Thursday, November 3, 2011

தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்.அதன் பெயர் தீண்டாமை.

 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் ஒரு தலித் என்பதால் சக நீதிபதிகளாலும் சில வழக்கறிஞர்களாலும் தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டு வந்துள்ளார்.இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அவர் தான் அவமானப் படுத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும்  நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.

ஒரு நீதிபதி சப்பாத்து [shoe] அணிந்த கால்களால் அவரை வேண்டுமென்றே மிதித்து விட்டு ''சாரி'' என்ற சொல்லை அலட்சியமாக உதிர்த்து விட்டு போயிருக்கிறார்.பிறிதொரு சமயத்தில் அதே ''நாகரீக கோமான்'' கர்ணன் என்ற பெயர் எழுதப்பட்டிருந்த அறிவிப்பு சீட்டை எடுத்து கீழே போட்டு தனது சப்பாத்து கால்களால் மிதித்து கசக்கி தள்ளியிருக்கிறார்.அந்த ஈனச்செயலை ரசித்து பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் வேறு இரு நீதிபதிகள்.

குடிபோதையில் வழக்கறிஞர் கும்பல் ஒன்று நீதிமன்ற வளாகத்திலேயே கர்ணன் அவர்களை ஏசிப் பேசி அவமானப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது.

காலம் மாறிவிட்டது,இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று பாசாங்கு மொழிகள் கூறி பார்ப்பனியம் என்பதே காலப் பொருத்தம் அற்றது என்று பம்மாத்து செய்வோரின் முகத்தில் அறைகிறது எதார்த்தம். அதற்கு ஒரு சான்றுதான் கர்ணன் மீதான தீண்டாமை வன்கொடுமை. 

செய்தியாளர் சந்திப்பில் ஒரு செய்தியாளர் கர்ணனை நோக்கி எழுப்பிய கேள்வி ஒன்று.
''சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்து தலித் நீதிபதிகள் உள்ளனர்.நீங்கள் மட்டும் இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்கிறீர்களே ஏன்''
இந்த கேள்விக்கு மிக அழகாக இப்படி விடை அளித்தார் கர்ணன்.
''மற்ற நீதிபதிகள் பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது.என் மீதான வன்மத்துக்கு காரணம் நான் எனது சுய மரியாதையை பேணுவதுதான்''

இப்போது புரிகிறது இல்லையா நண்பர்களே, ஒரு தலித் உயர்நிலைக்கு வருவதையும் தப்பி தவறி வந்துவிட்டாலும் பார்ப்பனிய சாதிய படிநிலையின் நியதிகளை மதித்து நடக்க மறுப்பதையும் சாதி வெறி கொண்டோர் விரும்புவதில்லை.எந்த நிலையில் இருந்தாலும் தலித் என்றால் கூழை கும்பிடு போட்டுத்தான் வாழ வேண்டும்.மறுத்தால் ''பரமக்குடிதான்'' என்று ஆட்டம் போடுகிறது ஆதிக்க சாதி திமிர். கருத்து ரீதியாகவும்.களத்திலும் அந்த திமிரின் இடுப்பொடிக்காமல் தமிழகத்தை சாதியத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்க முடியாது. 

இத்தகைய சாதிவெறி கொண்டோர் நீதி பரிபாலனம் செய்யும் நாட்டில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்கள் எந்த அழகில் பாதுகாக்கப்படும் என்பதையும் நாம் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

கர்ணன் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பியுள்ளார்.அந்த மனுவை ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளது.

நடுவண் அரசு இந்த பிரச்னையில் தலையிட வேண்டும்.தீண்டாமை கொடுமை புரிந்த நீதிபதிகள் மீது உடனடியாக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.அத்துடன் நில்லாது அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீண்டாமை குற்றத்துக்காக தண்டிக்க வேண்டும்,என்று அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment