Sunday, July 3, 2011

இந்தி படிக்காததால் தமிழினம் இழந்தது என்ன.
எதையும் இழக்கவில்லை.ஆனால் இந்தி படிக்க விடாமல் ஒரு தலைமுறையையே திராவிட இயக்க அரசியல் பாழ்படுத்திவிட்டதாக   ஒரு கள்ளப்பரப்புரை தமிழகத்தில் கமுக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.


பேருந்துக்கு காத்திருக்கும் நேரங்களில்,தொடர் வண்டி பயணங்களில், முதன்மையாக பள்ளிக்கூடங்களில் காத்திருக்கும் பெற்றோர்கள் இடையே இந்த முட்டாள்தனமான வாதத்தை மிகுந்த அறிவாளி போன்ற நினைப்பில் பலரும் உளறிக்கொண்டு இருப்பதை நீங்களும் கேட்டிருக்க கூடும்.


''அரக்கோணம் தாண்டி வட நாட்டு பக்கம் போக முடியல சார்''


''அவன் இங்கிலிசு தெரிஞ்சாலும் இந்திலதாங்க பேசுறான்''


''கருணாநிதி பாருங்க உசாரா பேரப்புள்ளைங்கள இந்தி படிக்க வச்சு சென்ட்ரல் மினிஸ்டர் ஆக்கிட்டாரு''


''நாமதாங்க இந்தி படிக்காம வீணா போயிட்டோம் ''


இது போன்ற பல்வேறு ''அறிவார்ந்த''கருத்துக்களை மழையாக பொழிந்து அவர்கள் சொல்ல வரும் நீதி என்னவென்றால் இந்தி படித்தால் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு உண்டு. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போய் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.வட நாட்டிலிருந்து பொருட்கள் தருவித்து வணிகம் செய்து சம்பாதிக்கலாம்.  


ஆனால் எதார்த்தம் என்னவென்று எண்ணிப்பார்த்தால் இந்த நச்சுப் பரப்புரையை மேற்கொள்ளும் தமிழினப் பகைவர்கள் முகத்தில் வரலாறு கரி பூசிக்கொண்டிருக்கிறது.


வேலை வாய்ப்பை எடுத்துக்கொண்டால் இந்தி படிப்பதன் மூலம் வடஇந்தியாவில் வேலை கிடைக்கும் எனபது ஏமாற்று வேலை.இந்தி பேசும் உ.பி. பிகார் போன்ற மாநிலங்களில் வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும் தலை விரித்து ஆடுகிறது.இந்தியை தாய்மொழியாக கொண்டவனே வேலையின்றி தெருவில் அலையும்போது இந்தி கற்ற தமிழ் இளைஞர்கள் வடமாநிலங்களில் வேலை பெறுவது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக அல்லவா இருக்கும்.


இப்போது தமிழகமெங்கும் வட இந்தியாவை சேர்ந்த இந்தி பேசும் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.கட்டுமான வேலை,சாலை போடுதல், மேம்பாலம் கட்டுதல்,மாநகர தொடர்வண்டி [metro rail] .பல்வேறு தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் அவர்கள் வேலை செய்வதை பார்க்கிறோம்.தங்கள் வேர்வையையும் குருதியையும் சிந்தி நம் தமிழ் மண்ணை வளப்படுத்தும் அந்த தொழிலாள தோழர்களை நாம் நெஞ்சார தழுவி வரவேற்கிறோம்.தமிழினம் அவர்களை தங்களில் ஒருவராகவே ஏற்றுக் கொண்டுள்ளது.உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமல்ல தகவல் தொழில் நுட்பம்,வணிக நோக்கிலான பெரும் மருத்துவ மனைகள், பெரிய கட்டுமான நிறுவனங்கள் போன்ற துறைகளிலும் வட இந்திய மூளை உழைப்பு தொழிலாளர்களை நாம் காண்கிறோம்.அப்படியானால் யார் யாருக்கு வேலை போட்டு கொடுத்திருக்கிறார்கள்.எண்ணிப்பாருங்கள் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பதை விட பெரிய மோசடி எதுவும் இருக்க முடியுமா.


