Thursday, February 27, 2014

விஜயகாந்த்.தன்னை மெச்சும் தென்னை மர குரங்கு.

தமிழக அரசியலில் விஜயகாந்த் என்ற காரியக் கோமாளி அடிக்கும் லூட்டி இருக்கிறதே. காண சகிக்கவில்லை.சொந்தமாக யோசித்து சேர்ந்தாற் போல் நான்கு சொற்றொடர்கள் பேசத் தெரியாத இந்த அரசியல் தற்குறியெல்லாம் மாபெரும் அரசியல் ஆற்றலாக காட்டிக் கொண்டு உலா வருவது தமிழக மக்களுக்கு பெருத்த அவமானம்.

2005-ஆம் ஆண்டு கட்சியாக  ஆரம்பித்து 2006-தேர்தலில் போட்டியிட்ட விசயகாந்தின் தே.மு.தி.க சுமார் எட்டு விழுக்காடு வாக்குகளை பெற்றது.இதை தனது சொந்த செல்வாக்கில் கிடைத்த வாக்குகளாக எண்ணிக் கொண்டார் விசயகாந்த்,அவர் அப்படி நினைப்பதில் ஆச்சரியமில்லை.அவர் அப்படி நினைக்காவிட்டால்தான் ஆச்சரியம்.தன்னை மெச்சுமாம் தென்னை மர குரங்கு.ஆனால் கருணாநிதியும் செயலலிதாவும் அப்படி எண்ணி மயங்குவதுதான் ஆச்சரியம்.

முதலில் தி.மு.க வுக்கு, பிறகு அ. தி.மு.க வுக்கு என மாற்றி மாற்றி வாக்களித்து அலுத்துப்போனவர்களில் சிலர்  ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்றுதான் தே.மு.தி.கவுக்கு வாக்களித்தார்கள்.இப்போது தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் வாக்களித்தார்களே அதே மன நிலைதான் விசயகாந்த் கட்சிக்கும்  எட்டு விழுக்காடு வாக்குகள் கிடைக்க காரணமானது.ஆம் ஆத்மி கட்சியினர் ''படித்தவர்கள்'' ''அறிவாளிகள்'' அதனால் ''திறமையானவர்கள்'' அதனால் இந்த நாட்டை ''முன்னேற்றி'' விடுவார்கள் என்று ஊடகங்கள் கட்டி எழுப்பிய மாயத்தோற்றம் அவர்களை ஆட்சி கட்டிலில் ஏற்றி விட்டது.ஆம் ஆத்மி கட்சி மட்டும் களத்தில் தோன்றியிருக்காவிட்டால் பா.ச.க.தில்லியில் ஆட்சியை பிடித்திருக்கும் இல்லையா.விசயகாந்த் அப்படி ஒரு  ''அறிவாளி'' ஒப்பனைக்கு கூட தகுதியற்ற அரசியல் தற்குறி என்பதால் அவரால் எட்டு விழுக்காட்டுக்கு மேல் பெற முடியவில்லை.

குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தாற் போல் கிடைத்த இந்த வாக்குகளைத்தான் விசயகாந்தின் சொந்த செல்வாக்கு என கருணாநிதியும் செயலலிதாவும் மதி மயங்குகிறார்கள்.குருட்டு பூனை ஏதோ நல்வாய்ப்பாக விட்டத்தில் சரியாக பாய்ந்து விட்டது என்பதற்காக அதற்கு கண் தெரிந்து விட்டது என்று ஆகிவிடாது.செயலலிதாவின்  மயக்கத்தை பயன்படுத்திக் கொண்டு 2011 சட்ட மன்ற தேர்தலில் அவரோடு கூட்டணி கட்டிக்கொண்டு அலைக்கற்றை ஊழல் தோற்றுவித்த தி.மு.க.எதிர்ப்பு அலையில் எதிர்க்கட்சி தலைவராக கரையேறினார்.இந்த வெற்றியின் மூலம் கள் குடித்த குரங்கை தேள் கொட்டிய நிலையை எட்டினார் விசயகாந்த்.

குரங்கின் அட்டகாசத்தில் அரண்டு போன தமிழக அரசியல் களம் விசயகாந்தின் கூட்டணிக்காக தவம் கிடக்கிறது.காங்கிரசு,பா.ச.க.என்ற இரண்டு போக்கிடம் இல்லாத அரசியல் ஆண்டிகள் அவரோடு கூட்டணிக்கு அடித்துப்  பிடித்து முண்டியடிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கருணாநிதியும் அந்த வரிசையில் நிற்பதுதான் காலத்தின் கொடுமை.

ஒரே ஒரு எளிய உண்மையை விளங்கி கொண்டால் விசயகாந்தின் செல்வாக்கு வெறும் நீர்க் குமுழி என்பது புரிந்து விடும்.கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழக தேர்தல் களம் என்பதே கருணாநிதியை மையமாக வைத்துத்தான் இயங்குகிறது.பாசிச கோமாளி எம்.ஜி.ஆர். இருக்கும்வரை தேர்தல் போட்டி என்றாலே அது   எம்.ஜி.ஆர்.ரா கருணாநிதியா என்பதுதான்.சட்ட மன்ற தேர்தலானாலும் நாடாளுமன்ற தேர்தலானாலும் அதுதான் நிலைமை.எம்.ஜி.ஆர். செத்துப் போன பிறகு அது செயலலிதாவா கருணாநிதியா என்று மாறிப் போனது.இது எப்போதும் மாறியதில்லை.அதற்கான காரணங்களை நாம் இப்போது ஆராய போவதில்லை.இதுதான் கள நிலைமை.அதனால்தான் 89 லும் 1999 லும் மூப்பனார் காங்கிரசாகவும் தா.மா.க.வாகவும் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்தும் ஒன்றும் எடுபடவில்லை.காங்கிரசின் பழம் பெருச்சாளியான மூப்பனராலேயே ராசீவ்காந்தி துணையிருந்தும் சாதிக்க முடியாததை விசயகாந்த் சாதித்து விடுவாரா என்ன.

இப்போது பா.ச.க.வுடன் விசயகாந்த் கூட்டணி என்று செய்திகள் வருகின்றன.உண்மையிலேயே இது மகிழ்ச்சி அளிக்கிறது.மோடி சாயம் பூசிய பா.ச.க நரியும் மக்கள் செல்வாக்கு என்ற சாயம் பூசிய விசயகாந்த்  நரியும் சாயம் வெளுத்து வாலறுந்து போய் ஊளையிட்டுக்கொண்டே ஓடவிருப்பதை காணவிருக்கிறோம்.

No comments:

Post a Comment