Tuesday, February 14, 2012

பள்ளி வன்முறை - நிர்வாகங்களே குற்றவாளிகள்


சென்னை பாரிமுனையில் உள்ள புனித மரியாள் பள்ளியில் ஆசிரியை ஒருவர் அவரது 15 வயது மாணவன் ஒருவனால் கொல்லப்பட்ட நிகழ்வு மிகுந்த பரபரப்பையும் விரிவானதொரு விவாத களத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கட்டுரையின் துவக்கத்திலேயே நாம் உயிரிழந்த ஆசிரியை உமா மகேசுவரிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தாயை இழந்து தவிக்கும் அவரது இரண்டு குழந்தைகளை நினைக்கும்போது நமது நெஞ்சம் வேதனையில் விம்முகிறது. ஆனால் வெறும் உணர்வுப்பூர்வமாக இந்த பிரச்னையை பார்க்கமுடியாது. ஆசிரியர் தரப்பு உட்பட அனைத்து தரப்பினரின் குறைபாடுகளையும் விருப்பு வெறுப்பின்றி விவாதிக்க வேண்டியுள்ளது.
இந்த கொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏடுகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் கல்வித்துறை மற்றும் குழந்தைகள் மனநல வல்லுனர்கள் அள்ளிக்கொட்டும் கருத்துக்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். திரைப்படங்களின் தாக்கம், கூடுதலான செலவு காசு, மன அழுத்தம், நுகர்வு வெறியால் தூண்டப்பட்டு மதிப்பெண்களே வாழ்வை தீர்மானிக்கும் என்ற பெற்றோரின் மூடத்தனம் என அவை பெரும்பாலும் நாம் அறிந்தவையாகவே உள்ளன. ஆனால் "பள்ளி நிர்வாகங்களின் ஆதாய வெறி" பள்ளிக்குழந்தைகளை ஆசிரியர்கள் மூலமாக எவ்வாறெல்லாம் பாடாய் படுத்துகிறது என்பதை அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். ஆனால் சமூகத்தின் மீது அக்கறை கொண்டோர் அது பற்றியும் பேசியாக வேண்டும்.
தனியார் பள்ளிகள் அனைத்தும் விதிவிலக்கின்றி மாணவர் சேர்க்கைக்கு பெருமளவு "நன்கொடை" வசூலிக்கின்றன எனபது ஊரறிந்த கமுக்கம். நன்கொடை வசூலிக்கக் கூடாது, அரசு வரையறை செய்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க கூடாது என மக்கள் நலம் பேணுவதாக வேடம் கட்டி ஆடும் அரசுகளுக்கும் இந்த உண்மை தெரியும். அரசின் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு கழிப்பறை காகிதத்திற்கு தருவதை விட கூடுதலாக எந்த மதிப்பையும் தனியார் பள்ளிகள் தருவதில்லை என்பதும் அரசுக்கு தெரியும். இந்த நன்கொடைகள் பள்ளிகளின் "தரத்திற்கு" ஏற்ப சில பல ஆயிரங்களிலிருந்து சில இலட்சங்கள் வரை நீள்கிறது.
பெற்றோரை "தரம்" என்ற மாயவலையில் சிக்கவைக்கும் பல்வேறு காரணிகளில் முதன்மையானது பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகள் "காட்டும்" தேர்ச்சி விகிதம். இந்த தேர்ச்சி விகிதத்தை வைத்தே ஒரு பள்ளியின் நன்கொடை வசூலுக்கான "சந்தை மதிப்பு" தீர்மானிக்கப்படுகிறது. அந்த விகிதத்தை அடைய அவர்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் மனிதத்தன்மையற்றவை.
மழலையர் வகுப்பில் சேர்ப்பதற்கு கூட நேர்முகத் தேர்வு நடத்தி மாணாக்கர்களை தெரிவு செய்கிறார்கள். தோல்வி அடையும் குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறார்கள். ஆளுமை எனபது வளரத் துவங்குவதற்கு முன்பான குழந்தை பருவத்தில் அதன் அறிவுத் திறனை சோதிக்கிறேன் என்று சொல்பவன் எத்தகைய கல்நெஞ்சக்காரனாக இருக்க வேண்டும்? அது மட்டுமல்ல பெற்றோரில் ஒருவராவது பட்டதாரியாக இருந்து "இங்கிலிபிசு" மொழியில் பிளந்து கட்ட வேண்டும். படிக்க வரப்போவது குழந்தைதானே. அதன் பெற்றோரின் கல்வித்தகுதிக்கும் குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? கேட்டால் வீட்டில் பெற்றோரும் பாடம் சொல்லித்தர வேண்டுமாம். அப்படி அனைத்து "தகுதி"களும் வாய்க்கப்பட்ட குழந்தையின் பெற்றோரும் நன்கொடையை கொட்டி அழத்தான் வேண்டும். ஏனென்றால் தரம் நண்பர்களே தரம்.
