இந்த புகைப்படங்கள் நேற்று [6-12-15] மாலை கூவம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் எடுக்கப்பட்டவை.படங்களை சற்றே கூர்ந்து கவனித்தால் காரணம் எதுவென விளங்கும்.

படம் எண்.1.
இது நேப்பியர் பாலத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இந்த வெள்ளக் காலத்திலும் ஆற்றில் நீர் ஓடுவதை தெளிவாக பார்க்க முடியவில்லை.கிட்டத்தட்ட தேங்கி கிடக்கும் நீர் சற்றே ஊர்ந்து அசைந்து கடலை நோக்கி செல்கிறது.

படம்.எண். 2
முகத்துவாரத்தின் அருகில் எடுக்கப்பட்டது.
நேப்பியர் பாலத்தின் கீழ் 450 அடி அகலத்தில் ஓடும் ஆறு கடலில் கலக்க கிடைத்துள்ள இடம் சுமார் 100 அடி இருக்கும்.கடல் அரிப்பை தடுக்க போடப்படும் தடுப்பரண்களை போன்று கடல் அலை அடிக்கும் இடத்தில் மணல் மேடு இருபுறமும் நீட்டிக் கொண்டிருப்பதை காணலாம்.ஆற்றின் படுகையில் தேங்கி கிடக்கும் சகதியும் குப்பையும் தடுப்பதால் ஆற்று நீரின் வேகம் தடைப்பட்டு கடல் அலைகள் நீரை மீண்டும் ஆற்றுக்குள் தள்ளுகின்றன.அலை திரும்பி செல்லும்போது அதனுடன் சேர்ந்து ஆற்று நீர் கடலுக்குள் செல்கிறது.இப்படியாக கடலுடன் கயிறு இழுக்கும் போட்டி நடத்தி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக நீரை கடலுக்குள் செலுத்துகிறது.
படம் எண் .3
மண் வாரி இயந்திர ஓட்டுனர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள்.
சென்னை வெள்ளத்தில் பிடியிலிருந்து மீண்டு வர அரசு உடனடியாக மிதப்பான்களின் மீது பொருத்தப்பட்ட மண் வாரிகளை கொண்டு முகத்துவாரப்பகுதியில் ஆற்றின் படுகையில் தேங்கியுள்ள சகதியையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும்.ஆறு கடலில் கலக்கும் இடத்தை அகலப்படுத்த வேண்டும்.நீண்ட கால நோக்கில் ஆறு முழுவதும் சரியான கால இடைவெளிகளில் தூர் வாரி வர வேண்டும்.

No comments:
Post a Comment