Tuesday, November 29, 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு.பகற் கொள்ளைக்கு பட்டு கம்பள வரவேற்பு.காலம்.பா.ச.க.ஆட்சிக்காலம்.
இடம். மாநிலங்களவை.


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து விவாதம் தூள் பறக்கிறது.பா.ச க,அரசு அந்நிய முதலீட்டை அனுமதிக்க எத்தணிக்கிறது.தாடியும் தலைப்பாகையுமாக ஒரு முதியவர் அரசின் கருத்தை கடுமையாக எதிர்த்து பேசுகிறார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பா.ச.க அரசு தனது முயற்சியை கை விட்டு பின்வாங்குகிறது.


காலம்.2011  
இடம்.அதே நாடாளுமன்ற வளாகம்.


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என காங்கிரசு கயவாளி கும்பல் முடிவெடுத்ததை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கிறது பா.ச.க. அதே தாடிக்காரர் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை சமாதனப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கிறார்.


ஆம்.நண்பர்களே அந்த தாடிக்காரர் நமது முதன்மர் மன்மோகன்தான்.இன்று எதிர்ப்பதாக நாடகமாடும் பா.ச.க சந்தர்ப்பம் கிடைத்தால் எத்ததைய துரோகத்துக்கும் தயங்காது என்பதை அதன் கடந்த கால ஆட்சியே சான்றாக இருக்கிறதல்லவா.எப்பேர்ப்பட்ட நயவஞ்சகர்களிடம் நாடு சிக்கிக் கொண்டுள்ளது,பார்த்தீர்களா.


நாட்டை ஏகாதிபத்திய நாடுகளிடம் அடிமையாக்கி,பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சூறையாடி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கொள்ளையடிக்க அடிகோலும் இந்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எனும் ஆபத்தை அரசியல் கட்சிகளை நம்பியிராமல் மக்களே போராடி வீழ்த்த அணி திரள வேண்டிய தருணமிது.

Monday, November 14, 2011

எண்ணியல்,பெயரியல்.ஏமாளிகளின் புகலிடம்.எத்தர்களின் உறைவிடம்.

நேற்று விசய் தொலைக்காட்சியில் ஒரு அருமையான நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. நீயா நானா எனும் தலைப்பிலான அந்நிகழ்ச்சியில் எண்ணியல் [எண் கணிதம்] ,பெயரியல் குறித்து விவாதம் நடந்தது.அவற்றை நம்புபவர்கள் ஒரு புறமும் நம்பாதவர்கள் மறுபுறமுமாக நின்று வாதிட்டனர்.


எண்ணியல்,பெயரியல் என்ற பெயரில் நடத்தப்படும் மோசடியை ஒரு கட்டத்தில் மிக அருமையாக தோலுரித்து காட்டினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்.இந்த எண்ணியல்,பெயரியல் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது என்று அவர் கேட்டபோது இந்த மூடத்தனத்தின் ஆதரவாளர்களால் அண்மைக்கால நூல்களையே ஆதாரமாக காட்ட முடிந்தது.அதை வைத்து இந்த இயல்களின் வயது 60 தானா அவர் கேட்டபோது திணறிப்போன அவர்கள் ஏதேதோ பழங்கால நூல்களை சொல்லி சமாளிக்க முயன்றனர்.ஆனாலும் திறந்த மனதோடு எண்ணிப்பார்க்கும் எவரும் எண்ணியல்,பெயரியல் என்பவையே கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகத்தான் மக்களிடையே பெயர் பெற்றுள்ளன என்பதை உணர முடியும்.


 வாசுது,அதிருசுடம்.நல்ல நேரம்,கெட்ட நேரம்,சாதகம்,சோதிடம், ராசி,அந்த இல்லாத ராசியை வளைத்துப்பிடித்து பைக்குள் போட்டுக்கொள்ள ராசிக்கல்,ராசிவண்ணம்,சூலம்,அட்டமி,நவமி.என மக்களிடையே மண்டிக்கிடக்கும் அறியாமை இருளை பயன்படுத்தியே இந்த எண்ணியல்,பெயரியல்  பெருச்சாளிகள் தமிழ் சமூகத்தினுள் நுழைந்து விட்டனர் என்பதுதானே உண்மை.


