Monday, September 17, 2012

கூடங்குளம் - பொய்யெனும் சகதியிலே புரண்டெழும் ஆளும் கும்பல்

koodankulam_636

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரும் மக்கள் போராட்டம் மிகுந்த உத்வேகம் அடைந்துள்ள இந்த நேரத்தில் போராட்டத்திற்கும் போராடும் அந்த மக்களுக்கும் எதிரான கள்ளப் பரப்புரையும் முடுக்கி விடப்படுகிறது.ஆளும் கும்பலின் ஊதுகுழல்களாக செயல்படும் ஊடகங்களும் போராட்டச் செய்திகளை வழங்கும்போதே அவற்றுக்குள் இந்த கள்ளப் பரப்புரையையும் பொடி வைத்து ஊதி விடுகின்றன. விளைவு ஆளும்கும்பல் கக்குவதைத் தின்று மக்களிடையே வந்து மறுவாந்தி எடுத்து நாறடிக்கிறார்கள் இந்த கள்ளப் பரப்புரைக்கு பலியானோர்.

அவர்களது அவதூறுகளைப் புரிந்து கொள்ள பெரிய ஆய்வுக் கட்டுரை எல்லாம் தேவையில்லை. இயல்பான பொது அறிவு இருந்தாலே உண்மை எதுவென விளங்கிக் கொள்ளலாம். அந்த அவதூறுகளை ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம்.
அவதூறு எண்.1
போராடும் மக்களும் அவர்களுக்குத் தலைமை ஏற்று போராடும் உதயகுமாரும் இந்த போராட்டத்தை நடத்துவதற்காக வெளிநாடுகளிடமிருந்து தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பணம் பெறுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டை கடந்த ஓராண்டு காலமாக முதன்மர் மன்மோகன் சிங் துவங்கி கடைசியாக தற்போதைய உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே வரை ஏகப்பட்ட 'நாட்டுப் பற்றாளர்கள்' சொல்லி வருகிறார்கள். இந்த நாட்டின் ஆற்றல் மிக்க உயர் பதவிகளில் வீற்றிருக்கும், துப்பறியும் சூரப்புலிகள் நிறைந்த உளவு மற்றும் புலனாய்வுத் துறைகளை கையில் வைத்திருக்கும் இந்த கோமான்கள் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை சொல்கிறார்களோ அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்திருந்தால் இத்தனை நாட்கள் உதயகுமாரை தூக்காமல் விட்டு வைத்திருப்பார்களா இந்த யோக்கியர்கள்?
அவதூறு எண்.2.
ரசிய நாடு வழங்கிய உலை என்பதாலும் இந்தியா வல்லரசு ஆகிவிட கூடாது என்ற கெட்ட உள்நோக்கத்திலும் அமெரிக்கா இந்தப் போராட்டத்தை தூண்டிவிடுகிறது. அமெரிக்காவில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் உதயகுமார் அமெரிக்காவின் கையாள்.
இந்தியா அமெரிக்காவுடன் அணு ஆற்றல் ஒப்பந்தம் போட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் வலுத்த எதிர்ப்பையும் மீறி அவர்கள் ஆதரவின்றி ஆட்சியே கவிழ்ந்தாலும் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என மன்மோகன் தலைமையிலான காங்கிரசு அடிமைகள் கூட்டம் வரிந்து கட்டியதை அனைவரும் அறிவோம். அந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு யுரேனியம் விற்கவும் காலாவதியாகிப் போன அணு உலைகளை விற்கவும் அமெரிக்க முதலாளிகள் வாயில் எச்சில் வடிய காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதைப் போல அமெரிக்கா அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வளர்த்து விடுமா?
இது ஒன்றும் பனிப்போர் காலம அல்லவே, ரசியாவின் உலை என்பதற்காக அமெரிக்கா இயங்க விடாமல் சதி செய்கிறது என்று சொல்வதற்கு. அமெரிக்கா போய் வந்தவரெல்லாம் அவனது கையாளாக இருப்பார்கள் என்று நினைப்பது மூடத்தனமில்லையா?
மேலும் இந்திய ஆளும் கும்பல் அப்பட்டமான அமெரிக்க அடிமைகள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ளது. 'ஈரானுடன் இயற்கை எரிவளிக் குழாய் அமைக்க ஒப்பந்தம் போடாதே', 'சில்லறை வணிகத்தை அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடு' என தனது நலன் பேண இந்தியாவுக்கு வெளிப்படையாகவே ஆணை இடும் அமெரிக்கா இப்படி எல்லாம் மக்களைப் போராட வைத்து அணு உலையை முடக்க வேண்டிய அவசியம் இல்லையே. மன்மோகனைக் கூப்பிட்டு ஒரே ஒரு சொல்லில் ஆணையிட்டு வேலையை முடித்துக் கொள்ளலாமே!!
புரட்டு எண்.1
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதை அமைத்துத் தந்த ரசிய நிறுவனம் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தரும் பொறுப்பை ஏன் ஏற்க மறுக்க வேண்டும்? கூடங்குளம் என்றில்லை, உலகின் எந்த ஒரு அணு உலையும் பாதுகாப்பானது அல்ல. இதை அமெரிக்காவின் மூன்று மைல் விபத்தும், ருசியாவின் செர்நோபில் விபத்தும் காட்டியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக சப்பானின் புகுசிமா விபத்து அணு உலைகள் பாதுகாப்பு குறித்த அத்தனை மாயைகளையும் தகர்த்து விட்டது.
அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால் செருமனி, சப்பான், சுவிட்சர்லாந்து முதலான வளர்ந்த நாடுகளே புகுசிமா விபத்துக்குப் பின் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளை படிப்படியாக மூடி விடுவது என முடிவெடுப்பது ஏன்?
புரட்டு எண்.2
தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப் போக்க கூடங்குளம் அணு உலை இயங்க வேண்டும்.


