Friday, May 18, 2012

கேலிப்படம் - அம்பேத்கரை விடாது துரத்தும் சாதிய வன்மம்


நடுவண் அரசு நடத்தும் பள்ளிகளுக்கான பதினோராம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் அண்ணல் அம்பேத்காரை இழிவுபடுத்தும் கேலிப்படம் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த படம்  பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்று அறிவித்த நடுவண் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், அந்த படம் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
ambedkar_240இது போதாதா பார்ப்பனிய ஆதிக்க கும்பலுக்கு. கருத்து விடுதலையின் மீதான தாக்குதல் இது என விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவிக் குதிக்கிறார்கள். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கே.என்.பணிக்கரில் ஆரம்பித்து இந்து ஆங்கில ஏடு, புதிய தலைமுறை தொலைக்காட்சி அம்பிகள் வரை கேலிப்படத்தை எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாய்ந்து குதறுகிறார்கள். கேலிப்படம் நீக்கப்பட்டதைக் கண்டித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் [NCERT] தலைமை ஆலோசகர் யோகேந்திர யாதவ்வும் அதன் உறுப்பினர் சுகாசு பால்சிகரும் தங்கள் பதவியை விட்டு விலகி இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் மொத்தத்தில் நமக்கு உணர்த்துவது "இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க. அதெல்லாம் அந்த காலம். முதல்ல நீங்க இந்த சாதிவாரி கோட்டா ரிசர்வேசன் இதுலேர்ந்து வெளிய வாங்க, எல்லாருக்கும் சம வாய்ப்பு இருக்கணும் சார்" என்று நமக்கு அறிவுரை சொல்லும் யோக்கியர்கள் வாழும் இந்தியாவில் சாதீய கண்ணோட்டம் எந்த அளவுக்கு கெட்டித்து போய் கிடக்கிறது என்பதைத்தான்.
ஆண்டொன்றுக்கு பல லட்சம் உரூவாக்கள் கட்டணம் வசூலிக்கும் மேட்டுக்குடி பள்ளிகளின் மாணவர்களோடு, புழுத்துப்போன அரிசியில் சமைத்துப் போடும் இலவச மதிய உணவை சாப்பிட்டு விட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் சம அளவில் போட்டிபோட வேண்டும் எனச் சொல்லும் இந்த காரிய கிறுக்கன்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தத் தவறுவதே இல்லை. அந்த வகையில்தான் தான் வாழ்ந்த காலமெல்லாம் பார்ப்பனிய ஆதிக்க கும்பலுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அண்ணல் அம்பேத்கர் பாடப்புத்தகத்தின் வாயிலாக இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.
சரி. அவர்கள் வாதம்தான் என்னவென பார்ப்போம்.
இது அறுபது ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டது. அப்போது உயிருடன் வாழ்ந்த அம்பேத்கரே எதிர்க்கவில்லை. இப்போது எதிர்க்கலாமா?
அந்தப் படத்தை நீக்குவது கருத்து விடுதலையை பறிப்பதாகும்.
இந்த கேலிப்படம் ஆறு ஆண்டுகளாக பாடத்தில் உள்ளதாம். இவ்வளவு காலம் அமைதியாக இருந்து விட்டு திடீரென எதிர்க்கலாமா?
இதைத்தான் நாக்கை சுழற்றி சுழற்றி, நீட்டி முழக்கிப் பேசியும், பக்கம் பக்கமாக எழுதியும் தள்ளுகிறார்கள்.
நாம் கேட்கிறோம். அய்யா, அறிவாளிகளே!
அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தை கால, இடப் பொருத்தமின்றி பாடத்தின் இடையில் சொருகி இருப்பது கெட்ட உள்நோக்கம் கொண்டதா இல்லையா? இந்த படம் "அரசியல் சட்ட செயல்பாடு" [constitution at work] என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியல் சட்டத்தின் செயல்முறைகளை விளக்கும் பாடத்தில் அரசியல் சட்டம் வகுக்கும் பணி மிகவும் 'மெதுவாக' நடந்தது என்று சொல்வது பொருத்தப்பாடு உடையதா என்ன? அம்பேத்கர் குறித்து ஒரு மட்டமான அபிப்பிராயம் மாணவர்கள் மனதில் ஏற்படவேண்டும் என்ற இழிவான நோக்கமின்றி வேறு என்ன காரணத்திற்காக இந்தப் படம் வைக்கப்பட்டிருக்கும்?

கருத்து விடுதலையை நாங்களும் மதிக்கிறோம். அந்தப் படத்தை வரைந்த சங்கர் பிள்ளையை யாரும் தகாத சொற்களால் திட்டவில்லை. அந்த கால கட்டத்தில் இருந்த அரசியல் நிலைமை குறித்த ஒரு கருத்தை சொல்லும் கேலிப்படம் என்ற அளவில் அதனை ஏற்கிறோம். ஆனால் அதனை பாடப்புத்தகங்களில் கொண்டு வந்து திணிப்பதைத்தான் ஏற்க முடியாது. இதே போன்று நேருவை, காந்தியாரை, படேலை,
சாவர்க்கரை விமர்சிக்கும் பல கருத்துப்படங்களை நாம் காட்ட முடியும். அவற்றையெல்லாம் அரசியல் பாடத்தில் வைப்பார்களா?
மாட்டார்கள். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆறு ஆண்டுகள் ஏன் எதிர்ப்பின்றி கழிந்தனவென்றால் அந்தப் படம் தலித் விடுதலையை உண்மையாக நேசிப்போரின் கண்ணில் படவில்லை என்று பொருள். அவ்வளவுதான். இப்போது எதிர்ப்பவர்கள் முன்னர் யாருக்காகவும் அஞ்சி அமைதி காக்க வேண்டிய அவசியம் இல்லை.
அம்பேத்கர் தனது ஆடையையே ஒரு ஆதிக்க எதிர்ப்புக் குறியீடாக பயன்படுத்தினார். மேற்கத்திய உடையை பார்ப்பனமயமாக்கி, பஞ்சகச்சம் டர்பன் மேற்சட்டை [மேல்கோட்டு] என அணிந்த அன்றைய பெரும்புள்ளிகள் நடுவே முழுமையாக மேற்கத்திய பாணியில் ஆடை அணிந்து கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்திருக்கும் கம்பீரம் கண் கொள்ளா காட்சியாகும். அவரது இறப்புக்கு முன்னும் பின்னும் அந்த அம்பேத்கர் என்ற சொல்லே சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாக திகழ்கிறது. அந்த குறியீட்டின் மீது இழிவை சுமத்த வேண்டும் என்ற வெறியோடு செய்யப்படும் இத்தகைய‌ அடாத செயல்களை உண்மையான தலித் விடுதலையை நேசிப்போர் அனுமதிக்க முடியாது.

No comments:

Post a Comment