 எண்ணியல்,பெயரியல் ஆதரவாளர்கள் திரும்ப திரும்ப சொன்னதும் தங்கள் தரப்பை மெய்ப்பிக்க ஆதாரமாக காட்டியதும் ஒன்றே ஒன்றுதான்.பிறந்த தேதிக்கேற்ப ராசியான எண் தரும் வகையில் பெயர் வைத்துக்கொண்டால் அல்லது பெயரை மாற்றிக்கொண்டால்  வாழ்வில் முன்னேற்றம் நிச்சயமாம்.இந்த வாதத்திற்கு மகுடம் சூட்டுவது போல் அவர்கள் தரப்பு சிறப்பு விருந்தினர் ''shelvi'' [ஆண்தான்,புனைபெயராம்] தனது தாமோதரன் என்ற பெயரை இப்படி மாற்றிக்கொண்ட பின் தனக்கு புகழும் பணமும் கிடைத்ததாக கூறினார். [இப்படி மக்களை ஏய்த்து பிழைப்பதால் கிடைப்பது ''புகழ்'' என்று சொன்னால் புகழ் என்ற சொல்லே இழிவு பட்டு போகும்].நாம் சொல்கிறோம்,தாமோதரன் பெயரும் புகழும் பெற்றதுக்கு காரணம் மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளே காரணமேயன்றி பெயர் ஒரு காரணமேயல்ல.அவர் எந்த பெயரை புனை பெயராக வைத்துக் கொண்டிருந்தாலும்  இதுதான் நடந்திருக்கும்.எண்ணிப்பாருங்கள்,மூடநம்பிக்கைகள் குறைவான ஒரு சமூகத்தில் இவர் இப்படி பேர் வாங்கியிருக்க முடியுமா.


அந்த செல்வி தனது வாதத்தை துவக்கும்போதே ஒரு மனிதனுக்கு தன் விருப்பபடி பெயர் வைத்துக் கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் உரிமை உண்டு என்றார்.அத்தோடு விட்டாரா,அப்படி பெயரை மாற்றிக் கொள்பவர் அதன் பின் வாழ்வில் முன்னேற்றம் காண்பாராயின் அதற்கு அவரது உழைப்பும் முயற்சியும் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் அவரது பெயர் மாற்றமே முதன்மையான காரணம் என ஏன் நாங்கள் நம்ப கூடாது என ஒரு ''அறிவார்ந்த''கேள்வியையும் எடுத்து விட்டார்.போதாதா கூடியிருந்த மூடர்களுக்கு.சிரிப்பும் மகிழ்ச்சியுமாக கைதட்டல் தூள் பறந்தது.அடுத்து சில வினாடிகளிலேயே அவர்கள் முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு அருமையான வாதத்தை எடுத்து வைத்து மூட நம்பிக்கையின் முதுகெலும்பை முறித்தார் எதிர்த் தரப்பு சார்பாக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த சுப.வீரபாண்டியன்.


அவரது சொற்களிலேயே அதனை பார்க்கலாம்.''உங்கள் விருப்பபடி பெயர் வைக்கவும் மாற்றவும் உங்களுக்கு உரிமை உண்டு.மறுக்கவில்லை நாங்கள்.அதனால் நீங்கள் முன்னேற்றம் அடைவதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அந்த நம்பிக்கையிலும் நாங்கள் தலையிடவில்லை.ஆனால் அதை அறிவியல் என்று சொல்வதை நாங்கள் மறுக்கிறோம்.அறிவியல் என்றால் அதனை மெய்ப்பித்து காட்டவேண்டும்.பெயர் மாற்றம் நிச்சயம் முன்னேற்றம் தரும் எனபது மெய்ப்பிக்கப்படாதது.ஆகவே அது அறிவியல் அல்ல.வெறுமனே உளவியல் சம்பந்தப்பட்டது அது.''


அதுவரை அறிவியல் என்றும் கணக்கு தவறாது என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த   மூடநம்பிக்கை ஆதரவாளர்கள் வாயடைத்து போயினர்.ஆம் மெய்ப்பிப்பது எனபது கனவில்  வேண்டுமானால் நடக்கலாம்.நனவில் நடக்காதே.


