Wednesday, June 10, 2020

ஜெ. அன்பழகன் , தி மு க வின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று உதிர்ந்து விட்டது. என் செய்வது ?  காலம் வலியது ஆயினும் காலத்தை கடந்தும் கழகம் பயணிக்கும்.

திடீர் பிள்ளையார் சதியின் மூலம் தி நகரை மதவெறியின் களமாக்கி தமிழகத்தை மதவெறியின் வேட்டைக்காடாக்கும் பாசிச சக்திகளின் சதியை முறியடித்து தமிழகம் அமைதிப பூங்காவாக திகழ கலைஞர் காரணமென்றால் அம் மகத்தான பணியில் கலைஞருக்கு வலது கரமாக நின்று அந்த பணியை நிறைவேற்ற துணை நின்றவர் இப்போது நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கும் ஜெ. அன்பழகன் அவர்களின் தந்தை பழக்கடை ஜெயராமன் அவர்கள்.

அடுத்தமுறை தி நகருக்கு நீங்கள் துணியோ நகையோ வாங்க போனால் சென்னை சில்க்ஸ்க்கு எதிர்புறம் பாருங்கள். ஒரு சிறு பள்ளிவாசல் இருக்கும். 1970 ஆம் ஆண்டு அப்பகுதி முசுலீம் வணிகர்கள் தங்களுக்கு ஒரு வழிபாட்டு தலம் வேண்டுமென அந்த இடத்தை வாங்கி பள்ளிவாசல் கட்ட திட்டமிட்டிருந்தனர். காலியாக கிடந்த இடம் காவிகளின் கண்ணை உறுத்தியது.தட்டிவிட்டனர் சூதுமதியை , தீட்டினர் சதியை. திடீரென ஒருநாள் அதிகாலை மசூதி இடத்தில ஒரு சிறு குழிக்குள் ஒரு பிள்ளையார் சிலை கிடந்தது. பகுதியெங்கும் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. உஸ்மான் ரோட்டில் பிள்ளையார் சுயம்புவாக தோன்றி விட்டார் என்று  வேறு யார் பரப்புவார்கள் ? காவிகள்தான். அப்பாவி இந்து மக்கள் திரண்டு வந்தனர் திடீர் பிள்ளையாரை காண.

மசூதி இடம் பறிபோய் விடுமோ என்ற அச்சம் முசுலீம்களிடம்.சில முசுலீம் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்களின் சொந்த முயற்சியில் பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தி இடத்தை தக்க வைக்க களமிறங்கினால் கலவரம் ஆகி விடுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.முசுலிம்கள் தீர்வு தேடி ஓடினார்கள் உள்ளூர் தி மு க பிரமுகர் ஜெயராமனிடம்.
முதல்வர் கலைஞரிடம் எடுத்து சொன்னார் அவர்.புலனாய்வு துறையை முடுக்கி விட்டார் கலைஞர்.

புலனாய்வுத்துறை வேகவேகமாக செயல்பட்டு, உண்மை விடயத்தை முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வந்தது. செல்வராஜ் என்ற தலைமை கான்ஸ்டபிள்தான் இந்தப் பிள்ளையார் பொம்மையை சைக்கிளில் கொண்டு வந்து சிறுகுழி தோண்டிப் புதைத்துள்ளார். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருத்திக் கொட்டையும் வைக்கப்பட்டது. தண்ணீரில் பருத்திக் கொட்டை ஊறினால் அது ஊதிப் பெருத்து மேலே கிளம்பும் அல்லவா! ஆகா எவ்வளவுப் பெரிய யுக்தி- தந்திரம்! (இதன் பின்னணியில் அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினரான பார்ப்பனர் கே.எம்.சுப்பிரமணியன் இருந்தார்)
தியாகராயர் நகர் கல்தொட்டிப் பகுதியில் சிலைகள் செய்யும் கடை வைத்திருந்த மருதப்பிள்ளை என்பவரிடம் ரூ.71க்கு கான்ஸ்டபிள் செல்வராஜ் வாங்கியதும் அம்பலமாகி விட்டது.

பிறகென்ன? பிள்ளையார்  சிலையை அரசே அப்புறப்படுத்துவது என முடிவானது. கலைஞர் தி நகரில் பழக்கடை ஜெயராமன் அவர்கள் ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் அந்த முடிவை அறிவித்தார்.அலைகடலென திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து வரவேற்றது அம்முடிவை.கலவரம் செய்ய காத்திருந்த காவிக்கும்பல் ஜெயராமன் திரட்டிக்காட்டிய மக்கள் சக்தியின் முன் சப்த நாடியும் ஒடுங்கிப்போய் வாலை சுருட்டிக்கொண்டு ஓடிப்போனது.