தமிழகம் இருளில் மூழ்கி கிடக்கவும் தமிழ்நாடு மின் வாரியம் இழப்பில் இயங்குவதற்குமான உண்மையான காரணம் மின் பற்றாக்குறையல்ல. சென்னையைச் சுற்றிலும் வந்து குவிந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் மலிவு விலையில் வழங்கப்படுவதுதான் உண்மையான காரணம். இந்த மின்வெட்டால் தமிழகம் முழுவதும் நசிந்து போன சிறு தொழில்கள் ஏராளம். சில ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறேன் என்ற பேரில் பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளன இந்த பன்னாட்டு நிறுவனங்கள். 
இதுவன்றி மின்வாரியம் இழப்பை சந்திக்க முதன்மையான காரணம் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அநியாய விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதுதான். இழப்பை குறைப்பதற்காக கொள்முதலை அவ்வப்போது அரசு நிறுத்தி வைப்பதும் மின்வெட்டுக்குக் காரணமாகிறது.
இந்த உண்மைகளை மறைத்து விட்டு கூடங்குளம் இயங்கினால் தமிழகத்துக்குக் கிடைக்க போகும் சுமார் 300 மெகாவாட் மின்சாரம், தமிழ் நாட்டின் 2000 முதல் 3000 மெகாவாட் வரையிலான மின்பற்றாக்குறையை தீர்த்து விடும் என கள்ளப்பரப்புரை நடக்கிறது.
இதில் இன்னொரு நயவஞ்சகமும் நடந்தேறுகிறது. கூடங்குளம் அணு உலையின் மொத்த மின் உற்பத்தியையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என தமிழக முதல்வர் செயலலிதா என்னதான் கத்தினாலும் நடுவண் அரசு பிடி கொடுக்கவில்லை.
புரட்டு எண்.3.
கூடங்குளம் அணு உலையை மூடினால் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள 14,000 கோடி வீணாகி விடும்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் இதற்கும் தகுந்த தீர்வை முன் வைக்கிறார்கள். அணு மின் நிலையங்கள் என்பதே அனல் மின் நிலையங்கள் போலவே இயங்கி மின்சாரம் உற்பத்தி செய்பவைதானே. அனல் மின் நிலையங்களில் தேவைப்படும் வெப்ப ஆற்றல் நிலக்கரியை எரித்துப் பெறப்படுகிறது. அணு மின் நிலையத்தில் அந்த வெப்ப ஆற்றல் அணுக்களை பிளந்து பெறப்படுகிறது. இதுதான் வேறுபாடு. கூடங்குளத்தில் அதே இடத்தில் யுரேனியத்திற்கு மாற்றாக கல்நெய்யை [gasoline] பயன்படுத்தி வெப்ப ஆற்றலை பெற்று மின் உற்பத்தி செய்ய முடியும். இது போல் மேல் நாடுகளில் பல அணு உலைகள் கல்நெய் அனல் மின் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
ஆக, எந்த வகையிலும் தமிழக மக்களுக்குப் பயனளிக்காத, தலைமுறை தலைமுறைக்கும் தமிழினத்தைப் பாதிக்கக்கூடிய கூடங்குளம் அணு உலையை தமிழக மக்கள் அனுமதிக்க முடியாது.
இந்த கட்டுரை கீற்று இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.வாய்ப்பும் இடமும் அளித்த கீற்று தோழர்களுக்கு மனமார்ந்த நன்றி.


No comments:

Post a Comment