சுபவீயின் ஒரு கருத்தில் நாம் வேறுபட வேண்டியுள்ளது.எண்ணியல்,பெயரியல் வல்லுனர்களின் ஆலோசனைபடி பெயரை மாற்றிக்கொள்வதால் நன்மைகள் விளையும் என்ற நம்பிக்கையில் நாம் தலையிடவேண்டியிருக்கிறது.அதற்கான உரிமை சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களுக்கு இருக்கிறது.பெயரியல் ''பேராசான்''களுக்கும் ,எண்கணித ''மேதை''களுக்கும் அள்ள அள்ள குறையாத செல்வச்சுரங்கமாக இருக்கும்  பெயர் மாற்றமும் அதன் நன்மைகளும் குறித்த நம்பிக்கை ஒரு தனிமனிதரோடு முடிந்து விடுவதில்லை.அது ஒரு அறிவியல் என பம்மாத்து செய்யும் கயவர்கள் வலையில் சிக்கும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர்,அவரைப் பார்த்து மற்றொருவர் என சமூகம் முழுவதும் பரவுகின்ற நோய் அது.ஆகவே அந்த நோய் தாக்குதலை தடுக்க அது முழுக்க முழுக்க மூடநம்பிக்கை என எடுத்துச் சொல்லும் கடமை நமக்கு உண்டு.


தொடர்புடைய எமது பதிவுகள்.


எண்களே யாதுமாகி நிற்குமா?http://thippuindia.blogspot.com/2010/10/blog-post_20.html


சோதிடக்கலை அறிவியலா?   http://thippuindia.blogspot.com/2010/09/blog-post_05.html
புத்தம் புதிய பேய்கள்  http://thippuindia.blogspot.com/2010_08_01_archive.html
சாய்பாபா சாவு.''கடவுள்''தோற்றார்.இயற்கை வென்றது. http://thippuindia.blogspot.com/2011/04/blog-post_24.html 


Monday, November 7, 2011

தமிழினத்தின் புதிய விபீடணன் அப்துல் கலாம்.

மரங்களை வெட்டிச்சாய்க்கும் கோடரியின் காம்பு ஒரு மரத்தால் ஆனது எனபது எத்தகைய குரூரமான உண்மை.அதே வகையில் கூடங்குளம் அணு உலையை மூடி தங்கள் உயிரையும் வருங்கால சந்ததியினரின் உயிரையும் பாதுகாக்க கோரி போராடும் தமிழக மக்களை ஏய்த்து அணு உலையை இயங்க வைக்க இந்திய ஏகாதிபத்தியம் செய்து வரும் பல்வேறு நரித்தந்திரங்களில் ஒன்றாக இப்போது முன்னாள் அரசவை கோமாளி அப்துல் கலாம் களமிறக்கப் பட்டுள்ளார்.


ஆம்,நண்பர்களே,சாக்கடையை சீர்படுத்தி கொசுவை கூட ஒழிக்க வக்கற்ற இந்தியா 2020 -ல் வல்லரசாக உருவெடுக்கும் என பிதற்றி வருபவரை ''கோமாளி''என சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது.

இந்த அதிமேதாவி நேற்று காலை கூடங்குளம் அணு உலையை பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ''ஆய்வு'' செய்தாராம்.அரை நாளிலேயே தமது ''ஆய்வை''நிறைவு செய்த கலாம் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து ''கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது''என சான்றிதழ் கொடுத்துவிட்டு வந்த வேலை முடிந்தது என கிளம்பி விட்டார்.

இந்தியாவின்  அணு ஆயுத உற்பத்தியிலும் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை  உருவாக்குவதிலும் பெரும்பங்கு வகித்த,அணு ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக நாடகமாடி உண்மையில் அணு குண்டுகளை செய்து குவிக்கும் இந்திய அரசின் அரசுத்தலைவராக இருந்த ஒருவர்,அப்பட்டமான ஒரு அணு ஆயுத வெறியர்  வேறு எப்படி சொல்வார்.அவரது கூடங்குளம் வருகைக்கு முன்பே அவரது ''சான்றிதழ்'' எப்படி இருக்கும் எனபது நாம் அனைவரும் அறிந்ததே.


அணு உலைகள் மின் உறபத்திக்காகவா,அணு குண்டு உறபத்திக்காகவா.