இந்தி படிக்காத இந்த தலைமுறையில் எத்தனை தமிழர்கள் மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் பிழைப்பு தேடி குடியமர்ந்திருக்கிறார்கள்.பள்ளியில் இந்தி கற்காத இவர்கள் இப்போது சரளமாக இந்தி பேசுகிறார்களே எப்படி.அவர்கள் யாரும் தி.நகரில் இருக்கும் ''இந்தி பிரச்சார சபா''நடத்தும் பாடங்களை படித்து தேர்வெழுதி அம்மொழியை கற்றுக்கொள்ளவில்லை.மாறாக வாழ்வியல் தேவைகளே அவர்களுக்கு இந்தியை கற்பித்துள்ளது.இங்கு வந்து வேலை செய்யும் வட நாட்டவர் தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறார்களே.அது போலத்தான். 
வட நாட்டவருடன் வணிகத்தொடர்புக்காக இந்தி கற்பது என்பதும் ஒரு சிலரின் தேவைதான்.அந்த வகையில்தான் பள்ளிகளில் இந்தி கற்காத தமிழர்கள் பலரும் வணிக தேவைகளுக்காக சரளமாக அம்மொழியை பேசும் திறனை தற்போது பெற்றிருக்கிறார்கள்.அதே போல் வட இந்திய வணிகர்கள் பலரும் தமிழ் பேசுகிறார்கள்.தேவை உள்ளவன் இந்தியோ தமிழோ எந்த மொழியையும் கற்றுக்கொள்கிறான்.அதற்காக அனைத்து மாணவர்களையும் இந்தி கற்க சொல்வது பள்ளிக்கல்வியை மேலும் சுமையாக்கும் கயமையல்லவா.தமிழக மக்கள் என்ன இந்தியாவில் இரண்டாந்தர குடி மக்களா.அவர்கள் மட்டும் இந்தி,ஆங்கிலம் என்று இரண்டு அந்நிய மொழிகளை கற்க வேண்டுமா.இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தாய் மொழியுடன் சேர்த்து ஆங்கிலம் என்ற ஒரு அந்நிய மொழியை மட்டும் கற்றுக்கொண்டால் போதும் என்றால் நமக்கும் தமிழுடன் சேர்த்து ஆங்கிலம் மட்டும் போதுமே.


இந்தி படிக்காத இந்த தலைமுறையில்தான் தமிழ் நாட்டு மருத்துவ கல்லூரிகளில் உலகத் தரத்திலான மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.இந்தி படிக்காத காரணத்தினால் தமிழக பொறியியல் உருவாக்கும் பொறியாளர்கள் சோடை போய் விட்டார்கள் என்று சொல்ல முடியுமா.இந்தி படிக்காத கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் இந்தி பேசும் மாநிலங்களை விட கூடுதலாக சாதித்துள்ளது. 


தயாநிதி மாறன் நடுவண் அமைச்சர் ஆகியிருப்பதற்கும் இந்திக்கும் என்ன தொடர்பு.இந்திய அரசியலை பீடித்திருக்கும் வாரிசு அரசியல்தான் அதற்கு காரணமேயன்றி இந்தி ஒரு காரணமேயல்ல.அதனால்தான் ஆங்கிலம்,இந்தி ஆகிய இரண்டு மொழிகளுமே அறியாத அழகிரியும் அமைச்சர் ஆகியுள்ளார்.ஆனால் இந்தியை தூக்கிப் பிடிக்கும் அடிமைப்புத்தி கொண்டோர் அழகிரி அமைச்சர் ஆகியிருப்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.


இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழின பகைவர்கள் கிளப்பிவிடும் ஆதாரமற்ற நச்சுக கருத்துகளை நம்மவர்களும் ஏற்றுக் கொண்டு உளறிதிரிவதுதான் நம்மை வருத்தமுற செய்கிறது.அதுவும் எப்படி.


''நம்ம எப்பவுமே கவர்மென்ட் பசுல போறதில்லைங்க k.p.n. மட்டும்தான்''
இப்படி பெருமை பேசும் அளவுக்கு வசதியாக இருப்பவர்கள்தான், குழந்தையை ஆண்டுக்கு பல ஆயிரம் செலவழித்து மழலையர் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு,குளிர் பதனம் செய்யப்பட்ட தொடர் வண்டி பெட்டியில் அமர்ந்து கொண்டு இந்தி படிக்காத காரணத்தால் பின் தங்கி விட்டதாக வருந்துகிறார்கள்.

