ஆண்டுதோறும் மக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் முசுலிம்களுக்கு மானியம் வழங்குவதாக இந்திய ஒன்றிய அரசு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறது.அந்த ''மானியம்'' எப்படி வழங்கப்படுகிறது என்று பார்த்தால் புனித பயணிகளின் வானூர்தி கட்டணத்தில் ஒரு பகுதியை அரசு ஏற்று வானூர்தி நிறுவனத்திற்கு செலுத்துகிறது.வேறு செலவினங்கள் அனைத்தையும் இந்திய ஹஜ் குழு [Haj Committee of India] பயணிகளிடமிருந்து வசூலித்து அக்குழு அதனை அவர்களுக்காக செலவிடுகிறது.ஒரு பகுதி வானூர்தி கட்டணம் தவிர்த்து ஹாஜிகளின் வேறு எந்த செலவையும் அரசு ஏற்பதில்லை.
ஹாஜிகள் ஏர் இந்தியா மற்றும் சவுதி ஏர்லைன் மூலமாகத்தான் மக்காவுக்கு [ஜித்தா மக்கா செல்வதற்க்கான வானூர்தி நிலையம்] பயணிக்க வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்நிறுவனங்கள் ஹாஜிகள் இந்தியாவிலிருந்து ஜித்தா போக வர ஒரு கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயிக்கிறார்கள்.
அந்த வகையில் சென்னையிலிருந்து ஜித்தா போக வர இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூபாய்.79,593.ஒவ்வொரு நகரத்திற்கும் இந்த கட்டணம் வானூர்தி நிலைய வரியில் உள்ள வேறுபாடு காரணமாக வேறுபடுகிறது.வசதிக்காக நாம் சென்னையை எடுத்துக்கொள்வோம்.
ஹஜ் குழு அனைத்து நகரங்களிலிருந்தும் புறப்படும் ஹாஜிகளிடமிருந்து வானூர்தி கட்டணம் என்று .62,065 ரூபாயும் அத்துடன் அந்தந்த நகர வானூர்தி நிலைய வரியையும் வசூலிக்கிறது.சென்னை ஹாஜிகளிடம் கட்டணம் 62,065 ரூபாயும் வானூர்தி நிலைய வரி 4,239 ரூபாயும் சேர்த்து 66,304 ரூபாய் வானூர்தி பயண கட்டணமாக ஹஜ் குழு வசூலித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான ரூபாய்.79,593.ல் ஹாஜிகளிடமிருந்து வசூலித்த 66,304 ரூபாய் போக மீதி 13,289-ரூபாயை மானியம் என்று சொல்லிக்கொண்டு நடுவண் அரசு வானூர்தி நிறுவனத்துக்கு வழங்குகிறது,
இதில் கொடுமை என்னவென்றால் சென்னையிலிருந்து ஜித்தா போக வர ஒரிரு மாதத்திற்க்கு முன்பாக பயண சீட்டு வாங்கினால் சந்தை விலை வானூர்தி கட்டணம் 26,082-ரூபாய்தான்.
என்ன ஒரு அநியாயம்.சந்தை விலையை விட கூடுதலாக சுமார் 40,000-ரூபாயை ஹாஜிகளிடம் கொள்ளையடித்து விட்டு அவர்களுக்கே ரூ.13,000-மானியம் வழங்குவதாக நாடகமாடுகிறார்கள்.எத்தகைய மோசடி இது.
ஆகவே இனி வரும் ஆண்டுகளில் உலக அளவில் ஒப்பந்த புள்ளி [International Tender ]கோரி அதில் குறைவான கட்டணம் குறிப்பிடும் வானூர்தி நிறுவனம் மூலமாகவே ஹாஜிகள் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட ஹஜ் மற்றும் வானூர்தி கட்டண விவரங்கள் ஆதாரபூர்வமானவை.பார்க்க சுட்டிகள்.
http://www.hajcommittee.gov.in/Files/Circular/2017/circular_2017_13.pdf
https://www.cleartrip.com/flights/international/results?from=MAA&to=JED&depart_date=30/09/2017&return_date=10/11/2017&adults=1&childs=0&infants=0&class=Economy&airline=&carrier=&intl=y&sd=1503232551104&page=loaded
https://www.cleartrip.com/flights/international/results?from=MAA&to=JED&depart_date=21/10/2017&return_date=30/11/2017&adults=1&childs=0&infants=0&class=Economy&airline=&carrier=&intl=y&sd=1503237929500&page=loaded