அணு உலைகள் பெரும் பொருட்செலவில் நிறுவப்படுவது மின் உற்பத்திக்காக என்று நம்மை நம்பச் சொல்கின்றது இந்திய ஆளும் கும்பல்.ஒரு எளிய கேள்வி இந்த பித்தலாட்டத்தை தோலுரித்து விடும். இரண்டு முறை அணு குண்டுகளை வெடித்து சோதனை செய்துள்ளது இந்திய அரசு.சோதனை நடந்தது தார் பாலைவனத்தில் பொக்ரான் என்ற இடத்தில் என்று நமக்கு தெளிவாக அறிவித்த அரசு அந்த அணு குண்டுகளை எங்கு,எப்போது செய்தோம் என்பதை தெரிவிக்கவில்லையே. ஏன். எங்கே செய்திருப்பார்கள் எனபது ஊரறிந்த கமுக்கம்.வேறு எங்கே செய்ய முடியும்.கலாம் ஏற்றிப் போற்றும் அணு உலைகளில்தான். மின் உற்பத்தி என்ற போர்வையில் அணு உலைகள் அணு குண்டு செய்யவே பயன்படுத்தப் படுகின்றன என்பது இதிலிருந்தே தெளிவாகவில்லையா.


அணு உலையின் முதன்மை விளைபொருள் அணுகுண்டே.பக்க விளைபொருளே மின்சாரம்.


அணு உலைகளின் முதன்மையான விளைபொருள் எதுவென புரிந்து கொள்ள அவற்றின் செயல்பாட்டை சுருக்கமாக பார்ப்போம்.  இயற்கையாக கிடைக்கும் யுரேனிய தாதுவை அணு உலைகளில் செறிவூட்டி யுரேனிய  அணுக்களை அணுப்பிளவு [fission] செய்வதன் மூலம் .ப்ளுட்டோனியம்  உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த புளுட்டோனியம்தான் அனுகுண்டுகளுக்கான மூலப்பொருள்.

இந்த மூலப்பொருளை உருவாக்குவதற்கான அணுப்பிளவின் போது மிகுந்த வெப்பம் வெளிப்படுகிறது.அதை தணிக்காவிட்டால் யுரேனியம் வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனை உருக்கி பெரும் கதிரியக்க விபத்தை ஏற்படுத்திவிடும்இதுதான் புக்குசிமாவில் நடந்தது. வெப்பத்தை தணிப்பதற்காக அந்த கொள்கலனில் மீது குளிர்ந்த நீர் பாய்ச்சப் படுகிறது.அந்த நீர் வெப்பத்தினால் நீராவியாக மாறி வெளியேறும் பாதையில் மின்னாக்கியின் சுழல் சக்கரங்களை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படியாக அணுகுண்டு செய்வதற்கான ஏற்பாட்டையே மின் உற்பத்தி என மாய்மாலம் செய்கிறது இந்திய அரசு.

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானதா.

கூடங்குளம் என்றில்லை,உலகின் எந்த ஒரு அணு உலையும் பாதுகாப்பானது அல்ல.இதை அமெரிக்காவின் மூன்று மைல் விபத்தும், ருசியாவின் செர்நோபில் விபத்தும் காட்டியுள்ளன.எல்லாவற்றுக்கும் மேலாக சப்பானின் புகுசிமா விபத்து அணு உலைகள் பாதுகாப்பு குறித்த அத்தனை பிரமைகளையும் தகர்த்து விட்டது.

கூடங்குளம் பகுதிக்கு நிலநடுக்கம்,ஆழிப்பேரலை போன்ற அபாயங்கள் குறைவு என திருவாய் மலர்ந்துள்ளார் நவீன விபீடணன் கலாம்.மேலும் அணுக்கழிவுகள் கடலில் கொட்டப்படாது,அவை ஆழ குழி தோண்டி புதைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர் ஒரு உண்மையை சேர்த்து சொல்லியிருந்தால் அவரது அறிவு நாணயத்தை பாராட்டலாம்.அந்த கழிவுகள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என்பதை அவர் சொல்லாதது ஏன்.[சொல்லியிருந்தால் மக்கள் அவர் முகத்தில் காறித் துப்பியிருப்பார்கள்]

