிறது.இந்தியை தாய்மொழியாக கொண்டவனே வேலையின்றி தெருவில் அலையும்போது இந்தி கற்ற தமிழ் இளைஞர்கள் வடமாநிலங்களில் வேலை பெறுவது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக அல்லவா இருக்கும்.


இப்போது தமிழகமெங்கும் வட இந்தியாவை சேர்ந்த இந்தி பேசும் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.கட்டுமான வேலை,சாலை போடுதல், மேம்பாலம் கட்டுதல்,மாநகர தொடர்வண்டி [metro rail] .பல்வேறு தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் அவர்கள் வேலை செய்வதை பார்க்கிறோம்.தங்கள் வேர்வையையும் குருதியையும் சிந்தி நம் தமிழ் மண்ணை வளப்படுத்தும் அந்த தொழிலாள தோழர்களை நாம் நெஞ்சார தழுவி வரவேற்கிறோம்.தமிழினம் அவர்களை தங்களில் ஒருவராகவே ஏற்றுக் கொண்டுள்ளது.உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமல்ல தகவல் தொழில் நுட்பம்,வணிக நோக்கிலான பெரும் மருத்துவ மனைகள், பெரிய கட்டுமான நிறுவனங்கள் போன்ற துறைகளிலும் வட இந்திய மூளை உழைப்பு தொழிலாளர்களை நாம் காண்கிறோம்.அப்படியானால் யார் யாருக்கு வேலை போட்டு கொடுத்திருக்கிறார்கள்.எண்ணிப்பாருங்கள் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பதை விட பெரிய மோசடி எதுவும் இருக்க முடியுமா.


இந்தி படிக்காத இந்த தலைமுறையில் எத்தனை தமிழர்கள் மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் பிழைப்பு தேடி குடியமர்ந்திருக்கிறார்கள்.பள்ளியில் இந்தி கற்காத இவர்கள் இப்போது சரளமாக இந்தி பேசுகிறார்களே எப்படி.அவர்கள் யாரும் தி.நகரில் இருக்கும் ''இந்தி பிரச்சார சபா''நடத்தும் பாடங்களை படித்து தேர்வெழுதி அம்மொழியை கற்றுக்கொள்ளவில்லை.மாறாக வாழ்வியல் தேவைகளே அவர்களுக்கு இந்தியை கற்பித்துள்ளது.இங்கு வந்து வேலை செய்யும் வட நாட்டவர் தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறார்களே.அது போலத்தான். 
வட நாட்டவருடன் வணிகத்தொடர்புக்காக இந்தி கற்பது என்பதும் ஒரு சிலரின் தேவைதான்.அந்த வகையில்தான் பள்ளிகளில் இந்தி கற்காத தமிழர்கள் பலரும் வணிக தேவைகளுக்காக சரளமாக அம்மொழியை பேசும் திறனை தற்போது பெற்றிருக்கிறார்கள்.அதே போல் வட இந்திய வணிகர்கள் பலரும் தமிழ் பேசுகிறார்கள்.தேவை உள்ளவன் இந்தியோ தமிழோ எந்த மொழியையும் கற்றுக்கொள்கிறான்.அதற்காக அனைத்து மாணவர்களையும் இந்தி கற்க சொல்வது பள்ளிக்கல்வியை மேலும் சுமையாக்கும் கயமையல்லவா.தமிழக மக்கள் என்ன இந்தியாவில் இரண்டாந்தர குடி மக்களா.அவர்கள் மட்டும் இந்தி,ஆங்கிலம் என்று இரண்டு அந்நிய மொழிகளை கற்க வேண்டுமா.இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தாய் மொழியுடன் சேர்த்து ஆங்கிலம் என்ற ஒரு அந்நிய மொழியை மட்டும் கற்றுக்கொண்டால் போதும் என்றால் நமக்கும் தமிழுடன் சேர்த்து ஆங்கிலம் மட்டும் போதுமே.


இந்தி படிக்காத இந்த தலைமுறையில்தான் தமிழ் நாட்டு மருத்துவ கல்லூரிகளில் உலகத் தரத்திலான மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.இந்தி படிக்காத காரணத்தினால் தமிழக பொறியியல் உருவாக்கும் பொறியாளர்கள் சோடை போய் விட்டார்கள் என்று சொல்ல முடியுமா.இந்தி படிக்காத கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் இந்தி பேசும் மாநிலங்களை விட கூடுதலாக சாதித்துள்ளது. 


தயாநிதி மாறன் நடுவண் அமைச்சர் ஆகியிருப்பதற்கும் இந்திக்கும் என்ன தொடர்பு.இந்திய அரசியலை பீடித்திருக்கும் வாரிசு அரசியல்தான் அதற்கு காரணமேயன்றி இந்தி ஒரு காரணமேயல்ல.அதனால்தான் ஆங்கிலம்,இந்தி ஆகிய இரண்டு மொழிகளுமே அறியாத அழகிரியும் அமைச்சர் ஆகியுள்ளார்.ஆனால் இந்தியை தூக்கிப் பிடிக்கும் அடிமைப்புத்தி கொண்டோர் அழகிரி அமைச்சர் ஆகியிருப்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.


இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழின பகைவர்கள் கிளப்பிவிடும் ஆதாரமற்ற நச்சுக கருத்துகளை நம்மவர்களும் ஏற்றுக் கொண்டு உளறிதிரிவதுதான் நம்மை வருத்தமுற செய்கிறது.அதுவும் எப்படி.


''நம்ம எப்பவுமே கவர்மென்ட் பசுல போறதில்லைங்க k.p.n. மட்டும்தான்''
இப்படி பெருமை பேசும் அளவுக்கு வசதியாக இருப்பவர்கள்தான், குழந்தையை ஆண்டுக்கு பல ஆயிரம் செலவழித்து மழலையர் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு,குளிர் பதனம் செய்யப்பட்ட தொடர் வண்டி பெட்டியில் அமர்ந்து கொண்டு இந்தி படிக்காத காரணத்தால் பின் தங்கி விட்டதாக வருந்துகிறார்கள்.