Wednesday, August 31, 2011

நிரபராதி தமிழர்கள் மூவரை சாவின் பிடியிலிருந்து விடுவிப்போம். கருணாவின் துரோகத்தையும்,செயாவின் கபட நாடகத்தையும் முறியடிப்போம்.

9 வால்ட் மின்கலம் [Battery cell] இரண்டை வாங்கினார் என்பதை வைத்து ஒருவருக்கு சாவுத்தண்டனை வழங்க முடியும் என்று சொன்னால் அதை உங்களால் நம்ப முடிகிறதா.ஆம்,நண்பர்களே,ராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீதானகுற்றச்சாட்டு 9 வால்ட் மின்கலம் இரண்டை வாங்கி ராசீவ் கொலையாளிகளுக்கு கொடுத்தார் என்பதுதான்.இதுவும்  பொய்யான குற்றச்சாட்டு.

ராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவர் மீதும் குற்றம் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.இந்த வழக்கு கொடும் ஆள்தூக்கி சட்டமான ''தடா''வின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.இந்திய தண்டனை சட்டத்தின்படி காவல் துறையினரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் அளிக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லாது. ஒரு நீதிபதியிடம் அளிக்கும் வாக்குமூலம் மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.ஆனால் தடா சட்டப்படி காவல் துறையினரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஆதாரமாக ஏற்கவேண்டும்.இந்த வழக்கை பொறுத்தவரை காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து மிதித்து துன்புறுத்தி பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் தவிர இவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.இவ்வழக்கின் மேல்முறையீட்டில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம் இவ்வழக்கிற்கு ''தடா''சட்டம் பொருந்தாது என கூறியுள்ளது. இருப்பினும் தடாவின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நீதியா,அநீதியா.


இந்த வழக்கை புலனாய்வு செய்த தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் ''ராசீவை கொன்ற இடுப்புவார் வெடிகுண்டை [Belt bomb] செய்தது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை''என்கிறார். அப்படி யாரென்றே தெரியாத நபரிடம் பேரறிவாளன் மின்கலனை கொடுத்தார் என்பதை மட்டும் ''கண்டு பிடிக்கிறார்கள்''. யாருடன் சேர்ந்து கொலைசதியில் ஈடுபட்டார் என்றே சொல்ல முடியவில்லை.ஆனால் கொலைசதிக்காக சாவுத்தண்டனை வழங்குவேன் என்று சொன்னால் அது நீதியா,அநீதியா. செய்யாத கொலைக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த இந்த அப்பாவி தமிழர்களை,வாழ்வின் வசந்த காலமான இளமை பருவத்தை சிறை கொட்டடியின் இருண்ட மூலையில் தொலைத்து விட்டு நிற்கும் இந்த பரிதாபத்திற்கு உரிய அப்பாவி தமிழர்களை, மீண்டும் ஒரு தண்டனையாக தூக்கில் ஏற்றுவது நீதியா,அநீதியா.

இந்த தீர்ப்பு அநீதியானது.ஆகவே தமிழ் மக்கள் இந்த தீர்ப்பின்படி இந்த நிரபராதிகள் மூவரையும் தூக்கிலிட அனுமதிக்க முடியாது.

கருணாநிதியின் துரோகம்.

இம்மூவரையும் விடுவிக்க வேண்டும் என்று இப்போது வாய்கிழிய பேசும் கருணாதான் 2000 ஆம் ஆண்டு முதல்வர் என்ற முறையில் இவர்களின் கருணை மனுக்களை மறுதலிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார் என்பதை நாம் மறக்கமுடியாது.அப்போது நளினிக்கு மட்டும் தண்டனை குறைப்பு செய்துவிட்டு இம்மூவரையும் கைவிட்டவர்தான் கருணா.செயலலிதா,சோ,சுப்ரமணியசாமி முதலான பார்ப்பன கும்பலின் ''இவர்களுக்கு கருணை காட்ட கூடாது'' என்ற வெறிக்கூச்சல் கொடுத்த அழுத்தத்திற்கு பணிந்து அன்று துரோகம் இழைத்துவிட்டு இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்.அப்போது நளினிக்கு தண்டனை குறைப்பு செய்தததையே எதிர்த்தவர்தான் செயலலிதா என்பதும் மறக்க முடியாதது.

செயலலிதாவின் கபட நாடகம்.

மூன்று தமிழர்களை காப்பாற்றுமாறு தமிழக முதல்வர் என்ற முறையில் செயாவிடம் பலரும் கோரிக்கை வைத்தபோது தனக்கு அதிகாரமில்லை என அப்பட்டமாக புளுகினார் செயா.தூக்கு தண்டனையிலிருந்து ஒரு கைதியை காப்பதற்கு ஒரு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதை தெளிவு படுத்தும் வகையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் V.R.கிருசுன அய்யர் சொல்வது.

