Monday, November 14, 2011

எண்ணியல்,பெயரியல்.ஏமாளிகளின் புகலிடம்.எத்தர்களின் உறைவிடம்.

நேற்று விசய் தொலைக்காட்சியில் ஒரு அருமையான நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. நீயா நானா எனும் தலைப்பிலான அந்நிகழ்ச்சியில் எண்ணியல் [எண் கணிதம்] ,பெயரியல் குறித்து விவாதம் நடந்தது.அவற்றை நம்புபவர்கள் ஒரு புறமும் நம்பாதவர்கள் மறுபுறமுமாக நின்று வாதிட்டனர்.


எண்ணியல்,பெயரியல் என்ற பெயரில் நடத்தப்படும் மோசடியை ஒரு கட்டத்தில் மிக அருமையாக தோலுரித்து காட்டினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்.இந்த எண்ணியல்,பெயரியல் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது என்று அவர் கேட்டபோது இந்த மூடத்தனத்தின் ஆதரவாளர்களால் அண்மைக்கால நூல்களையே ஆதாரமாக காட்ட முடிந்தது.அதை வைத்து இந்த இயல்களின் வயது 60 தானா அவர் கேட்டபோது திணறிப்போன அவர்கள் ஏதேதோ பழங்கால நூல்களை சொல்லி சமாளிக்க முயன்றனர்.ஆனாலும் திறந்த மனதோடு எண்ணிப்பார்க்கும் எவரும் எண்ணியல்,பெயரியல் என்பவையே கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகத்தான் மக்களிடையே பெயர் பெற்றுள்ளன என்பதை உணர முடியும்.


 வாசுது,அதிருசுடம்.நல்ல நேரம்,கெட்ட நேரம்,சாதகம்,சோதிடம், ராசி,அந்த இல்லாத ராசியை வளைத்துப்பிடித்து பைக்குள் போட்டுக்கொள்ள ராசிக்கல்,ராசிவண்ணம்,சூலம்,அட்டமி,நவமி.என மக்களிடையே மண்டிக்கிடக்கும் அறியாமை இருளை பயன்படுத்தியே இந்த எண்ணியல்,பெயரியல்  பெருச்சாளிகள் தமிழ் சமூகத்தினுள் நுழைந்து விட்டனர் என்பதுதானே உண்மை.


 எண்ணியல்,பெயரியல் ஆதரவாளர்கள் திரும்ப திரும்ப சொன்னதும் தங்கள் தரப்பை மெய்ப்பிக்க ஆதாரமாக காட்டியதும் ஒன்றே ஒன்றுதான்.பிறந்த தேதிக்கேற்ப ராசியான எண் தரும் வகையில் பெயர் வைத்துக்கொண்டால் அல்லது பெயரை மாற்றிக்கொண்டால்  வாழ்வில் முன்னேற்றம் நிச்சயமாம்.இந்த வாதத்திற்கு மகுடம் சூட்டுவது போல் அவர்கள் தரப்பு சிறப்பு விருந்தினர் ''shelvi'' [ஆண்தான்,புனைபெயராம்] தனது தாமோதரன் என்ற பெயரை இப்படி மாற்றிக்கொண்ட பின் தனக்கு புகழும் பணமும் கிடைத்ததாக கூறினார். [இப்படி மக்களை ஏய்த்து பிழைப்பதால் கிடைப்பது ''புகழ்'' என்று சொன்னால் புகழ் என்ற சொல்லே இழிவு பட்டு போகும்].நாம் சொல்கிறோம்,தாமோதரன் பெயரும் புகழும் பெற்றதுக்கு காரணம் மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளே காரணமேயன்றி பெயர் ஒரு காரணமேயல்ல.அவர் எந்த பெயரை புனை பெயராக வைத்துக் கொண்டிருந்தாலும்  இதுதான் நடந்திருக்கும்.எண்ணிப்பாருங்கள்,மூடநம்பிக்கைகள் குறைவான ஒரு சமூகத்தில் இவர் இப்படி பேர் வாங்கியிருக்க முடியுமா.