அவரது மகன்தான் இன்று கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் பட்டினியால் செத்துவிட கூடாது என ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ஓடி ஓடி உழைத்து அதே கொரோனாவுக்கு தன் இன்னுயிரை பலியிட்டு மக்களின் உயிரை காத்துள்ளார்.

போய் வாருங்கள் அன்பழகன் , உங்கள் குடும்பத்திற்கு தமிழகமே நன்றிக்கடன் பட்டுள்ளது.





Saturday, May 9, 2020

சோதிடம் ஒரு ஏமாற்று வேலை! அபிக்யா ஆனந்த் மவுன வாக்குமூலம்





இளம் சோதிடர் அபிக்யா ஆனந்த் துல்லியமாக கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி கணித்து சொல்லியிருப்பதாக நம்பியவர்களுக்கு சில கேள்விகள்

அவர் சொன்னது போல் மார்ச் 31 தான் கொரோனாவின் தாக்கம் உச்சம் (climax) அடைந்ததா ?

மே 29 ஆம் நாளோடு கொரோனா ஆபத்திலிருந்து உலகம் விடுபட்டு விடும் என்ற அவரது கணிப்பை இப்போதும் நம்புகிறீர்களா ?

தற்சமயம் கணிப்பு எதையும் வெளியிடாமல், தனது கணிப்புகள் பொய்யாய் போனதுவே என்று குற்ற உணர்வு கொள்ளாமல், அதற்காக மக்களுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் அவர் கள்ள மவுனம் சாதிக்கிறார். இது அருவருப்பான சந்தர்ப்பவாத பித்தலாட்டமில்லையா ?

சோதிடம் ஒரு ஏமாற்று வேலை என்று இப்போதாவது உணர்கிறீர்களா ?

Thursday, April 9, 2020

வைரஸ் அறிவோம் கொரோனாவை வெல்வோம்

கொரோனா வைரஸ் பற்றி பல வதந்திகளும் போலி அறிவியல் செய்திகளும் உலவுகின்றன. அதற்கு காரணம் நம் மக்களிடையே வைரஸ்கள் பற்றிய புரிதல் இல்லாமையே.ஆகவே வைரஸ்கள் பற்றிய சில செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.மிக சுருக்கமாக பார்ப்போம்.

முதலில் வைரஸ்கள் என்பவை முழு உயிர் கொண்டவை அல்ல.அவை அரை உயிரிகள்தான்.
உயிரினங்களின் மிக சிறு பாகமான "செல்"களை விட மிக சிறியவை.நம் எல்லோருக்கும் தெரியும்.
உயிரினங்கள் செல்களால் கட்டப்பட்டுள்ளன.வைரஸ்கள் அப்படி செல் அமைப்பை கொண்டவை அல்ல.செல்களின் ஒரு பகுதியான DNA அல்லது  RNA அதை சுற்றி ஒரு புரத உறை அவ்வளவுதான் வைரஸ்

இப்போது நாம் சந்திக்கும்  பேரபாயமான கொரோனா வைரஸ் (novel covid 19 ) வெறும் RNA மட்டுமே கொண்டது.அதை சுற்றி புரதத்தினால் ஆன ஒரு உறை  அந்த உறையின் மீது சிறு சிறு முட்கள் போன்று நீட்டிக்கொண்டிருக்கும் புரதம். அவ்வளவுதான் அந்த வைரஸ்.

எந்த வைரசாக இருந்தாலும் அவை வெட்ட வெளியில் வாழ முடியாது.அவை வாழ வேண்டுமானால் ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே புகுந்து அதன் செல்களை துளைத்துக்கொண்டு உள்ளே சென்று அங்குதான் வாழ முடியும்.உயிரினங்களுக்கு வெளியே அவை குறிப்பிட்ட ஒரு கால அளவுக்குத்தான் உயிரோடு இருக்கும்.இந்த கால அளவு ஒவ்வொரு வகை வைரசுக்கும் வேறுபடும். அந்த கால அளவுக்குள் அது உட்புக உயிரினம் கிடைக்கவில்லை என்றால் அவை இறந்துவிடும்.

சரி மனித உடலில் உள்ளே புகும் வைரஸ் என்ன செய்யும் என்று பார்ப்போம்.உணவு ,நீர், காற்று, கொசுக்கடி இப்படி ஏதேனும் ஒரு வழியில் உட்புகும் வைரஸ் அதற்கு வசதியான அதன் தாக்குதலுக்கு ஏதுவான ஒரு செல்லை துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து விடும்  நுழைந்த வைரஸ் அந்த செல்லின் உள்ளே ஒட்டிக்கொண்டு தன்னை தானே பிரதி எடுக்கும்.அதுதான் அதன் இனப்பெருக்கம்  இதன் மூலம் ஒரு செல்லுக்குள்ளேயே லட்சக்கணக்கான வைரஸ்கள் உற்பத்தி ஆகி விடும்.ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இனப்பெருக்கம் செய்ய இடமில்லாத நிலையை அடையும்போது அந்த செல் வெடித்து சிதறி விடும்.அதிலிருந்து வெளிப்படும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களில் குடியேறி இதே வேலையை செய்யும்.

