Tuesday, September 13, 2011

பரமக்குடி.அரசு மூட்டிய தீ.காவல்துறையின் சதிச்செயல்.

Police lathicharge protestors in Paramakudi on Sunday. Photo: L. Balachandar


கடந்த ஞாயிறு அன்று தியாகி இமானுவேல் சேகரன் குருபூசை நடைபெற்ற பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு  தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் உயிரிழந்தனர்.இப்படித்தான் ஊடகங்கள் நமக்கு ''செய்தி''யை வழங்குகிறார்கள்.ஆனால் உண்மை அதுவல்ல இது திட்டமிட்டதொரு படுகொலை. இதை உணர்ந்து கொள்ள எதிர்க்கட்சியினர் கோருவது போல நீதிவிசாரணை எதுவும் தேவையில்லை.நடந்த நிகழ்வுகளை சற்றே சீர் தூக்கி பார்த்தாலே போதும்.  

தியாகி இமானுவேல் சேகரன் குருபூசை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கொல்லப்பட்ட பரமக்குடியில் நடைபெற்று வருகிறது.இது எப்படி துவங்கியது என்று பார்க்கலாம். ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் 30  ஆம் நாள் பசும்பொன்னில் தேவர் குருபூசை நடத்தப்படுகிறது. அந்த விழாவுக்கு தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதியிலிருந்தும் தேவர் சமுதாய மக்கள் பசும்பொன்னுக்கு செல்வது வழக்கம்.அவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வழியில் ஒவ்வொரு ஊரையும் கடக்கும்போது கூச்சலும் கும்மாளமும் தூள் பறக்கும்.தேவர் சமூகம் மட்டுமல்ல,பிற சாதிசங்கங்கள்  நடத்தும் சாதி மாநாடுகளுக்கு செல்வோரும் கூட இதே போன்ற ஆர்ப்பாட்டங்களுடன்தான் செல்வது வழக்கம்.தேவர் சமூகத்திற்கும் தாழ்த்தப்பட்ட் சமூகத்திற்கும் இடையிலான நீண்டகால முறுகல் மற்றும் மோதல்களின் காரணமாக சில தேவர் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழுமிடங்களை கடக்கும்போது அவர்களை இழிவு படுத்தி முழக்கங்கள் எழுப்புவதும் வம்பிழுப்பதும் நிகழ்வதுண்டு.


இப்படியான நிலையில்தான் தாழ்த்தப்பட்டவர்களும் இமானுவேல் சேகரன் குருபூசை நடத்த துவங்கினர்.தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதியாக திகழும் தேவர்களின் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத்தை அச்சமின்றி எதிர்த்து களப்பலியான இமானுவேல் சேகரன் குருபூசை நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதே தலித்களின் ''இனியும் சாதிய அடக்குமுறைக்கு அஞ்சி அடங்கிக் கிடப்பதில்லை''என்ற முடிவை உலகுக்கு அறிவித்தது.அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் பரமக்குடிக்கு குருபூசைக்கு வருவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.அப்படி போவோர் மற்ற சாதியினர் எப்படி ஆர்ப்பாட்டமாக செல்கிறார்களோ அதே போன்று செல்கிறார்கள்.


மற்ற சாதியினரின் ஆர்ப்பாட்டங்களை அமைதியாக ரசித்தும் சகித்தும் பார்க்கும் காவல்துறையும் உயர்சாதி சமூகமும் தாழ்த்தப்பட்டவர்களின் ஆர்ப்பாட்டங்களை எரிச்சலுடன் பார்க்கிறார்கள்.''பள்ளு,பறைக்கெல்லாம் வந்த வாழ்வை பார்,என்னா திமிரு இவனுங்களுக்கு''என்ற மேல்சாதியின் பொருமல்தான் காவல்துறையின் சதியாக உருவெடுத்து ஆறு தலித்களின் உயிரை குடித்துள்ளது.


நாம் இதை ஏதோ வாய் புளிச்சதோ,மாங்காய் புளிச்சதோ என்ற வகையில் கூறவில்லை.எண்ணிப்பாருங்கள்.சான்பாண்டியனை திடீரென்று இந்த குருபூசையில் மட்டும் கலந்து கொள்ளவிடாமல் தடுத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது.


அவர் இதற்கு முன்னால் பரமக்குடியில் குருபூசையில் கலந்து கொண்டபோது ஏதேனும் கலவரம் நடந்துள்ளதா.இல்லையே. 