வெறும் முப்பது ஆண்டுகள் சில ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக பல்லாயிரம் ஆண்டுகள் கதிரியக்க அபாயத்தை தமிழக மக்கள் சுமக்க வேண்டுமா.இந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளில் ஒரு முறை கூட நிலநடுக்கமோ,ஆழிப்பேரலையோ கூடங்குளம் பகுதியை தாக்காது என்று எந்த முட்டாளும் உறுதி அளிக்கமாட்டான்.ஆனாலும் வாய்ப்பு குறைவு என கூறும் கலாமை எப்படி அழைப்பது என நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு ஆழ்குழி பெட்டகம் பாதிக்கப்படுமானால் தமிழக மக்களின் கதி என்ன எண்ணிப் பார்க்கும் மனசாட்சியுள்ள எவரும் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க மாட்டார்கள்.

பெரும் முதலீடு செய்தபின் கூடங்குளம் அணு உலையை மூடக் கோருவது நியாயமா.

ஒரு நாட்டின் இறையாண்மை எனபது அந்த நாட்டின் மக்களிடமிருந்துதான் பிறக்கிறது.அந்த இறையாண்மையின் பெயரால்தான் இந்திய அரசு கொள்கை மற்றும்  திட்ட முடிவுகளை எடுக்கிறது.அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு என்ன தேவை எது தேவையில்லை என முடிவு செய்யும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. மேலும் அணு உலை குறித்த கருத்தாக்கங்களை புகுசிமாவுக்கு முன், புகுசிமாவுக்கு பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது அந்த விபத்து.ஆகவே கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் கூடங்குளம் அணு உலையை தமிழக மக்கள் மூடக் கோருவது நியாயமானதுதான்.மக்களின் உயிரை விட பணம் பெரிதா என்ன.

அணு ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து விடுமா.

அணு ஆயுதங்கள் இரண்டாம் உலகப் போருக்கு பின் பயன்படுத்தப் பட்டதில்லை.பெரும் நாசம் விளைவிக்கும் அவற்றை பயன்படுத்தவும் மனித சமூகம் அனுமதிக்காது.நாய் பெற்ற தெங்கம் பழத்தை போல உருட்டி கொண்டிருப்பதற்காக ஏன் அணு குண்டுகளை செய்ய வேண்டும்.அணுகுண்டு வைத்திருந்தால் எதிரி நாடுகள் நம் மீது தாக்குதல் தொடுக்க அஞ்சும் என்பதும் கற்பனைதான்.1998 பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு பின்னர்தான் 1999 ல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதியின் கார்கில் மலைக் குன்றுகளை பாக்கிசுத்தான் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது.அண்டைநாடுகளுடன் சமாதான சக வாழ்வை கடைப்பிடிப்பதுதான் பாதுகாப்பை உறுதி செய்யும்.

ஆகவே இந்தியா வல்லரசு கனவில் அணுஆயுதங்களை செய்து குவிக்க தமிழகத்தை சுடுகாடாக்குவதை அனுமதிக்க முடியாது.

கூடங்குளம் மக்களுக்கு ''லஞ்சம்''கொடுத்து ஏய்க்க முயல்கிறார் கலாம்.

கூடங்குளம் உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ''ஆய்வு''செய்ய வந்த கலாம் தமக்கு தொடர்பேதும் இல்லாத வகையில் அப்பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகளை பட்டியலிட்டுள்ளார்.குடிநீர் வசதி,பாசன வசதி,நடுவண் பள்ளிக்கூடங்கள்  நிறுவுவது என மக்களுக்கு ''நல்லது'' செய்வோம் என வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதி போல் பேசுகிறார்.அதாவது கூடங்குளம் அணு உலையை செயல் பட அனுமதித்தால் இவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்;அனுமதிக்க மறுத்தால் இவையெல்லாம் கிடைக்காது என பசப்பும் மொழியல்லவா இவை.

இதற்கு ஒரே வரியில் நாம் விடையளிப்போம்.அய்யா,அறிவாளியே,இந்த வளர்ச்சி பணிகள் எல்லாம் மக்களுக்கு செய்து தர வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமையல்லவா.மக்களை எப்போது வேண்டுமானாலும் காவு வாங்க கூடிய ஒரு திட்டத்தை அனுமதித்தால்தான் அவை கிடைக்கும் எனபது கடைந்தெடுத்த பித்தலாட்டமில்லையா.

