Sunday, April 17, 2016

வாக்களிக்க பணம் வாங்குவது குற்றம்,சரி,அது யார் குற்றம்.

ஏழை எளிய மக்கள் வாக்களிக்க பணம் வாங்குகிறார்களாம்.அது நேர்மையற்ற செயலாம்.கொந்தளிக்கிறார்கள் யோக்கியவான்கள்.பணம் வாங்கும் வாக்களர்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரிக்கும் இவர்கள் எதார்த்தம் புரியாத சமூக தற்குறிகள்.ஆளும் மேட்டுக்குடி கும்பலும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் மாட்டி விட்ட கடிவாளத்தை மீறி சிந்திக்க தெரியாத கருத்துக்குருடர்கள்.அதனால்தான் பணம் வாங்காதே என்று அப்பாவி வாக்காளர்களிடம் வீரம் காட்டும் ஊடகங்கள் உள்ளிட்ட இந்த யோக்கியர்கள்  பணம் கொடுக்காதே என்று கட்சிக்காரர்களை களத்தில் இறங்கி தடுப்பதில்லை.பறக்கும் படையின் அதிரடியாம்.அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு பண்ணருவாளாம்.அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க துப்பில்லாத அதிகார வர்க்கத்தின் பம்மாத்து.முதலில் ஒன்றை நினைவில் வைப்போம்.வாக்காளர்கள் யாரும் அரசியல் கட்சிகளை தேடி சென்று ''உங்களுக்கு வாக்களிக்கிறோம்.அதற்கு எனக்கு இவ்வளவு பணம் கொடுங்கள்'' என்று கேட்கவில்லை.கட்சிக்காரர்களே மக்களை தேடிப்போய் பணம் கொடுத்தார்கள்.குறிப்பிட்ட வாக்காளர் பணம் கொடுப்பதை ஏற்கிறாரா இல்லையா என்று கூட பார்க்காமல் அவர் வீட்டு  பால் உறையின் கீழ் வைப்பது,நடு இரவில் கதவிடுக்கு வழியாக பண உறையை திணித்து விட்டு போவது என பல நூறு வழிகளில் பணம் கொடுத்தார்கள்.

ஏழைகளுக்கு மட்டுமல்ல சென்னையின் பணக்கார அடுக்கு மாடி குடியிருப்புகளில் கூட கொடுத்தார்கள்.[என்ன இருந்தாலும்  படித்த நாகரீக மாந்தர்கள் அல்லவா.பணத்தை கையால் வாங்குவார்களா.அதனால் அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு மீள்கட்டணம் [ Recharge ] கட்டினார்கள்.இதனை நீயா நானா நிகழ்ச்சியில் கைப்பேசி எண்ணை கொடுத்த ஒருவரே போட்டு உடைத்தார்].இப்படியாக நிலை கொண்டு விட்ட ஒரு செயலுக்கு ஏழை மக்களை மட்டுமே பொறுப்பாக்குவது நேர்மையற்ற செயல்.

இந்த தீமையை  யார் துவக்கி வைத்தார்கள் என்ற கேள்வியும் அதன் மீதான விவாதங்களும் பொருளற்றவை.ஒரு கட்சி ''திருமங்கலம் சூத்திரம்'' என்று குற்றம் சாட்டினால் அவர்கள் அதற்கு முந்தைய கும்மிடிப்பூண்டியையும்  காஞ்சிபுரத்தையும் சுட்டிக்காட்டி அவையெல்லாம் என்ன சூத்திரம் என்பார்கள்.இந்தியாவின் தேர்தல் முறையே பெரும் பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட்டு பணத்தை ஆறாக ஓடவிட்டு வெல்ல முடியும் என்ற நிலையில்தான் உள்ளது.அதனால் வாக்குக்கு பணம்  கொடுப்பது போன்ற செயல்கள் நடக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

நிற்க.பேசு பொருளுக்கு வருவோம்.

சாதாரணமாக ஏழை எளிய மக்கள் அந்தந்த பகுதி கட்சிக்காரர்களை ஏதேனும் ஒரு வகையில் சார்ந்திருக்கிறார்கள்.

 ஆதரவற்றோர்,கைம்பெண், முதியோர்,உதவித்தொகை வாங்கித்தர,சாதி சான்றிதழ் பெற,கருவுற்ற மகளிர் உதவித்தொகை பெற,சில்லறை தகராறில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மகனை மீட்டு வர,கட்டிக்குடுத்த மகளை குடித்து  விட்டு வந்து அடிக்கும் மாப்பிள்ளையை மிரட்டி வைக்க,தேவைப்பட்டால் மகளிர் காவல் நிலையத்தில் முறையீடு செய்ய,என்று ஏதேனும் ஒரு வகையில் கட்சிக்காரர்களின் அனுசரணை அவர்களுக்கு தேவைப்படுகிறது.

இப்போது ஒரு கட்சிக்காரர் தரும் பணத்தை அந்த அப்பாவி வாக்காளர் ''நேர்மைடா ,நீதிடா '' என்று நாட்டாமை வசனம் பேசி வாங்க மறுத்தால் அந்த கட்சிக்கு இவர் வாக்களிக்க போவதில்லை என்ற தோற்றம் ஏற்பட்டு அந்த கட்சிக்காரர்களின் பகையை எதிர்கொள்ள நேரிடும்.ஆகவே கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.அதே போல மாற்றுக்கட்சியினர் கொண்டு வந்து தரும் பணத்தையும் வாங்குவதற்கு அவர்கள் மறுக்க முடியாது.ஒரு வேளை அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன செய்வது.ஆகவே அவர்களையும் பகைக்க முடியாது.

ஆக ,இப்படி ஒரு இக்கட்டான சூழலில் வாக்களிக்க பணம் வாங்கும் எளிய மக்களை மட்டும் குற்றவாளிகளாக சித்தரிப்பது அயோக்கியத்தனம்..மக்கள் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் கெடுக்காமல் இருந்தால் போதும்.

No comments:

Post a Comment