சரி இந்த ஆண்டு நிலைமை சரியில்லை என்றால் முதல் நாளே அவரை கைது செய்திருக்கலாமே.குருபூசை நாள் வரை காத்திருந்து அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் குவிந்த பின் கைது செய்தது ஏன்.


குருபூசை நாள் அன்று சான்பாண்டியனை கைது செய்தால் பரமக்குடியில் குவிந்திருக்கும் தாழ்த்தப்பட்டோர் அவரை விடுதலை செய்ய கோரி போராடுவார்கள்.அவர்கள் ஏடாகூடமாக எதையாவது செய்யட்டும்.நாம் மொத்தமாக கணக்கு தீர்த்து விடலாம் என்பதே காவல்துறையினரின் சதித்திட்டம்.தென்மாவட்டங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. தேவர்களின் கட்சி எனபது ஊரறிந்த கமுக்கம்.அந்த அ.தி.மு.க. செயலலிதாவின் பிடியில்,அந்த செயலலிதா கள்ளர் இனத்தை சேர்ந்த சசிகலா நடராசனின் பிடியில் என்ற நிலையில் தமது பதவிக்கு ஆபத்து ஏதுமிருக்காது என்ற துணிச்சலில்தான் காவல்துறை இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியிருக்கிறது.Police resort to lathicharge to disperse a mob in Paramakudi on Sunday. — Photo: L. Balachandar


இந்த படத்தை பாருங்கள்.பொதுவாக கலவரத்தை கட்டுபடுத்த தடியடி நடத்தும் காவல்துறையினர் அந்த இடத்தில் யாரையும் நிற்க விடாமல் அடித்து விரட்டுவதுதான் வழக்கம்.கேட்டால் 144 போடப்பட்டுள்ளது, நான்கு பேருக்கு மேல் கூடி நின்றால் அடிதான் என்பார்கள்.ஆனால் படத்தில் பொதுமக்கள் கைகளை கட்டிக் கொண்டு நின்றபடி காவல்துறையினரின் தாக்குதலை வேடிக்கை பார்க்கிறார்கள்.அவர்கள் மேல்சாதியினராக இருக்க கூடும்.அந்த அளவுக்கு காவலர்கள் போராடும் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் குறி வைத்து தாக்கி விரட்டுகிறது.அப்படிப்பட்ட காவல்துறை போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களை தாக்கி தீ வைக்குபோது எங்கே போனது.இதைத்தான் நாம் சதி என்கிறோம்.வேண்டுமென்றே போராடுபவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை ஆத்திரமூட்டி விட்டு அவர்கள் தவறு செய்ய ஏதுவாக நிகழ்விடத்திலிருந்து சற்று நேரம் விலகி இருந்திருக்கிறது காவல்துறை.பின்னர் சுட்டிக்காட்டி நியாயப்படுத்தி கொள்ள போராடுபவர்களின் தீவைப்பு நிகழ்ந்தவுடன் துப்பாக்கி சூடு நடத்தி ஆறு தாழ்த்தப்பட்டவர்களின் உயிரை குடித்திருக்கிறது.


இது சதிதான் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம் மதுரையில் நடந்த துப்பாக்கி சூடு.குருபூசைக்கு சென்றவர்களின் வாகனத்தை மறித்து எந்த ஒரு எச்சரிக்கையும் அளிக்காமல்,தடியடி,கண்ணீர் புகை குண்டு வீச்சு எதுவும் நடத்தாமல் [அதாவது தலித்கள் ஏதேனும் வன்முறையில் ஈடுபட்டிருந்தால்,ஆனால் மதுரையில் வன்முறை நிகழ்வு எதுவும் நடக்கவில்லை] எடுத்த எடுப்பிலேயே காவல்துறை துப்பாக்கியால் சுட்டு இருவரை கொல்ல முயன்றிருக்கிறது.


ஆக மொத்தத்தில் தமிழகத்தில் நடைபெறுவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறை ஆட்சி என்பதையும்,இந்த நாட்டில் சாதிவெறி எங்கெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதையும் தமது குருதியால் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்து விட்டு களப்பலியாகியுள்ளனர் அந்த ஆறு தலித்கள்.தமிழினத்தை சாதியத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்க    என்ன செய்ய போகிறீர்கள்.இதுதான் காலம் நம் முன் வைத்திருக்கும்  கேள்வி.
1 comment:

  1. இந்த இணைப்பை பாருங்கள் https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNmQ0&hl=en_US&pli=1 இவர்கள் எல்லாம் மனிதர்கள் .... யோசியுங்கள் மக்களே ....

    ReplyDelete