10 comments:

 1. அருமையான பதிவு நண்பரே,
  தமிழ் நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்தி படித்து தெரிந்து இருந்தால் யாருக்க்கு வசதி?

  இந்தி பேசு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவருக்கு வாழ்வு எளிதாகும்.தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும்.

  பெங்களுரு, ஹைதராபத்,மும்பை ஆகிய நகரங்களில் பிராந்திய மொழி தெரியாமலேயே ஒருவர் வாழ முடியும்.அது போல் இங்கு வேண்டாம்.தமிழ் நாட்டுக்கு வருபவர் தமிழ் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.அது போல் பிற மாநிலங்களுக்கு பிழைக்க செல்லும் தமிழர்களும் அம்மாநில மொழியை கற்று கொள்ள வேண்டும்.
  நன்றி

  ReplyDelete
 2. இந்தி படிக்காததால் என்னால் கான் (அமீர், சாரு) ஆகியவர்களின் படங்களையும், பச்சன் படங்களையும் பார்க்க முடியவில்லை.
  :)

  ReplyDelete
 3. இந்தி வந்தால் தமிழ் ஒழிந்துவிடும் என்று கதைவிட்டு ஆட்சியை பிடித்து இன்று வரலாறுகாணாத ஊழலைசெய்து நாறி கொண்டிருக்கும் கழகத்தினர் ஆட்சியில்தான் தமிழ் வழி பள்ளிகள் ஒழிந்து மெட்ரிக் பள்ளிகளும்,ஆங்கில தனியார் பள்ளிகளும் நிறைந்து தமிழ் ஒழிந்து போய் விட்டது.இவர்கள் இந்தியை ஒழித்தது தமிழை காக்க அல்ல,ஆங்கிலத்தையும் கல்வி வியாபாரிகளையும் வாழவைக்கத்தான்,என்ன இருந்தாலும் இவர்கள் வெள்ளைக்காரனின் எடுபிடிகள் தானே.

  ReplyDelete
 4. உங்கள் வாதத்தின் பக்கம் நான்!

  ReplyDelete
 5. திராவிட கழகம் -
  பள்ளிகளில் இந்தி திணிப்பை தான் எதிர்த்தே தவிர.....
  இந்தி பேசியவர்களையும்....
  இந்தியை டியூஷன் முறையில் படிப்பதை எதிர்த்ததில்லை...
  என்பதுதான் உண்மை.....

  நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி....

  ReplyDelete
 6. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது பெரிய மோசடி

  ReplyDelete
 7. தமிழ் நாட்டுக்கு வருபவர் தமிழ் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.அது போல் பிற மாநிலங்களுக்கு பிழைக்க செல்லும் தமிழர்களும் அம்மாநில மொழியை கற்று கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 8. //''நம்ம எப்பவுமே கவர்மென்ட் பசுல போறதில்லைங்க k.p.n. மட்டும்தான்''
  இப்படி பெருமை பேசும் அளவுக்கு வசதியாக இருப்பவர்கள்தான், குழந்தையை ஆண்டுக்கு பல ஆயிரம் செலவழித்து மழலையர் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு,குளிர் பதனம் செய்யப்பட்ட தொடர் வண்டி பெட்டியில் அமர்ந்து கொண்டு இந்தி படிக்காத காரணத்தால் பின் தங்கி விட்டதாக வருந்துகிறார்கள்.//

  # யதார்த்தத்திலும் யதார்த்தம்... :)

  ReplyDelete
 9. குடும்பத்துடனோ, பணி நிமித்தமோ அடிக்கடி பல மாநிலங்களுக்கும் செல்வதுண்டு...
  அஸ்ஸாம், ஹிமாச்சல், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், டெல்லி எனப் பல..., எங்குமே, எதற்குமே எந்த தடங்கலும் இல்லாமல் தான் இதுவரை போயிட்டு இருக்கு.

  ஹிமாச்சல்ல உள்ள மண்டின்ற ஒரு இடத்துல ஒரு 80 வயசு முதியவர் கிட்ட ஆரஞ்சு முட்டாய் வேணும்ன்றத புரிய வெச்சு அது எங்க கிடைக்கும்னு அவர் சொன்ன கடைக்கு போற வழியையும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன் இவனுங்க சொல்ற இந்தி படிக்காமலே..!!

  அப்புறம் என்ன ______க்கு இந்தி படின்னு குதிக்கிறானுங்க..!!

  ReplyDelete