Sunday, May 8, 2016

மருத்துவ கல்வி தகுதி மற்றும் நுழைவு தேர்வு.அப்பட்டமான சதி.

கடந்த இரண்டு,மூன்று ஆண்டுகளாக இழுபறியில் கிடந்த மருத்துவ கல்வி தகுதி மற்றும் நுழைவு தேர்வு இந்த ஆண்டு உச்ச நீதி மன்றத்தின் தயவால் இந்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளது.

 இந்தியாவில் பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் பல நுழைவு தேர்வுகளையும் தனித்தனியாக மாணவர்கள் எழுத வேண்டியிருக்கிறது.அவற்றை ஒருங்கிணைத்து ஒரே தேர்வை எழுதும் நோக்கில் அதாவது மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு [National Eligibility Entrance Test] (NEET) கொண்டு வரப்படுவதாக நடுவண் சுகாதார குடும்ப நல துறை தெரிவித்தது.

நல்லது.நடுவண் அரசு நடத்தும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கும் மாநில அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் பிற மாநில அனைத்து இந்திய மாணவர்களுக்கான 15 விழுக்காடு இடங்களுக்கும் அப்படி ஒரு தேர்வை நடத்தி மாணவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை.ஆனால் மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கவும் எங்கள் தேர்வைத்தான் அடிப்படையாக கொள்ள வேண்டும் என சொல்வதற்கு நடுவண் அரசுக்கு உரிமை இல்லை.அது மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் அடாவடி ஆகும்.

மேலும் இந்திய மருத்துவ அவை [medical council of India ]ஏற்கனவே பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் 60-விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதையே  மருத்துவ கல்வி பயில்வதற்கான தகுதியாக முடிவு செய்துள்ளது.அப்படி இருக்கும்போது இந்த நுழைவுத்தேர்வின் பெயரில் எதற்காக ''தகுதி'' [Eligibility]  என்ற சொல்லை சொருகி இருக்கிறார்கள்.ஆம்,நண்பர்களே இங்குதான் அவர்களின் சதி அம்பலப்பட்டு நிற்கிறது.இப்போதைக்கு எதிர்ப்புகளை சரிக்கட்டி இந்த தேர்வை மாணவர்கள் மீது திணித்து விட்டால் பின்னாளில் நுழைவு தேர்விலும் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுத்தால்தான் மருத்துவக்கல்வி பயில தகுதி பெற முடியும் என அறிவிக்கப்படலாம்.இது சிற்றூர்ப்புற,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு  மருத்துக்கல்வியை எட்டாக்கனி ஆக்கிவிடும்.ஆகவே இந்த நச்சுக்களையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

அனைத்திந்திய அளவில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதே  இயற்கை நீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது.இது பற்றி சற்றே விரிவாக காணலாம்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது மேல்வகுப்பினருக்கு மிகுந்த ஆத்திரமூட்டுவதாக உள்ளது. அரசியல் அரங்கில் அவர்களது நலனை நோக்கமாக கொண்டு இயங்கும் கட்சிகள் வெளிப்படையாக இடஒதுக்கீடு எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டாலும் அவர்கள் தனிப்பட்ட உரையாடல்களிலும் இணையதள வலைபதிவுகளிலும் இடஒதுக்கீடுக்கு எதிராக ஆத்திரம் பொங்க வெறுப்பை கக்குவதை நீங்கள் காணலாம்.இட ஒதுக்கீடுக்கு எதிரான குழிபறிப்பு வேலைகளை துவக்க காலம் தொட்டே ஆதிக்கசாதியினர் செய்து வருகின்றனர்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ,உச்ச நீதிமன்றத்தின் அடாவடி தீர்ப்பு ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். அரசியல் சட்டம் இடஒதுக்கீடுக்கு உச்ச வரம்பு எதையும் விதிக்காத நிலையிலும் ஐம்பது விழுக்காடுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்க கூடாது என தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம். அதன்மூலம் தமிழகத்தில் வழங்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் தலையில் கல்லை தூக்கிப்போட எத்தணிக்கிறது.நடுநிலைமை பேணவேண்டிய நீதிமன்றங்களே இப்படி செயல்படும்போது அரசின் பிற உறுப்புகளை இயக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க சாதியினரின் செயல்பாடுகளை பற்றி விரிவாக சொல்லவேண்டியதில்லை.

அத்தகைய குள்ளநரி தந்திரங்களில் ஒன்றுதான் நுழைவு தேர்வு..இது சிற்றூர்ப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை மாணவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதற்கான சூழ்ச்சி என நாம் குற்றம் சாற்றுகிறோம்.

திறமை மிகுந்த தகுதியானவர்களை கண்டறிந்து சேர்ப்பதற்காகவே நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது என இந்த சூழ்ச்சி நியாயப்படுத்தப்படுகிறது.ஆனால் உண்மை நிலை என்ன.பல இலட்சங்கள் உருவாக்களை கட்டணமாக வசூலிக்கும் விண்மீன் தரத்திலான  நகர்ப்புற தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெற்று தகுதி தேர்வில் அதாவது மேல்நிலை பள்ளி பொது தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேரவரும் மாணவர்களை நுழைவு தேர்வு எழுதி மீண்டும் ஒரு முறை தகுதி பெற்று வா என்கிறார்கள்.வெந்த சோற்றை மீண்டும் ஒரு முறை ஏன் வேக வைக்க வேண்டும்.இங்குதான் சூழ்ச்சி துவங்குகிறது.பல இலட்சம் உருவாக்கள் செலவில் இத்தகைய நுழைவு  தேர்வுகளுக்கு தனிப்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் இயங்குகின்றன.இந்த நிறுவனங்களில் பயிலும் பணம் படைத்தோரின் பிள்ளைகளுடன் போட்டியிட்டு சிற்றூர்ப்புற மற்றும் நகர்புற ஏழை பெற்றோரின் பிள்ளைகள் நுழைவு தேர்வில் வெற்றி பெற வேண்டுமாம்.இது மோசடி இல்லையா.ஏழை மாணவர்களின் இடங்களை பறித்து அவற்றை பணக்காரர்களிடம் ஒப்படைக்கும் அயோக்கியத்தனமில்லையா   இது.அவர்கள்தான் ஏற்கனவே தகுதி தேர்வில் இந்த பணக்கார வீட்டு பிள்ளைகளை வென்றிருக்கிறார்களே அது ஒன்றே போதுமே யார் தகுதியும் திறமையும் படைத்தவர்கள் என காட்டுவதற்கு.நுழைவு தேர்வு என்ற ஈர வெங்காயத்தை மீண்டும் உரிக்க வேண்டிய அவசியம் இல்லையே.

இட ஒதுக்கீடு கூடாது என கூச்சல் போட்டுக்கொண்டே காசுக்காரனுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்துகொள்ளும் இந்த அயோக்கியத்தனத்தை தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றுபட்டு விழிப்போடு இருந்து முறியடிக்க வேண்டிய தருணமிது.