பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டும் தலைமை அமைச்சர்.
ஒரு வழியாக, 42 கோடிப்பேர் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கும் நாட்டில் பல்லாயிரம் கோடி உருவாக்களை விழுங்கிவிட்டு,இரண்டு இலக்கம் பேரை வீடுகளை விட்டு விரட்டியடித்து வீதிகளில் அலைய விட்டுவிட்டு பொதுச்செல்வ நாடுகள் விளையாட்டு போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன.
101 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.ஆளும் கும்பல் மற்றும் விளையாட்டு சங்கங்களின் ஊழல்,முறைகேடுகள்,மற்றும் அலட்சியப்படுத்துதல் போன்ற தடைக்கற்களை மீறி சாதனை படைத்த இந்திய வீரர்களை பாராட்டுகிறோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றைக்கையால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் இந்த போட்டிகளில் 101 பதக்கங்கள் வென்றதன் மூலம் இது உலகத்தரம் வாய்ந்த போட்டிகள் அல்ல என்பதை நாம் விளங்கிகொள்ளலாம்.தெற்காசிய விளையாட்டு போட்டிகளை விட சற்று மேம்பட்டவை என்று வேண்டுமானால் சொல்லலாம்.இருந்தாலும் நம் வீரர்களின் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுகிறோம்.எனவேதான் இந்த வெற்றியை ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூவே சர்க்கரை என்கிறோம்.
இந்த போட்டிகள் தவிர்க்கவியலாமல் இரண்டு நன்மைகளை நமக்கு செய்திருக்கிறது.
ஒன்று,பொது செல்வ நாடுகள் என்பதே இங்கிலாந்தின் அடிமைகள் கூடாரம். அதில் நாம் ஏன் இன்னும் உறுப்பு நாடாக நீடிக்க வேண்டும்.நம் முகத்தில் குத்தப்படும் அடிமை முத்திரையை நீக்க அந்த அமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பது மக்களிடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.இந்த விவாதம் அதன் வளர்ச்சிப்போக்கில் நாட்டின் உண்மையான விடுதலையை நோக்கி நம்மை இட்டுச்செல்லலாம்.
இரண்டு,நம் இளைஞ்ரகளை சீரழிக்கும், துணைக்கண்ட விளையாட்டு துறையை பீடித்த புற்று நோயான மட்டைப் பந்து (கிரிக்கெட்)விளையாட்டு அன்றி வேறு விளையாட்டுகளும் உள்ளன என்று அவற்றின் மீதான ஆர்வத்தை நம் இளைஞர்களிடம ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளன இந்த போட்டிகள்.அந்த வகையில் ஆளும் கும்பல் தாமறியாமலேயே மக்களுக்கு உதவியுள்ளனர்.
No comments:
Post a Comment