மழலையர் சேர்க்கை இப்படியென்றால் இடைநிலை வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால் எழுத்துத் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். மேல்நிலை முதலாம் ஆண்டில் சேர்க்க பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இப்படி ஒப்பீட்டளவில் அறிவுத்திறன் மிக்க மாணவர்களை தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொண்டு தனியார் பள்ளிகள் காட்டும் "தேர்ச்சி விகிதம்" எவ்வளவு மோசடியானது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். தேர்ச்சி விகிதத்தை பராமரிக்க "அறிவு திறன்" குறைந்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடையச் செய்யும் இரக்கமற்ற நடைமுறையும் உண்டு.
இப்படி சேர்க்கப்படும் மாணவர்களையும் தொடர்ச்சியாக "படி படி" என ஆசிரியர்கள் மூலம் வற்புறுத்துகிறது பள்ளி நிர்வாகம். மாணவர்கள் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி பள்ளி நிர்வாகத்துக்கு அவர்கள் மேல் எந்த அக்கறையும் இருப்பதில்லை. தேர்ச்சி விகிதம் அதன் மூலம் வரையறுக்கப்படும் நன்கொடைக்கான சந்தை மதிப்பு இந்த இரண்டைத் தவிர அவர்கள் கண்ணுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை. தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்படுவதும், அவர்கள் முன்னிலையிலேயே மாணவர்கள் கடும் சொற்களால் ஆசிரிய "பெரு மக்களால்"கண்டிக்கப்படுவதும் உண்டு.
பள்ளி நிர்வாகத்தால் கொழுத்த ஊதியம் கொடுத்து குளிரூட்டப்பட்ட அறையில் அமர வைக்கப்படும் பள்ளி முதல்வர் உண்மையில் தலைமை ஆசிரியர் அல்ல. மாறாக அந்த பள்ளியின் ஆசிரியர்களை விரட்டி விரட்டி "வேலை" வாங்கும் "மேசுதிரி"தான் அவர். பள்ளி நிர்வாகம் வழங்கும் அற்ப ஊதியத்தை நம்பி காலம் தள்ளும் ஆசிரியர்கள் முதல்வர் விரட்டும் வேகத்திற்கு ஏற்ப மாணவர்கள் ஓட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காதபோது ஏற்படும் தனது சினத்தை அநியாயக்காரர்களான பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் வெளிப்படுத்தாமல் இரக்கப்பட வேண்டிய குழந்தைகள் மீது காட்டுகிறார்கள்.
டேய் தடிமாடு,மாடு மேய்க்கத்தாண்டா நீ லாயக்கு, படிக்க புடிக்கலன்னா எங்கேயாவது போய்த் தொலையேன் இங்க வந்து ஏன்டி எங்க உயிரை வாங்குற, பணத்திமிரா அதெல்லாம் உங்க வீட்டோட வச்சுக்க இப்படியான வசவுகள் ஒலிக்காத ஒரு பள்ளிக் கூடத்தை கூட காட்ட முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம். பள்ளிக் கூடங்கள் சமூகத்தின் நடுவில்தானே அமைந்துள்ளன. சமூகத்தில் நிலவும் அத்தனை வக்கிரங்களும் பள்ளி வளாகத்திற்குள்ளும் எதிரொலிக்கின்றன. சாதி, மத வெறியை நஞ்சாக கக்கும் ஆசிரியர்களும் உள்ளனரே. அதுவும் சாதி மத வேறுபாடுகளை பெரிதாக கருதாத விடலை பருவ குழந்தைகளிடமும் அந்த நஞ்சை தன் நடத்தை மூலம் விதைக்கும் கயவர்களை ஆசிரியர்கள் என்று சொல்வதே அந்த தொழிலை இழிவுபடுத்துவதாகும். தீண்டாமை கண்ணோட்டத்தோடு தனம் என்ற சிறுமியை அடித்து குருடாக்கிய பெருமையும் தலித் மாணவர்களை கழிப்பறையை துப்புரவு செய்ய வைத்த பாரம்பரியமும் உடையதல்லவோ தமிழ்நாட்டு ஆசிரியர்களில் ஒரு பகுதி. ஆசிரிய பெருமக்கள் பலர் சங்க பரிவார் அமைப்புகளை மறைமுகமாக ஆதரிக்கின்றனரே. அவர்கள் வகுப்பறைக்குள் சிறுபான்மை வகுப்பு மாணவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கல்வி ஆண்டு துவங்கும் முதல் நாளன்று மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அத்தனை பேரையும் ஆண்டு முடியும்போது உயிரோடு விட்டு வைக்கிறார்களா பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் என்ற பெயரில் உலவும் கல்நெஞ்சக்காரர்கள்? அவர்களது தொடர்ச்சியான துன்புறுத்தல் தாங்காமல் எத்தனை பிஞ்சுகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.