அந்த செல்வி தனது வாதத்தை துவக்கும்போதே ஒரு மனிதனுக்கு தன் விருப்பபடி பெயர் வைத்துக் கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் உரிமை உண்டு என்றார்.அத்தோடு விட்டாரா,அப்படி பெயரை மாற்றிக் கொள்பவர் அதன் பின் வாழ்வில் முன்னேற்றம் காண்பாராயின் அதற்கு அவரது உழைப்பும் முயற்சியும் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் அவரது பெயர் மாற்றமே முதன்மையான காரணம் என ஏன் நாங்கள் நம்ப கூடாது என ஒரு ''அறிவார்ந்த''கேள்வியையும் எடுத்து விட்டார்.போதாதா கூடியிருந்த மூடர்களுக்கு.சிரிப்பும் மகிழ்ச்சியுமாக கைதட்டல் தூள் பறந்தது.அடுத்து சில வினாடிகளிலேயே அவர்கள் முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு அருமையான வாதத்தை எடுத்து வைத்து மூட நம்பிக்கையின் முதுகெலும்பை முறித்தார் எதிர்த் தரப்பு சார்பாக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த சுப.வீரபாண்டியன்.


அவரது சொற்களிலேயே அதனை பார்க்கலாம்.''உங்கள் விருப்பபடி பெயர் வைக்கவும் மாற்றவும் உங்களுக்கு உரிமை உண்டு.மறுக்கவில்லை நாங்கள்.அதனால் நீங்கள் முன்னேற்றம் அடைவதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அந்த நம்பிக்கையிலும் நாங்கள் தலையிடவில்லை.ஆனால் அதை அறிவியல் என்று சொல்வதை நாங்கள் மறுக்கிறோம்.அறிவியல் என்றால் அதனை மெய்ப்பித்து காட்டவேண்டும்.பெயர் மாற்றம் நிச்சயம் முன்னேற்றம் தரும் எனபது மெய்ப்பிக்கப்படாதது.ஆகவே அது அறிவியல் அல்ல.வெறுமனே உளவியல் சம்பந்தப்பட்டது அது.''


அதுவரை அறிவியல் என்றும் கணக்கு தவறாது என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த   மூடநம்பிக்கை ஆதரவாளர்கள் வாயடைத்து போயினர்.ஆம் மெய்ப்பிப்பது எனபது கனவில்  வேண்டுமானால் நடக்கலாம்.நனவில் நடக்காதே.


சுபவீயின் ஒரு கருத்தில் நாம் வேறுபட வேண்டியுள்ளது.எண்ணியல்,பெயரியல் வல்லுனர்களின் ஆலோசனைபடி பெயரை மாற்றிக்கொள்வதால் நன்மைகள் விளையும் என்ற நம்பிக்கையில் நாம் தலையிடவேண்டியிருக்கிறது.அதற்கான உரிமை சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களுக்கு இருக்கிறது.பெயரியல் ''பேராசான்''களுக்கும் ,எண்கணித ''மேதை''களுக்கும் அள்ள அள்ள குறையாத செல்வச்சுரங்கமாக இருக்கும்  பெயர் மாற்றமும் அதன் நன்மைகளும் குறித்த நம்பிக்கை ஒரு தனிமனிதரோடு முடிந்து விடுவதில்லை.அது ஒரு அறிவியல் என பம்மாத்து செய்யும் கயவர்கள் வலையில் சிக்கும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர்,அவரைப் பார்த்து மற்றொருவர் என சமூகம் முழுவதும் பரவுகின்ற நோய் அது.ஆகவே அந்த நோய் தாக்குதலை தடுக்க அது முழுக்க முழுக்க மூடநம்பிக்கை என எடுத்துச் சொல்லும் கடமை நமக்கு உண்டு.


தொடர்புடைய எமது பதிவுகள்.


எண்களே யாதுமாகி நிற்குமா?http://thippuindia.blogspot.com/2010/10/blog-post_20.html


சோதிடக்கலை அறிவியலா?   http://thippuindia.blogspot.com/2010/09/blog-post_05.html
புத்தம் புதிய பேய்கள்  http://thippuindia.blogspot.com/2010_08_01_archive.html
சாய்பாபா சாவு.''கடவுள்''தோற்றார்.இயற்கை வென்றது. http://thippuindia.blogspot.com/2011/04/blog-post_24.html 


2 comments:

 1. நண்பர் திப்பு அவர்களுக்கு

  // விசய் வாசுது,அதிருசுடம்.//

  இது தான் சரியான தமிழ் எழுத்தா?

  ReplyDelete
 2. ஆம் நண்பரே,சமத்கிருத எழுத்துக்களை தவிர்த்து விட்டு தமிழை எழுதுவதுதான் சரியானது.சொற்களின் ஒலி சற்று வேறுபட்டாலும் குற்றமில்லை. இது குறித்து தனிப் பதிவு ஒன்றை முன்பு எழுதியிருக்கிறேன்.பார்க்க;வட மொழி எழுத்துக்கள் தமிழுக்கு தேவையா.

  http://thippuindia.blogspot.com/2010/09/blog-post_04.html

  ReplyDelete