இப்படியாக வைரஸ் தாக்குதலில் உடல் செல்கள் இறந்து போவது உடல் உறுப்புகள் செயல்படுவதையே பாதிக்கும்.இதுதான் நோய்.இதனை துவக்கத்தில் மூளை உணர்வதில்லை.செல்களின் இழப்பு அதிகரிக்கும்போதுதான் மூளைக்கு செய்தி எட்டி விழித்துக்கொள்கிறது.வைரஸ் தாக்குதலை நிறுத்தாவிட்டால் செல்கள் தொடர்ந்து அழிந்து உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பதால் நோய்  எதிர்ப்பு ஆற்றலை செயலில் இறங்குமாறு மூளை உத்தரவிடும். அது உடனே உடலின் வெப்ப நிலையை உயர்த்தும்.அதுதான் காய்ச்சல் உடலின் வெப்பநிலை உயரும்போது வைரஸ்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.வைரஸ்களின் எண்ணிக்கை உயராமல் ஒரு நிலையில் இருக்கும். அப்போது நோய் எதிர்ப்பு முறை குருதியில் உள்ள வெள்ளை அணுக்களை வைரஸ்களை தாக்கி அழிக்க அனுப்பி வைக்கும். கிட்டத்தட்ட அது ஒரு போர்தான்.இந்த போரில் நோய் எதிர்ப்பு முறைக்கு வலுவூட்டத்தான் மருந்து கொடுக்கிறார்கள் மருத்துவர்கள்  இஃதன்னியில் வைரஸ்கள் ஊடுருவி இருக்க கூடிய நோயுற்ற செல்களையயும் நோய் எதிர்ப்பு முறை தாக்கி அழித்து விடும். இப்படியாக அந்த வைரஸ்களை கொன்று உடலிலிருந்து வெளியேற்றிய அனுபவம் குருதியில் நினைவாக நிலை பெற்றுவிடும். அதன்பின் அந்த வைரஸ் எப்போது உடலில் நுழைந்தாலும் குருதி அதனை அடையாளம் கண்டு கொண்டு உடனே அதனை தாக்கி அழித்துவிடும்.இதுதான் தடுப்பூசிக்கான அடிப்படை.

இப்போது கொரோனா வைரசுக்கு வருவோம். கொரோனா வைரஸ் மூக்கு வாய் கண்  வழியாக மனித உடலில் புகுந்து முதலில் தொண்டை செல்களை தனது கூரப்பான புரத முட்களால் பற்றிக்கொள்கிறது.அப்படியே அந்த செல்லுக்குள் நுழைந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கிறது   அதிலிருந்து படிப்படியாக பெருகி நுரையீரல் செல்களை தாக்கி அழிக்கிறது.தொண்டையை தாக்கி பெருகி வரும்போதுதான் வறட்டு இருமலும் தொண்டை வலியும் காய்ச்சலும் ஏற்படுகிறது அதுவே கட்டுப்படுத்தப்படாமல் போகும்போது நுரையீரலையும் சுவாச மண்டலத்தையும் தாக்கி நிமோனியா காய்ச்சலாக உயிருக்கு உலை வைக்கிறது. இந்த வைரஸை கொல்வதற்கு நோய் எதிர்ப்பு முறைக்கு துணை நிற்கும் மருந்தைத்தான் இப்போது உலகம் தேடிக்கொண்டிருக்கிறது இப்போதைக்கு காய்ச்சலுக்கான பொதுவான மருந்துகள், நோய் எதிர்ப்புக்கான மருந்துகள்,ஆதரவு கருவிகள் இவற்றை கொண்டுதான் மருத்துவ உலகம் கொரோனா நோயாளிகளை காப்பாற்றி வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறந்தவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கைதான் அதிகம் என்பதை இங்கு நினைவில் கொள்க

இப்படியாக மனித உடலின் செல்லுக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு இனப்பெருக்கம் செய்யும் வைரஸை சுடுதண்ணி குடுச்சு கொன்னுடலாம் , நீராவி புடிச்சு கொன்னுடலாம், கல் உப்பை கரைத்து குடித்தால் கொன்று விடலாம் ,மாட்டு மூத்திரம் குடுச்சு கொன்னுடலாம் ,இஞ்சி சாறு , மிளகு ரசம் , குடுச்சா கொரோனா வைரஸ் செத்து போயிடும் என்றெல்லாம் வாட்சாப் விஞ்ஞானிகள் கிளப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மருத்துவ அறிவியலையே நம்புவோம். அறிவால் வெல்வோம்.