ஆகவே கலாம் என்ன யாராக இருந்தாலும் நவீன கால விபீடணர்களை புறக்கணிப்போம். தமிழினம் உயிர் பிழைத்திருக்க போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.


Thursday, November 3, 2011

தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்.அதன் பெயர் தீண்டாமை.

 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் ஒரு தலித் என்பதால் சக நீதிபதிகளாலும் சில வழக்கறிஞர்களாலும் தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டு வந்துள்ளார்.இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அவர் தான் அவமானப் படுத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும்  நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.

ஒரு நீதிபதி சப்பாத்து [shoe] அணிந்த கால்களால் அவரை வேண்டுமென்றே மிதித்து விட்டு ''சாரி'' என்ற சொல்லை அலட்சியமாக உதிர்த்து விட்டு போயிருக்கிறார்.பிறிதொரு சமயத்தில் அதே ''நாகரீக கோமான்'' கர்ணன் என்ற பெயர் எழுதப்பட்டிருந்த அறிவிப்பு சீட்டை எடுத்து கீழே போட்டு தனது சப்பாத்து கால்களால் மிதித்து கசக்கி தள்ளியிருக்கிறார்.அந்த ஈனச்செயலை ரசித்து பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் வேறு இரு நீதிபதிகள்.

குடிபோதையில் வழக்கறிஞர் கும்பல் ஒன்று நீதிமன்ற வளாகத்திலேயே கர்ணன் அவர்களை ஏசிப் பேசி அவமானப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது.

காலம் மாறிவிட்டது,இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று பாசாங்கு மொழிகள் கூறி பார்ப்பனியம் என்பதே காலப் பொருத்தம் அற்றது என்று பம்மாத்து செய்வோரின் முகத்தில் அறைகிறது எதார்த்தம். அதற்கு ஒரு சான்றுதான் கர்ணன் மீதான தீண்டாமை வன்கொடுமை. 

செய்தியாளர் சந்திப்பில் ஒரு செய்தியாளர் கர்ணனை நோக்கி எழுப்பிய கேள்வி ஒன்று.
''சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்து தலித் நீதிபதிகள் உள்ளனர்.நீங்கள் மட்டும் இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்கிறீர்களே ஏன்''
இந்த கேள்விக்கு மிக அழகாக இப்படி விடை அளித்தார் கர்ணன்.
''மற்ற நீதிபதிகள் பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது.என் மீதான வன்மத்துக்கு காரணம் நான் எனது சுய மரியாதையை பேணுவதுதான்''

இப்போது புரிகிறது இல்லையா நண்பர்களே, ஒரு தலித் உயர்நிலைக்கு வருவதையும் தப்பி தவறி வந்துவிட்டாலும் பார்ப்பனிய சாதிய படிநிலையின் நியதிகளை மதித்து நடக்க மறுப்பதையும் சாதி வெறி கொண்டோர் விரும்புவதில்லை.எந்த நிலையில் இருந்தாலும் தலித் என்றால் கூழை கும்பிடு போட்டுத்தான் வாழ வேண்டும்.மறுத்தால் ''பரமக்குடிதான்'' என்று ஆட்டம் போடுகிறது ஆதிக்க சாதி திமிர். கருத்து ரீதியாகவும்.களத்திலும் அந்த திமிரின் இடுப்பொடிக்காமல் தமிழகத்தை சாதியத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்க முடியாது. 

இத்தகைய சாதிவெறி கொண்டோர் நீதி பரிபாலனம் செய்யும் நாட்டில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்கள் எந்த அழகில் பாதுகாக்கப்படும் என்பதையும் நாம் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

கர்ணன் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பியுள்ளார்.அந்த மனுவை ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளது.

நடுவண் அரசு இந்த பிரச்னையில் தலையிட வேண்டும்.தீண்டாமை கொடுமை புரிந்த நீதிபதிகள் மீது உடனடியாக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.அத்துடன் நில்லாது அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீண்டாமை குற்றத்துக்காக தண்டிக்க வேண்டும்,என்று அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.