உமா மகேசுவரி கொலை செய்தி வெளியான அதே ஏடுகளில் தாம்பரத்தில் ஒரு மாணவி தேர்வு பயத்தில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. அதற்கு மறுநாளே சென்னை பெரவள்ளூரில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு மாண்டு போன நெஞ்சை அறுக்கும் செய்தியும் வருகிறது. ஒரு ஆசிரியை கொல்லப்பட்டதற்காக பதறித் துடிக்கும் இந்த சமூகம்தான் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கணக்கில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதை இயல்பான ஒரு நிகழ்வாக எடுத்துக் கொண்டு அமைதியாக அந்நிகழ்வுகளை கடந்து செல்கிறது. என்ன ஒரு வக்கிரம்.
மாணவர்களின் பள்ளி வன்முறைக்கு காரணம் பிரம்படி தண்டனையை தடை செய்ததுதான் என்று சில மேதைகள் துண்டை போட்டு தாண்டுகிறார்கள். அந்த ஈவிரக்கம் அற்ற கொடூர மனம் படைத்தோருக்கு ஒரே ஒரு கேள்வி. நீங்கள் பணியாற்றும் இடத்தில் தவறு செய்தால், பணிக் குறைபாடு நேர்ந்தால் உங்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? தடிமாடு போல் வளர்ந்து விட்ட இவர்களையே அடிக்க கூடாது என்றால் பச்சிளம் குழந்தைகளை அடிப்பது எனபது காட்டுமிராண்டித்தனம் இல்லையா? அப்படியான காட்டுமிராண்டித்தனம் குழந்தைகளை நல்ல பண்புடையோராக, படிப்பில் சிறந்தோராக வளரச் செய்யும் என்பதை விட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.
ஆகவே நண்பர்களே, பள்ளி வன்முறைகளைக் களைந்து, மாணவர் தற்கொலைகளை தடுத்து, மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்க வேண்டுமென்றால், மாணவர்களுக்கு கல்வி கற்பது இன்பம் மிகுந்த ஒன்றாக [அதுதான் உண்மையும் கூட அதை கெடுத்தது இன்றைய சமூக அரசு அமைப்புக்கள்தான்] ஆக்க வேண்டும்.
அதற்காக,
உடனடியாக தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் மக்கள் பள்ளிக்குழு [people's school committee] அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் அந்தந்த பகுதி மக்கள் அனைவருக்கும் மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அந்த குழுவின் நேரடி கண்காணிப்பின் கீழ்தான் பள்ளி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் நடைபெறவேண்டும்.
சிற்றூர் மற்றும் நகரங்களில் செயல்படும் இந்த குழுக்களிருந்து வட்ட, மாவட்ட, மாநில அளவிலான குழுக்கள் ஏற்படுத்தப்படவேண்டும். இந்த உயர் நிலை குழுக்களில் கல்வியாளர்களையும் இடம் பெற செய்ய வேண்டும். இந்த குழுக்களின் பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில்தான் மாநில கல்வித்துறை செயல்பட வேண்டும்.
இந்த கட்டுரை கீற்று இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.வாய்ப்பும் இடமும் அளித்த கீற்று தோழர்களுக்கு மனமார்ந்த நன்றி.

No comments:

Post a Comment