''நீண்ட பல்லாண்டு முன்பு இந்தத் திருவனந்தபுரம் நகரத்தில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது... நாங்கள் பதவியேற்ற சிறிது காலத்திற்கெல்லாம் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அவர் பெயர் சி.ஏ. பாலன் என்று நினைவு. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நான் மரண தண்டனையை எதிர்ப்பவன். இந்த பாலன் முன்பே மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அது மறுக்கப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதுவும் மறுக்கப்பட்டது. பிறகு தான் 1957 ஏப்ரலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். உள்துறை அமைச்சர் என்ற முறையில் என்னிடம் இந்த வழக்கு மறுபடியும் கொண்டு வரப்பட்டது. நான் சொன்னேன், இந்த மனிதரைத் தூக்கிலிடக்கூடாது. தூக்கைத் தூக்கிலிடு! இது என் உறுதியான நிலைப்பாடு.
உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் நான் இந்த வழக்கை ஆளுநரின் பார்வைக்கு அனுப்பினேன். பாலனின் மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று எழுதி அனுப்பினேன். இதற்கிடையில் தில்லியிலிருந்து கடிதம் வந்தது. பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் முன்பே நிராகரித்து விட்டதால் ஆளுநர் இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று!
மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் எனக்கு எழுதினார். நான் அவருக்கு விடை எழுதினேன். வழக்கறிஞர், சட்டவியல் அறிஞர் என்ற முறையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருங்கே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் இந்த அதிகாரம் உள்ளது. ஆனால்இந்த அதிகாரம் இப்போதும் தீர்ந்து போய்விடவில்லை. மறுப்பதற்குப் பயன்படுத்திய அதே அதிகாரத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் பயன்படுத்தலாமே! தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பரிந்துரைக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சராகிய எனக்குள்ளது. அந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று வாதிட்டேன். இதையொட்டிப் பெரும் சர்ச்சை எழுந்தது. தூக்கிலிட ஆணையிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உரியது என்பதால் அதை ஆளுநர் மாற்ற முடியாது என்பதற்கு எம்.சி. சத்தல்வாடு என்ற சட்ட வல்லுநரின் கருத்து எனக்கு எடுத்துக் காட்டப் பட்டது. மாற்ற முடியும் என்பதற்கு நான் எங்கள் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.வி.சூர்ய நாராயணய்யாவின் கருத்தைப் பெற்று அனுப்பி வைத்தேன். இது பெரும் சட்ட மோதலும் அரசியல் மோதலும் ஆகிவிட்டது.
நான் இதில் விடாப்பிடியாக உள்ளேன் என்பதை சி.பி.பந்த் பார்த்தார். அன்று நான் இளைஞன், கட்டுக்கடங்காதவன், அவர் அதற்கு ஒரு தீர்வு கண்டார்.
சொன்னார்: கிருஷ்ணய்யர், நீங்கள் எங்கள் பெயரைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கிறோம். மரண தண்டனையைக் குறைக்கும்படி நீங்கள் எனக்கு எழுதுங்கள். நான் அதனை என் பரிந்துரையோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்.
இந்தப் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுவது தவிர குடியரசுத் தலைவருக்கு வேறு வழியில்லை. இப்படித்தான் உள்துறை, சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் என் பதவிக் காலம் தொடங்கியது. குடியரசுத் தலைவரே தூக்கிலிட ஆணையிட்டுவிட்ட ஒருவரின் உயிரை, மரணப் பிடியிலிருந்து மீட்டுவர முடிந்தது. இது ஒரு வரலாற்றுப் பதிவு.''
- ‘மாண்டொழிக மரணதண்டனை’ நூலிலிருந்து.


முதல் நாள் அதிகாரம் இல்லை என மறுத்து எதுவும் செய்ய முடியாது என கை விரித்த செயா மறுநாள் அலறி அடித்துக்கொண்டு மூவரையும் விடுவிக்க வேண்டி தீர்மானம் கொண்டுவர அழுத்தியது தமிழ் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்.தமிழகமே கொந்தளித்து எழுந்து போராடியது. தொடர்வண்டிகள் மறிக்கப்பட்டன,சாலை மறியல்,அரசு அலுவலகங்கள் முற்றுகை,ஆர்ப்பாட்டம்,உண்ணாநோன்பு என தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டது.ஆடி,அரண்டு போனது செயாவின் அரசு.மக்களை ஏய்த்து அமைதிபடுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.ஆனால் அன்றே அந்த தீர்மானத்தின் யோக்கியதையை போட்டு உடைத்தார் நடுவண் சட்ட அமைச்சர்.''இந்த தீர்மானம் யாரையும் கட்டுபடுத்தாது''என்றார்.


ஆகவே நாம் செயாவை கோருவதெல்லாம் கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம்.கிருசுன அய்யர் வழியில் செயல்பட்டு மூன்று அப்பாவி தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான்.அதுவரை தமிழக மக்கள் போராட்டம் ஓயாது.

No comments:

Post a Comment