Sunday, December 25, 2011

vijay தொலைக்காட்சியின் ''நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'' மடையர்களாவது எப்படி.

விசய் தொலைக்காட்சி ஒரு கோடி பரிசு வழங்கும் ''அறிவு''போட்டி ஒன்றை நடிகர் சூர்யாவை வைத்து நடத்துவதாக அறிவித்து அந்த போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதியை தீர்மானிக்க இன்று முதல் ''பொது அறிவு'' கேள்வியை வெளியிட்டுள்ளது.அந்த கேள்வி.


''தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் முதல் வரி என்ன.
விடைகள்.சீராரும்,ஈராறும்,பேராறும்,நீராரும்.
இதில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமாம்.எப்பேர்ப்பட்ட அறிவார்ந்த கேள்வி பார்த்தீர்களா.


எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்ற விவேக்கின் கேள்வியை ஒத்த மடத்தனமான இந்த கேள்வியை கேட்டு நம்மை மூடர்களாக்கும் கயமையல்லவா இது. இப்படி ஒரு எளிதான கேள்வியை கேட்டு பலரையும் விடை அனுப்ப தூண்டுகிறார்கள்.குறுஞ்செய்தி மூலம் விடைகள் அனுப்ப வேண்டுமாம்.ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிப்பார்கள் எனும் போது எத்தனை கோடிகளை தமிழ் மக்களிடமிருந்து கொள்ளையிடுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.


சரி,இந்த போட்டிகள்தான் அறிவை வளர்க்க உதவுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மையாக உள்ளது.இத்தகைய போட்டிகள் வெறும் விவரங்களை பற்றிய அறிவையே கோருகின்றன. 


ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பெயர் என்ன என்பதையும், ஐ.நா.பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளையும்,அவை veto அதிகாரத்தை எத்தனை முறை பயன்படுத்தி இருக்கின்றன என்பதையும் தெரிந்து வைத்திருப்பதால் ஒரு பயனுமில்லை.மாறாக ஐ.நா.அவை எப்படியெல்லாம் ஏகாதிபத்தியங்களுக்கு ஊழியம் செய்து வருகிறது, வல்லரசு நாடுகள் எவ்வாறு உலக மக்களுக்கு எதிராக அந்த அவையை கேடாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை அறிந்து கொள்வதுதான் பயனுள்ளது.


தமிழ் நாட்டின் முதல் மற்றும் தற்போதைய ஆளுநர் யார் என்பதை தெரிந்து கொள்வதால் என்ன பயன்.மாறாக ஆளுநர் பதவி என்பதே எப்படி பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் நீட்சியாக உள்ளது என்பதையும் ஆளுநர் பதவியின் மூலமாக நடுவண் அரசு எப்படி தமிழ் நாட்டை தனது அடிமை நாடாக நடத்துகிறது என்பதையும் புரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு.அதை விடுத்து வெறும் பெயர்களில்,அவற்றை அறிந்து கொள்வதில் அறிவுக்கு என்ன வேலை இருக்கிறது.


ஆனால் இப்படி வெறும் விவரங்களை அறிந்து வைத்திருப்பதே ''அறிவு'' என மக்களை மதி மயக்கத்தில் ஆழ்த்துகின்றன இந்த வகையான ''பொது அறிவு போட்டிகள்''.மிகப் பெரும் தொகை ஒன்றை பரிசாக அறிவித்து ஏற்கனவே நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கும் மக்களை தூண்டில் போட்டு இழுக்கிறார்கள்.அப்பாவி மக்களோ அவன் யாருக்கோ கொடுக்கப்போகும் பரிசுக்காக குறுஞ்செய்தி அனுப்பி பல கோடி உருவாக்கள் மொய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆகவே தமிழ் மக்கள் இந்த போட்டியை அறவே புறக்கணித்து ஒதுக்கி தள்ள வேண்டும்.